சிலேடைச் செல்வம்

0 மறுமொழிகள்

சிலேடைச் செல்வம் -1
திருப்பூர் கிருஷ்ணன்
=================
தண்ணீருக்குக் கவலையில்லை

சேலத்தில் சாரதா கல்லூரி. கொஞ்சகாலம் முன்பு உயர்நிலைப் பள்ளியாக
இருந்தது அது. ஊருக்கு வெளியே பல ஏக்கரா புன்செய் நிலங்களுக்கு இடையே
அந்தப் பள்ளிக் கட்டிடம்.

கி.வா.ஜகந்நாதன் பள்ளிக்கு வந்து பேச வேண்டும் என்பது நிர்வாகத்தார்
விருப்பம். அழைத்தார்கள். கி.வா.ஜ. வந்தார். பள்ளியைச் சுற்றிக்
காட்டினார்கள். கிணற்றையும் காட்டினார்கள்.

''கவலை ஏற்றம் போட்டுத்தான் இதுவரை தண்ணீர் இறைத்து வந்தோம். ஆனால்
இப்போது பம்ப் செட் போட்டுவிட்டோம். பம்ப் மூலமாகத் தண்ணீர்
கொட்டுகிறது'' என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட கி.வா.ஜ., ''அடடா! அப்படியானால் இனிமேல்
தண்ணீருக்குக்
கவலையே இல்லை என்று சொல்லுங்கள்'' என்றார்!
-----------------------------------------------------------------------------
சிலேடைச் செல்வம்-2
குழந்தைக்கு அதன் அம்மா உப்புமா ஊட்டிக் கொண்டிருந்தார். எதனாலோ அந்தப்
பழைய உப்புமா குழந்தைக்குப் பிடிக்கவில்லை. அருகில் இருந்தார்
கி.வா.ஜ.

''உப்புமாவைத் தின்ன' முடியலையோ! உப்புமா ஏன் தொண்டையைக்
குத்துகிறதா'' எனக் குழந்தையைக் கோபித்துக் கொண்டார் அந்தப்
பெண்மணி.

கி.வா.ஜ. அந்தப் பழைய உப்புமாவை வாங்கி வாயில் போட்டுக்கொண்டு
பார்த்தார். பிறகு, ''ஆமாம். இந்த உப்புமா தொண்டையைக் குத்தத்தான்
செய்யும்'' என்றார். ஏன் என்று அந்த அம்மா கேட்டார். 'ஊசி இருக்கிறது'
என்று கூறிச் சிரித்தார் கி.வா.ஜ.!
======================================================
சிலேடைச் செல்வம் -3
கிருஷ்

தமிழ்த் தாத்தா உ.வே.சாமி நாத ஐயரிடம் கி.வா.ஜகந்நாதன்
மாணவராக
இருந்த நேரம். ஒருமுறை கி.வா.ஜ.வை ஒரு பாட்டுப் பாடு என்றார்
உ.வே.சா. அப்போது கி.வா.ஜ.வுக்குத் தொண்டை கட்டியிருந்தது.
கி.வா.ஜ. செய்த தமிழ்த் தொண்டைப் பாராட்டலாமே தவிர அவரது
தொண்டை அன்று பாராட்டும்படியாக இருக்கவில்லை. 'என் தொண்டை கம்மலாக
இருக்கிறது. இன்று போய் என்னைப் பாடச் சொல்கிறீர்களே' என்று
தயங்கினார் கி.வா.ஜ. 'அதனால் என்ன பரவாயில்லை. காதால் தானே
கேட்கப் போகிறோம். கம்மல் காதுக்கு அழகுதான் பாடு' என்றார்
உ.வே.சா!
===========
இம் மைக்கும் மறு மைக்கும்.....
கிருஷ்
========
இலக்கியமும் ஆன்மிகமும் கலந்த கூட்டம் ஒன்றிற்கு கி.வா.ஜகந்நாதனை
அழைத்திருந்தார்கள். பேசத் தொடங்கினார் கி.வா.ஜ. வாழ்க்கையின்
நிலையாமை குறித்து இலக்கிய மேற்கோள்கள் பலவற்றை எடுத்துக் காட்டி
விளக்கலானார். இம்மைக்கும் மறுமைக்கும் என்ற இரண்டிலும் உயர்ந்த நிலைகளை
அடைய ஆன்மிகம் உதவும் என்று விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர்
பேசிக் கொண்டிருந்த ஒலிபெருக்கி (மைக்) தகராறு செய்தது.
ஒலிபெருக்கி
உரிமையாளர் அந்த மைக்கை நீக்கிவிட்டு வேறு ஒரு மைக்கைக் கொண்டு
வந்து
பொருத்தினார். என்ன சிக்கல் என்றால் கொண்டு வந்து வைத்த இரண்டாவது
ஒலிப்பெருக்கியும் சரியாக வேலை செய்யவில்லை. சுவாரஸ்யமாக
சொற்பொழிவு கேட்டுக் கொண்டிருந்த இலக்கிய அன்பர்கள்
சலிப்படைந்தார்கள்.
அந்த நேரத்தில் கி.வா.ஜ. 'இம்மை, மறுமை இரண்டிலும் பயன்படுவது
ஆன்மிகம்
என்று சொன்னேன். ஆனால் இன்று இம் மைக்கும் பயன்படவில்லை, மறு மைக்கும்
பயன்படவில்லை. என்ன செய்வது!' என்று சொல்லி அவையில் கலகலப்பைத்
தோற்றுவித்தார்.

-=-=-=-=-=-=--=-=-=-=-~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~````
வெ.சுப்பிரமணியன் ஓம்

மறுமொழிகள்

0 comments to "சிலேடைச் செல்வம்"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES