மண்ணின் குரல்: ஜனவரி 2018: தூத்துக்குடி நெய்தல் நில மக்கள் - பகுதி 1

0 மறுமொழிகள்

வணக்கம்.

​தமிழ்ப் பண்பாட்டில் நெய்தல் நிலத்தின் பங்களிப்பு அளப்பரியது. ஆனால் தற்காலத்தில் நெய்தல் நில மக்களைப் பற்றின புரிதலும் அறிதலும் மற்ற நில மக்களுக்கு மிகக் குறைவாகவே இருக்கின்றது. தமிழகத்தின் வணிகப்பொருட்களுக்கு உலகம் முழுவதும் கடல்வழித்தடங்களைக் கண்டுபிடித்து உலகம் முழுமையும் கொண்டு போய் சேர்த்த பெருமை நெய்தல் நில மக்களுக்கே உள்ள தனிச்சிறப்பு. 

நெய்தல் நில மக்கள் இல்லாமல் போயிருந்தால் தமிழகப் பண்பாட்டு விழுமியங்கள் உலகின் பல பாகங்களுக்குப் போய் சேர்ந்திருக்காது என்பது நிதர்சனமான உண்மை. காலங்கள் மாறி சமூக பொருளாத அமைப்புகள் மாறிய சூழலில் கடல் உணவுப் பொருட்களை பிடிப்பவர்களாகவும், முத்துக்குளிப்பவர்களாகவும், உப்பு காய்ச்சுபவர்களாகவும் இறுதியாக கடலோடிகளாகவும் இருந்த மக்கள் நெய்தல் நில மக்கள். 

தற்போது கடலோடி தொழில் முற்றிலுமாக நெய்தல் நில மக்களிடமிருந்து மறைந்து போய் விட்டது. மீன் பிடி தொழிலைத் தவிர மற்றவை தமிழகக் கடலோரங்களில் சிதறிய வகையில் சிறு சிறு கிராமத்து குழுக்களின் தொழிலாக இருந்து வருகின்றது. இந்த வீழ்ச்சியின் காரணமாக வெளி உலகத்துத் தொடர்புகள் குறைந்து போய் இம்மக்களின் மீதான பாராமுகம் அதிகரித்துள்ளது. 

இயற்கை சீற்றங்களான ஆழிப்பேரலைகள், புயல்கள் பெருமழை சீற்றங்கள் ஆகியவற்றினால் உடனடியாகவும் நேரடியாகவும் பாதிக்கப்படுகின்ற மக்கள் இம்மக்களே. அண்மையில் ஓகிப் புயல் இம்மக்களை மிக மோசமாகப் பாதித்ததும், நூற்றுக் கணக்கானவர்கள் இன்று வரை காணாமல் போயிருப்பதும், திரும்பி வராதவர்களை இறந்தவர்களாக அறிவித்து கடல் நீரிலேயே தர்ப்பணம் செய்ததும் அண்மைக் கால அழிக்க முடியாத சோகங்கள். 
இவ்வளவு கணத்த பின்னணி கொண்ட நெய்தல் நில மக்கள் தூத்துக்குடி கரையோரம் முக்குளிப்பு கிராமங்களில் ஒன்றான அலங்காரத்திட்டு பகுதியிலிருந்தது முத்துக்குளிக்கும் மக்களின் வாழ்வைப் படம் பிடிக்கும் ஒரு சிறிய பண்பாட்டுப் பதிவு தான் இது. 

​​இந்தப் பதிவில் தூத்துக்குடி அலங்காரத்திட்டு பகுதியின் பங்குத் தந்தை பாதிரியார் ஜோன் செல்வம் அவர்கள் நமக்காக இப்பகுதி பற்றிய சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றார். இப்பதிவில் 
  • 1754ல் இப்பகுதிக்கான கத்தோலிக்க பங்கு அமைக்கப்பட்ட செய்தி, இப்பகுதியில் அமைந்திருக்கும் கடற்கரையோர சிறிய தேவாலயம், அதில் பூசிக்கப்படும் அலங்கார மாதா 
  • கடலில் கிடைக்கும் நுரைக்கல்லை எடுத்து செங்கல் போல வடிவமைத்து வீடு கட்டும் பாணி 
  • சங்கு குளிக்கும் தொழில் 
..இப்படிப் பல செய்திகளை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார். 

விழியப் பதிவைக் காண:   http://video-thf.blogspot.de/2018/01/1.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=IBX8JnSwi2M&feature=youtu.be

இப்பதிவுக்கான  ஏற்பாடுகளில் உதவிய    சாயர்புரத்தைச் சேர்ந்த சகோதரர் மைக்கல், நண்பர் ஒரிசா பாலு ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.










அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

மறுமொழிகள்

0 comments to "மண்ணின் குரல்: ஜனவரி 2018: தூத்துக்குடி நெய்தல் நில மக்கள் - பகுதி 1"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES