​THF Announcement: ebooks update: 28/6/2014 *முடியுடை மூவேந்தர்*

0 மறுமொழிகள்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய நூல் இணைகின்றது.

நூல்:  முடியுடை மூவேந்தர்
ஆசிரியர்: வித்துவான் மா.இராசமாணிக்கம்

வெளிவந்த ஆண்டு: 1938

நூல் குறிப்பு: தமிழ் நாட்டில் பெருமையுடன் விளங்கிய சோழன் குலோத்துங்கன், பாண்டியன் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன் என்னும் முடியுடை மூவேந்தர் வரலாறு சொல்கின்றது இந்த நூல். மூன்று பெரும் பகுதிகளாக இந்த நூல் பிரிக்கப்பட்டுள்ளது. 
  • முதல் பகுதி சோழன் குலோத்துங்கன்
  • இரண்டாம் பகுதி பாண்டியன் நெடுஞ்செழியன்
  • மூன்றாம் பகுதி சேரன் செங்குட்டுவன்

ஒவ்வொரு பகுதியும் இம்மன்னர்கள் ஆட்சியில் நாடு, போர், அரசியல், குணாதிசியங்கள் என்பனவற்றை விவரிக்கின்றன.

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 385

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​


சிதறிக் கிடக்கும் கல்வெட்டுகளுக்கு மத்தியில் சிவபெருமான்

0 மறுமொழிகள்
சென்னை- செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் மறைமலை நகரை அடுத்துக் கிழக்கே செல்லும் சாலையில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் கரும்பூர் அமைந்துள்ளது. பசுமையும் செழிப்பும் நிறைந்த இந்த ஊரின் வடகிழக்கு மூலையில் சிவன் கோயில் அமைந்துள்ளது. சிவன் கோவிலின் இன்றைய நிலை கவலைக்குரியது. கோயிலின் கட்டடப் பகுதிகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.


செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோயிலின் கருவறையில் சிவபெருமான் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார் சதுர வடிவமான ஆவுடையார். தொன்மையான சிவலிங்கத் திருமேனி. கருவறையில் அம்மன், சூரியன் ஆகிய வடிவங்கள் உரிய பீடமில்லாமல் வழிபாடு இல்லாமல் உள்ளன. கோயிலின் எதிரே நந்தி பகவான் அமைதியாக அமர்ந்திருக்கிறார். வடக்குப் பகுதியில் சண்டேசுவரர் எழுந்தருளியுள்ளார்.

கோயிலின் அதிட்டானப் பகுதி கல்லால் கட்டப்பட்டும் மேற்பகுதி செங்கற்களால் ஆனதையும் ஊகிக்க முடிகிறது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளை 1934-35-ல் மத்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் படியெடுத்து வெளியிட்டுள்ளனர். தற்போது கரும்பூர் என்றழைக்கப்படும் ஊர் முன்பு ‘கருமூர்’ என்று அழைக்கப்பட்டது. முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் பிற்காலச் சோழர்களும் இக்கோயிலில் சிறப்பான வழிபாட்டிற்காகவும் விளக்கு எரிப்பதற்காகவும் தானம் அளித்ததைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஆயிரம் ஆண்டு பழமையான இக்கோயிலில் பரிவார ஆலயங்கள் அமைக்கப்பட்டு சிறப்பான வழிபாடுகள் நடந்துள்ளதாக செய்திகள் உள்ளன. இன்று கோயிலைச் சுற்றி கல்வெட்டுகள் சிதறிக் கிடக்கின்றன.

கோயிலுக்குச் சற்று கிழக்கே வயல்வெளியில் சற்று மேடான பகுதியில் துர்க்கை சிற்பம் போன்ற வடிவத்தில் ஒரு சிற்பம் இருந்துள்ளது. அவ்வடிவம் ஜேஷ்டா தேவியின் வடிவத்தில் உள்ளது. வளமையின் வடிவமாக வணங்கப்படும் உருவம் ஜேஷ்டா தேவி. இச்சிற்ப வடிவம் பல்லவர் கலைப் பாணியுடன் விளங்குவதால் கரும்பூர் திருக்கோயில் மிகத் தொன்மையானதாக இருக்கவேண்டும்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக விளங்கும் கரும்பூர் கோயிலை புனர்நிர்மாணம் செய்து வழிபாடு செய்ய இந்த ஊரைச் சேர்ந்த மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

நன்றி. தி ஹிந்து


மண்ணின் குரல்: ஏப்ரல் 2014: மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

0 மறுமொழிகள்
​வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
நமது மின்னூல் வெளியீடுகளில் இதுவரை மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் நூல்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன என்பதை மின்தமிழ் வாசகர்கள் அறிவீர்கள்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் திருவாவடுதுறை ஆதீனத்தின் புலவராக இருந்தவர். இங்கு அவர் பல மாணவர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தும் அங்கிருந்தபடியும் மற்றும் பல ஊர்களுக்கு பயணித்த படியுமிருந்து பல தல புராண நூல்களை இயற்றினார். அவர் மறைந்ததும் இதே ஆதீனத்தில் அவருக்காக வழங்கப்பட்டிருந்த  திருமடத்து புலவர்கள் இல்லத்திலேயே!



Inline image 2
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்


மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் திரு.சிதம்பரம்பிள்ளை அன்னத்தாச்சி அம்மையார் ஆகியோருக்கு 6.4.1815ம் ஆண்டு பிறந்தார். தமது தந்தையார் ஒரு தமிழ் ஆசிரியர் என்பதால் அவர் துணையோடு கல்வி கற்க ஆரம்பித்தார். அவரது தமிழ் ஆர்வம் எல்லையற்றதாக இருந்தமையால் இவர் சான்றோர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று அவர்களிடமெல்லாம் கல்வி கற்று வரலானார். திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் மிகுந்த தமிழ்ப்புலமை கொண்டவர் என்பதை அறிந்து தக்கார் துணை கொண்டு திருமடத்தில் ஆதீனகர்த்தரின் அறிமுகம் பெற்றார். தமக்கு ஆசிரியராக இருந்த ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிகருக்காக திருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழ், கலம்பகம் ஆகிய இரு நூற்களை பிள்ளையவர்கள் இயற்றினாரர்கள். இவை இரண்டும் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  சேகரத்தில் உள்ளன. 

பிள்ளையவர்களின் தமிழ் புலமையைக் கண்டு பாராட்டி ஆதீனகர்த்தர் இவருக்கு மகாவித்துவான் என்ற சிறப்புப் பட்டமளித்துச் சிறப்பித்தார்கள். இவருக்குப் பல மாணவர்கள். அதில் குறிப்பாக, சவேரிநாதப் பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர், தியாகராச செட்டியார், சுப்பராய செட்டியார் ஆகியோரைக் கூறலாம். சீர்காழியில் நீதிபதியாகப் பதவி வகித்த வேதநாயகம் பிள்ளையவர்கள் இவரது நெருங்கிய நண்பராக இருந்தவர். அம்பலவாண தேசிகர் மறைவுக்குப் பின் ஆதீனகர்த்தராகப் பதவி ஏற்றுக் கொண்ட சுப்பிரமணிய தேசிகர் பிள்ளையவர்களுக்கு ஆதீனத்தில் பல சலுகைகளை உருவாக்கித் தந்து பிள்ளையவர்களோடு அவரது அன்பிற்குரிய மாணாக்கர்கள் அனைவரும் தங்கியிருந்து பாடங் கேட்கவும் உதவியவர். ஆதீனகர்த்தர் என்ற நிலையைக் கடந்து இவர்கள் இருவருக்கும் இடையே மிக நெருக்கமான நட்பும் அமைந்திருந்தது. இவர் 1.2.1876ம் ஆண்டில் இறைவன் திருவடியை அடைந்தார் என்பன போன்ற தகவல்களை உ.வே.சாவின் என் சரிதக் குறிப்புக்களிலிருந்து அறியமுடிகின்றது.

19ம் நூற்றாண்டில் தமிழில் அதிகமான நூற்களை இயற்றிய தமிழறிஞர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களே. புராணங்களும் சிறுவகை நூல்களுமாக ஏறத்தாழ எழுபத்தொன்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் இயற்றியுள்ளார். அனைத்துமே செய்யுள் வடிவில் அமைந்தவை.

இவர் இயற்றிய நூல்கள் வகைகளின் அடிப்படையில்:
  • புராணம்: 9
  • கோவை: 3
  • பிள்ளைத் தமிழ்: 7
  • அந்தாதி: 14
  • மாலை: 6
  • பதிகம்: 3
  • கலம்பகம்: 2
  • உலா: 1
  • அகவல்: 1
  • தூது: 1
  • சரித்திரம்: 2
  • தனிப்பாடல்கள்: 1
  • விருத்தம்: 1
  • கதை: 1
  • ஆனந்தக் களிப்பு: 1

குறிப்புக்கள்: திருச்சிராப்பள்ளித் தமிழ் சங்கத்தின் வெளியீடு திரிசிரிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வரலாறு.


Inline image 1
மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் உருவத்தோற்றத்தை மனதில் வைத்து திருவாவடுதுறை ஆதீனத்தில் உருவாக்கிய  புகைப்படம் இது.  இப்புகைப்படம் ஆதீனத்தின் சரசுவதி மகாலில் பதியப் பட்டது.


இன்று மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிறந்த தினம். 
அதனை முன்னிட்டு மகாவித்வான் தங்கியிருந்து தமிழ்த்தொண்டு செய்த திருவாவடுதுறை ஆதீன மடம், புலவர்கள் விடுதி, சரசுவதி மகால் நூலகம். ஓலைச்சுவடி நூல்கள், ஆதீ
 ​​
னத்தின் சுற்றுவளாகம் ஆகியவற்றை விவரிக்கும் ஒரு சிறிய விழியப் பதிவே இன்று வெளியீடு காண்கின்றது. இப்பதிவு 13 நிமிடங்கள் 

2013ம் ஆண்டு மார்ச் மாதம் திருவாவடுதுறை மடத்திற்கு நான் நேரில் சென்றிருந்த போது அங்கு பதிவு செய்யப்பட்ட விழியம் இது. 

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/04/blog-post_6.html

யூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch?v=NBk7eMt9gOY


அன்புடன்
முனைவர் சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​


THF Announcement: ebooks update: 3/6/2014 *Rajapalayam Kshatriya Rajus*

1 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய நூல் இணைகின்றது.

நூல்:  Rajapalayam Kshatriya Rajus - The origin and nature of the Community
ஆசிரியர்: I.B.R. Ragupathi Raja

பதிப்பு: Raajapalayam Kshatriya Seva Samithi

நூல் குறிப்பு: ஆங்கிலத்தில் உள்ள இந்த நூல் ராஜூக்கள் என அழைக்கப்படும் சமூகத்தினரின் பூர்வீக வரலாறு, இந்திய வரலாற்றில் இச்சமூகத்தோரின் பங்கு, ராஜ பாளையம் எனும் ஒரு ஊர், ராஜபாளையத்தில் ராஜூக்கள், உலகளாவிய நிலையில் ராஜூக்கள் சமூகம் என்ற பல தகவல்களை வழங்கும் ஒரு அரிய நூல்.

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திருமதி மதுமிதா, அவரது தந்தையார் திரு.ரகுபதி ராஜா.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 384

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES