THF Announcement: E-books update: 31/05/2015 *ஸ்ரீ தில்லையம்மன் வரலாறு*

1 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.


நூல்:  ஸ்ரீ தில்லையம்மன் வரலாறு
எழுதியவர்: புலவர்.து.சோ நடராசன், சிதம்பரம்
வெளியிடுவோர்: சிதம்பரம் தில்லையம்மன் கோயில் குடமுழுக்கு விழாக் குழுவினர்.

நூலைப் பற்றி..
சிதம்பரத்தில் உள்ள தில்லை நடராசப்பெருமான் கோயில் போல தில்லையம்மன் கோயிலும் தலபுராணம் கொண்ட ஒரு வழிபடுதலம். பழமையான வரலாற்றைக் கொண்ட இக்கோயில் மீண்டும் 13ம் நூற்றாண்டில், கி.பி.1229 முதல் 1275 வரை சோழனாட்டின் வடபகுதியை கைப்பற்றி ஆட்சி புரிந்த பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் மீண்டும் கட்டப்பட்டது. 

இப்படி மேலும் பல வரலாற்றுத் தகவல்களையும் புராணத் தகவல்களையும் விளக்கும் சிறு நூல் இது.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 419

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.அன்பு ஜெயா

இவர்கள் அனைவருக்கும் நன் நன்றி!


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​


மண்ணின் குரல்: மே 2015: வளத்தி ஆதிநாதர் ஜினாலயம்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 



விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜினாலயங்களில் வளத்தி ஆதிநாதர் ஜினாலயம் குறிப்பிடத்தக்கது. மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், முக மண்டபம், இருபது கால் மண்டபம், கலசார்ச்சன மண்டபம், கோபுரம், மானஸ்தம்பம், மடப்பள்ளி ஆகிய பகுதிகளைக் கொண்டு  கோயில் விளங்குகின்றது. இதன் நடுவே ஆதிநாதர் பரியங்காசனத்தில் அமர்ந்த கோலத்தில் வழிபாட்டில் உள்ளார். மூலவர் திருவுருவம் கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இப்போது இருக்கும் கோயில் 12, 13ம் நூற்றாண்டு கட்டிடத்தின் புணரமைக்கப்பட்ட பகுதி.

கோயிலின் முன்புறத்தில் ஒரு தனிப்பகுதியில் பழமையான ஆதிநாதர், தர்மதேவி, பத்மாவதி, பிரம்ம சாஸ்தா கற்சிலைகள் இருக்கின்றன. 

இக்கோயில் இன்றும் வழிபாட்டில் இருப்பது. மக்கள் குடியிருப்புப் பகுதியிலேயே கோயில் அமைந்துள்ளது.

கோயிலின் ரிஷப தீர்த்தங்கரர், பார்ச்சுவதீர்த்தங்கரர், சர்வாணயக்‌ஷர் ஆகிய மூன்று சிலைகளையும் விழாக்காலங்களில் வீதி உலா எழுந்தருளச் செய்வர்.

இப்பதிவினை 2014ம் ஆண்டு ஜுன் மாதம் நான் பதிவாக்கினேன். இப்பதிவினைச் செய்ய உதவிய நண்பர்கள் ப்ரகாஷ் சுகுமாரன், ஹேமா, டாக்டர்.பத்மாவதி ஆகியோர்க்கு என் நன்றி.

7 நிமிடப் நேரப் பதிவு இது.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2015/05/blog-post_30.html
யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=_iyEeRIbZQo

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


THF Announcement: E-books update: 24/05/2015 *செண்டலங்காரன் - விறலி விடு தூது*

0 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.



நூல்:  செண்டலங்காரன் - விறலி விடு தூது
பதிப்பாசிரியர்: புலவர் திரு.கோவிந்தராசனார்.
பதிப்பாளர்: தஞ்சாவூர் சரபோஜியின் சரஸ்வதி மகால் நூல் நிலையம்

நூலைப் பற்றி..
தூது இலக்கியம் தமிழ் மொழிக்குரிய பலவகைப் பிரபந்தகளுள் ஒன்றாகும். புலவர் தாம் விரும்பும் தெய்வங்களிடத்தும் வள்ளல்களிடத்தும் பாணன், விறலி போன்றாருடனும் கிளி, வண்டு, தென்றல் போன்றவற்றையும் தூது விடும் பாங்கில் தூதாகும் பாடல்களைப் பாடியுள்ளனர்.

இத்தூது பாட்டுடைத் தலைவனாகிய செண்டலங்காரன் என்னும் வள்ளலைப் புகழும் வகையில் ஆடலில் சிறந்த விறலியைத்  தன்னிடம் ஊடல் கொண்ட மனையாளிடம் தூது விடும் பாங்கில் அமைக்கப்பட்ட நூல்.

நூலில் செண்டலங்காரன் என்ற வள்ளனின் கதையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு வாகுபட்டர் கதையும் உள்ளது.

நூல் முழுதும் செய்யுள் நடையில் உள்ளது

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 418

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: மறைந்த டாக்டர்.கி.லோகநாதன், மலேசியா.
மின்னாக்கம்:சுபாஷிணி 
மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​



மண்ணின் குரல்: மே 2015: லாடன் கோயில் குடைவரைக்கோயில்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 




இப்பதிவில் பொதுவாக ஒரு குடைவரைக்கோயில் என்பது எப்படி அமைக்கப்பட்டிருக்கும் என்பது  முதலில் விளக்கப்படுகின்றது. 
  • முதலில் எவ்வகை இடத்தில் குடைவரைக்கோயிலை அமைக்கவேண்டும் என தேர்ந்தெடுத்தல்.
  • உளியால் பாறையை தோண்டி எடுத்து விட்டு உள்ளே சிலை இருக்க வேண்டிய இடத்தையும் தூண்கள் இருக்க வேண்டிய இடத்தையும் விட்டு விட்டு ஏனைய பகுதிகளைச் செதுக்கி நீக்குதல்
  • வெளியில் ஒரு அர்த்த மண்டபம் அமைத்தல்
  • அர்த்த மண்டபத்தில் 2 முழுத்தூண்களையும் 2 அரைத்தூண்களையும் செதுக்குதல்
  • உள்ளே கருவரையில் மாடத்தில் புடைப்புச் சிற்பமாக தெய்வ வடிவம் அமைத்தல்
  • வெளிச்சுவற்றில் துவார பாலகர் சிற்பம் அல்லது வேறு சிலைகள் சின்னங்கள் செதுக்குதல்
இவற்றோடு குடைவரைக் கோயிலின் பொது அமைப்பு உருவாக்கப்படுகின்றது.

இப்பதிவில் தொடர்ந்து தமிழக நிலப்பரப்பில் முருக வழிபாடு பற்றியும் விளக்கமளிக்கப்படுகின்றது.

லாடன் கோயில் குடைவரைக் கோயில் முற்காலப் பாண்டியன் காலத்தைச் சேர்ந்தது. 7, 8ம் நூற்றாண்டு குடைவரை இது. முருகனுக்கு மட்டுமென்று தனிப்பட்ட வகையில் இருக்கும் ஒரே குடைவரை கோயில் இது என்ற தனிச்சிறப்பும் பெறுவது. முருகனோடு தெய்வானை மட்டுமே இருக்கும் வகையில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கின்றது.
கருவரைக்கு வெளியே 2 துவார பாலகர்களும் மயிலும் சேவலும் இருக்கும் புடைப்புச் சிற்பமும் இருக்கின்றன.

தொல்லியல் அறிஞரும் தமிழ் அறிஞருமான காரைக்குடி டாக்டர்.வள்ளி சொக்கலிங்கம் அவர்கள் இப்பதிவில் அனைத்து செய்திகளையும் வழங்குகின்றார்கள்.



​டாக்டர்.வள்ளியுடன் டாக்டர்.ரவிச்சந்திரனும் திரு.நாகரத்தினமும்

இப்பதிவினை 2014ம் ஆண்டு ஜுன்மாதம் தமிழகத்தின் மதுரைக்கு அருகில் உள்ள ஆனைமலை  பகுதியில் நான் பதிவாக்கினேன். 

11 நிமிடப் நேரப் பதிவு இது.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2015/05/blog-post_23.html
யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=QDwouUE4aSw&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!



அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


THF Announcement: E-books update: 17/05/2015 *மகனே உனக்கு*

2 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.


நூல்:  மகனே உனக்கு
எழுதியவர்: வெ. சாமிநாத சர்மா
பதிப்பாளர்: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம்

நூலைப் பற்றி..
இரங்கூனில் நடைபெற்று வந்த ஜோதி என்ற மாதப்பத்திரிக்கையில் திரு.சாமிநாத சர்மா  வ.பார்த்தசாரதி என்ற புனைப்பெயரில் 1938ஆம் ஆண்டு தொடங்கி 1941 வரை இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் சில கடிதங்களை எழுதி வந்தார். அத்தோடு கூடுதலாக அப்பத்திரிக்கையில் வெளிவராத இரண்டு கடிதங்களையும் சேர்த்து இந்த நூல் உருவாக்கப்பட்டது. இதில் ஆசிரியரின் கவிதைகளும் இடம்பெறுகின்றன.

புனைப்பெயரில் எழுதிய கடிதங்களை ரசித்த தனது மகனுக்கு முகவுரையில் மிக அழகான அறிமுகப் பகுதியை எழுதியிருக்கின்றார். இதனை வாசித்து விட்டு நூலுக்குள் செல்வது நன்று.

இந்த நூலில்
  • கடமையை செய்
  • மன உறுதி
  • தன்னம்பிக்கை
  • ஓய்வு கொள்வது தேவையா?
  • சத்தியத்தைச் சொல்
  • உன் மனசாட்சியை விற்று விடாதே
  • சொல்லாதே - செய்
  • முயற்சியை கைவிடாதே
...
இப்படி எளிமையான அதேவேளை ஒரு மனிதருக்கு அடிப்படை சக்தி தரும் சொற்களில் தமது எண்ணங்களை கடிதமாக வடித்திருக்கின்றார் ஆசிரியர்.

ஒவ்வொரு இளைஞரும் வாசிக்க வேண்டிய நூல் இது.
கிரேக்க ரோமானிய பண்பாட்டின் உதாரணங்களையும் காட்டி கடிதங்கள் எழுதப்பட்டிருப்பது சிந்தனை விசாலத்தை விரிவாக்கிக் காட்டுகின்றது.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 417

மின்னாக்கம், மின்னூலாக்கம்:  (சுந்தரராஜன் ஜெயராமன், கோயம்புத்தூர்)


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​


மண்ணின் குரல்: மே 2015: இலங்கை போருக்குப் பின் தமிழர் மீள்குடியேற்றம்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

இலங்கையில் நடைபெற்ற பல்லாண்டு கால யுத்தத்தின் தொடர்பாக ஆயிரக்கான உயிர் சேதங்கள் நிகழ்ந்தமை மிகுந்த வேதனைக்குறிய விஷயம்

அதே போல போரின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகமெங்கும் சென்று விட்ட ஒரு நிலை என்பது ஒரு புறமிருக்க இலங்கைக்குள்ளேயே அகதி முகாம்களில் தமிழர்கள் வைக்கப்பட்டிருக்கும் கொடுமை என்பது இன்னமும் தொடரும் அவலம்.





  • அகதி முகாம்களில் இருக்கும் மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனரா?
  • அவரவர் நிலங்களில் மீண்டும் வாழ அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா?
  • யாழ்ப்பாணம் மன்னார் கிளிநொச்சி மேலும் பல தமிழர் பகுதிகளில் தற்சமயம் தமிழர் வாழ்க்கை எவ்வாறு உள்ளது?
  • போருக்குப் பிந்திய தொடர் சமூக அவலங்கள் யாவை?
  • குழந்தைகளின் கல்வி எவ்வகையில் பாதிக்கப்பட்டுள்ளது?
  • பெண்களின் பாதுகாப்பற்ற நிலை?
  • இன்னமும் அரசு செய்ய வேண்டியவை யாவை?

 
இப்படி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது இந்தப் பேட்டி. இப்பேட்டியைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்குகின்றார் இலங்கை தமரசு கட்சியின் தலைவரும், இலங்கைத் தமிழ்த்தேசியக் கட்சியின் துணைத்தலைவரும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான ஐயா மாவை சோனாதிராஜா அவர்கள்.


இப்பதிவினை இவ்வருடம் ஏப்ரல் மாதம் டர்பன் நகரில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன்.

ஒரு மணி நேரப் பதிவு இது.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.com/2015/05/blog-post.html
யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=PjcPBk8oVi4&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


THF Announcement: E-books update: 3/05/2015 *ராஜதந்திர யுத்தகளப்பிரசங்கங்கள்*

0 மறுமொழிகள்
​வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.



நூல்:  ராஜதந்திர யுத்தகளப்பிரசங்கங்கள்
எழுதியவர்: வெ. சாமிநாத சர்மா
பதிப்பாளர்: இ.இனியன்


22 அத்தியாயங்களில் பிரசங்கங்கள் அமைவதாக அமமைக்கப்பட்டுள்ளது.

இந்நூலைப் பற்றி வெ. சாமிநாத சர்மாவின் கூற்று..
வரலாற்று ஆய்வாளர்களுக்கு இன்றளவும் வழி காட்டியாக வாழ்பவன் திரேஸ் (கிரேக்கம்).  கிரேக்க வரலாற்றில் மிக உயர்வான காலத்தில் வாழ்ந்தவன். கல்வியறிவும் படைப்பயிற்சியும் பெற்றவன். 8 நூல்கள் எழுதியவன். இதில் இராஜதந்திர யுத்தக்களப் பிரசங்கங்கள் எனும் இந்த நூலும் அடங்கும்.

இந்த நூல் அரசியலில் ஈடுபாடுகொண்ட ஒவ்வொருவர் கையிலும் இருக்கவேண்டிய நூல். 

அரசியலில் எதிர்கொள்ளும் பன்முகச் சிக்கல்கள் இந்த நூலில் ஆராயப்பட்டுள்ளன. ஆளும் நிலையில் உள்ளவர்கள் மக்களை எப்படி நடத்த வேண்டும் என்பதைப் பற்றி அறிய உதவும் நூல்.


அறிஞர்கள் என்று யாரைப் புகழ்ந்து பேசுகிறோமோ அவர்களிடத்தில் ராஜ்ய காரியங்களை ஒப்புவித்தால் அவர்கள் அந்தக் காரியங்களைத் திறம்படச்
செய்வார்களா திறமையான பேச்சாளர்கள் திறமையாகக் காரியங்களைச்
சாதிப்பார்களா? உடனே செயல்படுத்த வேண்டிய விஷயங்களைப் பற்றி, புத்தி
ஒன்றையே பிரதானமாக உடையவர்கள் அபிப்பிராயம் சொல்வார்களானால் அந்த
அபிப்பிராயம் சரியானபடி இருக்குமா? அந்த அபிப்பிராயப்படி நடக்க முடியுமா?
அதிகமாகச் சிந்தனை செய்தால் காரியத்திற்குக் குந்தகம் ஏற்படாதா? அதிகார
பதவியிலிரு்க்கிறவர்கள் பிரஜைகளை எப்படி நடத்த வேண்டும்? அன்பாக
நடத்தினால் நல்லதா, கடுமையாக நடத்தினால் நல்லதா அரசியலில் விட்டுக்
கொடுப்பதன் மூலம் வெற்றி காண முடியுமா? அல்லது பிடிவாதத்துடன் கடைசி
வரையில் போராடினால்தான் வெற்றி கிடைக்குமா? இன்னோரன்ன  பிரச்சனைகள் பல பிரசங்கங்களினூடே தோன்றி அரசியல்வாதிகளின் சிந்தனையைத் தூண்டி விடக் கூடியனவாயிருக்கின்றன. இந்த ஒரு காரணத்திற்காகவே பிரசங்கங்கள் மட்டும் பொறுக்கி எடுத்து நூலாகத் தரப்பட்டுள்ளது.
- வெ. சாமிநாத சர்மாவின் தமிழ்ப்பணி என்ற நூலிலிருந்து... - பெ. சிவசக்தி

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 416

மின்னாக்கம், மின்னூலாக்கம்:  (சுந்தரராஜன் ஜெயராமன், கோயம்புத்தூர்)


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES