பெரியசாமி தூரன்

0 மறுமொழிகள்
செம்மல் பெரியசாமி தூரனின் செந்தமிழ்ப் பணிகள் - இன்று (26/09/2008) அன்னாரின் பிறந்த நூற்றாண்டு நிறைவு நாள்


தமிழின் அனைத்துத் துறைகளிலும் பன்முக மாட்சியுடைய பற்பல நூல்களைப் படைத்துப் பெரும்பணி செய்த அறிஞர் ம.ப. பெரியசாமித் தூரன். ஈரோடு வட்டத்தில் மொடக்குறிச்சியை அடுத்த மஞ்சக்காட்டுவலசு என்னும் சிற்றூரில் பழனிவேலப்ப கவுண்டர் - பாவாத்தாள் தம்பதியினருக்கு 1908ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 26ம் நாள் பிறந்தவர் பெரியசாமி. கொங்கு சமுதாயத்தின் வரலாற்று நாயகர்களான அண்ணன்மார், பொன்னர் - சங்கர் இருவரும் பெரியசாமி, சின்னச்சாமி என்று அழைக்கப்பட்டனர். மேழிப்பள்ளி பொன்னர் நினைவால் இவருக்குப் பெரியசாமி என்று பெயர் வைக்கப்பட்டது.



இளம் வயதிலேயே தாயாரை இழந்த தூரன் செம்மாண்டம்பாளையம் பாட்டி வீட்டில் வளர்ந்தார். மொடக்குறிச்சியில் தொடக்கக்கல்வி முடித்து ஈரோடு மாசன உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பவரை படித்தார். தமிழாசிரியர் திருமலைசாமி அய்யங்கார் பாடம் கற்பிக்கும் நேரம் அல்லாமல் மற்ற நேரமும் மாணவர்களுக்குத் தமிழ் அறிவை ஊட்டுபவர். "அவரால் எனக்குத் தமிழில் பற்றும் கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது," என்று கூறியுள்ளார் தூரன்.
இளவயதில் சித்தப்பா அருணாசலக்கவுண்டர் கூறிய கதைகளும், இன்னொரு உறவினர் அருணாசலக்கவுண்டர் கற்றுக் கொடுத்த இசைப்பாடல்களும் தூரனுக்குக் கதை, இசை ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தது.

கணக்கில் மிகுந்த ஆர்வமுடைய தூரன் "மின்சாரம் அப்பொழுது இல்லாததால் தெருவில் உள்ள மண்ணெண்ணெய் விளக்கின் அடியில் முக்கோணமும் வட்டமும் வரைந்து கணக்குப் படித்தேன்,"என்று கூறியுள்ளார். விடுதி வசதி இல்லாததால் ஒரு கன்னடிய நாயக்கர் வீட்டில் தங்கி உணவுண்டு படித்தார். மாணவப் பருவத்தில் ஈரோடு கருங்கல்பாளையம் நூலகம் சென்று ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி அய்யங்கார் முதலியோர் எழுதிய நாவல்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டார்.

மாணவப் பருவத்திலேயே பாட்டி கற்றுக் கொடுத்து அளித்த இராட்டையில் நூற்று பெரியார் தம் வீட்டில் நடத்திய கதர்க் கடையில் நூல் சிட்டங்களைக் கொடுத்து கதர் வாங்கி அணிவதை வழக்கமாக்கிக் கொண்டார். 01.05.1939ல் காளியம்மாளை மணம் செய்து கொண்ட தூரனுக்கு;

சாரதாமணி
வசந்தா
விஜயலட்சுமி

ஆகிய பெண்மக்களும்,

சுதந்திரக்குமார் என்ற மகனும் உள்ளனர்
மருமகள் செண்பகத்திலகம்.
1926 - 27ல் சென்னை மாநிலக் கல்லூரியில்,

கணிதம்
இயற்பியல்
வேதியியல்

பாடம் எடுத்து இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்று 1929ல் கணிதத்தில் பி.ஏ. தேர்ச்சி பெற்று ஆசிரியப் பயிற்சியும் (எல்.டி.) பெற்றார். சென்னையில் கல்லூரிக் கல்வி கற்கும்போதே சக மாணவர்கள்

சி. சுப்பிரமணியம்
நெ.து. சுந்தரவடிவேலு
ஓ.வி. அளகேசன்
இல.கி. முத்துசாமி
கே.எம். இராமசாமி
கே.எஸ். பெரியசாமி
கே.எஸ். பழனிசாமி

ஆகியோருடன் இணைந்து "வனமலர்ச் சங்கம்" என்ற அமைப்பைத் தோற்றுவித்து பாரதி பாடல்களைப் பரப்பவும், தேசியப் போராட்டத்திற்கு வலு சேர்க்கவும் "பித்தன்" என்ற மாத இதழை நடத்தத் தூரன் காரணமாக இருந்தார்.

1929 முதல் நான்காண்டுகள் கோபிசெட்டிபாளையம் வைரவிழா உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றியபின் போத்தனூரிலும், பின்னர் பெரியநாயக்கன்பாளையத்தில் இயங்கிய இராமகிருஷ்ணா வித்யாலயத்தில் சேர்ந்து ஆசிரியராகவும், தலைமையாசிரியராகவும் 1948 வரை பணியாற்றினார். அப்போது நேர்முகமாகச் சிலரிடம் இசைப்பயிற்சி பெற்றார். ஆங்கிலத்தில் வெளிவந்த "டைம்" இதழ் அமைப்பில் "காலச்சக்கரம்" என்ற இதழை பொள்ளாச்சி அருட்செல்வர் நா. மகாலிங்கத்தின் தந்தையார் ப. நாச்சிமுத்துக்கவுண்டர் ஆதரவுடன் தொடங்கிப் பல்சுவை இதழாக நடத்தினார்.

அவ்விதழில் பெரும்புலவர் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் துணையுடன்,

காளமேகப் புலவரின் சித்திரமடல்
வடிவேல் பிள்ளையின் மோகினிவிலாச நாட்டிய நாடகம்
அவிநாசிப் புலவரின் திங்களூர் நொண்டி நாடகம்
சாமிநாதக் கவிஞரின் கொன்றைவேந்தன் வெண்பா

ஆகியவைகளைப் பதிப்பித்தார். அப்போதைய தமிழகக் கல்வியமைச்சர் தி.சு. அவிநாசிலிங்கம் முயற்சியால் தமிழ் வளர்ச்சிக்காகத் தொடங்கப்பட்ட தன்னாட்சி உரிமை உடைய தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட "கலைக்களஞ்சிய"த்தின் ஆசிரியராக 1948ல் பொறுப்பேற்று 1968 வரை 750க்கு மேற்பட்ட பக்கங்களையுடைய 10 தொகுதிகளை வெளியிட்டார். இந்தியாவிலேயே முதன்முதலாகக் கலைக்களஞ்சியம் வெளிவந்தது தமிழ்மொழியில்தான். பிறகு 100 பக்கங்களையுடைய குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10 தொகுதிகளையும் 1976 வரை வெளியிட்டார்.

கல்லூரியில் படிக்கும்போதே திரு.வி.க.வின் அறிவுரைப்படி 1904 முதல் 1921 வரை சுதேசமித்திரன் இதழில் பாரதியார் எழுதிய கவிதை - கட்டுரைகளை மிக அரிதின் முயன்று தொகுத்தார். கடுமையாக முயன்று 140 தலைப்புகளில் வெளிவராத பாரதியாரின் கவிதை கட்டுரைகளைக் காலமுறைப்படி தொகுத்து "பாரதி தமிழ்" என்று வெளியிட்டார். பாரதியார் படைப்பில் இது மூன்றில் ஒரு பகுதியாகும்.

கொங்கு வேளாளரில் இவர் "தூரன்" குலம் சார்ந்தவர் ஆனதால் "தூரன்" என்று பெயரில் இணைத்துக் கொண்டார். ஆனால் தமிழில் தொலைநோக்குப் பார்வை உடையவர் என்றும் அப்பெயரைக் கருதலாம்.

இவருடைய கதைத் தொகுதிகளாக

மாவிளக்கு
உரிமைப் பெண்
காலிங்கராயன் கொடை
தங்கச்சங்கிலி, பிள்ளைவரம்

தூரன் எழுத்தோவியங்கள்
என ஆறு வந்துள்ளன. பெரும்பாலும் கொங்கு மண் மணம் கமழும்படியாகவே எழுதியுள்ளார்.
கொங்கு நாட்டு ஊர்களும், பெயர்களுமே அவற்றில் இடம் பெறும்.

தேன்சிட்டு
பூவின் சிரிப்பு
காட்டுவழிதனிலே

முதலிய கட்டுரை நூல்களில் 50 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அவ்வளவும் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள்,

மதம் அவசியமா?
மெளனப் பெரும் பேச்சு

என்பன சில தலைப்புகள்,

கானகத்தின் குரல்
கடல் கடந்த நட்பு
பறவைகளைப் பார்

முதலியன மொழிபெயர்ப்பு நூல்கள். தாகூரின் கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். காற்றில் வந்த கவிதை என்பது நாட்டுப்புறத் தொகுப்பாகும்.
நாடக நூல்களாகக்,

காதலும், கடமையும்
அழகு மயக்கம்
சூழ்ச்சி
மனக்குகை
ஆதிமந்தி
பொன்னியின் தியாகம்
இளந்துறவி

ஆகியவைகளை எழுதியுள்ளார். இவை நாடகமாக நடிக்கத் தகுதியானவை.
இசைப்புலமை வாய்க்கப் பெற்ற தூரன்,

கீர்த்தனை அமுதம்
இசைமணி மஞ்சரி
முருகன் அருள்மணிமாலை
நவமணி இசைமாலை
இசைமணி மாலை
கீர்த்தனை மஞ்சரி

ஆகிய இசை, கீர்த்தனை நூல்கள் இயற்றியுள்ளார். கடைசி இரண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாகும்.

தமிழகத்தின் மிகப்பெரிய இசைவாணர்கள் தூரன் பாடல்களை மேடையில் பாடியுள்ளனர். இசைக் கல்லூரிகளில் சில பாடமாக வைக்கப்பட்டுள்ளன. டைகர் வரதாச்சாரியார், கல்கி போன்றவர்கள் தூரனின் இசைப் புலமையைப் புகழ்ந்துள்ளனர்.
குழந்தைகளுக்கு கதையாக, பாடலாக, நெடுங்கதையாக, அறிவியல் முறையில் 14 நூல்களைத் தூரன் இயற்றியுள்ளார்கள். "பச்சைக் குழந்தையெனில் எனக்கொரு பாசம் பிறக்குதம்மா," என்று குழந்தையை நேசிக்கும் தூரன் ஏழைச் சிறுவர், சிறுமியர் விளையாட்டைக் கண்முன் நிறுத்துகிறார். விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் "ஓடிவா கஞ்சிகுடி, மண்வெட்டப் போகணுமாம் பண்ணையார் ஏசுகிறார்," என்று ஓடுகின்றன. "துன்பத்தில் தோன்றி தொழும்பே வடிவானோர்க்கு இன்ப விளையாட்டும் இல்லையோ இவ்வுலகில்," என்று வினவுகிறார் தூரன்.
காந்தியடிகளும், பாரதியாரும் தூரனை ஈர்த்த இரு பெருமக்கள். பாரதியார் படைப்புகள் பற்றிப் பதினொரு நூல்கள் எழுதியுள்ளார். உளவியல் தத்துவம் தொடர்பாக ஒன்பது நூல்கள் எழுதியுள்ளார்.

தூரனுடைய
இளந்தமிழா
மின்னல்பூ
நிலாப்பிஞ்சு
தூரன் கவிதைகள்
பட்டிப்பறவை

ஆகிய நூல்களில் இயற்கையை நேசிக்கும் இனிய பாடல்களையும் எளிய நடையையும் எங்கும் காணலாம்.

"ஞாயிறே இருளை என்ன செய்து விட்டாய்?
ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கிவிட்டாயா?'"

என்று வினவுகிறார்.

1980ம் ஆண்டு கடுமையான வாத நோயால் வாடியவர் 1987ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் நாள் தன் தமிழ்ப்பணியை, தமிழ் மூச்சை நிறுத்திக் கொண்டார்.

கவிதைகளில் பாரதியாரின் தாக்கத்தைக் காணுகிறோம். தமிழின் அனைத்துத் துறைகளுக்கும் தூரன் செய்த பணி மிகப் பெரியது. இந்திய அரசின் "பத்மபூஷண்", தமிழக அரசின் "கலைமாமணி" விருதும் பெற்றுள்ளார். தமிழ் எழுத்தாளர் சங்கம், குழந்தை எழுத்தாளர் சங்கத்துடன் தொடர்பு கொண்டவர்.

அறிவுத் துறைகளைத் தமிழுக்குத் தூரன் புதுமையாகப் படைத்துள்ளார். தமிழக அரசு அவருடைய நூல்களையெல்லாம் நாட்டுடைமையாக்கியுள்ளது.

செ. இராசு

நன்றி: தினமணி
விக்கிபீடியாவில் தூரன்


மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

நற்றமிழ் நாவலர் வேங்கடசாமி நாட்டார்

0 மறுமொழிகள்
சோழவள நாட்டில் தஞ்சைக்கு வடமேற்கே 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகிய சிற்றூர் நடுக்காவேரி. இவ்வூர் காவேரியின் கிளை நதியாகிய குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் கண்டியூருக்கு மேற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரில் தாரண ஆண்டு சித்திரைத் திங்கள் 2ம் நாள் (12.4.1884) கள்ளர் குலத்தில் முத்துசாமி நாட்டார் - தைலம்மாள் தம்பதிக்கு ஐந்தாவது மகனாக வேங்கடசாமி பிறந்தார். இவர் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான். தமிழ் நூற்கடலை நிலை கண்டு உணர்ந்தவர். அன்பும், அடக்கமும், அமைதியும் அணிகலனாய்ப் பூண்ட இப்பெருமகனே பண்டித நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஆவார்.



இளமையும் கல்வியும்:-

வேங்கடசாமிக்கு முதலில் இட்ட பெயர் சிவப்பிரகாசம். தொண்டையில் கட்டி ஏற்பட்டு திருப்பதிக்கு வேண்டிக்கொண்ட பின் குணமானதால் வேங்கடசாமி என்று பெயர் மாற்றம் பெற்றார். வேங்கடசாமியின் தந்தையார் முத்துசாமி நாட்டார், தமிழ் இலக்கியப் பயிற்சி உடையவர்.

நைடதம்
திருவிளையாடற் புராணம்
வெங்கைக்கோவை
திருப்புகலூர் அந்தாதி
முதலிய நூல்களைக் கற்றவர். மேலும், இவர்
கைவல்யம்
ஞானவாசிட்டம்
சாதகாலங்காரம்
குமாரசுவாமியம்
உள்ளமுடையான்

முதலிய நூல்களைக் கற்ற வேதாந்தியாக விளங்கினார். வேங்கடசாமியின் பள்ளிப்படிப்பு 4ம் வகுப்புடன் நின்றது.

திருப்புகலூர் அந்தாதி
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி
வெங்கைக்கோவை
நைடதத்தின் முதல் பகுதி
ஆகிய நூல்களைத் தம் தந்தையாரிடம் பாடம் கேட்டார்.
திருவிளையாடற் புராணம்
வில்லிபாரதம்
கம்பராமாயணம்

முதலியவற்றைத் தாமே படித்து வந்தார்.

அப்போது அவருக்கு வயது 16. தம் குடும்ப முன்னேற்றம் கருதி, வேளாண்மையில் நேரிடையாக ஈடுபட்டார். ஒழிந்த நேரங்களில் தமிழ் நூல்களைத் தாமே படித்து வந்தார்.

சூளாமணி நிகண்டு
அமரநிகண்டு

ஆகியவற்றிலுள்ள பாடல்களை மனப்பாடம் செய்தார். நன்னூல் முழுவதையும் தாமாகவே கற்று மனனம் செய்தார். தஞ்சையில் நடைபெற்ற தமிழ்ச் சங்கக் கூட்டங்களுக்குத் தம் தந்தையாருடன் சென்று, கேள்வி அறிவை வளர்த்துக் கொண்டார்.
பண்டிதர் பட்டம்:-

அந்நாளில் அப்பகுதியில் தொடக்கப்பள்ளி மேற்பார்வையாளராக இருந்த ஐ.சாமிநாத முதலியார் நல்ல தமிழ்ப் பற்றாளர். "சாவித்ரி வெண்பா" எனும் நூலை இயற்றியவர். அவர் வேங்கடசாமியின் தமிழறிவை வியந்து, பாண்டித்துரைத் தேவர் தோற்றுவித்த மதுரைத் தமிழ்ச் சங்கம் பற்றியும், அச்சங்கம் நடத்தி வரும்;

பிரவேசபண்டிதம்
பாலபண்டிதம், பண்டிதம்

ஆகிய தமிழ்த் தேர்வுகள் பற்றியும் கூறி, அத்தேர்வுகளை எழுதுமாறு அவரைத் தூண்டினார்.
இளைஞர் வேங்கடசாமி,

1905ல் பிரவேசபண்டிதம்,
1906ல் பாலபண்டிதம்,
1907ல் பண்டிதம்

ஆகிய தேர்வுகளில் சிறப்பாகத் தேறி பல பரிசுகளைப் பெற்றார். பண்டிதம் தேர்வில் முதன்மையாகத் தேறியமைக்காக பாண்டித்துரைத் தேவர் தம் கையினாலேயே வேங்கடசாமிக்குத் தங்கத்தோடா (தங்கக்காப்பு) அணிவித்துப் பெருமைப்படுத்தினார். அனைவரும் அவரை "முத்தேர்வும் மூவாண்டில் முதன்மையினில் முற்றுவித்த பெருமான்" எனப் பாராட்டினர். 1908ல் காஞ்சி பரமாசாரியார் நடுக்காவேரி வந்திருந்தபோது, வேங்கடசாமியை நேரில் வரவழைத்து சிவப்புப் பட்டாடையைப் போர்த்திச் சிறப்பித்தார். நாட்டார் தாம் படிப்பதற்காகப் பயன்படுத்திய இல்லத்தின் மாடி அறை "தமிழவள் இருக்கை" என்ற பெயருடன் இன்றும் இலங்குகிறது.

கல்லூரி, பல்கலைக்கழகப் பணி:-

ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருச்சிராப்பள்ளி எஸ்.பி.ஜி கல்லூரியில் 1908 -1909 வரை ஓராண்டும், 1910 முதல் 1933 வரை 23 ஆண்டுகளும் தமிழ்ப் பேராசிரியராய் பணி புரிந்தார். நாட்டார் திருச்சியில் இருந்தபோது, பாரதியார் இவர் இல்லம் வந்திருந்து சிலப்பதிகாரத்திலும், தொல்காப்பியத்திலும் தமக்கிருந்த ஐயங்களைக் கேட்டு தெளிவுபெற்றுச் சென்றார் என்ற செய்தியும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1933ல் திருச்சி எஸ்.பி.ஜி கல்லூரி மூடப்பட்டது. அவ்வாண்டிலேயே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணியில் சேருமாறு நாட்டாருக்கு அழைப்பு வந்தது. அக்காலத்து தமிழறிஞர் பலருடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றி 1941ல் ஓய்வு பெற்றார்.

ஓய்வுக்குப் பின்னர் தஞ்சைக் கரந்தைப் புலவர் கல்லூரியில் மதிப்பியல் முதல்வர் பொறுப்பினை ஏற்றார். அவருக்கு 8.5.1944ல் மணிவிழாக் கொண்டாட ஏற்பாடாயிற்று. மணிவிழா நடைபெறுவதற்கு 40 நாட்கள் முன்னரே 28.3.1944ல் இறைவனடி சேர்ந்தார். அவரை அவரது சொந்த ஊரில் சமாதி வைத்து, அங்கு கோயில் எழுப்பினர். ஆண்டுதோறும் குருபூஜை நடைபெற்று வருகிறது.

நல்லாசிரியர்:-

நாட்டார் வகுப்புகளில் பாடம் நடத்தும்போது அமைதி நிலவும். அவருக்கு எல்லாப் பாடங்களும் மனப்பாடம். அவலச்சுவை, பக்திச்சுவை நிறைந்த பாடல்களை இசையோடு படிக்கும்பொழுது அவர் விழிகளில் நீர் ததும்பும். பதம் பிரித்துப் படிக்கும்போதே பொருள் விளங்கும். ஒன்பான் சுவையும் தோன்றுமாறு கற்பிப்பது அவரின் தனிச்சிறப்பு. நாட்டாரது பெருந்தன்மை, பெரும்புலமை, வீண்பேச்சுப் பேசாமை, ஒழுக்கமுடைமை, தெய்வ பக்தி முதலியன மாணவர்களுக்கு முன் மாதிரியாக விளங்கின. செய்யுள்களை இசையோடு பாடிக்காட்டுவார்.

வெண்பாவை சங்கராபரணத்திலும்,
அகவலை தோடியிலும்,
துறையைப் பைரவியிலும்,
விருத்தப்பாக்களை காம்போதி, கல்யாணியிலும் பொருந்தப்பாடி மாணவர்களை மகிழ்விப்பார்.

நற்றமிழ் நாவலர்:-

நாட்டார் அழகு தமிழில் ஆற்றொழுக்காகப் பேசும் திறன் மிக்கவர். அரிய பொருள்களையும் கேட்போர் மனங்கொள்ளுமாறு எளிமையாகச் சொல்லும் இயல்புடையவர்.

அவர்

மதுரைத் தமிழ்ச் சங்கம்,
திருச்சி சைவ சித்தாந்த சபை,
திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயம்,
திருநெல்வேலி தமிழ்ச் சங்கம்

போன்ற தமிழ் மற்றும் சைவ அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். திருச்சியில் 1923 - 25 ஆகிய மூன்றாண்டுகளில் தமிழ்ப் புலவர் மாநாட்டைக் கூட்டினார். 1939 மார்ச் திங்களில், கொழும்பு சென்று விவேகானந்தர் சங்கத்தில் "நால்வர்" என்னும் தலைப்பில் உரையாற்றினார். 1940ல் திருப்பதியில் நடைபெற்ற கீழ்த்திசை மாநாட்டில் திருச்சி, கருவூர் சேரர் தலைநகரமாகிய வஞ்சியன்று என வலியுறுத்தி மு.இராகவையங்கார், இரா.இராகவையங்கார் ஆகியோரின் கூற்றை மறுத்துரைத்தார்.
சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் 24.12.1940ல் நாட்டாருக்கு "நாவலர்" பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

ஆராய்ச்சி நூல்கள்:-

"வேளிர் வரலாறு" என்ற நூலில் வேளிர் என்பார் வடநாட்டினின்று வந்தவரல்லர், அவர்கள் தமிழ் நாட்டுப் பழங்குடியினர் என நிறுவியுள்ளார்.
1919ல் எழுதப்பட்ட "நக்கீரர்" என்ற நூல் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டது.

"கபிலர்" என்ற நூலில், மாணிக்கவாசகப் பெருமான் பிறந்த திருவாதவூரே கபிலர் பிறந்த ஊர் என நிறுவியுள்ளார்.

1923ல் எழுதப்பட்ட "கள்ளர் சரித்திரம்" என்ற நூல் ஒரு குறிப்பிட்ட இனத்தின் வரலாறு எனினும், பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கத்தக்க தகுதியை உடையது எனத் தமிழ்த் தாத்தா உ.வே.சா. பாராட்டியுள்ளார். மேலும் "கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும்', "சோழர் சரித்திரம்', "கட்டுரைத் திரட்டு' ஆகியவையும் இவர் எழுதிய நூல்கள்.

நாட்டார் தலைசிறந்த உரையாசிரியர்.

இன்னா நாற்பது,
கார் நாற்பது,
களவழி நாற்பது,
ஆத்திசூடி,
கொன்றைவேந்தன்,
மூதுரை,
நல்வழி,
நன்னெறி

ஆகிய நூல்களுக்கு உரை வகுத்துள்ளார். 1931ல் "பெருஞ்சொல் விளக்கனார்" அ.மு.சரவண முதலியார் துணையுடன் திருவிளையாடற் புராண உரை வெளியிடப்பெற்றது. சிலப்பதிகார உரை, சிலப்பதிகாரம் முழுமைக்கும் அமைந்த உரையாகும்.

கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளையுடன் இணைந்து நாட்டார் அகநானூற்றுக்கு உரை எழுதியுள்ளார். நாவலர் நாட்டார், திருச்சி, தஞ்சைப் பகுதியில் தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவப்பட வேண்டுமென 1925ல் கனவு கண்டார். அக்கனவு தற்போது நனவாகியுள்ளது. தற்போது தஞ்சை அருகிலுள்ள வெண்ணாற்றங்கரையில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருட் கல்லூரி என்னும் பெயரில் தமிழ்க் கல்லூரி இயங்கி வருகிறது.

சான்றோரின் தூய எண்ணங்கள் செயல்வடிவம் பெறத்தக்கன என்பதற்கு இவற்றினும் வேறு சான்றும் வேண்டுமா?

முனைவர் ப.சுப்பிரமணியன்

நன்றி: தமிழ்மணி (தினமணி) மற்றும் திண்ணை

மேலும் குறிப்புக்கள்

மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

கட்டற்ற மென்பொருள் - புத்தக வெளியீடு

0 மறுமொழிகள்
"மென்விடுதலை நாள் - 2008" கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கட்டற்ற மென்பொருள் பற்றிய ரிச்சர்டு எம். ஸ்டால்மேனின் கட்டுரைகள் புத்தகமாக வெளியிடப்படுகின்றது.


புத்தக விவரம்:

பெயர்: கட்டற்ற மென்பொருள்
ஆசிரியர்: ரிச்சர்டு எம். ஸ்டால்மேன் [Richard Stallman]
தமிழாக்கம்: ம ஸ்ரீ ராமதாஸ்
பதிப்பாளர்: ஆழி பப்ளிகேஷன்ஸ், கோடம்பாக்கம், சென்னை - 24. தொ.பே: +91 44 43587585

கீழ்காணும் நிகழ்வுகளில் இப்புத்தகம் வெளியிடப்படுகிறது.

1) மென்விடுதலை நாள் கொண்டாட்டங்கள் - 2008
ஜெயா பொறியில் கல்லூரி,
திருநின்றவூர்,
சென்னை.

தேதி: 20 செப் 08
நேரம்: காலை 9.30 மணி



தொடர்பாளர்: சிவாஜி - +91 99415 71690

இணைய முகவரி: http://jayafossclub.org/

2) விடுதலையும் மென்பொருளும் சந்திப்பு
ரஷ்ய பண்பாட்டு மையம்
27 கஸ்தூரி ரங்கா சாலை, (கத்தீட்ரல் ரோடு அருகில்)
சென்னை-600018

தேதி: 21 செப் 2008

நேரம்: மாலை 4.00 மணி


தொடர்பாளர்: பாலாஜி - +91 98407 87427
இணைய முகவரி: http://www.freedomandsoftware.info/

இவ் வெளியீட்டு விழா(க்களில்)வில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம். இச் செய்தியை பரப்பிட உதவுமாறும் கேட்டுக் கொள்கிறோம். என்றும் மலரும் நினைவுகளாக இவை திகழட்டும்.

பி.கு: தாங்கள் வசிக்கும் இடத்தை சுற்றியுள்ள குனு/ லினக்ஸ் ஆர்வலர்களைக் கொண்டு வெளியீட்டு நிகழ்ச்சியினை தாங்களே ஏற்பாடு செய்து புத்தகத்தை வெளியிட்டும் உதவலாம். விவரங்களுக்கு தனித்து மடல் அனுப்பவும்.

தொடர்புடைய இணைப்பு: http://kanimozhi.org.in/kanimozhi/?p=74

மின்தமிழ் இடுகை: ஆமாச்சு

வ.ஐ.ச.ஜெயபாலன் பாடல்கள்

0 மறுமொழிகள்
ஈழத்து முன்னணிக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள் தமிழ் கூறும் நல்லுலகிற்கு எப்போதும் அறிமுகமானவையே. ஆயினும் நோர்வே நாட்டிற்குப் புலம் பெயர்ந்த பின் இக்கவிஞர் தன் கவிதைகளை, தனது கவிதா விசிறியும், வாழ்க்கைத் துணைவியும், இனிய பாடகியுமான வாசுகியுடன் சேர்ந்து இசைப் பாடல்களாக உருவாக்கியிருக்கிறார்கள். தமிழகத்தின் 'மெல்லிசை மன்னன்' எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடன் தொழில் புரிந்த கலைஞர் உ.தியாகராஜன் அவர்கள் ஜெயபாலன் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார்கள். "பாலை" எனும் இவ்விசைத்தகடு வாசுகி ஜெயபாலனும் ஆர்.ஜெயபிரகாஷ் அவர்களும் சேர்ந்து தயாரித்த வெளியீடாக வந்துள்ளது!



இசை நகலெடுப்பது என்பது மறைமுகமில்லாத ஒரு பொதுத் தமிழ் பண்பாக இருப்பதை அறிந்து இவர் தனது குறுந்தட்டில் வெளிப்படையாகவே நகலெடுப்போர் அன்பளிக்க வேண்டிய முகவரி என்று தனது நோர்வே வங்கிக் கணக்கை கொடுத்துள்ளார். அது மட்டுமில்லாமல் "யாழ்" எனும் மின்னரங்கில் அத்தனை பாடல்களையும் mp3 கோப்புகளாக்கி பொதுப் பார்வைக்கு வைத்துள்ளார். தரவிறக்கம் செய்வோர் பணம் அனுப்புவர் எனும் நம்பிக்கையில். இந்த ஆச்சர்யமானக் கவிஞரை உங்கள் சார்பாக தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு பேட்டி எடுத்துள்ளது.

எமது கேள்விகளும் வ.ஐ.ச.ஜெயபாலன் பதில்களும்:


கேள்வி:
ஈழத்தின் சமகாலக் கவிஞர்களுள் தனக்கெனத் தனியிடம் வகிக்கும் தங்களுக்கு எப்போது, உங்கள் கவிதையை இசைப்படுத்த வேண்டுமென்று தோன்றியது? ஏன்? அதற்குக் காரணிகள் உண்டோ?

பதில்:
என்மீது நிரந்தரமான செல்வாக்குச் செலுத்தும் சங்கக் கவிதைகள் பாடப் பெற்றவையே என்பதை உணர்ந்த காலதில் இருந்தே என்னுள் இந்த ஆசை இருந்தது. விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப நாட்கள் அதற்கு வழி திறந்தது. சித்தர்கள், ஊத்துக்காடு, கோபாலகிருஸ்ண பாரதியார், பாரதிதாசன் இவர்கள் பாடல்கள் எல்லாம் பிடித்திருந்தது. கடந்த 21 வருடங்களாக என்னை வைத்திருக்கும் பாடகி வாசுகியும் என் பாடல்களுக்காகவே என்னில் ஆர்வம் கொண்டார். இசை என் கற்பனைகளின் ஒழுங்கும் ஒழுங்கின்மையுமாகும்.

கேள்வி:
பொதுவாக புதுக்கவிதை தேவாரம், திவ்யப்பிரபந்தம் போல் "இசைப்பா" அல்ல. சந்தம், அலகு என்று ஏதும் இல்லாமல் பரவும் கவிதையை இசைக்குள் கட்டுப்படுத்த முடியும் என்று எப்படி உங்களுக்குத் தோன்றியது?

பதில்:
புதுக்கவிதை பற்றிய பிரபலமான கருத்து அது. ஆயினும் கவிதைக்கு கோட்பாட்டுகளால் வேலிகட்டிவிட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. என்னைப் பொறுத்து கவிதையை இசைக்குப் பலியாக்காத முயற்ச்சிதான் புதுக்கவிதை. இசையும் கவிதையும் கருத்தொருமித்து ஆதரவுபடுகிற இன்பத்தை கோட்பாட்டுக்காக கொல்வதும் புதிய கவிதை முயற்சிக்கு பாதகமானது என்றே கருதுகிறேன்.

கேள்வி:
எப்போது உங்கள் முதல் இசைக்கவிதை வெளி வந்தது?

பதில்:
ஐந்து வயதில் சக நண்பனுக்கு எங்களூர் நாட்டுப்பாடல் பண்ணில் வசைப் பாடல் எழுதிய போது என்று நினைக்கிறேன். 1970களில் இலங்கை வானொலி ஈழத்துப் பாடல் நிகழ்ச்சிக்கும் பின்னர் 1980களில் விடுதலைக்கான கலைக்குழுக்களுக்குமாக எழுதியிருக்கிறேன். எனினும் பாலை குறுந்தட்டுத்தான் எனது முதல் இசைத் தொகுப்பு

கேள்வி:
உங்கள் கவிதைகளை உங்கள் துணைவியாரை வைத்தே ஒரு குடும்ப (குடிசை) தொழிலாகச் செய்வதன் மர்மம் என்ன?

பதில்:
;-)

பிறரும் பாடுகிறார்கள். ஆனாலும் என் முதல் தொகுதியை வாசுகி பாடாமல் வெளியிடமாட்டேன் என 1987ல் வாக்குக் கொடுத்திருந்தேன். இல்வாழ்வென்கிற மேடை நாடகத்தில் என் துணைவி பாத்திரத்தில் நீடிப்பவரோடு உண்மையாகவே நட்பு இருக்கு. அது நீண்டகால அடிப்படையில் என்னுடைய களவு தந்திரங்களைவிடவும் பலமானதாகவும் இருக்கு.

கேள்வி:
பாலை எனும் சமீபத்திய இசைத்தொகுப்பிற்கு இசை அமைத்தது யார்? அவர் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

பதில்:
தியாகு எம் எஸ் விஸ்வநாதனின் உதவியாளர். அவரது தொலைபேசி 0091 -9283110603. ஒலிப்பதிவில் கவிதை/பாடல் சரியான உச்சரிப்போடு பாவத்தோடு பாடப் படுவதை எப்பவும் உறுதி செய்கிறவர். தொகுப்பில் மாரி மழைக்கரத்தால் பாடலை அவரே பாடியிருக்கிறார்.



கேள்வி:
மிகவும் சிரமப்பட்டு, கடன் பட்டு ஒரு இசைத்தட்டை வெளியிட்டு விட்டு அதை "நம்பிக்கையின்" பேரில் தரவிறக்கம் செய்யும் யோசனை (வலைத்தானம்) ஏன் தோன்றியது? தரவிறக்கம் செய்தோரெல்லாம் பணம் அனுபினரா?

பதில்:
இப்பொழுதுதான் ஒரிருவர் தொடர்புகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். நாம் பலியானாலும் நம்பிக்கை அடிப்படையில் சக கலைஞர்கள் செயல் படக்கூடிய மரபை நாம் தோற்றுவிக்க முடிந்தால் அது தமிழ் கலை வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுமென்று தோன்றியது. ஆகஸ்ட் 25, 2008ல் வலைப்படுத்திய பாலை இசைத் தொகுதியை இன்று மதியம்வரை (செப்டம்பர் 10, 2008) 1315 பேர் நேரடியாக தரவிறக்கம் செய்துள்ளார்கள். அவர்கள் மின்னஞ்சல் மூலம் நண்பர்களுடன் பரிமாறியதையும் கணிக்க முடியுமெனில் தொகை மிக அதிகமானதாக இருக்கும்.

இதுவரை அவுஸ்திரேலியாவில் இருந்து ஒருவர் 100 அவுஸ்திரேலியன் டொலரும் அமரிக்காவில் இருந்து ஒரு பெண்மணி 100 அமரிக்க டாலர்களும் கனடாவில் இருந்து கவிதாயினி ஒருவர் தானும் தோழிகளும் சேர்ந்து 20 கனடிய டாலர்வீதமும் அனுப்புவதாகவும் வாக்களிதிருக்கின்றனர். கடன்வாங்கி முதலீடு செய்த இந்தியப் பணம் 150000 ரூபாவைப் (US$ 3300) பெற முடிந்தால் இரண்டு காரணங்களுக்காக மகிழ்வேன்.

முதலாவது மகிழ்ச்சி கடன் சுமையில் இருந்து தமிழ்க் கலை ஆர்வலர்களால் மீட்கப்பட்டமைக்காக.

இரண்டாவது மகிழ்ச்சி நம்பிகை அடிப்படையிலான கொள்வனவு கொடுப்பனவு மரபு ஒன்றைத் தமிழ்க் கைலை உலகில் ஆரம்பித்து வைத்தமைக்காக. ஒரு போராடும் கவிஞன் என்கிற முறையில் இன்னமும் காலம் கடந்துவிடவில்லையென்றே நம்புகிறேன்.


கேள்வி:
எப்போதும் ஓசிச்சோறுக்குப் பழகிய தமிழ்ச் சமுதாயம் தரமான இசைத்தகடு என்று அறிந்தவுடன் பணம் அனுப்பும் என்று நம்புகிறீர்களா? தமிழக இசைக் கலைஞர்களெல்லாம் யார், யாரோ எழுதிய கீர்த்தனைகளைப் பாடி காசு சம்பாதித்துக் கொண்டிருக்கும் போது உங்கள் கவிதையை எப்படி இலவசமாகக் கொடுக்கத்தோன்றியது? கவிதையைக் காசு பண்ணும் யுத்தி அறிந்தோரும் நம்முள் உள்ளனரே. அதைப் பார்த்த பின்பும்?

பதில்:

நான் வணிகக் கவிஞன் அல்லேன்! என்றும் சங்கப் பெருங்கவி பெருஞ்சித்திரனாரின் வாரிசாகவே உணர்கிறவன். கவிஞனாய் இயங்குவது என்பது ஒரு life style அல்லவா! 1000 தடவைகள் விழுந்தாலும் என் வாழ்வியலைத் தொடர்வேன் என்பதையும் என்னுடைய பாடல்களின் ஆர்வலர்கள் மீது மீண்டும் மீண்டும் நம்பிக்கை வைக்கவே விரும்புவேன் என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.


இப்படிப் பதில் சொல்லும் சங்கக்கவி வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள் என்றும் நிற்கும் என்பதற்கு இவ்விசையும் கூடுதல் கனத்தைக் கொடுக்கிறது! வாழ்த்துக்கள்!

இப்பாடல்களைக் கேட்க விரும்புவோர் தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் வலைப்பதிவிற்கு வருமாறு அழைக்கிறோம்.

இசை கேட்டபின் தரவிறக்கம் செய்ய வேண்டுமெனத் தோன்றில்
"யாழ்" மின்னரங்கத்திற்குச் செல்லவும்.

இப்பேட்டி கண்டபின், இசை கேட்டபின் நம் கவிஞரை ஆதரிக்க வேண்டுமெனத் தோன்றினால், அவரது வங்கி விவரம் கீழே:

Bank Address
Postbanken: N-0021 Oslo, Norway.
Name: Shanmugampillai Jayapalan
Bank Account no. 0532 51 18328
Payment from abroad, use the IBAN number No6105325118328, and BIC-code (Swift-address) DNBANOKK.

கவிஞர் தற்போது இந்தியாவில் இருக்கிறார். அவருடன் தொடர்பு கொண்டு நிதி உதவி செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய செல்பேசி எண்: Mobile No: 00919941484253.


தமிழக நூலகங்கள்!

0 மறுமொழிகள்
காட்சிப்பொருளாய் மாறிவரும் "அறிவுச் சுரங்கங்கள்"!

வே.சுந்தரேஸ்வரன்

இடவசதி மற்றும் போதிய பணியாளர்கள் இல்லாததால் அறிவுச் சுரங்கமான நூலகங்கள், காட்சிப்பொருளாய் மாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மனிதனின் அறிவுக்கண்ணை திறக்கும் திறவுகோல் நூலகங்கள் என்றால் மிகையில்லை.

"ஏழைகள் உணவைத் தேடுகிறார்கள்; பணக்காரர்கள் பசியைத் தேடுகிறார்கள்; அறிஞர்களோ நூலகத்தைத் தேடுகிறார்கள் என்பார்கள்."


அத்தகைய சிறப்புக்குரிய நூலகங்கள் இன்றைக்குப் போதிய நூல்கள் இருந்தும்,
இடவசதியின்மை
பணியாளர்கள் பற்றாக்குறையால்
பயனின்றிக் கிடக்கின்றன.

தமிழகத்தில்,
30 மைய நூலகங்கள்
1,567 கிளை நூலகங்கள்
1,827 ஊர்ப்புற நூலகங்கள்
487 பகுதி நேர நூலகங்கள்
12 நடமாடும் நூலகங்கள் என
மொத்தம் 3,923 நூலகங்கள் உள்ளன.
இதில், மைய நூலகங்களில் முதல்நிலை நூலகர் பணியிடங்கள் பாதிக்கும் மேல் காலியாக உள்ளன.

கிளை நூலகங்களில் 600 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை பணி உயர்வுபெற்ற ஊர்ப்புற நூலகர்களைக் கொண்டு அரசு நிரப்பிட உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், 21 மாவட்டங்களில் மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்கள் இன்னும் காலியாகத்தான் உள்ளன.

நூலகப் பணியிடங்கள் மட்டுமன்றி பெரும்பாலான நூலகங்கள் ஊரின் ஒதுக்குப்புறத்தில், இடவசதி இன்றி ஏனோ, தானோ என்ற நிலையில்தான் இயங்கி வருகின்றன.

இடவசதி குறைவு காரணமாக கிராம, நகர்ப்புற நூலகங்கள் பலவற்றில் தரமான நூல்களும், குறிப்பாக பள்ளி மாணவர்கள், போட்டித் தேர்வு எழுதுவோருக்குப் பயன்படும் நூல்களும் மூட்டைகளாக கட்டப்பட்டு பரண்மேல் மாதக் கணக்கில் தூங்கும் நிலைதான் உள்ளது.

டாஸ்மாக் கடைகள் அமைப்பதற்குத் தரப்படும் முக்கியத்துவம்கூட நூலகங்கள் அமைக்க அந்தந்த ஊராட்சிகளும், நகராட்சிகளும் இடம் தர முன்வருவதில்லை என்பது நூலக ஊழியர்கள் பலரது ஆதங்கம்.

1.4.1982ம் ஆண்டு முதல், ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் மூலம் வசூலிக்கப்படும் வீட்டு வரியில் 5 சதவீதம் தொகை நூலக வளர்ச்சிக்காகத் தரப்படுகிறது. ஆனாலும், இந்தத் தொகையை முறையாக உள்ளாட்சித் துறையினர் வழங்காததால், பல கோடி ரூபாய் அளவுக்கு நிலுவை பாக்கி உள்ளதாக நூலகத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது ஒருபுறமிருக்க, நூலகங்களில் 1,500க்கும் மேல் காலி பணியிடங்கள் இருப்பதாகவும் இதை நிரப்புவதற்கு அரசு போதிய அக்கறை காட்டவில்லை எனவும் நூலகத் துறை ஊழியர்களே கவலை தெரிவிக்கின்றனர்.

தாலுகா, நகராட்சி நூலகங்கள் தற்போது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணியாளர்கள் இல்லாததால் வாசகர்களுக்குப் போதிய நூல்களை வழங்க முடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஓர் ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு நூல்கள் வாங்குவதாகக் கூறும் அரசு, அந்த நூல்களை வாசகர்கள் படிப்பதற்கும், நூல்களை அடுக்கி வைப்பதற்கும் தேவையான இடவசதியை அளிப்பது குறித்து பேசாதது ஏனோ? என்கின்றனர் இதன் ஊழியர்கள் சிலர்.

கிளை நூலகத்திற்கு ஆண்டுக்கு சுமார் 1,500 நூல்கள் வரை மைய நூலகத்தால் அனுப்பிவைக்கப்பட்டபோதிலும், போதிய நூலக அறிவு இல்லாதவர்கள், தினக்கூலி அடிப்படையில் பணிக்கு நியமிக்கப்படுவதால், வாசகர்களின் தேவையை அறிந்து அவர்களுக்குத் தந்து உதவ முடிவதில்லை என்ற புகாரும் உள்ளது.

பெரும்பாலான தாலுகா நூலகங்களிலும், மாவட்ட நூலகங்களிலும் இணையதள வசதி குறைவாக உள்ளது.

நூலகங்களின் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட நூலக ஆணைக் குழுவில் போதுமான நிதி இருந்தபோதிலும், அவற்றைப் பயன்படுத்தி, நூலகங்களை மேம்படுத்தாத நிலை உள்ளதாக இவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து நூலகத்துறை அலுவலர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "முன்பைவிட தற்போது நல்ல நூல்கள் வருகின்றன. இடவசதி இன்மையால் அவை மூட்டைகளாக வைக்கப்பட்டுள்ளன," என்றார்.

இந்தியாவிலேயே முதன்முதலாக பொது நூலகச் சட்டம் போடப்பட்ட தமிழகத்தில் இன்றைக்கு நூலகங்கள் சவலைப்பிள்ளையாக மாறிக்கொண்டிருக்கின்றன.


இதனால் கிராமங்கள்தோறும்,
நல்ல வாசிப்பு அறை
புத்தகங்கள் வைக்க காற்றோட்ட வசதியுடன் கூடிய அறை
இணையதள வசதியுடன் கணினி
நூலகர், இரு உதவியாளர்கள்
என முழுமையான நூலகம் அமைவது அவசியமாகும்.

"ஒரு நூலகம் திறக்கப்பட்டால், ஒரு சிறைச்சாலை மூடப்படும்," என்ற அண்ணாவின் வார்த்தைக்கு உயிரூட்டும் வகையில், அவர் நூற்றாண்டைக் கொண்டாடும் இவ்வேளையில் நூலகத் துறையைச் சீரமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதே நூலக ஆர்வலர்கள், ஊழியர்களின் அவா.

நன்றி: தினமணி
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES