Tamil Classics on the Net

0 மறுமொழிகள்


In town recently too was Subhashini Tremmel, a Malaysian of Tamil origin settled in Germany, who, together with a few others in Europe, is tracing the Tamil Classics and uploading them on the Net. The Tamil Heritage Foundation, as the group is called, was formed in 2000 and has a wing in Tamil Nadu. Dr. M. Rajendran, former Vice- Chancellor of the Tamil University, is the secretary of the Foundation here, and Banu Kumar and K.R.A. Narasiah are on the Governing Council. They contribute significantly to the output. So too does the British Museum Library

Among the items that the Foundation has put on the Net are Tamil literature (both print and palm leaf), folk music, and material on the traditional arts, Siddha medicine, local dialects etc.

Subhashini’s latest finds are two sets of palm leaf manuscripts on the Jain way of life. Yathi achaaram is about how Jain monks should live and the other is Siravah achaaram on Jainism explained to non-Jains.

These 8th/9th Century manuscripts were scanned for Tremmel in Madras and now go back on her computer for uploading in Germany.

Subhashini visits India every year in search of material and visits remote villages to record voices and photograph inscriptions, traditional rites etc. And so an invaluable collection is being built up and disseminated to a wider audience.

Thanks: http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/tamil-classics-on-the-net/article4520481.ece


செந்தமிழ்ச் செல்வன் - 1938ம் ஆண்டு தென்னாப்பிரிக்க சஞ்சிகை

0 மறுமொழிகள்
வணக்கம்.

எனது தமிழக பயணத்தின் போது கிடைத்த அரிய சேகரிப்புக்களில் தென்னாப்பிரிக்கா டர்பன் நகரிலிருந்து மாதம் இருமுறை என வெளிவந்த செந்தமிழ்ச் செல்வன் என்ற ஒரு சஞ்சிகையும் அடங்குகின்றது. ஒரே ஒரு நகல் எடுக்கப்பட்ட இந்தச் சஞ்சிகையை தமிழ் மரபு அறக்கட்டளை மின் சேகரத்திற்காக மாலன் அவர்கள் வழங்கினார்கள். 

இந்த சஞ்சிகையில் உள்ளூர் செய்திகள், இந்தியச் செய்திகள் ஆகியவற்ரோடு பெருமளவிற்கு விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன.

ஒரு தமிழ்க் கவிதையும் இதில் இடம்பெறுகின்றது. வாசித்துப் பாருங்கள்.

சுவாரசியமானத் தகவல்களாக டர்பனில் இயங்கி வந்த பாரதி மாதா ட்ராமா கம்பெனி பற்றிய தகவல்கள் ஜவர்கர்லால் நேருவின் மொழிகள், அறிவே கடவுள் என்ற தலைப்பிலான கட்டுரை ஆகியனவற்றைக் குறிப்பிடலாம்.



அக்காலத்தில் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட சாரிகள் விளம்பரம், இசைக் கருவிகள் விளம்பரம், உயிரைக் காப்பாற்றக் கூடிய பான விளம்ப்ரம் போன்றவை சுவையாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த முழு சஞ்சிகையை தமிழ் இங்கே காணலாம். 

முதல் பக்கம் மாத்திரம் தெளிவாகப் பதியப்படவில்லை. ஏனைய பக்கங்களை பிடிஎப் கோப்பில் ஸூம் செய்து வாசிக்கலாம்.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி 



கிராமக் கிளைநூலகமும் உலகம் சுற்றிய தமிழரும் பேரறிவாளர் திருவும் - நெற்குப்பை சோமலெ

0 மறுமொழிகள்

11.02.2013 அன்று நெற்குப்பை சோமலெ நினைவு கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்த சோமலெ அவர்களது 92 ஆம் ஆண்டு பிறந்த நாள் மற்றும் பெண்களுக்கான எம்ராய்டரி பயிற்சி தொடக்க விழாவில் சிறப்புரை ஆற்றும் பேறு வாய்த்தது.

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்ற ஊரில் 1921 ஆம் ஆண்டில் பிறந்தவர் உலகம் சுற்றிய தமிழர் எனப் போற்றப்படும் சோம.லெக்ஷ்மணன் செட்டியார் அவர்கள். 85 நூல்கள் எழுதியவர். அவற்றில் 42 பயண இலக்கிய நூல்கள். “இமயம் முதல் குமரி” வரையென்று பாரத தரிசனமும் அன்றைய 10 மாவட்டங்கள் வழி தமிழகப்பார்வையும் தமிழுலகிற்குத் தந்தவர்.    “அமெரிக்காவைப் பார்”, “ஆஸ்திரேலியாவில் ஒரு மாதம்” என 1950ல் பயண நூல்கள் எழுதியவர். ”செட்டி நாடும் தமிழும்” இன்றைக்கும் பேசப்படும் மரபியல் நூல். பண்டிதமணி கதிரேசன் செட்டியார், மறைக்காடு தந்த மாமனிதர் வேதரத்தினம் பிள்ளை, விவசாய முதலமைச்சர் ஓமந்தூரார் பற்றிய அவரது நூல்கள் ஆவணங்களாகும்.
 

எட்டுத்திக்கும் சென்றாலும் பிறந்த ஊருக்குச் சேவைசெய்யும் நோக்கில் அஞ்சலகம், வங்கி, தொலைபேசி நிலையம் எனக்கொண்டுவரக் காரணமானவர் சோமலெ. தந்தையார் வழியில் அவர்களின் திருமகன் அமெரிக்கவாழ் வேளாண் விஞ்ஞானி திரு சோமசுந்தரம் நெற்குப்பை கிளை நூலகத்திற்குப் பெருஞ்செலவில் தந்தையார் பெயரில் அருமையான கட்டிடம் கட்டிக்கொடுத்துள்ளார். இணையத்துடன் கணினி நிறுவியுள்ளார். கணிப்பொறிகள் தந்துள்ளார். மேலும் தகுந்த பயிற்சியாளர் மேற்பார்வையில் மாணவரும் ஊராரும் தினமும் பயன்படுத்தும் வகையில் வழிவகை செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் வேறு நூலகத்திற்கில்லாத தனிச் சிறப்பு இதுவாகும்.
அமைத்ததை விடப் பாராட்டுக்குரியன பராமரிப்பதும் பயனுறச் செய்வதும். அமெரிக்காவில் இருந்தாலும் ஒவ்வொரு நொடியும் நூலகத்தைப்பற்றிச் சிந்தித்து இயக்குதல் அவரது ஆர்வத் திறன்.
 
அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிதல்          

என்ற சொற்களுக்கு இணங்க இன்றையச் சூழல் கணினி அறிவு கொடுத்தலும் எழுத்தறிவித்தலேயாகும். பாரதியின் வரிகளை நான் சிந்தித்துப் பார்ப்பதுண்டு. அன்னம் இட்டால் அந்த வேளைக்குப் பசியாறலாம். ஆலயத்தில் வழிபட்டால் அந்த நொடியில் மனம் அமைதியுறும். ஆனால் கல்வியறிவால், கணினி அறிவால் வாழ்நாள் முழுதும் பயனடையலாம். எழுமையும் ஏமாப்புடைத்து. அதனால் தான் பாரதி புண்ணியம் கோடி என உயர்வாகச் சொன்னார் போலும்.

 திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராம நூலகத்தில் நூலகர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருவதையும் வந்தாலும் மதியத்திற்கு இல்லாது சென்றுவிடும் நிலையையும் கண்டிருக்கிறேன்.ஆனால் 12.30 கு அடைத்து 4.00 மணிக்குத் தொடங்க வேண்டிய நூலகம் அடைக்காமல் செயல்படுகிறது. பக்கத்தில் உள்ள மேநிலைப் பள்ளி மாணவர்கள் கணினிப் பயிற்சி பெற வருவதால் இந்த ஏற்பாடு. நூலகர் திருமதி விஜயா பாராட்டுக்குரியவர். நூலக உதவியாளரும் நியமிக்கப்பட்டுள்ளார். அருகிலுள்ள வடுகபட்டி நடுநிலைப்பள்ளி மாணவர்களும் நூல் நிலையத்தைப் பயன்படுத்த ஆசிரியர்களால் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

திரு சோமசுந்தரம் உதவியால் பெண்களுக்கான எம்ராய்டிரி பயிற்சி, மாற்றுத் திறனாளிகளுக்கான பயிற்சி என நூலகப்பணி சமுதாயப்பணியாக வளர்கிறது. அடுத்த மாதங்களில் இணையப் பயிலரங்கு பாண்டிச்சேரி முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் மூலம் நடக்கவிருப்பதாகத் தொலைபேசியில் சோமசுந்தரம் அவர்கள் பேசியபோது கூறினார்கள்.

விழாவில் முனைவர் வள்ளி சிறப்புரை ஆற்றினார்கள்.எனது உரையில் சோமலெ அவர்களின் நூல்களைப் பற்றியும் நூலகம், கற்றல், கணினி பற்றியும் குழுமங்கள், தளங்கள் பற்றியும் குறிப்பிட்டேன். நூலகத்தைப் போற்றி திரு சோமசுந்தரத்தின் அருமையான செயல்பாட்டிற்குப் பாராட்டினேன். அமெரிக்காவாழ் மருத்துவர் பில்.வி அறக்கட்டளை திரு வெங்கடாஜலம், நாச்சியாபுரம் பள்ளிச் செயலரும் திருப்பணியாளருமான திரு வயி.ச. இராமனாதன், தலைமைஆசிரியை சாந்தி, வாசகர் வட்டத்தினர், ஊர்ப்பெரியவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். எம்ராய்டிரி பயிற்சிப் பெண்களும், மாணவ மாணவியரும், ஊராரும் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


பயண நூல் இலக்கியத்தின் முன்னோடியின் புகழையும் பிறந்த ஊருக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்க்கும் பண்பையும் நூலகத்துடன் இணைந்த சமுதாயப் பணியையும் போற்றுகிறேன். அவை மனம் கவர்ந்ததால் நண்பர்கள் பார்வைக்குப் பகிர்ந்துள்ளேன்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.


தமிழ் மரபு அறக்கட்டளையின் பொங்கல் வாழ்த்துக்கள்!

0 மறுமொழிகள்
வணக்கம்.

மின்தமிழ் உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

கடந்த ஆண்டு பொங்கலன்று இதே நாளில் தமிழகத்தில் இருந்த நினைவுகள் மனதில் நீங்காமல் உள்ளன. 2012ம் ஆண்டும் முடிந்து 2013ம் ஆண்டில் காலடி எடுத்தும் வைத்து விட்டோம்.

இந்த இனிய நன்னாளில் தமிழ் மரபு அறக்கட்டளையின் கடந்த ஆண்டு பணிகளைப் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்து கொள்வதும் பயனாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சில விஷயங்களைக் குறிப்பாக பட்டியலிடுகின்றேன்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் நிர்வாக குழுவில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. செயற்குழு பட்டியலையும் விபரங்களையும் இங்கே காணலாம்.

களப்பணி மேற்கொண்டு கடந்த ஆண்டில் நாம் மேற்கொண்ட பயணங்களில் கிருஷ்ணகிரி, ஈரோடு, காரைக்குடி பகுதிகளில் தமிழக வரலாற்று தடயங்களை மின்பதிப்பாக்கம் செய்யும் முயற்சியை மேற்கொண்டோம். அந்த வகையில்,

கிருஷ்ணகிரியில்
  • பெண்ணேஸ்வர மடத்து நடுகல்கள்
  • பெண்ணேஸ்வரர் திருக்கோயில்
  • பெண்ணையாற்றங்கரை நடுகல்
  • ஐகொந்தம் பாறை ஓவியங்கள்
  • புலியட்டைகுட்டை பெருங்கற்கால பாறை ஓவியங்கள்
  • மல்லச்சத்திர பெருங்கற்கால ஈமக்கிரியைகள்
ஆகிய  பதிவுகள்  தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரதான வலைப்பக்கத்திலும், மண்ணின் குரலிலும், விழியப் பதிவு வலைப்பூவிலும் இணைக்கப்பட்டன.

இந்தப் பயண ஏற்பாட்டில் பெரிதும் உதவிய திரு.செல்வமுரளி, திரு.சுகவனம் முருகன் ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

ஈரோடு பதிவுகளாக
  • திருச்செங்கோடு ஆலயம் பற்றிய தகவல்கள்
  • கொடுமுடி ஆலயம் பற்றிய தகவல்கள்
  • பவானி சஙகமேசுவரர் ஆலயம் - திருநணா ஆலயத் தகவல்
  • கொங்கு நாட்டில் ஜைனம் 
ஆகிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு அப்பதிவுகள்  தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரதான வலைப்பக்கத்திலும், மண்ணின் குரலிலும், விழியப் பதிவு வலைப்பூவிலும் இணைக்கப்பட்டன.

இந்தப் பயண ஏற்பாட்டில் பெரிதும் உதவிய திருமதி பவளசங்கரி, திரு.திருநாவுக்கரசு, திரு.ஆரூரன், முனைவர்.புலவர்.இராசு ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

காரைக்குடி பதிவுகளாக
  • குன்றக்குடி ஆதீனம் வரலாறு
  • செட்டி நாடு - பொது தகவல்கள்
  • பிள்ளையார்பட்டி விடுதி
  • நகரத்தாரின் கடல் கடந்த பயணங்கள்
  • குன்றக்குடி குடவரைக் கோயில்
  • குன்றக்குடி ஞானியார் மலை சமணப்படுகை
  • தேவகோட்டை ஜமீன்
  • திருமலை பாறை ஓவியங்கள்
  • திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலய குடைவரைக் கோயில்
ஆகிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு அப்பதிவுகள்  தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரதான வலைப்பக்கத்திலும், மண்ணின் குரலிலும், விழியப் பதிவு வலைப்பூவிலும் இணைக்கப்பட்டன.

இந்தப் பயண ஏற்பாட்டில் பெரிதும் உதவிய முனைவர்.காளைராசன், முனைவர்.வள்ளி மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

கடந்த ஆண்டில் கீழ்க்காணும் 15 நூல்கள் மின்னாக்கம் செய்யப்பட்டன.
  1. கௌசிகசிந்தாமணி
  2. சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்
  3. The Fox with the Golden Tail(1914)
  4. கவிஞர் கண்ணதாசன் உரையுடன் கூளப்ப நாயக்கன் காதல்
  5. கல்கி புராணம் (Kalki PuraaNam)
  6. ஸ்த்ரீ பால சிகிச்சை (Stri Bala Sikitchai)
  7. பெரிய ஜோதிட சில்லரைக் கோவை (Periya Jothida Chillaraik kovai)
  8. யாழ்ப்பாணம் தந்த சிவஞான தீபம் - ஸ்ரீலஸ்ரீ. நா.கதிரைவேற்பிள்ளை
  9. சங்கர நயினார் கோயில்
  10. ஸ்ரீ ஸத்ஸம்பாஷிணி
  11. ஸஸாம வேத க்ருஹ்ய சூத்ரம்
  12. ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பாகம் 1
  13. சூடாமணி நிகண்டு
  14. கிரேக்க நாடகத்தில் தமிழ் உரையாடல்
  15. ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பாகம் 2

இன்னூல்கள் மின்னாக்கம் பெற உதவிய டாக்டர்.திருமூர்த்தி வாசுதேவன், திரு.திருஞானசம்பந்தன், திரு.சேசாத்ரி ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

இவர்களோடு கடந்த ஆண்டுகளில் மின்னூலாக்கத்தில் உதவிய திரு.வடிவேலு கன்னியப்பன், திரு.இன்னம்பூரான், தமிழ்த்தேனி, திரு.சந்திரசேகரன், திருமதி.கமலம், திருமதி.காளியம்மா பொன்னன், டாக்டர்.கி.லோகநாதன், திரு.ரகுவீரதயாள், திரு.நூ த லோகசுந்தரம், திருமதி.மவளசங்கரி, திரு.மாலன், திரு.ஆண்டோ பீட்டர், டாக்டர்.ந.கணேசன், டாக்டர்.திருவேங்கடமணி, வினோத் ராஜன் ஆகியோருக்கும் எமது நன்றி.

தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு பகுதியாக விளங்கும் மரபு விக்கியில் கடந்த ஆண்டும் பல கட்டுரைகள் இணைக்கப்பட்டன. மரபுவிக்கிக்காக கட்டுரைகள் வழங்கிய டாக்டர்.கி.லோகநாதன், திரு.வெங்கட் சாமிநாதன், திருமதி.பவளசங்கரி, டாக்டர்.ராஜம், திருமதி கீதா, திரு.திவாகர், முனைவர்.காளைராசன், திரு.செல்வன் ஆகியோருக்கும் கட்டுரைகளை மரபு விக்கியில் இணைக்க உதவிய திருமதி.கீதா, திருமதி.பவளசங்கரி, திரு.செல்வன் ஆகியோருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

மேற்குறிப்பிட்ட பதிவுகளோடு தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திப் பகிர்வு அரங்கமாகத் திகழும் மின்தமிழில் பற்பல சிறந்த சிந்தனைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. சமூகம், சமையம், தமிழ், வாழ்வியல், பெண்கள் நலன், கல்வி, வரலாறு, ஆலயம், புவியியல் என பல்வேறு தலைப்புக்களில் மின்தமிழ்  உறுப்பினர்களான உங்களில் பலர் சிந்தனைக்கு விருந்தளிக்கும் தகவல் பதிவுகளை இணைத்திருந்தீர்கள். குறிப்பாக திருமதி.சீதாலட்சுமி (சீத்தாம்மா), டாக்டர்.ராஜம், ஷைலஜா, கீதா, பவளா, தேமொழி, கமலம், ஸ்வர்ணா, திரு.மோகனரங்கன், திரு.தேவ், திரு.நரசய்யா, திரு.இன்னம்பூரான், திரு.ந.உ.துரை, டாக்டர்.திருவேங்கடமணி, திரு.பாலசுப்ரமணியம், முனைவர்.காளைராசன், திரு.திவாகர், திரு.ஹரிகிருஷ்ணன், முனைவர்.பாண்டியராஜா, திரு.பானுகுமார், திரு.சேசாத்ரி, டாக்டர்.கணேசன், திரு.ராஜூ ராஜேந்திரன், திரு .சுவாமிநாதன் (எல்.ஏ), திரு.வெ.சா, பழமைபேசி, திரு.செல்வன், திரு.தமிழ்த்தேனி, திரு.ரிஷான், திரு.வித்யாசாகர், பேராசிரியர்.டாக்டர்.நாகராசன், உதயன், திரு.சொ.வினைதீர்த்தான், எல்.கே, கதிர், ழான், கல்யாண குருக்கள், திரு.சந்தானம் சுவாமிநாதன், திரு.ப்ரகாஷ், திரு.கவி.செங்குட்டுவன், சா.கி.நடராசன், திரு.ஸன்தானம் போன்றோரின் பகிர்வுகள் அமைந்திருந்தன. 

நமது பதிவுகளையெல்லாம் வலையேற்றம் செய்வது ஒரு பணி என்றாலும் அதற்கான  அடிப்படை செர்வர்,  அதன் பாதுகாப்பு, கவனிப்பு, மேற்பார்வை ஆகியன. அந்த ரீதியில் என்னுடன் துணை நின்று தமிழ் மரபு அறக்கட்டளை சர்வர்களைப் பாதுகாக்கும் திரு.செல்வமுரளிக்கு எனது பிரத்தியேக நன்றி.

தமிழ் மரபு அறக்கட்டளை 2 வலைப்பகங்களைக் கொண்டுள்ளது.
ஆகிய இரண்டு வலைப்பக்கங்களோடு 7 வலைப்பூக்களைக் கொண்டுள்ளது.அவை
  1. மண்ணின் குரல்
  2. மரபுப் படங்கள்
  3. வீடியோ வலைப்பூ
  4. மரபுச் செய்திகள்
  5. விசுவல் குரல்
  6. கணையாழி
  7. சிட்டி
பொங்கல் திருநாளில் நமது பதிவுகளைப் பற்றிய இந்தத் தகவல்களோடு மின் தமிழின் 1509 அங்கத்தினர்களில், கருத்துப் பகிர்ந்து கொண்டும், ஏதும் கருத்துக்கள் சொல்லாவிடினும் அமைதியாக வாசித்தும் வருகின்ற எல்லா உறுப்பினர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களும்.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி 
நா.கண்ணன்
[ஸ்தாபகர்கள்: தமிழ் மரபு அறக்கட்டளை, மின்தமிழ்]


தமிழ் மரபு அறக்கட்டளையின் 2013ம் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வெளியீடுகள்

0 மறுமொழிகள்

வணக்கம்.

2013ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்க தமிழ் மரபு அறக்கட்டளை தயாராகிவிட்டது. 

நமது குழுமத்தின் நண்பர்கள் சிலர் இணைந்து சில சிறப்பு வெளியீடுகளைத் தயாரித்திருக்கின்றோம். தமிழர் மரபின் தன்மைகளைப் பிரதிபலிக்கும் இப்பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்கின்றோம்.



1. திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயக் குடைவரைக் கோயில், பாறை ஓவியங்கள், சமணப்படுகைகள் - சுபா

எனது இவ்வாண்டு (2012) ஜனவரி மாத சிவகங்கை மாவட்டத்துக்கானப் பயணத்தின் போது பதிவாக்கப்பட்ட 4 வீடியோ விழியப் பதிவுகளைப்புத்தாண்டு படைப்பாக இங்கே வெளியிடுகின்றேன். (பயண ஏற்பாட்டுக்கும் விளக்கத்திற்கும் நன்றி: டாக்டர். காளைராசன். டாக்டர்.வள்ளி)

சில படங்களை டாக்டர்.காளைராசனின் பதிவில் இங்கே காணலாம்.

முதல் விழியம்: http://video-thf.blogspot.co.at/2012/12/blog-post_31.html
யூடியூபில் காண: http://www.youtube.com/watch?v=daofS7feDgo&feature=youtu.be

திருமலை எனப்படும் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் மிகப் பழமை வாய்ந்தது. 7ம் அல்லது 8ம் நூற்றாண்டு பாண்டியர் காலத்துக் கோயில் என்ற பழம் பெருமை கொண்டது. 

இந்தக் கோயில் அமைந்துள்ள சூழலை முதல் விழியப் பதிவு காட்டுகின்றது. பசுமையான நெல் வயல்கள் சூழ்ந்த இடம். தாமரைப் பூக்கள் நிறைந்த குளங்கள் என இயற்கை எழிலின் அற்புதங்களைக் கண்களுக்கு விருந்தாக்கிக் காட்டும் இடம் இப்பகுதி.  இங்கே உள்ள இக்கோயிலையும் இக்கோயிலுக்கு மேலே உள்ள பாறைகளையும் முதல் பகுதியில் கேமராவில் படம் பிடித்து பதிவாக்கித் தந்துள்ளேன்.  இந்த பாறைகளில் பெருங்கற்காலச் சித்திரங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன. 


இரண்டாவது விழியம்: http://video-thf.blogspot.co.at/2012/12/blog-post_6567.html
யூடியூபில் காண: http://www.youtube.com/watch?v=GDc64xb0oos&feature=youtu.be


இந்த விழியப் பதிவில் திருமலை மலைப்பாறை பகுதியில் உள்ள பெருங்கற்காலத்து சித்திரங்களும் சமணப்படுகைகளையும் காணலாம்.  இந்தச் சித்திரங்கள் எகிப்திய பழங்கால நாகரித்தின் பிரதிபலிப்பாக உள்ள எகிப்திய தெய்வ வடிவங்களின் உருவங்களை ஒத்து அமைந்திருப்பதை நேரில் கண்டு வியந்தோம். இந்த பாறைகளுக்குக் கீழ் பகுதியில் சமணப்பள்ளிகள் அமைந்திருந்தமையை வெளிக்காட்டும் வகையில் இன்னமும் காணக்கிடைக்கும் சமணப் படுகைகளைக் காண முடிகின்றது. 

இச்சமணப் படுகைகள் அமைந்துள்ள தரைப்பகுதியிலும் பாறைகளிலும் புராதனச் சின்னங்களின் பால் அக்கறையும் தெளிவும் இல்லாத பொதுமக்களில் சிலர் செய்து வைத்திருக்கும் சேதங்கள் மனதை வருத்தமடையச் செய்கின்றன. இவற்றையும் இந்தப் பதிவில் நீங்கள் காணலாம்.

மூன்றாவது விழியம்: http://video-thf.blogspot.co.at/2012/12/blog-post_30.html
யூடியூபில் காண: http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Zl7j2cB3SlE

மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் குடைவரைக் கோயிலைக் காட்டும் ஒரு விழியப் பதிவு இது. முழுதாக மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட கோயில் இது. இங்கே முருகன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிள்ளையார் சிலைகள் புடைப்புச்சிற்பங்களாக உள்ளன.  

இப்பதிவில் மகிஷாசுரமர்த்தினியின் சிலை விளக்கம், கோயில் முழுக்க எழுதப்பட்டிருக்கும் தமிழ் கல்வெட்டுக்கள் விளக்கம், பூத்தொடுக்கும் கல்லில் உள்ள கல்வெட்டுக்கள், புடைப்புச் சிற்பங்களின் விளக்கம் என டாக்டர் வள்ளி அவர்கள் வழங்கும் தொடர் விளக்கம் அனைவரும் கேட்டு பயன்பெறத்தக்கவை. 

மலைப்பாறை சுவர் முழுமைக்கும் நீண்டு நிறைந்திருக்கும் கல்வெட்டுக்கள் பிரமிக்க வைக்கின்றன.  இங்கே பார்த்து நாங்கள் வியந்த காட்சியை நீங்களும் இந்த 12 நிமிட விழியப் பதிவின் வழியாகப் பார்த்து மகிழுங்கள்.

நான்காவது விழியம்: http://video-thf.blogspot.co.at/2012/12/blog-post_29.html
யூடியூபில் காண: http://www.youtube.com/watch?v=5qUODMjoeNo&feature=youtu.be

திருமலை பாறை ஓவியங்களைப் பார்த்து விட்டு புறப்படும் சமயத்தில் அங்கிருந்த மக்களே எங்களை அழைத்து மேலும் ஒரு பாறை இருப்பதாகவும் அங்கே சில ஓவியங்கள் இருப்பதாகவும் கூற அங்கே நடந்தோம். அங்கே பதிவாக்கப்பட்ட 2 நிமிட விழியப் பதிவு இது.




2. தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் உலகும்..... நாமும் - துரை.ந.உ

உழுது , விதைத்து , நீர்பாய்ச்சி, களையெடுத்து , தளிர் நிறுத்தி, தடவித் தடவி வளர்த்து, பூப்பார்த்து மகிழ்ந்து, ஒவ்வொரு காயாகப் வலிக்காமல் பறித்து , தடவித் தடவிக் கூடையில் அடுக்கி, மெதுவாக வரப்பில் இறக்கி , ஒன்றாகச் சேர்த்து, உழைப்பின் பலன்பெற ...பெருமையுடன் காத்திருந்து , கடைசியில் ஏமாந்த  அந்த தாத்தாவின் அன்றைய சுருங்கிய முகம் இப்போது மனதுக்குள் வந்து நிழலாட...

முழுதும் வாசிக்க இங்கே செல்க...! http://image-thf.blogspot.com



3. மார்கழியும் திருவேங்கடத்தானும் - திவாகர்

எது எப்படியானாலும் திருமலையில் மூலவராய்க் கோயில் கொண்ட அந்த திருவேங்கடவன் மட்டும் தான் எப்படி ஆதியில் இருந்தானோ அப்படியேதான் இன்றும் இருந்து கொண்டு தனக்கான பூசைகளைப் பெற்றுக்கொள்கிறான் என்றே சொல்லவேண்டும். சாதாரண மாதங்களில் அவனுக்கு செய்யும் பூசையில் எந்த மாற்றமும் இல்லையென்றாலும் இந்த மார்கழியில் அவன் தோற்றம் ஏதோ புதிய பொலிவுடன் இருப்பது போலத் தெரியும்.

முழுதும் வாசிக்க இங்கே செல்க..!




4.இழையெடுத்தல் - டாக்டர் வள்ளி

தமிழருள்ளும் நாட்டுக்கோட்டை நகரத்தார் என்றழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினர் தங்களது முன்னோர்கள் செய்து வந்தனவற்றை அப்படியே மாறாமல் இன்றளவும் கடைப்பிடித்து மரபுகளைக் காத்து வருகின்றனர். இவ்வாறாக நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகத்தினால் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு வழிபாட்டு முறைதான் “பிள்ளையார் நோன்பு“. இவ்விழாவினைப் “பிள்ளையார் சஷ்டி“ என்றும் “இழை எடுத்தல்“ என்றும் கூறுகின்றனர்.

முழுதும் வாசிக்க இங்கே செல்க.! 

இழையெடுத்தல் எனும் இச்சடங்கை மிக விரிவாக டாக்டர் வள்ளி விளக்கும் ஒலிப்பதிவைக் கேட்க மண்ணின் குரலுக்குச் செல்க.!



5.கொங்கு நாட்டு மகளிருக்கானச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் - பவள சங்கரி

பொதுவாக பெண்களின் பருவக் காலங்களை , பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை மற்றும் பேரிளம்பெண் என ஆறு வகைகளாகப் பிரித்துள்ளனர். பேதைப் பருவம் என்பது ஏழு வயது வரையிலான குழந்தைப் பருவம். பெதும்பை என்பது பதினொரு வயது வரையிலான ஒரு பருவம். அடுத்து வருவதுதான் மங்கை எனும் பூப்படையும் பருவம். மடந்தை என்பவள் திருமண வயதில் இருக்கும் பத்தொன்பதிற்கும் மேற்பட்ட பருவத்தினள். அரிவை எனும் பருவம் இருபத்தைந்து வயதான தாய்மைப் பருவம். தெரிவை என்பது உலகம் அறிந்த முப்பது வயதிற்கும் மேலான பருவம். அடுத்து நாற்பது வயதுப் பருவமான உலக ஞானமும், அனுபவமும் பெற்ற பேரிளம் பெண் என்பது. இதன் அடிப்படையிலேயே நம்முடைய பெரும்பான்மையான சம்பிரதாயங்கள் அமைந்திருக்கின்றன. ஒரு பெண்ணின் வாழ்நாளில் முக்கியமாக நான்கு வகையான சடங்குகள் இடம்பெறும்.இதில் முதலில் அங்கம் வகிப்பது ’பூப்பு நன்னீராட்டு விழா.’. பெண் குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்திற்கு தயாராகும் நிலையை அறிவிக்கும் விழா என்றே சொல்லலாம். சுரப்பிகளின் செயல்பாடுகளால் பலவிதமான மன மாற்றங்கள் மற்றும் உடல் மாற்றங்களும் ஏற்பட்டு பெருங்குழப்பத்தை ஏற்படுத்தும் பருவம் இது. இந்த விழாக்கள் மூலமாக் உற்றார், உறவினர், சொந்த, பந்தங்கள் என அனைவரும் கலந்து ஒன்று கூடி அப்பெண்ணை வாழ்த்துவதோடு, அப்பருவத்தின் முக்கியத்துவத்தை, எதிர்வரும் காலங்களில் அவள் எச்சரிக்கையுடன் வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தக்கூடிய ஒரு கலாச்சார பாதுகாப்பு விழாவாகவும் அமைகிறது.

முழுதாக வாசிக்க இங்கே செல்க..!



6. அர்த்தனாரி தத்துவம் - தமிழ்த்தேனீ

"திருமணம் என்கிற ஒரு புது பந்தத்தினால், வெவ்வேறு குடும்பப் பாரம்பரியம், வெவ்வேறு இயல்புகள், வெவ்வேறு பழக்க வழக்கங்கள் கொண்ட இருவர், அதாவது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒரு கூறையில் , ஒரே இடத்தில், வாழ ஆரம்பிக்கிறார்கள். இருவருடைய குணாதிசயங்களும் ஒத்துப் போக வேண்டும். பாலுடன் நீரைச் சேர்த்தால் அந்த ரசாயன மாற்றம் நிகழ்ந்து இரண்டும் ஒன்றாகக் கலக்க அதற்குரிய நேரம் எடுத்துக் கொள்ளும். அப்படி இருக்க இரு வித்யாசமான குணாதிசயங்கள் ஒன்றை ஒன்று புரிந்துகொண்டு ஒத்துப் போய் இணைவதற்கு கால அவகாசம் வேண்டும். ஆகவே வாழ்க்கையில் பொறுமை மிக அவசியம் .

முழுதும் வாசிக்க இங்கே செல்க.! 




7. தில்லைத் திருச்சித்ரக்கூடம் சென்று சேர்மின்களே - கீதா சாம்பசிவம்

தில்லையிலே நடராஜரும் கோவிந்தராஜரும் ஒருசேரக் கோயில்கொண்டு அனைவரையும் அருள் பாலித்து வருவதை அறிவோம். தில்லையம்பலம் பொன்னம்பலம் எனில் கோவிந்தராஜர் குடி கொண்டிருக்கும் கோயிலைத் திருச்சித்திரகூடம் என்கிறோம். ஆனால் நம் தமிழ்த்தாத்தாவுக்கோ திருச்சித்ரகூடம் என்றால் அங்கே ஶ்ரீராமர் அன்றோ குடியிருக்கவேண்டும். மேலும் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில் அவர் ராமரைக் குறித்தே பாடியுள்ளாரே. ஒரு இடத்தில் பள்ளி கொண்ட பெருமானைக் குறித்து எதுவும் சொல்லவில்லையே என்றெல்லாம் யோசனை பிறந்திருக்கிறது. ஆகவே அவர் மேலும் மேலும் ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். பெருமாள் திருமொழியில் ராமாயண சம்பவங்களே இடம்பெறுவதால் ஶ்ரீராமரை மூலவராய்க் கொண்ட வேறொரு கோயிலே இது என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே செல்க.!


8. திருப்பூவணத்தல மகாத்மியம் - டாக்டர்.காளைராசன்

முழுதும் வாசிக்க இங்கே செல்க.!



9. மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி - கதிர், ஈரோடு.

சாதி, மதம், ஏழை பணக்காரன், உயரிய பதவி, மாற்றுதிறனாளிகள் என எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் இந்த மாதவிடாய் நேரங்களில் தங்கள் ஆரோக்கியத்திற்காகவும், தகுந்த சூழலுக்காகவும் மிகுந்த துன்பப்பபடுவதைப் பார்க்கும்போது, அடிப்படைத் தேவைகளில் கூட விழிப்புணர்வு ஏற்படுத்தாத, கவனம் செலுத்தாத ஒரு தேசம் எப்படி வல்லரசாகும் எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.

முழுதும் வாசிக்க இங்கே செல்க!


10. ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம் மின்னூல் - டாக்டர்.காளைராசன்

இந்த நூல் 01.01.2013 முதல் தினம் ஒரு பக்கமாக மின்தமிழில் வெளியிடப்படும். தனி இழையில் இந்த நூல் தொடங்கும்.


புத்தாண்டு வெளியீடுகளை வாசித்தும், கண்டும், கேட்டும் நீங்கள் மகிழ்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

மின்தமிழ் உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை - மின்தமிழ் மடலாடற் குழுவின் இனிய 2013ம் ஆண்டு புத்தாண்டுநல்வாழ்த்துக்கள்.


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி 
[தமிழ் மரபு அறக்கட்டளை]


புத்தாண்டு (2013) வாழ்த்துக்கள்!!

0 மறுமொழிகள்
அன்புள்ள மின்தமிழர்களே

உங்கள் எல்லோரையும் 2013 ஆண்டில் மீண்டும் மின்தமிழுக்கு வரவேற்பதில்
மகிழ்கிறேன். பிரபஞ்சத்தில் ஆக்கம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது,
உடலும், உயிரும் தன்னைத் தொடர்ந்து புதுபித்துக் கொண்டிருக்கின்றன. எனவே
இன்று மீண்டும் புதிதாய் பிறப்போம். புதிய உறுதிமொழிகள் எடுப்போம். புதிய
மனிதராய் அவதாரம் செய்வோம். தீயினுள் தூசாகி போயின பழவினை, போயின எம்
பழைய சிந்தை! ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டும் பிறப்பெடுப்போம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

2012 ஆண்டு மிகவும் பயனுள்ள ஆண்டாகவே அமைந்தது. அவ்வாண்டின் ஆரம்பமே
இந்திய மண்ணில் குதூகலத்துடன் ஆரம்பித்தது. நீண்ட பயணங்கள், சுவையான
முதுசொம் தேடல், புதிய நண்பர்கள், புதிய எழுச்சி தரும் உரையாடல்கள்,
உரைகள் என்று களப்பணியுடன் அவ்வாண்டு ஆரம்பமானது. அவ்வாண்டில் பெற்ற
முதுசொம் செல்வங்களை யாம் தொடர்ந்து பதிப்பித்து வருகிறோம். மின்தமிழ்
இவ்வாண்டில் மிக சுறுசுறுப்புடன் செயல்பட்டது என்றால் அது மிகையில்லை.
புதிய நூல்கள் மறுபதிப்பு (இலக்கப்பதிவு) கண்டன. மின்தமிழரின் ஆக்கங்கள்
மரபுவிக்கியில் சேகரமாயின. ஆக்கமிகு இழைகள் மின்வானில் தோன்றி புதிய ஒளி
காட்டின (குறிப்பாக வடநாட்டு மருத்துவர் ஒருவர் இந்தியத்தொன்மை ஆய்வின்
நோக்கில் நம்முடன் இவ்வாண்டில் இணைந்துள்ளதைக் காண்க). கவிதை, கதை,
கட்டுரை, பயணக்கதைகள், முதுசொம் வேட்டை (பயண ஓவியங்கள்), ஆய்வுத்திரிகள் என்று
சிந்தனையைக்கூர்மை செய்யும் படைப்புகள் மின்தமிழில் வந்தவண்ணமிருந்தன.
மின்தமிழர்களுக்கு இக்குழுவின் மீது புதிய நம்பிக்கையும், பற்றும் தோன்றி
வளர்ந்ததும் இவ்வாண்டில்தான். இதனால் தமிழ் மரபு அறக்கட்டளைக்கான
உலகளாவிய கவன ஈர்ப்பு மின் தமிழர்களால் அளிக்கப்பட்டது.

8 ஆண்டுகள் நம்மோடு சேர்ந்து அனைத்து பணிகளிலும் உறுதுனையாக நின்ற
திரு.ஆண்டோ பீட்டர் இந்த ஆண்டில் மறைந்தது நமக்கு பெறும் இழப்பு.
ஆயினும், தமிழ் மேம்பாட்டிற்கு உழைக்கும் அக்குடும்பத்திலிருந்து
ஆண்டோவின் துணைவியார் திருமதி ஸ்டெல்லா ஆண்டோ பீட்டர் தமிழ் மரபு
அறக்கட்டளையின் பொருளாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது எமது உறவை
பலப்படுத்துகிறது. இந்த ஆண்டின் மிக மகிழ்ச்சியான சேதி,  தஞ்சைத்
தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் கணையாழி ஆசிரியரும்
தமிழகத்தின் பல்வேறு கல்வித் துறைகளில் முக்கிய தலைமைப் பொறுப்பு
வகித்த/வகிக்கும் டாக்டர்.ம.ராஜேந்திரன் அவர்கள் த.ம.அ வின் புதிய
செயலாளராக இணைந்திருப்பது!

இந்த ஆண்டில் நாமொரு (முதுசொம்) குடும்பம் எனும் எண்ணம் இன்னும் ஆழமாக
வேறூன்றியுள்ளது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் நன்றி
சொல்லிக்கொள்வதில்லை எனினும் செய்நன்றியை ஏதாவதொரு வகையில் நமது
வணக்கத்திலும், பணிவிலும், இன்மொழியிலும் சொல்லிய வண்ணம் இருப்பது
தமிழ்மரபு. அதை நாம் எப்போதும் செய்து கொண்டு இருந்தாலும், 2012 ஆண்டு
முடிகின்ற தறுவாயில் உங்கள் எல்லோருக்கும் மீண்டுமொருமுறை தனிப்பட்ட
அளவிலும், தமிழ் மரபு அறக்கட்டளை சார்பிலும், மின்தமிழ் சார்பிலும்
சொல்லிக்கொள்வதில் மகிழ்கிறோம்.

2013 ஆண்டை நோக்கிய நமது முதலடியை வலுவாய் வைப்போம். நம்பிக்கையோடு தலை
நிமிர்ந்து நடப்போம்.

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய தமிழ் முதுசொம், வாழியவே!

மிக்க அன்புடன்
டாக்டர்.நா.கண்ணன்
முனைவர்.சுபாஷிணி 
(தோற்றுநர்கள் - தமிழ் மரபு அறக்கட்டளை, மின்தமிழ் மடலாடற்குழு)
டிசம்பர் 31, 2012


Bharathi as a Journalist

0 மறுமொழிகள்

Mr. K.R.A. Narasiah speaks on Subramania Bharati –Journalism and Prose Writing.
Aug  31, 2012 at Madras Week Programme.

View the Power Point slide deck Here.





 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES