புத்தாண்டு (2013) வாழ்த்துக்கள்!!

0 மறுமொழிகள்
அன்புள்ள மின்தமிழர்களே

உங்கள் எல்லோரையும் 2013 ஆண்டில் மீண்டும் மின்தமிழுக்கு வரவேற்பதில்
மகிழ்கிறேன். பிரபஞ்சத்தில் ஆக்கம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது,
உடலும், உயிரும் தன்னைத் தொடர்ந்து புதுபித்துக் கொண்டிருக்கின்றன. எனவே
இன்று மீண்டும் புதிதாய் பிறப்போம். புதிய உறுதிமொழிகள் எடுப்போம். புதிய
மனிதராய் அவதாரம் செய்வோம். தீயினுள் தூசாகி போயின பழவினை, போயின எம்
பழைய சிந்தை! ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டும் பிறப்பெடுப்போம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

2012 ஆண்டு மிகவும் பயனுள்ள ஆண்டாகவே அமைந்தது. அவ்வாண்டின் ஆரம்பமே
இந்திய மண்ணில் குதூகலத்துடன் ஆரம்பித்தது. நீண்ட பயணங்கள், சுவையான
முதுசொம் தேடல், புதிய நண்பர்கள், புதிய எழுச்சி தரும் உரையாடல்கள்,
உரைகள் என்று களப்பணியுடன் அவ்வாண்டு ஆரம்பமானது. அவ்வாண்டில் பெற்ற
முதுசொம் செல்வங்களை யாம் தொடர்ந்து பதிப்பித்து வருகிறோம். மின்தமிழ்
இவ்வாண்டில் மிக சுறுசுறுப்புடன் செயல்பட்டது என்றால் அது மிகையில்லை.
புதிய நூல்கள் மறுபதிப்பு (இலக்கப்பதிவு) கண்டன. மின்தமிழரின் ஆக்கங்கள்
மரபுவிக்கியில் சேகரமாயின. ஆக்கமிகு இழைகள் மின்வானில் தோன்றி புதிய ஒளி
காட்டின (குறிப்பாக வடநாட்டு மருத்துவர் ஒருவர் இந்தியத்தொன்மை ஆய்வின்
நோக்கில் நம்முடன் இவ்வாண்டில் இணைந்துள்ளதைக் காண்க). கவிதை, கதை,
கட்டுரை, பயணக்கதைகள், முதுசொம் வேட்டை (பயண ஓவியங்கள்), ஆய்வுத்திரிகள் என்று
சிந்தனையைக்கூர்மை செய்யும் படைப்புகள் மின்தமிழில் வந்தவண்ணமிருந்தன.
மின்தமிழர்களுக்கு இக்குழுவின் மீது புதிய நம்பிக்கையும், பற்றும் தோன்றி
வளர்ந்ததும் இவ்வாண்டில்தான். இதனால் தமிழ் மரபு அறக்கட்டளைக்கான
உலகளாவிய கவன ஈர்ப்பு மின் தமிழர்களால் அளிக்கப்பட்டது.

8 ஆண்டுகள் நம்மோடு சேர்ந்து அனைத்து பணிகளிலும் உறுதுனையாக நின்ற
திரு.ஆண்டோ பீட்டர் இந்த ஆண்டில் மறைந்தது நமக்கு பெறும் இழப்பு.
ஆயினும், தமிழ் மேம்பாட்டிற்கு உழைக்கும் அக்குடும்பத்திலிருந்து
ஆண்டோவின் துணைவியார் திருமதி ஸ்டெல்லா ஆண்டோ பீட்டர் தமிழ் மரபு
அறக்கட்டளையின் பொருளாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது எமது உறவை
பலப்படுத்துகிறது. இந்த ஆண்டின் மிக மகிழ்ச்சியான சேதி,  தஞ்சைத்
தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் கணையாழி ஆசிரியரும்
தமிழகத்தின் பல்வேறு கல்வித் துறைகளில் முக்கிய தலைமைப் பொறுப்பு
வகித்த/வகிக்கும் டாக்டர்.ம.ராஜேந்திரன் அவர்கள் த.ம.அ வின் புதிய
செயலாளராக இணைந்திருப்பது!

இந்த ஆண்டில் நாமொரு (முதுசொம்) குடும்பம் எனும் எண்ணம் இன்னும் ஆழமாக
வேறூன்றியுள்ளது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் நன்றி
சொல்லிக்கொள்வதில்லை எனினும் செய்நன்றியை ஏதாவதொரு வகையில் நமது
வணக்கத்திலும், பணிவிலும், இன்மொழியிலும் சொல்லிய வண்ணம் இருப்பது
தமிழ்மரபு. அதை நாம் எப்போதும் செய்து கொண்டு இருந்தாலும், 2012 ஆண்டு
முடிகின்ற தறுவாயில் உங்கள் எல்லோருக்கும் மீண்டுமொருமுறை தனிப்பட்ட
அளவிலும், தமிழ் மரபு அறக்கட்டளை சார்பிலும், மின்தமிழ் சார்பிலும்
சொல்லிக்கொள்வதில் மகிழ்கிறோம்.

2013 ஆண்டை நோக்கிய நமது முதலடியை வலுவாய் வைப்போம். நம்பிக்கையோடு தலை
நிமிர்ந்து நடப்போம்.

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய தமிழ் முதுசொம், வாழியவே!

மிக்க அன்புடன்
டாக்டர்.நா.கண்ணன்
முனைவர்.சுபாஷிணி 
(தோற்றுநர்கள் - தமிழ் மரபு அறக்கட்டளை, மின்தமிழ் மடலாடற்குழு)
டிசம்பர் 31, 2012


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES