மயிலை சீனி.வேங்கடசாமி

0 மறுமொழிகள்

தமிழ் மணி: தமிழ்ப் பேரவைச் செம்மல் மயிலை சீனி.வேங்கடசாமி


  • ஐந்தடிக்குட்பட்ட குறள் வடிவம்
  • பளபளக்கும் வழுக்கைத்தலை
  • வெண்மை படர்ந்த புருவங்களை எடுத்துக் காட்டும் அகன்ற நெற்றி
  • கனவு காணும் எடுப்பான மூக்கு
  • படபடவெனப் பேசத்துடிக்கும் மெல்லுதடுகள்
  • கணுக்கால் தெரியக் கட்டியிருக்கும் நான்கு முழ வெள்ளை வேட்டி
  • காலர் இல்லாத முழுக்கைச் சட்டை
  • சட்டைப்பையில் மூக்குக் கண்ணாடி, பவுண்டன் பேனா
  • கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல் உத்திரீயம்
  • இடது கரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புத்தகப் பை
இப்படியான தோற்றத்துடன் சென்னைக் கன்னிமரா நூலகத்தை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே அவர்தான் மயிலை சீனி.வேங்கடசாமி என்று எழுத்தாளர் நாரண.துரைக்கண்ணனால் போற்றப்படும் மயிலை சீனி.வேங்கடசாமி 16.12.1900ம் ஆண்டு பிறந்தார்.


தந்தை சீனிவாச நாயக்கர் ஒரு சித்த மருத்துவர். அவரின் இல்லத்தில் ஓலைச்சுவடிகள் மற்றும் நூல்களைச் சேகரித்து வாசிக்கும் பழக்கம் இருந்தது. வேங்கடசாமி தன் தமையனார் சீனி.கோவிந்தராஜனிடம் தமிழ்ப்பயிற்சி பெற்றார். தமிழ்ப்பற்று இவருக்கு முன்னோர்கள் வழி கிடைத்த சீதனமாகும். மயிலை புனித சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில், பள்ளி இறுதி வகுப்பை நிறைவு செய்தார். இருபதாவது வயதில் சென்னைக் கலைக் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டார். பின்பு ஆசிரியப் பயிற்சி முடித்து நகராட்சித் தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.

வேங்கடசாமி, சுயமரியாதை இயக்கச் சார்பாளராக வாழ்வைத் தொடங்கினார். நீதிக்கட்சி நடத்தப்பட்ட "திராவிடன்" நாளேட்டின் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பணிபுரிந்தார். பின்னாளில் "குடியரசு", "ஊழியன்" போன்ற இதழ்களில் செய்திக் கட்டுரைகள் எழுதினார். "கெளதம புத்தர்" என்ற நூலை எழுதினார். புத்தர் வரலாறு, பள்ளி வரலாற்றுப் பாடத்தில் கற்கும் கதையாக எழுதப்பட்டது. "புத்தர் ஜாதகக் கதைகள்" என்ற நூலைத் தமிழில் முதன் முதலாக எழுதினார். இக்கதைகளில் புத்தமதக் கோட்பாடுகள் எளிமையாகக் கூறப்பட்டுள்ளன.



வேங்கடசாமி 1950களின் இறுதிக் காலங்களில், கி.பி.3ம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.9ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சிபுரிந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவற்றை ஆய்வு செய்து மன்னர்களைப் பற்றிய நூல்களை உருவாக்கினார். "மகேந்திரவர்மன்" என்ற நூலை முதன்முதலாக வெளியிட்டார்.

"வாதாபிகொண்ட நரசிம்மன்" என்ற நூலில் நரசிம்மவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்ட பாறைக் கோயில்கள் குறித்தும், இம்மன்னன் காலத்தில் உருவாக்கப்பட்ட சிற்ப வடிவங்கள் பற்றியும் விரிவான தகவல்களைத் தந்துள்ளார். இந்த நூல் தமிழக சிற்ப வரலாற்றை தெரிந்துகொள்ள பெரிதும் உதவும்.

சேரன், செங்குட்டுவன் ஆய்வில் தொடங்கி, சங்க காலம் குறித்த ஆய்வுகளை நிகழ்த்தி உள்ளார். அக்காலத்தில் தமிழகம்;

சோழநாடு
பாண்டியநாடு
சேரநாடு
துளுநாடு
கொங்குநாடு
தொண்டைநாடு

என்று ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததாகத் தெளிவுபடுத்தி, இதற்கான வரைபடத்தையும் உருவாக்கியுள்ளார்.

ஒவ்வொரு நாடு தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டு துளுநாட்டு வரலாறு, கொங்குநாட்டு வரலாறு ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தமது அனைத்து ஆய்வுகளிலும் இலங்கை தொடர்பான குறிப்புகளைக் கொடுப்பதை மரபாகக் கொண்டிருந்தார் வேங்கடசாமி.

"தமிழ்நாட்டு வரலாறு" என்ற நூலில் "இலங்கையில் தமிழர்" என்ற ஆய்வை மேற்கொண்டார். தமிழக வரலாற்றை கட்டமைத்து ஒழுங்குபடுத்தியதில் வேங்கடசாமிக்குத் தனித்த இடமுண்டு.

மகாபலிபுரத்துச் சிற்பங்கள் தொடங்கி, பல்லவ மன்னர்கள் காலத்து கட்டடம் மற்றும் சிற்பக்கலை தொடர்பான ஆய்வையும் மேற்கொண்டார். இசைக் கூத்து குறித்தும் ஆய்வு செய்துள்ளார். "தமிழ் வளர்த்த அழகுக் கலைகள்" என்ற நூலில் தமிழர்களின் பழங்கால அழகுக் கலைகள் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.

19ம் நூற்றாண்டின் தமிழ் சமூக வரலாற்றை அறிவதற்கான தொகுப்பாக "19ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்" என்ற நூலை எழுதியுள்ளார். வேங்கடசாமி, கன்னடம், மலையாளம், பாலி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பயிற்சியுடையவராக இருந்தார். மலையாளத்திலிருந்து சில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

ஓவியங்கள் குறித்து ஆய்வு செய்த வேங்கடசாமி, பல்லவர் காலத்து ஓவியங்கள், பிற்காலச் சோழர்கால ஓவியங்கள், பிற்கால ஓவியங்கள் எனப் பல்வேறு ஓவியங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளார். குறிப்பாக, கைலாசநாதர் கோயில் ஓவியம், தஞ்சை பெரியகோயில் ஓவியம், மதுரை நாயக்கர்கால ஓவியம் குறித்து ஆய்வு செய்துள்ளார்.

1962ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சார்பில் அறக்கட்டளை சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இவற்றை "சங்ககால வரலாற்றில் சில செய்திகள்" என்னும் பெயரில் பின்னர் அப்பல்கலைக்கழகம் நூலாக வெளியிட்டது.

சங்ககாலத் தமிழரின் வணிகம், சங்ககால விளைபொருட்கள் போன்றவை குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டு, "பழங்காலத் தமிழர் வாணிகம்", "சங்க காலத்து பிராமிக் கல்வெட்டு எழுத்துக்கள்," என நூல்களாக வெளியிட்டார். தமிழக அரசு உருவாக்கிய, தமிழக வரலாறு எழுதும் தமிழ்நாட்டு வரலாற்றுக் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். "தமிழ்நாட்டு வரலாறு" சங்க காலம், அரசியல் என்ற இரண்டாம் தொகுதியில் மூவேந்தர்களைப் பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார்.

இவ்வளவு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இவர், தமிழ்நாட்டின் வரலாறு முழுமையாகவும், தெளிவாகவும், சரியாகவும் இன்னும் எழுதப்படாமல் இருப்பது பெருங்குற்றமாகும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

"அகல் வரலாறு அனைத்தும்
மிஞ்சுதல் இன்றி கற்றோன்
மேம்பாடு நூலாராய்ச்சி
கெஞ்சிடும் தனைத் துலக்க
கேண்மையோடு உயர்வு செய்வான்!"


என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், வேங்கடசாமியின் ஆய்வைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

திராவிடன்
செந்தமிழ்ச்செல்வி
ஊழியன்
ஆரம்பாசிரியன்
செந்தமிழ்
தமிழ்ப்பொழில் ஆராய்ச்சி
திருக்கோயில்
நண்பன்
கல்வி
இலட்சுமி
ஆனந்தபோதினி
தமிழ்நாடு
செளபாக்கியம்
ஈழகேசரி
கலைக்கதிர்

ஆகிய இதழ்களில் 200க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். தமிழில் 33 நூல்களை எழுதியுள்ளார்.

நம் சிற்பக் கலைப்பொருட்கள் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு கள்ளத்தனமாகக் கடத்தப்பட்டன. இதை அறிந்து மிகுந்த வேதனையடைந்த வேங்கடசாமி, அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

1980ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் செம்மல்கள் பேரவை, "தமிழ்ப்பேரவைச் செம்மல்" என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 2001ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் சார்பாக வேங்கடசாமிக்கு நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

1981 மே 8ம் தேதி வேங்கடசாமி இவ்வுலக வாழ்வை நீத்தார்.

வேங்கடசாமி ஓர்;

இலக்கியக்கடல்
வரலாற்றறிஞர்
மொழிநூற்புலவர்
சமயநூல் வித்தகர்
நுண்கலைவாணர்
சொல்லாய்வுச் செம்மல்
கல்வெட்டு, சாசனம்
தொல்லியல் துறைகளில் தனி முத்துரை பதித்தவர்
பன்மொழிப்புலவர்
சமூகவியல் அறிஞர்

என பல்வேறு பரிமாணங்களின் பெட்டகமாகத் திகழ்ந்தவர். அவரின் உயர்ந்த கருத்துகளை உள்ளத்தில் ஏந்திச் செயல்படுவது அனைத்து தமிழர்களின் கடமையாகும்.

பி.தயாளன்

நன்றி: தமிழ்மணி (தினமணி)
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

மறுமொழிகள்

0 comments to "மயிலை சீனி.வேங்கடசாமி"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES