மண்ணின் குரல்: ஏப்ரல் 2017:தமிழக நாட்டுப்புறப் பாடல்கள்

0 மறுமொழிகள்
வணக்கம்.

​இசையும் சொல்லும் கலந்து வருவதுதான் பாடல். தமிழர் பாரம்பரியத்தில் வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் பாடல்களை இட்டுக் கட்டிப் பாடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. தமிழர் நாட்டாற் வழக்காற்றியலில் உள்ள பாடல்கள் தான் எத்தனை எத்தனை?  அவற்றை எல்லாம் நாம் இன்று விரும்பி ரசிக்காமல் ஒதுக்கி விட்டோம் என்று தான் சொல்ல வேண்டியிருக்கின்றது.

நாட்டார் வழக்காற்றியல் என்பது ஒரு தனித்துறை. தமிழகத்தைப் பொறுத்தவரை பேராசிரியர் வானமாமலை, பேரா.ஆ.சிவசுப்பிரமணியன், பேரா.தொ.பரமசிவன் போன்றோரின் ஆய்வுகள் இத்துறைக்கு பலமும் வளமும் சேர்ப்பனவாக இருக்கின்றன. மேலும் சில சிறந்த ஆய்வுகளும் அவ்வப்போது வெளிவருகின்றன  என்றாலும் கூட, விரிவான வகையில் பதிவு செய்து ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய களம் இது. தமிழகத்திலே கூட நாட்டார் வழக்காற்றியலைப் பாடமாக வைத்திருக்கும் பல்கலைக்கழகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்ற நிலையே இருக்கின்றன.

நம் குடும்பங்களில் இன்றும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது இவ்வகைப் பாடல்களைப் பாடுவோர் இருப்பார்கள். அவர்களைப் பாடச் செய்து பதிவுகள் செய்து அப்பாடல்களில் வரும் சொற்களை ஆய்வு செய்வதும், கதை வர்ணனைகளை ஆய்வு செய்வதும் தமிழ் மக்கள் பண்பாட்டினை அறிந்து கொள்ள நாம் செய்யக்கூடிய  மானுடவியல் ஆய்வுகளில் ஒன்றாக அமையும்.  பாடல்களை இட்டுக் கட்டி பாடும் போது நாட்டுப்புறக்கலைஞர்கள் சொல்லும் கதைகள் ஒன்றுக்கொன்று மாறுபடுவதைக் காணலாம். சில பாடல்கள் வழி வழியாய் வந்த செய்திகளைக் கூறும். சில  பாடல்கள் தற்கால நிகழ்வினைக் கூறும். இவை எதுவாகினும், ஒரு செய்தியானது பாடல் வழியாகப் பதியப்படும் நிகழ்வாகவே நாட்டுப்புறப்பாடல்கள் அமைகின்றன.

இத்தகைய ஆய்வுகள் பதியப்படவேண்டும். அவை ஆராயப்பட வேண்டும் என்பதை மனதில் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளை நாட்டுப்புறப்பாடல்கள் தொகுப்பு ஒன்றினை வெளியிடுகின்றது. 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த லெட்சுமி அம்மாள் அவர்களும் மதுரையைச் சேர்ந்த பெண்மணிகளும் இணைந்து வழங்கியிருக்கும் நாட்டுப்புறப்பாடல்கள் பதிவு இது.62 வயது நிரம்பிய லெட்சுமி அம்மாள் அவர்கள்,  பருத்திவீரன் போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கதிர் அறுக்க ஒரு பாட்டு
நாற்று நட ஒரு பாட்டு
தாலாட்டுக்கு ஒரு பாட்டு
ஒப்பாரிக்கு 2 பாட்டுக்கள்
மாரியம்மனுக்கு ஒரு பாட்டு
வள்ளி மேல் காதல் கொண்ட முருகனை நினைத்து ஒரு தெம்மாங்குப் பாட்டு...
இப்படி விதம் விதமான பாடல்களுடன் வெளிவருகின்றது தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்தப் பதிவு.

இந்தப் பதிவிற்கான ஏற்பாட்டில் உதவிய தியாகராசர் கல்லூரி பேராசிரியர் மலர்விழி மங்கைக்கும் முத்தமிழ் நாட்டுப்புறக்கலைக்குழுவினருக்கும் அழகுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளருக்கும் நமது நன்றி.விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2017/04/blog-post_22.html
யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=utNClbl3CLU&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​


தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் - மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 9 ஏப்ரல் 2017

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது ”மின்தமிழ்மேடை”  மின்னிதழ் வெளியீடு அமைகின்றது. 

காலாண்டு இதழாக ​2015ம் ஆண்டு ஏப்ரல் முதல் ​வெளிவ​ரும் இந்த மின்னிதழில், தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட  தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படு​கின்றன.

இன்று  வெளியீடு காணும்  இந்தக் காலாண்டிதழ் கூகள் புக்ஸ் வலைத்தளத்தில் பொது மக்கள் வாசிப்பிற்காக இலவசமாக வழங்கப்படுகின்றது என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.


​​இதழை வாசிக்க!​ https://books.google.com/books/about?id=OR2xDgAAQBAJ

இதழை தரவிறக்க இங்கே செல்க!

இந்த வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது "வரலாற்றை அழிவினின்று காப்போம் " என்பதாகும். 


இந்த இதழில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகள்


பொறுப்பாசிரியர்: முனைவர். தேமொழி.


வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர் சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​


​​THF Announcement: E-books update:14/4/2017 *பகவதஜ்ஜூக அங்கதம் - சித்திரைத் திருநாள் சிறப்பு வெளியீடு

0 மறுமொழிகள்
வணக்கம்.

**தமிழ் மரபு அறக்கட்டளையின் சித்திரைத் திருநாள்  நல்வாழ்த்துக்கள்**

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:  பகவதஜ்ஜூக அங்கதம் (மகேந்திரவர்ம பல்லவ மன்னன் எழுதிய அங்கத நாடகம்)
மூல நூல் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டு பின்னர் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் இது.
பதிப்பாசிரியர்:   மக்கேல் லாக்வுட்
தமிழாக்கம்: இ. ஜாண் ஆசீர்வாதம்
பதிப்பு:  கிறிஸ்துவ இலக்கிய சங்கம்

நூல் குறிப்பு: 
நமக்கு கிடைக்கும் பழைய நாடகங்களுள் ஒன்று இந்த நூல். இதை படைத்தவர் பல்லவ அரசின் மன்னர்களில் ஒருவரான மகேந்திர வர்மர். இந்த நூல் கி பி 640 எழுதப்பட்டிருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. எனினும் அவர் எத்தனை இலக்கியங்களைப் படைத்தார் என்பது உறுதியாகத் தெரியாவிட்டாலும், இரண்டு நூல்களை  மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். அவை மத்தவிலாச பிரஹசனம் மற்றும் பகவத்தஜ்ஜூக அங்கதம் ஆகியன.

இந்த இரண்டு நாடகங்களும் சமஸ்கிருத மரபினை பின்பற்றி எழுதப்பட்டவை என்பதை தமது பகவதஜ்ஜூகத்தில் தெளிவு படுத்தியுள்ளார் மகேந்திர வர்ம பல்லவர். சமஸ்கிருதத்தில் பத்து வகையான நாடகங்கள் உள்ளன, அவை: வார (வேண்டுதல்), இகம்ரிக (ஒருதலைக் காதல்), திம (முற்றுகை), சமவக்கார (தொடர்பற்றுத் தொடங்கி ஒரு முடிவை அடைதல்), வியாயோக (போர்பூசல்), பாண (ஒரு நபர் காதல், வீர நாடகம்), சல்லாப (தொடர்பற்ற உரையாடல்), வீதி (ஒருவர் அல்லது இருவர் காதல்), உத்சிரிஷ்டிகாங்க (துக்க), பிரஹசன (அங்கத அல்லது நையாண்டி) என்ற வகையில் உள்ள நாடக பாணிகளில் அங்கத வகையில்தான் மன்னர் மகேந்திரர் தமது நாடகங்களை எழுதியுள்ளார்.

மன்னர் மகேந்திரர் எழுதிய இரண்டு நாடகங்களில் பகவத்ஜ்ஜூகத்தை அவர் எழுதவில்லை என்று மயிலை சீனிவேங்கிடசாமி போன்ற அறிஞர்கள் மறுக்கின்றனர். காரணம் பகவதஜ்ஜூகத்தை மகேந்திரர் எழுதியிருந்தால் பகவதஜ்ஜூகா என்ற விருது பெயர் அவருக்கு வாய்த்திருக்கும் என்று தமது மறுப்பை முன்வைக்கிறார். ஆனால் இரு நாடகங்களையும் பதிப்பித்த எம்.சி.லாக்வுட் பகவத்தஜ்ஜூகம் மன்னர் மகேந்திரர் எழுதியதுதான் என்று உறுதியாகக் கூறுகிறார். லாக்வுட் அவர்களின் கருத்தோடு நானும் உடன்படுகிறேன். இரண்டு நாடகங்களையும் எழுதியது மன்னர் மகேந்திரர்தான். அதற்கு இரண்டுக் காரணங்களைக் கூறமுடியும். முதல் காரணம், இரண்டு நாடகங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான பின்னணியில் அதாவது அரசவையினர் முன்பு நடித்துக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தை முன்னிருத்தித் தொடங்கப்படுகின்றன. இரண்டாவது காரணம், இரண்டு நாடகங்களும் பௌத்தத்தைக் கடுமையாகக் கேலி செய்கின்றன. பௌத்தத்தை அழித்தவருக்கு அதை மக்கள் தளத்தில் அழிக்க வேண்டும் என்றால்  அதற்கு ஊடகமும் ஓர் எளிய வழிதானே! அதில் ஒன்றாக நிகழ்த்துக் கலையை மன்னர் தேர்ந்தெடுத்தார்.

மகேந்திரப்பல்லவர் எழுதிய பகவதஜ்ஜூகா பௌத்தர்களின் ஒரு நிலையான பரிவ்ராஜகா நிலையினை மேற்கொண்டிருக்கும் ஒருவரை மையப்படுத்தி நிகழ்கின்ற கதை.  அதன்படி பரிவ்ராஜகர் என்றால் உண்மையைத் தேடி அலையும் நிலையில் இருப்பவர் என்று பொருள். சற்றேரக்குறைய அவர் பிக்கு நிலையை எட்டக்கூடிய நிலையில் இருப்பவர். உண்மையைத் தேடி அலையும் ஒரு பரிவ்ராஜகரை முட்டாளாகக் கற்பித்துக் கொண்டு அவரைக் கேலியும் கிண்டலும் செய்யும் நாடகம் இது. பௌத்தத்தின் மீது மகேந்திரனுக்கு இருந்த வெறுப்பும் காழ்ப்பும் இந்த நாடகத்திலும் இதற்கு முன்னர் எழுதிய மத்தவிலாச ப்ரஹசனத்திலும் காணமுடியும்.  - கௌதம சன்னா


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 460

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு,கௌதம சன்னா
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு,கௌதம சன்னா
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​​​


மண்ணின் குரல்: ஏப்ரல் 2017:கொற்கை

2 மறுமொழிகள்
வணக்கம்.


பண்டைய காலந்தொட்டு பாண்டி நாட்டுக் கடற்கரையோரத்தில் கொற்கைப் பட்டினமே சிறந்ததோர் துறைமுகப் பட்டினமாகச் சிறப்புற்றுத் திகழ்ந்தது. கிரேக்கத்திலிருந்தும், ரோம் நகரிலிருந்தும், சீனாவிலிருந்தும் நிறைந்த பல வகைப்பொருட்களுடன் மரக்கலங்களுடன் தமிழகத்தின் அன்றைய புகழ்பெற்ற துறைமுகப்பட்டினமாக விளங்கிய கொற்கைக்கு வந்தனர் அயலக  வணிகர்கள்.  தமிழகத்திலிருந்து பட்டு, முத்துக்கள் பொற்கிண்ணங்கள், மிளகு போன்றவற்றை பண்டமாற்றுச் செய்து இவர்கள் திரும்பிச் சென்றனர்.

மதுரை உதயமாவதற்குக் காரணமாக இருந்த நல்லூர் கொற்கை என கல்வெட்டு சான்று பகர்கின்றது.

பண்டைய காலத்தில் பாண்டிய மன்னர்களின் மிக முக்கிய துறைமுகப் பட்டினமாக விளங்கிய கொற்கை இன்று அதன் சிறப்பின் சுவடு தெரியாமல் ஒரு சிற்றூராகக் காட்சியளிக்கின்றது.  தற்சமயம் இந்தச் சிற்றூர் கடற்கரையிலிருந்து 9கிமீ தள்ளி இருக்கின்றது. 

இந்த ஊரில் நாம் அடையாளம் காணக்கூடிய முக்கியமானச் சின்னங்களாக இருப்பவை இங்குள்ள ஈராயிரம் ஆண்டுகள் பழமையானது என மக்களால்  கூறப்படும்  வன்னி மரம், இங்குள்ள வெற்றிவேல் அம்மன் கோயில் மற்றும்  அக்கசாலை விநாயகர் கோயில் என இப்போது விநாயகர் கோயிலாக மாற்றம் கண்டிருக்கும் பண்டைய அக்கசாலை ஈஸ்வரமுடையார் சிவன் கோயில் ஆகியவையே.

இந்தப் பதிவில் கொற்கையில் தொல்லியல் ஆய்வாளராக  1982 முதல் 1988 வரை 5 ஆண்டுகள்  பணியாற்றிய திரு.சந்திரவானன் அவர்கள் கொற்கை அகழ்வாய்வுகளையும் வரலாற்று நிகழ்வுகளையும் விரிவாக நமக்கு விளக்கமளிக்கின்றார்.  இதில் குறிப்பாக

  • கொற்கையில் தொல்லியல் துறையினரின் ஆய்வுகள்
  • அக்கசாலை பற்றிய விளக்கம்
  • கொற்கை அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சதிக்கல்
  • கொற்கை அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தீர்த்தங்கரர் சிலைகள்
  • கொற்கை அகழ்வாராய்ச்சியில் கிடைத்த உடன்கட்டை ஏறியோர் பெயர்களைக் குறிக்கும் கல்வெட்டுக்கள்
  • பிற்காலச்சோழர்காலத்திலும் கொற்கை துறைமுகப்பகுதியாக இருந்திருக்கின்றது
  • அக்கசாலை என்பது பண்டைய காலத்தில் காசுகள் தயாரிக்கும் இடமாக இருந்தது
  • இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த முதுமக்கள் தாழி, சங்குகள், சிப்பிகள் பற்றிய செய்திகள்
...என மேலும் பல தகவல்களோடு விளக்குகின்றார்.

கொற்கை நகரம் இன்று வாழைத் தோப்புக்கள் நிறைந்து காணப்படுகின்றது என்றாலும் குளங்கள் தூர்வாரப்படாமல் வறண்டு கிடப்பதைக் காண்கின்றோம்.  

இன்று கொற்கை மூன்று பெரும்பாண்மை சாதி மக்கள் வாழ்கின்ற தெருக்களாகப் பிரிக்கப்பட்டு ஒன்று தலித் மக்கள் வாழும் தெரு, ஒன்று பிள்ளைமார் மக்கள் வாழும் தெரு, மற்றொன்று கோணார் சமூகத்தவர் வாழும் தெரு   என்றுமுள்ளதையும் காண்கின்றோம்.


விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2017/04/blog-post_8.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=sFLolrbhi-o&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES