சிவ நாம பெருமை

0 மறுமொழிகள்

ஓம்.
சிவநாமாவின் பெருமை.
ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகள் அருளிய நன்மொழிகள், மதராஸ் லா ஜர்னல் ஆபீஸ் மைலாபூர் சென்னை -4

ஆன்மீகப் பாதையில் அன்பர்களை அழைத்துச் செல்ல பரமாச்சார்யார் அருளிய மொழிகள் பவித்ததிரமானவை. அவைகளில் சில துளிகள் இங்கே இடம்பெறுகின்றன
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.

வேதங்களின் ஸாராம்சமாக இருப்பது ஸ்ரீ ருத்ரம்.
ஸ்ரீ ருத்ரத்தில் சங்கர ஸ்வரூபத்துக்கு அடுத்தபடியாக சிவஸ்வரூபம் சொல்லப்பட்டிருகினறது.

ஜனங்கள் தெரிந்தும் தெரியாமலும் ஜன்மாந்தரங்களில் பண்ண்ய பாபத்தைப் போக்க ஸுலபமான உபாயம் நம் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா? பாப பரிஹாரத்துக்கு ஸுலபமான வழி பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சுகாச்சாரியார் ஏழு நாளில் பரீக்ஷித்துக்குப் பாகவதத்தை உபதேசித்தார். அந்த பாகவதத்தில் தாக்ஷாயணியின் கதை வருகிறது. அதில் மோக்ஷம் அடைய ஓர் உபாயம் சொல்லபட்டிருக்கிறது.

தாக்ஷாயணி என்பது அம்பிகையின் பெயுர். பார்வதியாக வருவதற்கு முன்பு தக்ஷனுக்குப் புத்திரியாக தாக்ஷாயணி என்னும் பெயருடையவளாக இருந்தாள். தக்ஷன் சிவனை நிந்தித்தான். அதனால் அவனுக்குப் பெண்ணாக இருப்பது கூடாது என்று அந்த தேஹத்தை விட்டுவிட்டு பார்வதியாக அவதரித்தாள்.

பரிமளம் என்று அப்பைய தீக்ஷிதர் ஒரு கிரந்தம் எழுதியிருக்கிறார். வாசஸ்பதிமிச்ரர் பாமதி என்று ஒரு கிரந்தம் எழுதியிருக்கிறார். அதனுடைய வியாக்கியனம் கல்பதரு என்பது. அதனுடைய வியாக்கியானம் தான் பரிமளம் என்பது. அந்த பரிமளத்தை ஒருவர் கண்டனம் பண்ணினார். அவ்ர் கண்டனம் பண்ணினார் என்று யாரோ வந்து அப்பைய தீக்ஷிதரிடம் சொன்னார். அப்போது அவர் மூக்கைப் பிடித்துக்கொண்டார். பரிமள கண்டனம் பண்ணினால் அபரிமளம் தானே உண்டாகும். அது போல தக்ஷன் சிவஸ்வரூபத்தைத் துவேஷித்தான். ஸர்வ மங்கள மூர்த்தி சிவன். சிவனிடம் துவேஷம் வந்தால் அவர்களிடம் அசிவம்தான் இருக்கும். அதாவது அமங்களம், அகல்யாணம் என்பவைதான் இருக்கும்.

யாராவது முன் காலத்தில் உடன்கட்டை ஏறினால் அவர்களுடைய துணியை வைத்து ஆராதனம் செய்வார்கள். அவர்க்ள் ஆத்ம ஞானியின் நிலையை அடைந்தவர்கள். எல்லாவற்றையும் தியாகம் பண்ணும் சக்தி இருப்பதால் அவர்கள் பூஜிக்கப்படுகிறார்கள். அந்த நிலையில் இருந்து அம்பிகை சொன்னது இது. அந்த ஸமயத்தில் சொன்ன ஸத்தியத்துக்கு விலையே இல்லை.அக்கினி குண்டத்தில் பாதிவிரயத்தைக் காப்பாற்றிக் கொள்ளச் சரீரத் தியாகம் செயும் பொழுது சொன்னத் வார்த்தையை விட ஸத்தியமான வேறு வார்த்தை கிடையாது.

பாபத்தை ஒரே க்ஷணத்தில் துவம்ஸம் பணும் ஒரு வஸ்து உண்டு. அந்த வஸ்துவைப் பல இடங்களுக்குப் போய்த் தேடவேண்டாம். இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது. ஸகல வேதங்களுக்கும் மத்தியில் இருப்பது அது. அதுவே வேதங்களின் ஜீவரத்னம். கோயிலில் மஹாலிங்கம் போலவும், தேஹத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்க்கிறது. அதை என்ன பண்ணவேண்டும்? வாக்கினாற் சொல்லவேண்டும். யார் சொல்ல வேண்டும்? மனிதனாய்ப் பிறந்தவன் சொல்ல வேண்டும். மனிதன் அதைச் சொல்லாவிட்டால், இவனுக்கு நாக்கு இருந்தும் பிரயோஜனமில்லை. ஆகையால் எல்லோரும் அதைச் சொல்லியாகவேண்டும். அதை ஒருதரம் சொன்னாற் போதும். வேறொரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே அது பாபத்தைப் போக்கிடும்.


இந்த விஷயம் பாகவதத்தில் சொல்லியிருப்பது விசேஷம். சிவ புராணத்தில் சொல்லப்பட்டிருந்தால், ஸ்தோத்திரம் என்று சொல்லி விடலாம். பாகவதத்திலே விஷ்ணு ஸ்தோத்ரம் இருந்தால் அது அவ்வளவு விசேஷமானது அல்ல. இது உத்தம ஸதி, உத்தமமான காலத்தில் சொன்னது. சுகாச்சாரியார் பரீக்ஷித்திற்குச் சொல்லும் ஸத்திய வாக்கியம்.

பரமேஸ்வரனுடைய கீர்த்தியை நாம் வாக்கினால் சொல்லுவதானாலும் கேட்பதானாலும் பவித்திரர்களாகிறோம். அவருடைய ஆக்ஞையை எவரும் மீறமுடியாது.அவரால் எல்லாம் சுற்றுகின்றன.அஹம்பாவமாக இருக்கும் பொழுது அவர் சிக்ஷிக்கிறார். குழந்தைகள் ஏதாவது தப்புச் செய்தால் நாம் அடிக்கிறோம். அது போல பரமேசுவரன் தெவதைகளைச் சிக்ஷித்தார். காளகூட விஷம் பாற்கடலில் உண்டானபோது அதைச் சாபிட்டு அவர்களை ரக்ஷித்தார். ஸகல தேவதைகளும் பரமேசுவரனுடைய குழந்தைகள்.

பரமேசுவரனை நாம் நேரில் பார்த்து நமஸ்காரம் பண்ணவேண்டாம். அவருடைய நாமாவே போதும். நமக்கு நன்றாகத் தெரிந்தது அது. நம்முடைய மதத்தில் பாப பரிஹாரத்துக்கு ஸுலபமான மார்க்கம் இருப்பதாகச் சோன்னேன். அது இந்த நாம ஸ்மரணம் தான். பிரதோஷ காலத்தில் இந்த நாமாவைச் சொன்னால் போதும்.

அப்பேர்ப்பட்ட ஸர்வேசுவரன், ஸகல வேத சாஸ்திரங்களின் தாத்பரியமாக ஓங்கார ஸ்வரூபமாக இருக்கிறார். ஓங்காரம் தான் எல்லாத் தத்துவங்களுக்கும் முடிவானது.

பரமேசுவரன் ஓங்காரம். ஸ்வரூப ப்ரம்மமும் ஓங்காரந்தான்.

சிவஸ்வரூபந்தான் பரப் பிரம்மம். ஸாயங்கால வேளைகளில் சிவ தியானம் செய்ய வேண்டும். பிரதோஷ காலத்தில் ஈசுவர தரிசனம் செய்ய வேண்டும். ஈசுவரன் கோயிலில் பிரதோஷ காலத்தில் எல்லா தேவர்களும் வந்து ஈசுவர தரிசனம் செய்கிறார்கள்.

பரமேசுவரனுடைய நாமாவாகிய 'சிவ' என்பது வேதத்தின் மத்திய ஸ்தானத்தில் இருக்கிறது. லோகத்தில் ஈசுவரன் என்ற சப்தம் சிவனுக்கே வழங்கப்படுகிறது. அவன் மஹா புருஷன்..

பரமேசுவரனுடைய நாமாவின் பெருமை சுருதியில் கர்ம காண்டமாகிய ஸ்ரீருத்திரத்திலும் ஞான காண்டமாகிய மாண்டூக்யோபநிஷத்திலும் மற்ற ஸூத்திரங்களிலும் புராணங்களிலும் சொல்லப்பட்டிருகிறது. ஈசானன் என்னும் சப்தத்துக்கு எது அர்த்தமோ அதுதான் பரமேசுவர ஸ்வரூபமும்.

இவ்வளவுக்கும் பாம தாத்பரியமாக ஒன்று இருக்கிறது. அதுதான் இந்த இரண்டெழுத்து 'சிவ' . சிவ என்பதை 'சிவா' என்று சொன்னால், அது அம்பிகையின் பெயர் என்று வேதம் சொல்லுகிறது.

பரம சிவனுக்கு இரண்டு சரீரங்கள் இருக்கின்றன. ஒன்று பரம மங்கள ஸ்வரூபம். மற்றொன்று எலும்பை அணிந்து கொண்டு ஜடாதாரியாக இருக்கிற ஸ்வரூபம். ஸர்வ மங்களை என்பது அம்பாளின் பெயர். அந்த அம்பாள் தான் உயிர். இந்த இரண்டு ஸ்வரூபங்களும் லோகத்தில் எல்லோருக்கும் பிதாவாகவும் மாதாவாகவும் இருக்கின்றன. 'சிவ' என்ற இரண்டு அக்ஷரங்களை எப்போது ஸந்தர்ப்பம் நேர்ந்தாலும் உச்சாரணம் பண்ணிக்கொண்டு இருக்க வேண்டும். எந்த ஜன்மம் வந்தாலும் அதை மறக்காமல் இருக்க வேண்டும். அப்படி யிருந்தால் ஜன்மமே இல்லாத பரம சாந்த நிலை உண்டாகும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
செய்தி மூலம்: குமுதம் பக்தி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஓம்.வெ.சுப்பிரமணியன் ஓம்

மறுமொழிகள்

0 comments to "சிவ நாம பெருமை"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES