வணக்கம்.
பண்டைய காலந்தொட்டு பாண்டி நாட்டுக் கடற்கரையோரத்தில் கொற்கைப் பட்டினமே சிறந்ததோர் துறைமுகப் பட்டினமாகச் சிறப்புற்றுத் திகழ்ந்தது. கிரேக்கத்திலிருந்தும், ரோம் நகரிலிருந்தும், சீனாவிலிருந்தும் நிறைந்த பல வகைப்பொருட்களுடன் மரக்கலங்களுடன் தமிழகத்தின் அன்றைய புகழ்பெற்ற துறைமுகப்பட்டினமாக விளங்கிய கொற்கைக்கு வந்தனர் அயலக வணிகர்கள். தமிழகத்திலிருந்து பட்டு, முத்துக்கள் பொற்கிண்ணங்கள், மிளகு போன்றவற்றை பண்டமாற்றுச் செய்து இவர்கள் திரும்பிச் சென்றனர்.
மதுரை உதயமாவதற்குக் காரணமாக இருந்த நல்லூர் கொற்கை என கல்வெட்டு சான்று பகர்கின்றது.
பண்டைய காலத்தில் பாண்டிய மன்னர்களின் மிக முக்கிய துறைமுகப் பட்டினமாக விளங்கிய கொற்கை இன்று அதன் சிறப்பின் சுவடு தெரியாமல் ஒரு சிற்றூராகக் காட்சியளிக்கின்றது. தற்சமயம் இந்தச் சிற்றூர் கடற்கரையிலிருந்து 9கிமீ தள்ளி இருக்கின்றது.
இந்த ஊரில் நாம் அடையாளம் காணக்கூடிய முக்கியமானச் சின்னங்களாக இருப்பவை இங்குள்ள ஈராயிரம் ஆண்டுகள் பழமையானது என மக்களால் கூறப்படும் வன்னி மரம், இங்குள்ள வெற்றிவேல் அம்மன் கோயில் மற்றும் அக்கசாலை விநாயகர் கோயில் என இப்போது விநாயகர் கோயிலாக மாற்றம் கண்டிருக்கும் பண்டைய அக்கசாலை ஈஸ்வரமுடையார் சிவன் கோயில் ஆகியவையே.
இந்தப் பதிவில் கொற்கையில் தொல்லியல் ஆய்வாளராக 1982 முதல் 1988 வரை 5 ஆண்டுகள் பணியாற்றிய திரு.சந்திரவானன் அவர்கள் கொற்கை அகழ்வாய்வுகளையும் வரலாற்று நிகழ்வுகளையும் விரிவாக நமக்கு விளக்கமளிக்கின்றார். இதில் குறிப்பாக
- கொற்கையில் தொல்லியல் துறையினரின் ஆய்வுகள்
- அக்கசாலை பற்றிய விளக்கம்
- கொற்கை அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சதிக்கல்
- கொற்கை அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தீர்த்தங்கரர் சிலைகள்
- கொற்கை அகழ்வாராய்ச்சியில் கிடைத்த உடன்கட்டை ஏறியோர் பெயர்களைக் குறிக்கும் கல்வெட்டுக்கள்
- பிற்காலச்சோழர்காலத்திலும் கொற்கை துறைமுகப்பகுதியாக இருந்திருக்கின்றது
- அக்கசாலை என்பது பண்டைய காலத்தில் காசுகள் தயாரிக்கும் இடமாக இருந்தது
- இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த முதுமக்கள் தாழி, சங்குகள், சிப்பிகள் பற்றிய செய்திகள்
...என மேலும் பல தகவல்களோடு விளக்குகின்றார்.
கொற்கை நகரம் இன்று வாழைத் தோப்புக்கள் நிறைந்து காணப்படுகின்றது என்றாலும் குளங்கள் தூர்வாரப்படாமல் வறண்டு கிடப்பதைக் காண்கின்றோம்.
இன்று கொற்கை மூன்று பெரும்பாண்மை சாதி மக்கள் வாழ்கின்ற தெருக்களாகப் பிரிக்கப்பட்டு ஒன்று தலித் மக்கள் வாழும் தெரு, ஒன்று பிள்ளைமார் மக்கள் வாழும் தெரு, மற்றொன்று கோணார் சமூகத்தவர் வாழும் தெரு என்றுமுள்ளதையும் காண்கின்றோம்.
விழியப் பதிவைக் காண: http://video-thf. blogspot.de/2017/04/blog-post_ 8.html
யூடியூபில் காண: https://www.youtube.com/ watch?v=sFLolrbhi-o&feature= youtu.be
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
2 comments to "மண்ணின் குரல்: ஏப்ரல் 2017:கொற்கை"
April 8, 2017 at 9:21 PM
அருமையான தகவல்
தொடர்கிறேன்
April 8, 2017 at 11:03 PM
கல்வெட்டுக்கள் பகுதிக்கள் செல்ல இயலவில்லையே! சூலூர் தெய். சேஷகிரி.
Post a Comment