மண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்

0 மறுமொழிகள்
வணக்கம்.

சென்னை சாந்தோம் தேவாலயம் இன்று சென்னை நகரில் கத்தோலிக்க கிருத்துவர்களின் முக்கிய வழிபடுதலங்களில்  ஒன்றாக விளங்குகின்றது. புனித தோமையர் கி.பி.52ம் ஆண்டு வாக்கில் இன்றைய தென் தமிழகப் பகுதிக்கு வந்ததாகவும், சில ஆண்டுகளில் அவர் இன்றைய மயிலாப்பூர் பகுதிக்கு வந்தடைந்ததாகவும் நம்பப்படுகின்றது.  

புனித தோமையர்  இங்கு வந்து புனித ஏசுவின் பெயரால் ஒரு வழிபடு தலத்தை  அமைத்து ஏசுவின் புகழை பரப்பி வந்ததாகவும், அதன் பின்னர் இன்றைய செயிண்ட் தோமஸ் குன்று இருக்கும் இடத்தில் அவர் கொல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் அவரது சீடர்கள் அவரது உடலை இன்று சாந்தோம் தேவாலயம் இருக்கும் பகுதியில் புதைத்து கல்லறை எழுப்பியதாகவும் வழி வழியான செய்திகள் கிடைக்கின்றன. 

போர்த்துக்கீசியர்கள் 1517ம் ஆண்டு புனித தோமாவின் கல்லறை சிதலமடைந்து காணப்பட்டதாகவும் 1523ம் ஆண்டில் கல்லறை மீது ஒரு கோயிலை எழுப்பியதாகவும் குறிப்புக்கள் வழி அறிகின்றோம்.

சாந்தோம் தேவாலயம் பழுதடைந்தமையினால் இக்கோயில் இருக்கும் இடத்தில் 1893ம் ஆண்டு பழைய கோயில் இடிக்கப்பட்டு  இன்று காணும் இக்கோயில்  ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. 

155 அடி உயரம் கொண்டது இத்தேவாலயம். கல்லறை மேல் எழுப்பப்பட்ட தேவாலயம் என்ற சிறப்பு இக்கோயிலுக்குண்டு. 

இந்த தேவாலயத்தின் ஒரு பகுதியாக  ஒரு அருங்காட்சியகம் வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் கீழ்ப்பகுதியில், அதாவது நிலத்துக்கு அடியில் தான் செயின் தோமஸ் அவர்களின் கல்லறை உள்ள பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அதனைக் காண, படிகளில் இறங்கி இந்த அடித்தளப்பகுதிக்குச் செல்லவேண்டும். மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த தேவலயத்திற்குப் போப்பாண்டவர் இரண்டாம் பால் வருகை தந்த செய்திகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.    

முதல் தளத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் கல்வெட்டுக்கள், சிற்பங்கள், சின்னங்கள், புகைப்படங்கள், வரைப்படங்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்ன. 

போர்த்துக்கீசியர் காலத்தில் கட்டப்பட்ட பழுதடைந்த பழைய கோயிலின் உடைந்த சுவர்களில் சில அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.   இந்த அருங்காட்சியகத்தில் வரலாற்றுச் சான்றுகள் பல மிக நேர்த்தியாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ் எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுக்கள், லத்தீன் எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுக்கள் ஆகியனவற்றோடு கிறித்துவ வழிபாட்டுச் சடங்கில் இடம்பெறும்  சின்னங்கள் இங்கே காட்சி படுத்தப்பட்டுள்ளன. செயின் தோமஸ் அவர்களின் இறைத்தன்மைகளை விளக்கும் சித்திரங்கள் இங்கு சேகரிக்கப்பட்டு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 

இங்குள்ள தமிழ் கல்வெட்டு ஒன்று கி.பி.12ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த விக்ரம சோழன் காலத்து கல்வெட்டாகும். 


விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.com/2018/02/blog-post_17.html
யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=eaj7fWY9__Y&feature=youtu.be

இப்பதிவினைச் செய்ய ஒத்துழைப்பு நல்கிய தேவாலய தந்தை  லூயிஸ் மத்தியாஸ் மற்றும் அருங்காட்சியகப் பொறுப்பாளர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]மண்ணின் குரல்: பிப்ரவரி 2018: பேச்சிப்பள்ளம் சமணற் சிற்பங்களும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும்

4 மறுமொழிகள்
வணக்கம்

தமிழகத்தில் சமண சமயம் செழித்து வளர்ந்த பகுதிகளில்  சமண மலை குறிப்பிடத்தக்க ஒரு பகுதி.  

பேச்சிப்பள்ளம் சமணற் சிற்பங்கள் இருக்கும் பகுதியின் அடிவாரத்தில்  நாட்டார் வழிபாட்டுக்கென்று ஐயனார்  கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பாண்டியராஜன், உக்கிர பாண்டியன், முனியாண்டி சாமி, சோணை சாமி, முத்துக்கருப்பண்ண சாமி, பேச்சியம்மன்,  இருளாயியம்மன் போன்ற மக்கள் வழிபாட்டு தெய்வங்கள் வைக்கப்பட்டு இக்கோயிலில்  வழிபாடுகள் நடக்கின்றன.   வரிசை வரிசையாக கோயிலைச் சுற்றிலும் சுடுமண்ணால் செய்யப்பட்ட குதிரை பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.

பேச்சிப்பள்ளம்  சிற்றூரில் தாமரைக் குளத்திற்கு மேலே ஒரு இயற்கை சுனையை ஒட்டியவாறு கிழக்குப் பார்த்த வகையில் பாறைமேல் சமணச் சிற்பங்கள் வரிசையாக வெட்டப்பட்டுள்ளன.  ஒவ்வொரு சிற்பத்தின் கீழும் அதனைச் செதுக்கக் காரணமானவர்களின் பெயர்கள் வட்டெழுத்துத் தமிழில் செதுக்கப்பட்டுள்ளன. இங்கு மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி ஆகிய தீர்த்தங்கரர்களின் உருவங்கள் உள்ளன. பாகுபலி தன் சகோதரிகள் பிராமி சுந்தரி இருவருடன் நிற்கும் சிற்பம் உள்ளது. 

கி.பி. 9ம் நூற்றாண்டில்  தமிழ் நாட்டின் தென் கோடியில் அமைந்துள்ள சிதரால்  தொடங்கி கழுகு மலை தவிர ஏனைய எல்லாச் சமணக் குன்றுகளிலும் தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களை உருவாக்கக் காரணமாயிருந்தவர் அச்சணந்தி முனிவர்.

பேச்சிப்பள்ளம் பார்சுவநாதர் சிற்பத்தின் கீழ் அச்சிற்பத்தை உருவாக்கியவர்   அச்சணந்தி முனிவரின் தாயார் குணமதி என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு சொல்லும் பாடம்
1. ஸ்ரீ அச்சணந்தி
2. தாயார் குணமதி
3. யார் செய்வித்
4. ததிருமேனி ஸ்ரீ

அடுத்த கல்வெட்டு இங்கு செயல்பட்டு வந்த சமணப்பள்ளியின் தலைவர் குணசேனதேவர் என்பதைக் காட்டுகின்றது. 
இக்கல்வெட்டு சொல்லும் பாடம் 
1. ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளி உடையகு
2.  ணசேனதேவர் சட்டன் அந்தலையான்
3. மாசேனன் மருமகன் ஆச்சஞ் சிரிபாலனை
4. ச் சார்த்தி செவித்த திருமேனி

இதற்கு அடுத்த கல்வெட்டு அவரது மாணாக்கன் அரையங்காவிதி, காவிதி எனும் பட்டம் பெற்றவர் என்ற செய்தியைச் சொல்கிற்து.   இக்கல்வெட்டு சொல்லும் பாடம் 
1. ஸ்வஸ்தி ஸ்ரீஇப்ப
2. ள்ளி உடைய குண
3. சேனதேவர் சட்டன்
4. அரையங்காவிதி த
5. ங்கணம்பியைச் சா
6. ர்த்திச் செய்விச் ச
7. திருமேனி

தொடர்ச்சியாக உள்ள கல்வெட்டின் பாடம்

ஸ்ரீ வெண்பு நாட்டு
திருக்குறண்டி
பாதமூலத்தான்
அமித்தின் மரை
கள்கனகன் திசெ
விச்ச திருமேனி

அடுத்து

1. ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளி
2. உடைய குண சேனதே
3. வர் சட்டன் சிங்கடை
4. ப்புறத்து கண்டன் பொற்
5. பட்டன் செய்வித்த
6. திருமேனி ஸ்ரீ

அடுத்து வரும் கல்வெட்சு
1. ஸ்வஸ்திஸ்ரீ  மதுரைக்காட்டா
2. ம் பள்ளி அரிஷ்ட நேமிஅ
3. டிகள் செய்வித்த
4.  திருமேனி


மற்றுமொரு கல்வெட்டு
1.ஸ்ரீ மிழலைக் கூற்றத்து பாரூரூடை
2. யான் வேஸின் சடையனைச் சார்த்தி
3. இவன் மணவாட்டி வெண்புணாட்டு நால்
4. கூர் சடைய ....

அடுத்த கல்வெட்டு

இப்பள்ளி உடைய குணசேன தேவர் மாணாக்கா...
சர் சந்திரப்பிரப, வித்த....


சில கல்வெட்டுக்கள் முற்றுப்பெறாத நிலையில் உள்ளன.

பேச்சிப்பள்ளத்திற்கு மேல் மலையில் இருபது அடி உயரத்தில் கி.பி.10 வாக்கில் சமணப்பள்ளியான கட்டுமானக் கோயில் ஒன்று இருந்தமையை அதன் அடித்தளப்பகுதி உறுதி செய்கிறது. அங்கு காணப்படும் கல்வெட்டு இப்பள்ளியை மாதேவிப்பெரும்பள்ளி என அடையாளப்படுத்துகின்றது.

1. ஸ்வஸ்திஸ்ரீ கோமாறஞ்சடையற்கு யாண்டு
இருபத்தேழிதனெதிராண்டினெ திரான்
2. டு மாடக்குளக் கீழ் திருவுருவகத்து
மாதேவிப் பெரும்பள்ளிபள்ளிச்
3. சந்தம் நாட்டாற்றுப் புறத்து புளியங்குன்றூர் நீர்நில மிருவே
4. லியாலும் கீழ்மாந்தரனமான வயும் அதன் துடவரும் மேற்றி நில
5. மிரண்டு மாவும் திருவுருவகத்து மலைக்கீழ் (போய்) யின வடகீ
6. ழ் சிறிபால வயக்கலு மிதன் தென்வய... இப்பள்ளியை கி.பி.860லிருந்து 905 வரை ஆட்சி செய்த பராந்தக வீரநாராயணன் என்ற பாண்டிய மன்னன் தன் மனைவி வானவன் மாதேவியின் பெயரால் கட்டியுள்ளான். இங்கிருந்த கோயில் உடைந்து விட்ட நிலையில் இங்கு கிடைத்த இயக்கர் இருவரது உருவச் சிலைகள் கீழ் கோயிலில் வைக்கப்பட்டு ஐயனார் சாமியாக வழிபடப்படுகின்றது. மலைமேல் உள்ள பகுதியில் தமிழும் கன்னடமும் கலந்த வகையில்  ஒரு கல்வெட்டும் காணப்படுகின்றது. 

1. ஆரியதேவரு
2. ஆரிய தேவர்
3. மூலசங்க பெளகுள தவள
4. சந்திர தேவரு நமிதேவரு சூர்ய
5. பிரதாப ஆஜித சேனதேவ(ரு) மா
6. .......(கோ) தானதேவரு நாக
7.தர்ம தேவரு மட.

இதில் சமணத்துறவிகளின் பெயர்கள் காணப்படுகின்றன.  
சமண சமயத்தின் மூலச்சங்கமாக செயல்பட்ட சரவனபெளகுளம் என்னும் பகுதியிலிருந்து வந்தோரது பெயர்களாக இவை இருக்கலாம்.

.
பேச்சிப்பள்ளம் கி.பி 9, 10ம் நூற்றாண்டு வாக்கில் மதுரையில் சமண சமயம் செழிப்புற்று இருந்தமைக்கு நல்லதொரு  சான்றாகும். 

குறிப்பு - மாமதுரை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2018/02/blog-post_19.html
யூடியூபில் காண:  https://www.youtube.com/watch?v=4k8hFIbjhi0&feature=youtu.be

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]மண்ணின் குரல்: பிப்ரவரி 2018: வரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்

3 மறுமொழிகள்
வணக்கம்.
 
மதுரை மாவட்டம் சமணச் சான்றுகள் நிறைந்த பகுதி. மதுரையில்  இன்று நமக்குக் கிடைக்கின்ற அனைத்து தமிழி கல்வெட்டுக்கள் உள்ள பாறை குகைத்தளங்களிலும் கற்படுக்கைகள் இருப்பதைக் காணலாம்.  அத்தகைய ஒரு பகுதி வரிச்சியூரிலும் உள்ளது. இப்பகுதியை  குன்னத்தூர் என்றும் அழைக்கின்றனர்.  

மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ தொலைவில் வரிச்சியூர் உள்ளது. இங்குள்ள குன்றுப்பகுதி சுப்பிரமணியர் மலை என அழைக்கப்படுகின்றது.  இங்கு வடக்கு நோக்கி அமைந்துள்ள குகைத்தளத்தில் சுமார் 50 சமணத்துறவியர் தங்கும் வகையில் கற்படுக்கைகள் செதுக்கப்பட்டிருப்பதையும் பாறையின் மேற்பகுதியில் தமிழ் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்., இவை கி.மு 2ம் நூற்றாண்டு கல்வெட்டுக்களாகும். இவை சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.  ஒரு சமணப்பள்ளிக்கு நூறு கல நெல்லை தானமாக ஒருவர் கொடுத்த செய்தி இதில் கூறப்படுகிறது. இக்குகை இளநந்தன் என்பவரால் உருவாக்கப்பட்டது என்ற செய்தியைச் சொல்லும் ஒரு கல்வெட்டும் இங்குள்ளது.   பிற்காலத்தைய கல்வெட்டு ஒன்றும் அதாவது விஜயநகர அரசர் காலத்தைய கி.பி 15ம் நூற்றாண்டு கல்வெட்டு  ஒன்றும் இக்குகைப் பாறையில் உள்ளது.  

குகைப்பகுதியின் உள்ளே ஒரு குடைவரைக்கோயில் அமைக்கப்பட்டிருக்கின்றது.  பிற்காலத்தில் இணைக்கப்பட்ட ஒரு சிவலிங்க வடிவத்தில் இறைவன் அமைந்த சிவன் கோயிலும் இருக்கின்றது.  

முதல் கல்வெட்டு: ”பளிய் கொடுபி...”
வகை: தமிழி எழுத்து
காலம்: கி.மு.2ம் நூற்றாண்டு
இடம்: குகைப்பாறையின் நெற்றி

இரண்டாம் கல்வெட்டு: ”அடா...... றை ஈதா வைக ஒன் நூறுகல நெல்...”
வகை: தமிழி எழுத்து
காலம்: கி.மு.2ம் நூற்றாண்டு
இடம்: கிழக்கு பார்த்த பெரிய குகைப்பாறையின் நெற்றி  நீர்வடி விளிம்பின் மேல்.
மூன்றாம் கல்வெட்டு: ”இளநதன் கருஇய நல் முழ உகை”
வகை: தமிழி எழுத்து
காலம்: கி.மு.2ம் நூற்றாண்டு
இடம்: கிழக்கு பார்த்த பெரிய குகைப்பாறையின் நெற்றி  நீர்வடி விளிம்பின் கீழ். 

மேலும் கற்படுக்கையின் மீது ஒரு கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி.15ம் நூற்றாண்டாகும். விஜயநகர  பேரரசு காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது. இக்கல்வெட்டில் வரிச்சியூர் என்ற ஊர்ப்பெயர் குறிக்கப்படுகிறது.

தமிழகத் தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் புராதனச் சின்னமாக இப்பகுதி அமைந்துள்ளது.

துணை நூல் : மாமதுரை - பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2018/02/blog-post_14.html
யூடியூபில் காண:  https://www.youtube.com/watch?v=yjE78-mf4ds&feature=youtu.be

இப்பதிவுக்கான  ஏற்பாடுகளில் உதவிய தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர் சாந்தலிங்கம் அவர்களுக்கும், உடன் வந்திருந்த த.ம.அ செயற்குழுவினர் பேராசிரியர்.முனைவர்.ரேணுகாதேவி, முனைவர் பத்மாவதி   ஆகியோருக்கும்  நன்றி.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


மண்ணின் குரல்: பிப்ரவரி 2018: திருவதிகை - அப்பர் சுவாமிகள் பாடிய திருத்தலம்

0 மறுமொழிகள்
வணக்கம்.

திருவதிகை என்கின்ற திருத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டியிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த 
வீரட்டானேசுவரர் திருக்கோயில்,  தென் கங்கை என்று கூறப்படும் கெடில நதியின் வடகரையில் ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கோயில்  இது.  மூலவருக்கு உரிய கோபுரத்து உச்சியின் நிழல் தரையில் விழாதபடி இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சைப் பெரிய கோயிலின் கோபுர நிழல் கீழே விழாதவாறு கட்டுவதற்கு இந்தக் கோயிலே முன்மாதிரியாக இருந்திருக்கிறது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இக்கோயிலின் இறைவன்  வீரட்டேசுவரர், வீரட்டநாதர், அதிகைநாதர் என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றார். இறைவி திரிபுரசுந்தரி, பெரியநாயகி  என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றார். சரக்கொன்றை  இக்கோயிலின் தலமரமாகும்.

இக்கோயிலின் பல பகுதிகளில் பல்லவர் காலத்து, பாண்டியர் காலத்து பிற்காலத்துக் கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயிலின் ஒரு சுவர் பகுதியில் திருவதிகை என்ற பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். 

தேவாரம் முதன்முதலில் பாடப்பட்ட தலம் இது என்பதோடு  சைவக்குரவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற பெருமையையுடையுது இத்திருத்தலம். 
இக்கோயிலில் சுவாமி வீரட்டானேஸ்வரர்  மிகப்பெரிய வடிவில் காட்சி தருகிறார். கோயில் தூண்கள் 16 பட்டைகளுடன் விளங்குகின்றன.  உழவாரப்பணி முதன்முதலில் திருநாவுக்கரசு சுவாமிகளால் இங்குதான் செய்யப்பெற்றது என்ற பெருமையும் இக்கோயிலுக்குண்டு.

இத்திருக்கோயில் கிழக்கு நோக்கிய பெரிய கோயிலாக விளங்குகிறது. கோயிலின் முகப்பில் 16-கால் மண்டபம் ஒன்று உள்ளது. இது திருநீற்று மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. திருநீற்று மண்டபத்தைத்தாண்டிச் சென்றால், ஏழு நிலைகளும், ஏழு கலசங்களும் கொண்டுள்ள இராஜகோபுரம் வானளாவ உயர்ந்து நிற்கின்றது. அந்தக் கோபுரத்து வாயிலின் இரண்டு பக்கங்களிலும் பரத சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 108 தாண்டவ லட்சணங்களை விளக்கிக் காட்டுகின்ற நாட்டியக் கலைஞர்களின்  சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 
இராஜகோபுரத்திற்கு அடுத்தபடியாக, உட்புறம் மற்றொரு 16-கால் மண்டபம் உள்ளது. இது தீர்த்தவாரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இடது பக்கம் அன்னதானக் கூடம் புதிதாக அமைத்துள்ளார்கள். அதையடுத்து, தல தீர்த்தங்களில் ஒன்றான சக்கரதீர்த்தம் என்னும் குளம் உள்ளது. 

இக்கோயிலின் வாசல் பகுதியில் இங்கு நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட ஒரு புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. கரிய மேனியுடன் திகழும் இந்தச் சிலை  இப்பகுதியில் பண்டைய காலத்தில் பௌத்த சமயம் செழிப்புற்று இருந்தமையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

உட்பிரகாரத்தில் தெற்குப்புறமாக நகர்ந்தால் அங்கே அப்பர் பெருமான் நின்ற நிலையில் உள்ள உற்சவமூர்த்தியின் சன்னிதியைக் காண்கிறோம். அதையடுத்து அறுபத்து மூவர் சன்னிதியும் தலவிருட்சமான சரக்கொன்றை மரமும் உள்ளது.  அதன் அருகே, சரக்கொன்றைநாதர் லிங்கவடிவில் காட்சி தருகிறார். அவருக்கு அருகில், அப்பர் பெருமானின் தமக்கையாரான திலகவதி அம்மையாரின் சன்னிதி உள்ளது. திலகவதி அம்மையார் சன்னதிக்கு எதிர்ப்புறம், தெற்குப் பக்க வாயிற்படிகள் வழியே சென்றால் திரிபுர சம்கார மூர்த்தியின் உற்சவ சன்னிதி உள்ளது. அவருடைய சன்னிதி தெற்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. அவருக்கு முன் உள்ள இரண்டு தூண்களிலும் கருணாகரத் தொண்டைமான் பற்றிய கல்வெட்டுகள் பாடல்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன. 
 
மூலவர் வீரட்டானேசுவரர் பதினாறு பட்டைகளையுடைய பெரிய சிவலிங்கத் திருமேனியாக, கிழக்கு திசையை நோக்கியவாறு காட்சிதருகிறார். இவருக்குப் பின்புறம் கருவறைச் சுவரில், சிவன்-பார்வதி திருவுருவங்கள் சுதையில் அமைக்கப்பட்டுள்ளன.

தெற்குப்பிரகாரத்தில், பெரியநாயகி அம்மையின் திருக்கோயில் மூலவர் கோயிலுக்கு வலது புறம் தனிக்கோயிலாக அமைந்து உள்ளது. 
மூலவர் கோயிலின் விமானம், எண் கோணத்தில், மிக அழகாகச் சுதையில் கட்டப்பட்டுள்ளது. இந்த விமானம் பல்லவர் காலத்தில் நிறுவப்பட்டது. 
விமானம் ஒரு தேர் வடிவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. விமானத்தின் அடித்தளத்திலிருந்து உச்சி வரை சுதையால் செய்யப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்ட சிற்பங்கள் அமைந்துள்ளன. இவ்வாறு அடித்தளத்திலிருந்து உச்சி வரை சிற்பங்கள் உள்ள விமானத்தை மற்ற கோவில்களில் காண்பது அரிது. விமானத்தைச் சுற்றிலும் வண்ண வண்ணப் பதுமைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள காட்சி கண்களைக் கவர்ந்து நிற்கின்றது. 

கருவறையைச் சுற்றிலும் குடவறைச் சிற்பங்களாக விநாயகர், அவருடன் நிற்கும் தேவகணங்கள், கோவர்த்தனதாரி, அக்னி, ஏகபாத மூர்த்தி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேசுவரர், இப்படிப் பலவிதமான சுதைச் சிற்பங்கள் கண்களுக்கு  விருந்தளிக்கின்றன.

எண் கோணத்தில் அமைந்த விமானத்தின் எட்டு பக்கங்களில் ஒவ்வொன்றிலும் நந்தி தேவரின் குடவறைச் சிற்பம் ஒன்று, சற்று உள்ளடங்கியவாறு இருப்பது கூர்ந்து நோக்கவேண்டிய ஒன்றாகும். அவற்றில் சில, சிறிய இடைவெளிக்குள் நுழைந்து பார்த்தால்தான் தெரியும்படி அமைந்துள்ளன.

கட்டிடக் கலைக்கும் சுதைச்சிற்ப வடிவமைப்புக்கும் ஒரு உதாரணமாக இக்கோயில் திகழ்கின்றது.

குறிப்பும் நன்றியும்.
1.2நூல் திருவதிகை, திரு.அன்பு ஜெயா
2. பதிவில் இடம் பெறும் தேவாரப் பாடல் - திருத்தணி  N.சுவாமிநாதன்விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2018/02/blog-post_11.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=f7VKDb-l3Oo&feature=youtu.be

இப்பதிவினைச் செய்ய உதவிய டாக்டர்.சிவராமகிருஷ்ணன், திரு.வடலூர்.சேகர். திரு.சரவணன், வடலூர் நாட்டாமை திரு.சேகர் ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES