மண்ணின் குரல்: அக்டோபர் 2016: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் நவகண்டம்

1 மறுமொழிகள்
வணக்கம்.

அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 



அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் ஈரோடு மாவட்டத்தில் அந்தியூரில் உள்ளது. பண்டைய தமிழ் மக்களின் பழமை வாய்ந்த தாய் தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியாக இக்கோயிலைக் காண்கின்றோம். கருவறையில் பத்ராகாளியம்மன் எட்டு கைகளுடன் மகிஷனின் தலைமேல் கால் வைத்த வடியில் மகிஷாசுரமர்த்தினியாகக் காட்சியளிக்கின்றாள். 

இந்த பத்ரகாளியம்மன் ஆலயத்திலேயே வெளிப்பிரகாரத்தின் பின்புறத்தில் கொங்குமண்டலத்தில் பிரசித்தி பெற்ற நாட்டார் குலதெய்வ வடிவங்களும் வழிபாட்டிற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன . சப்த கன்னிகள், வீரபத்திரன் என வெவ்வேறு வழிபாட்டு வடிவங்கள் நிறைந்த ஒரு வழிபடுதலமாக, ஊர் மக்களும் ஏனையோரும் வந்து வணங்கிச் செல்லும் சிறப்பு மிக்க ஒரு தெய்வீகத் தலமாக இக்கோயில் விளங்குகின்றது. இக்கோயில் இன்றைக்கு ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்கு முன்னரே வழிபாட்டில் இருந்திருக்கக்கூடும் என்று அறியும் வகையில் இக்கோயிலின் வளாகத்தில் நவகண்டம் என அழைக்கப்படும் மனித உருவங்கள் பொறித்த கற்சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன. அதுமட்டுமன்றி இக்கோயிலின் உட்புறச்சுவற்றில் பாண்டிய, நாயக்க மன்னர்கள் காலத்து கல்வெட்டுக்களும் சுவற்சிற்பங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. புனரமைப்பில் சில பகுதிகள் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் சில வடிவங்களை மேற்பக்கச் சுவர்களில் காண முடிகின்றது. இக்கோயிலைப் புனரமைப்பு செய்த வேளையில் இதன் சுற்றுப்புரப்பகுதியில் காணப்பட்ட நவகண்ட வடிவங்களைக் கோயிலின் பின்புறத்தில் கிடத்தி வைத்துள்ளனர். 

நவகண்டம் என்பது தன்னையே இறைவனுக்காகவோ அல்லது போருக்குச் செல்லும் தலைவன் அல்லது அரசனின் வெற்றியை மனதில் வைத்து வேண்டிக் கொண்டு தன்னையே வாளால் வெட்டி பலிகொடுத்துக் கொள்வதைக்காட்டும் கற்சிற்பம். இவ்வகைக் கற்சிற்பம் ஒன்று இக்கோயிலில் பின்புறத்தில் தரையில் மண்புதரின் மேல் கிடத்தி வைக்கப்பட்டு கிடக்கின்றது. இது பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய வரலாற்றுச் சின்னம் என்பதில் சந்தேகமில்லை. 



நான் இந்த ஆண்டு ஜனவர் 4 தேதி நேரில் சென்றிருந்த போது அச்சிற்பத்தைத்தேடிக் கண்டுபிடித்து அதனை மண் புதர் பகுதியிலிருந்து மாற்றி எடுக்கக் கோயில் நிர்வாகத்தினரை அணுகிக்கேட்க அவர்கள் அச்சிற்பத்தை எடுக்க முன்வந்தனர். இன்று அந்தச் சிற்பம் எந்த நிலையில் இருக்கின்றது  எனத் தெரியவில்லை. இச்சிற்பம் தூய்மை செய்யப்பட்டு மீண்டும் இங்கே பிரதிட்டை செய்யப்பட வேண்டும். 

இந்தப் பதிவைச் செய்த போது பயணத்தில் இணைந்து கொண்ட திருமதி.மவளசங்கரி அவர்களுக்கும் பயண ஏற்பாட்டில் உதவி செய்த செவாலியர் டாக்டர்.மதிவாணன் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.


விழியப் பதிவைக் காண:      http://video-thf.blogspot.de/2016/10/blog-post_29.html
யூடியூபில் காண:        https://www.youtube.com/watch?v=vao0bofvxEw&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


























அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​


மண்ணின் குரல்: அக்டோபர் 2016: மேல்கூடலூர் கல்வெட்டுக்கள், சமணப்புராதனச் சின்னம்

1 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 



செஞ்சி வட்டம் மேல்கூடலூரில் உள்ள என்ணாயிரம் மலை, அல்லது பஞ்ச பாண்டவர் மலை என அழைக்கப்படும் குன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களைக் கொண்டிருக்கும் ஒரு பகுதி.  இங்கு 35 சமணக்கற்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன.  அதாவது தமிழகத்திலேயே மிக அதிகமான சமணக்கற்படுக்கைக்களைக் கொண்ட ஒரு பகுதியாக இப்பகுதி திகழ்கின்றது.

அதுமட்டுமன்றி பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனின் கல்வெட்டுக்களும் (கி.பி.867) கோப்பரகேசரி என்றழைக்கப்பட்ட சோழமன்னன் முதலாம் பராந்தகனின் நான்காவது ஆட்சியாண்டு (கி.பி.911) கல்வெட்டுக்களும் இங்கு உள்ளன. 

இவ்வளவு சிறப்புக்கள் மிக்க இந்தக் குன்றில் குவாரி உடைப்பு நடைபெற்றிருக்கின்றது. இதனால் இக்குன்றின் பெரும்பகுதி சேதப்படுத்தப்பட்டுள்ளது. சேதப்படுத்தப்பட்ட பகுதியில் உடைந்து போன நிலையில் உள்ள சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

பொதுவாகவே வரலாற்றுப் புராதனச் சின்னங்களை அடையாளங்கண்டு அவை பாதுகாக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிக அவசியம். ஆனால் தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தப் பகுதி  இதுவரை இணைக்கப்படவில்லை என்பது ஒரு குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய விசயம். கல்வெட்டுக்களும் சமண முனிவர் படுக்கைகளும் மட்டுமன்றி மிக வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்ட தியானக்கற்பகுதி, மூலிகை தயாரிப்புப்பகுதி என வரலாற்று வளம் மிக்க ஒரு பகுதியாக இப்பகுதி விளங்குகின்றது.

இப்பகுதியைப் பாதுகாக்க  தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது மிக அவசியம். இந்த விழியப்பதிவில் வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர். ரமேஷ் இக்குன்றின்  சிறப்புக்களை விவரிக்கின்றார். 


விழியப் பதிவைக் காண:      http://video-thf.blogspot.de/2016/10/blog-post_21.html
யூடியூபில் காண:       https://www.youtube.com/watch?v=3QtSsvrBFWU&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​


மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 7 அக்டோபர் 2016

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது மின்னிதழ் வெளியீடு அமைகின்றது. 

காலாண்டு இதழாக ​கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ​வெளிவ​ரும் இந்த மின்னிதழில் தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட சிலதேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படு​கின்றன.

இந்தக் காலாண்டின் மின்னிதழ் இன்று  வெளியீடு காண்கின்றது.








இந்த வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது "தமிழின் தொண்மையை அறிவோம் - அதன் வரலாற்றைக் காப்போம்" என்பதாகும். 

நம் மின்னிதழை வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர் சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​


மண்ணின் குரல்: அக்டோபர் 2016: ஸ்ரீ செங்கமாமுனியப்பன் திருக்கோயில்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 




​நாட்டார் வழக்காற்றியல் என்பது தமிழர் மரபில் சிறப்பிடம் பெறுவது. கிராமத்து தெய்வ வழிபாட்டு முறைகளும் தெய்வங்களும் இதன் ஒரு கூறாக அமைகின்றன.

நம்பிக்கை, பக்தி என்பன மக்கள் வாழ்வில் பிரிக்கமுடியாத அங்கம் வகிக்கும்  அம்சமாக விளங்குகின்றன. தமிழகத்தை மட்டுமே எடுத்துக் கொண்டாலும், கிராமத்துக்குக் கிராமம், ஊருக்கு ஊர் என தெய்வங்கள் வெவ்வேறு வகையில் வழிபாட்டில் அமைக்கப்பட்டிருப்பதைக் காண்கின்றோம்.



கொங்குமண்டலத்தில், கிராமப்புர கோயில்கள் என்பன விரிவாகக்காணக்கூடியதாக இருக்கின்றன. முனிஸ்வரர், காளியம்மன் போன்ற தெய்வங்கள் பொதுவாக கிராம மக்கள் விரும்பும் தெய்வங்களாக உள்ளன. அப்படி அமைக்கப்படும்  கோயில்களில் ஏராளமான வெவ்வேறு பெயர் கொண்ட தெய்வ உருவங்களும் சேர்க்கப்பட்டு கோயிலின் சிறப்பைக் கூட்டுவதாக அமைந்து விடுகின்றன.

பொதுவாக முனீஸ்வரன், காளியம்மன் ஆகிய தெய்வங்களின் ஆலயங்களில் ஆடு பலி கொடுத்து வேண்டுதல் செய்வது என்பது வழக்கில் இருக்கின்றது. பல்வேறு சடங்குகள், ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணம் என வைத்து மனிதர் தம் வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அதன் பரிகாரங்களுக்கும் நன்றி செலுத்துதலுக்கும் ஆலயங்கள்  மையப்புள்ளியாக அமைந்திருப்பதை தமிழர் மரபிலிருந்து பிரித்து எடுக்க இயலாது. 

கொங்கு மண்டலத்தில் உள்ள பல கோயில்களில் தெய்வங்களோடு வரிசையாக பல்வேறு உருவ பொம்மைகளை வைத்து வழிபடும் ஒரு வழக்கமும் நடைமுறையில் இருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட  விசயத்தில் பிரச்சனை என்பது ஒரு மனிதரால் அல்லது ஒரு பொருளால் என அமையும் போது  அந்தப் பிரச்சனை தீர்ந்த பின்னர் அந்தப் பிரச்சனைக்கு மூலக்காரணமாகத் திகழும் பொருளை சுதைசிற்பமாக வடித்து கோயில்களில் வைப்பதை இங்கே கோயில்களில் காண்கின்றோம்.

அப்படி ஒரு கோயில் தான் ஈரோடு மாவட்டத்தில், குமாரபாளையம் எனும் ஊருக்கு அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ செங்கமாமுனியப்பன் திருக்கோயில்.

இந்தக் கோயிலில் மக்கள் செய்யும் வழிபாடுகள் பல்வேறு வகையானவை. வேண்டுதலுக்காக ஆணி செருப்பில் நடத்தில்,  தீமிதித்தல், உருவ பொம்மை செய்து வைத்து நேர்த்தில்  கடன் செய்தல், ஆடுகளைப் பலிகொடுத்து நன்றி செலுத்துதல், எலுமிச்சை பழ மாலை அணைவித்து வழிபாடு செய்வது என வெவ்வேறு வகையான வழிபாடுகள் உள்ள வளம் நிறைந்த வழிபட்டு முறைகள் நிறைந்த ஒரு மையமாக இக்கோயில் திகழ்கின்றது.

இப்பதிவில், கோயில் பொறுப்பாளர் இக்கோயில் பற்றி  விளக்கம்  கூற ஏனையோரும் உடன்  இணைந்து கொள்கின்றனர்- வாருங்கள் காண்போம்.

விழியப் பதிவைக் காண:     http://video-thf.blogspot.de/2016/10/blog-post_14.html
யூடியூபில் காண:      https://www.youtube.com/watch?v=J_7MsmixlSs&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​



THF Announcement: E-books update:09/10/2016: சிவபாத சேகரனின் தஞ்சைக் கல்வெட்டுக்கள்

2 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய  தமிழ்  நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:   சிவபாத சேகரனின் தஞ்சைக் கல்வெட்டுக்கள்
ஆசிரியர்:     வே.மகாதேவன் எம்.ஏ
பதிப்பு: காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்விழாக் கமிட்டி, சென்னை
 ​



நூலைப்பற்றி:
இந்த நூலில் முதலாம் ராஜராஜன்  தஞ்சை பெரிய கோயிலுக்குத் தானே அளித்த தானங்களைப் பற்றிக் கூறும் கல்வெட்டுக்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுக்கள் அனைத்தும் தென்னிந்திய சாசனத் தொகுதியில் உள்ள வண்ணம் இந்த நூலில் அச்சிடப்பட்டுள்ளன. கல்வெட்டுக்கள் மட்டுமன்றி கோயில் சித்திரங்கள் புகைப்படங்களாக இணைக்கப்பட்டுள்ளன. 300 பக்கங்கள் கொண்ட விரிவான ஒரு நூல் இது. கல்வெட்டு பயில விரும்பும் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பெரிதும் உதவும் நூல் என்பதில் ஐயமில்லை. 

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 458

மின்னாக்கம், மின்னூலாக்கம்:  திரு.கௌதம சன்னா
இந்த நூலை தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் சேகரத்திற்காக வழங்கிய திரு.கௌதம சன்னா அவர்களுக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES