"மனோன்மணீயம்" சுந்தரனார்

0 மறுமொழிகள்
துரையில் இருந்து ஒரு காலத்தில் கேரளத்து ஆலப்புழைக்குக் குடியேறிய சைவ வேளாளர் வழியில் வந்த பெருமாள் பிள்ளை, மாடத்தி தம்பதிக்கு 1855ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி சுந்தரனார் பிறந்தார். இவர் நாற்பத்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே இந்த உலகினில் இருந்திருந்தாலும், வாழ்வாங்கு வாழ்ந்து 1897ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி மறைந்தார்."மனோன்மணீயம்" சுந்தரனார்


சுந்தரத்துக்கு 1877 தை மாதம், 22 வது வயதில், அவரது பெற்றோர், சிவகாமியை மணம் செய்து வைத்தனர்.
நடராசன் என்றொரு மகன் பிறந்தார்.

சுந்தரம் அன்றைய கல்வியை முழுமையாக, முறையாகப் பெற்றவர். ஆலப்புழையில் ஆங்கில - தமிழ்ப் பாடசாலையில் பிரவேசம் தேர்ச்சி பெற்று,
மெட்ரிக் (1871),
எஃப்.ஏ (1873),
பி.ஏ (1876)
படிப்புகளைத் திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் தேறினார். மெட்ரிக் தேர்வில் - முதலாவதாகத் தேறி உதவித் தொகை பெற்று, அனைத்துப் படிப்புகளையும் முடித்தார். பின்பு 1880ல் எம்.ஏ. தேறினார்.
இலக்கியம்,
வரலாறு,
தத்துவம்
ஆகிய துறைகளில் பாண்டித்தியம் பெற்று உயர்ந்தார்.

இளங்கலை முடித்ததும், இவரது புலமைத் தெளிவு, திறம் கண்டு திருவனந்தபுரம் மகாராசா கல்லூரி முதல்வர் இராஸ், தமது கல்லூரியிலேயே ஆசிரியராக நியமித்தார். 1877ல் திருநெல்வேலி ஆங்கில - தமிழ்ப் பள்ளியில் முதல்வரானார். இவர் தமது காலத்தில் எஃப்.ஏ. கல்வியை ஏற்படுத்தி, அந்த நிறுவனத்தைக் கல்லூரியாக ஆக்கினார் அது "இந்துக் கல்லூரி" எனப் பெயர் பெற்றது. 1879ல் அதே மகாராசா கல்லூரியில் மீண்டும் தத்துவ ஆசிரியர் ஆனார். 1885ல் மகாராசா கல்லூரியில் தத்துவ பேராசிரியராக நியமிக்கப்பட்டு இறுதி வரை அங்கு பணிபுரிந்தார்.

தமிழ்ப்பணி:-


சுந்தரனார் ஆங்கிலமொழி அறிவு நிரம்பப் பெற்றவர்.
திருமுருகாற்றுப்படை,
நெடுநெல்வாடை
ஆகிய பழந்தமிழ் நூல்களை ஆங்கில உரைநடையில் வெளிநாட்டார் அறியும்படி அளித்தார். மேலும்,
திருஞானசம்பந்தர் காலம்,
பத்துப்பாட்டு (1891),
முற்காலத் திருவாங்கூர் அரசர் (1894),
ஆறாம் நூற்றாண்டுத் திருவாங்கூர் அரசர் (1896),
திருவாங்கூர் கல்வெட்டுகள் (1897)
ஆகிய ஆய்வுக் கட்டுரை மற்றும் நூல்களை அளித்தார்.
நூற்றொகை விளக்கம் (1885,1889),
மனோன்மணீயம் (1891),
நம்பியாண்டார் நம்பி கால ஆய்வு,
பொதுப்பள்ளியெழுச்சி,
நற்றாயின் புலம்பல்,
சிவகாமி சரிதம்
ஆகிய நூல்களைத் தமிழில் படைத்தார்.
சீவராசிகளின் இலக்கணமும் பிரிவும் (1892),
மரங்களின் வளர்ச்சி (1892),
புஷ்பங்களும் அவற்றின் தொழில்களும் (1892)
ஆகிய அறிவியல் நூல்களை எழுதினார்.

இவருடைய குடிமைப் பண்புகள் கண்டு, ஆங்கில அரசு "இராவ் பகதூர்" விருதை (1896) அளித்தது. கிராண்ட் டஃப் என்ற ஆங்கில அறிஞர் இவருடைய வரலாற்றுப் புலமை உணர்ந்து, அரசுக்குரிய வரலாற்று ஆராய்ச்சிக் கழக உறுப்பினர் தகுதிக்குப் (Fellow of Royal Historical Society)பரிந்துரைத்தார். திருவாங்கூர் அரசர் வரலாறு எழுதியதால் அரசருக்குரிய ஆசிய ஆராய்ச்சிக் கழக உறுப்பினராக (Fellow of Royal Asiatic Society) ஏற்றுக் கொள்ளப்பட்டார். இவருடைய பணிக் காலத்தில் 1891 முதற்கொண்டு சென்னைப் பல்கலைக்கழக உறுப்பினராக (Fellow of Madras University) ஏற்றுக்கொள்ளப்பட்டார். அதனால்
இலக்கியம்,
வரலாறு,
தத்துவத் துறைப்
பல்கலைக் கழகத் தேர்வுகளுக்குத் தேர்வாளராக உயர் பணி புரிந்தார்.

சுந்தரனார் எம்.ஏ. தேர்வு எழுதும்போது பம்மல் விஜயரங்க முதலியார் வீட்டினில் தங்கித் தயார் செய்தார்.
சாமிநாதப் பிள்ளை,
வலிய மேலெழுத்து திரவியம் பிள்ளை,
சுப்பிரமணிய பிள்ளை
ஆகியோருடைய நட்புறவால் திருவனந்தபுரத்தில் "சைவப் பிரகாச சபை"யை ஏற்படுத்தி, 1885ல் அதற்கு ஒரு கட்டடம் கட்டினார்கள். அந்தக் கட்டடம் இன்றும் உள்ளது. இங்குதான் விவேகானந்தருடன் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது, ஒரு திராவிடன் என அவரிடம் தம்மைக் குறிப்பிட்டுக் கொண்டார்.

அன்று கல்வி உலகினில் புகழொளி பெற்றுத் திகழ்ந்த,
பூண்டி அரங்கநாத முதலியார்,
வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி,
அரங்காச்சாரி,
உ.வே.சாமிநாதய்யர்
ஆகியோருடன் சுந்தரனார் நட்பு கொண்டிருந்தார். அருட் தந்தை ஜி.யு. போப்புடன் இடையறாத நட்பும் தொடர்பும் கொண்டு இருந்தார்.

சுந்தரனார் தத்துவயியலாளரும், வேதாந்தியும் ஆவார். அதோடு சிறந்த கல்வெட்டு ஆய்வாளரும், வரலாற்று அறிஞரும் கூட. இந்த முறையிலேயே திருவாங்கூர் மற்றும் சென்னை இராசதானியில் உயர்வாக அறியப்பட்டிருந்தார். இந்தத் துறையினில் இவரது ஆய்வுகளை "Tamilnadu Antiquary", சென்னை கிறித்தவக் கல்லூரி பத்திரிகை ஆகிய இதழ்கள் வெளியிட்டன.


சுந்தரனாரின் தத்துவ, வேதாந்த ஞான குருவாகத் திகழ்ந்த கோடகநல்லூர் சுந்தரசுவாமிகள் தமது
நிஜானந்த விலாசம்,
சுவானுபவ மஞ்சரி,
ஸ்வானுபூதி இரசாயனம்
ஆகிய நூல்களைப் போதித்தார். தத்துவராயர் உணர்த்திய பிரம்ம கீதைக்கு உரையும் தந்தார். சுந்தரனார் நிஜானந்த விலாசம் நூலை மாவடி சிதம்பரம் பிள்ளையுடன் சேர்ந்து பதிப்பித்தார். இந்த நூல் இன்றும் உண்டு.

சுந்தரனார் உயிரினப் பரிணாம அறிவை ஆல்ஃப்ரட் இரஸ்ஸல் வாலஸ் எழுதிய டார்வினியம் நூலின் வழி (1889) பெற்றார். விதைகள், மலர்கள், வண்டுகள், புழுக்கள் முதலான உயிர்களின் செயல்களை விளக்குவதற்கு அந்த அறிவை அனுசரித்துக் கொண்டார்.

1894ல் கல்வெட்டு ஆதாரங்களின் அடிப்படையில் கி.பி.13ம் நூற்றாண்டுத் திருவாங்கூர் (வேணாடு) மன்னர்களின் வரலாற்றைக் கண்டார். தம் பங்கிற்கு 14 கல்வெட்டுகளை கண்டு பிடித்தும் காட்டினார். ஆதி சங்கரர் கொல்லம் ஆண்டிற்கு நான்கு ஆண்டுக்கு முன் மறைந்தார் எனவும் உரைத்தார். சுந்தரனாரின் சாதனையால் திருவாங்கூர் மன்னர் வரலாறு முழுமை கண்டது.


1891ல் சுந்தரனார் தாம் இயற்றிய மனோன்மணீயம் நாடகத்தை வெளியிட்டார். 1877-78ல் நெல்லையில் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளிடம்
பிரம்ம கீதை,
சூதசம்ஹிதை,
பெருந்திரட்டு
காட்டும் அத்வைத சிந்தனைகளைக் கற்றறிந்தார். அதனால் "பரமாத்துவித" என்ற வேதாந்த ஞானத்தை உணர்ந்தார். தத்துவராயர் முறைப்படுத்திய பரமாத்துவித வேதாந்தத்தையே உட்பொருளாக வைத்து மனோன்மணீயம் நாடகத்தைப் படைத்தார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எழுதினார். உ.வே.சாமிநாதய்யரிடம் கொடுத்து திருத்தங்கள் செய்து கொண்டார். இந்த நாடகம்,
தரத்தாலும்,
நுட்பத்தாலும்
கட்டுக்கோப்பாலும்
சிறந்து விளங்குகிறது. மேலும் பல்கலைக் கழகப் பாடநூலாகவும் கற்பிக்கப்பட்டது. அத்தோடு இந்த நூலில் இடம் பெற்றுள்ள "நீராடும் கடலுடுத்த நிலமடந்தை" என்ற பாடல்தான் தமிழ்த்தாய் வாழ்த்தாக தமிழகம் முழுவதும் இன்றளவும் ஒலிக்கிறது. தேசிய இயக்கம் உருவாகிக்கொண்டுவந்த அந்தக் காலத்தில்,
மொழி அபிமானம்,
தேச அபிமானங்களைக்
கொள்கைப் பற்றோடு புலப்படுத்தினார். அதனால் தமிழ் மக்களிடையே மொழி மற்றும் நாட்டுப் பற்றுகளுடன் இயக்கங்கள் தோன்ற உள்ளொளியாகத் திகழ்ந்தார்.

சுந்தரனாரின் மகன் நடராசன் இந்திய சுதந்திரப் போராட்டம் வீறு கொண்ட போது, 34வது வயதினில் மகாராசா சமஸ்தான எதிர்ப்புப் போராட்டத்தினில் முன்னணியில் நின்றார். இது கண்ட ஆங்கில அரசு அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்துவிட்டது. ஆதலால் அவர் ஓலைக் குடிசையில் வாழ நேரிட்டது. ஓலைக் குடிசையில் வாழ நேரிட்டாலும் நடராசன் தேசிய ஆன்ம ஒளியோடு திகழ்ந்தார்.


சுந்தரனார் அதி உன்னத வாரிசுச் செல்வத்தையும், வீறார்ந்த இயக்கத் தொடர்ச்சிகளையும் கொண்டு வரலாற்றினில் செம்மாந்த நிலையினில் திகழ்கிறார்.

முனைவர் கி. முப்பால்மணி

நன்றி: தமிழ்மணி (தினமணி)
மின்தமிழ் இடுகை: கண்னன் நடராஜன்

தமிழின் தலையெழுத்து

2 மறுமொழிகள்
முனைவர் மா. இராசேந்திரன், இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு

**************************************************************

தமிழின் தலையெழுத்து, பெருமையும், வியப்பும் தருகிறது. தலைக்காவிரி என்பதைப்போல, தலையெழுத்தைத், தொடக்க கால எழுத்து என்றும், பொருள் கொள்ளலாம். மன அனுபவ வெளிப்பாடு, பேச்சு மொழி என்றால், பதிவு எழுத்து, மொழியாகும். எழுத்து என்றால், ஒலி எழுத்து என்றும், வரி எழுத்து என்றும், இரண்டையும் குறிக்கும். எழுப்பப் படுவதாலும், எழுதப் படுவதாலும், இரண்டு வகைக்கும் பொதுச் சொல்லாக இருந்த எழுத்து, பிறகு, வரி வடிவ எழுத்திற்கு மட்டுமே உரியதாக வழக்கத்திற்கு வந்துவிட்டது.

நெடுங்காலத்திற்கு முன்பே, தமிழுக்கு, எழுத்து இருந்திருக்கிறது. இப்போதும் கூட, எழுத்தில்லா மொழிகள், பல உள்ளன. பாரசீக மன்னன் டரையஸ் என்பவனுக்கு, சிந்தியர்கள், ஒரு தூது அனுப்பியதாக, கிரேக்க வரலாற்றாசிரியர், ஹராடோட்டஸ் குறிப்பிடுகிறார். அஞ்சி ஓடாவிட்டால், இறந்து விடுவாய், என்பதே, தூதின் செய்தி. தவளை, தண்ணீருக்குள் அஞ்சி மறைவது போலவும், எலி, வளைக்குள் ஒளிவது போலவும் ஓடாவிட்டால், அம்புகளால் நீ கொல்லப் படுவாய், என்பதைச் சொல்வதற்காக, ஒருவரிடம், தவளை, எலி, அம்பு ஆகியவற்றைக் கொடுத் தனுப்பினார்கள். அது, எழுத்தில்லாத காலம்.

தொல்காப்பியர், மெய்யெழுத்துக்களும், எ, ஓ குறிகளும், புள்ளிபெறும், என்று, வரிவடிவ எழுத்துக்களைப் பற்றி, நூற்பா தந்துள்ளார். சித்திரக் கோடுகள், குறியீடுகள், எழுத்துக்கள் என்று, உலக மொழிகளின் எழுத்து வளர்ச்சியும், வரலாறும், அறியப்பட்டு வருகின்றன.ஒரு பொருளைக் குறிக்க வரையப்பட்ட சித்திர எழுத்து, உரு எழுத்து என்றும், எண்ணத்தை வெளிப்படுத்துவது, கரு எழுத்து என்றும், ஓசையைக் காட்டுவது, ஒலி எழுத்து என்றும், உணர்வை வெளிப்படுத்துவது, உணர்வெழுத்தென்றும், தமிழில், பல்வேறு எழுத்துக்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.

சிந்துவெளி எழுத்துக்கள், இந்தியாவில் கண்டறியப்பட்ட, தொன்மையான எழுத்துக்களாகும். எல்லோரும் ஏற்கத்தக்க வகையில், இதுவரை, யாரும், இவற்றைப் படித்தறிய முடியவில்லை. சிந்து வெளிக்குப் பின் கிடைப்பவை, குறியீடுகள். குறியீடுகளையும், படித்தறிய முடியவில்லை. ஆனால், சிந்துவெளி எழுத்துக்களும் குறியீடுகளும், முத்திரைகள், மோதிரங்கள், பானை ஓடுகள், கல் வெட்டுக்கள், நாணயங்கள், என்று, மக்கள் வாழ்க்கையோடு கலந்து, இடம் பெற்றுள்ளன.

சிந்துவெளி எழுத்துக்கள், குறியீடுகளுக்குப், பிறகு வந்தவை பிராமி எழுத்துக்கள். தமிழுக்கும், சமஸ்கிருதத்திற்கும், பிராகிருதத்திற்கும், பாலிக்கும், பொதுவாகவும், தமிழ் தவிர மற்ற மொழிகளுக்கு, வர்க்க எழுத்துக்களைக் கூடுதலாகவும் கொண்டு, பிராமி எழுத்துக்கள் உள்ளன.அப்படியென்றால், இந்தியாவில் மட்டுமின்றி, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை உட்பட்ட நாடுகள் அடங்கிய நிலப்பகுதி முழுவதும், மொழிகள், வேறுவேறாக வழங்கப்பட்டு வந்திருப்பினும், பொதுவாக, ஒரே எழுத்து முறை (சிற்சில கூடுதல் எழுத்துக்களுடன்) இருந்து வந்துள்ளது.

அசோகன் கல் வெட்டுக்களால் அறியப்பட்ட பிராமி எழுத்து, அசோகன் ஆட்சிக்கு உட்படாத தமிழ் நாட்டில், தமிழுக்கு உரியதாக இருந்திருக்கிறது. அசோகன் கல் வெட்டுக்களில், குஜராத் மாநிலம், கிர்நார் 16ஆம் பாறைக் கல் வெட்டில், சேர சோழ பாண்டியர்களும், சத்திய புத்ரராகிய அதியமான் மரபினரும், குறிப்பிடப் பட்டுள்ளனர். தமிழ் நாட்டில், மாங்குளம், புலிமான் கோம்பைப் பகுதிகளில் கிடைத்த எழுத்தாதாரங்கள், அசோகன் காலத்துக்கும் முற்பட்டவை, என்று, தொல்லியல் அறிஞர்கள், பேராசிரியர் முனைவர் கா. ராஜனும், முனைவர் தூ. இராஜவேலும், கருதுகின்றனர்.

ஹத்திபடாவிலும் (Hathibada), அயோத்தியாவிலும், கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த, சமஸ்கிருத கல்வெட்டுக்கள், கிடைத்துள்ளன. அசோகன் கல் வெட்டுக்களில், பிராக்கிருத மொழிக் கல் வெட்டுக்கள் உள்ளன. தமிழகத்தின் மாங்குளம், புலிமான் கோம்பைப் பகுதிகளில், தமிழ்க் கல் வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும், ஒரே எழுத்து (பிராமி) முறையில் (வர்க்க எழுத்துக்கள் தவிர) அமைந்துள்ளமை, குறிப்பிடத் தக்கதாகும்.

புத்த மத நூலான லலித விஸ்தாரத்திலும், சமண நூலான பன்னவன கதாவிலும், "பிராமி" குறிப்பிடப் படுகிறது. பிராமி எழுத்தை உருவாக்கியவர், புத்தர் என்றும், சமண சமய தீர்த்தங்கரர் ரிஷபதேவர் மகள், பிராதமி பெயரில் உருவாக்கப் பட்டதென்றும், பிரம்மா படைத்ததென்றும், பிராமி பற்றிய சமயக் கதைகள், பல உள்ளன.

அசோகன் கல் வெட்டில் இடம் பெற்றதால், பிராமி என்று அழைக்கப் படுகிறது. மொழியின் பெயரில், எழுத்து அமைக்கப் படுவதே, மரபு. அசோகன் என்பதோ, பிராமி என்பதோ, மொழிகளின் பெயர்களாக இல்லை.

எந்த ஒரு தனிப்பட்ட மொழிக்கும், பிராமியை, உடைமையாக்கிவிடக்கூடாது என்பதால், பயன்படுத்தியவர் பெயரில், அசோகன் பிராமி, என்று அழைக்கப் பட்டிருக்கலாம். அதிலும், தமிழ் மொழிக்கான பிராமியைத், தென்பிராமி என்றும், தமிழ் பிராமி என்றும், தமிழில் அழைக்கிறோம். தொல்காப்பியமும், சங்க இலக்கியப் பாடல்களும், தமிழில்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும், என்று பேராசிரியர் மதிவாணன் கூறுகிறார்.

இந்தியாவின் தொன்மையான வரிவடிவமாம் சிந்து வெளிக் குறியீடுகள், பூம்புகார், மயிலாடுதுறை, செம்பியம், கண்டியூர் முதுமக்கள் தாழிகளிலும், சூலூர் மண் வட்டிலிலும், இடம் பெற்றுள்ளமையைத், தொல்லியல் அறிஞர், ஐராவதம் மகாதேவன் அவர்கள், உறுதிப் படுத்தியுள்ளார். சிந்து வெளி எழுத்துக்களின் காலம், குறைந்தது, கி.மு. 1500 எனக் கருதப்படுகிறது.

சிந்துவெளி எழுத்துக்களுக்கும், பிராமி எழுத்துக்களுக்கும், இடைப்பட்ட குறியீடுகள், இந்தியாவின் தமிழகத்தில்தான், குறிப்பாக, சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள ஊர்களில்தான், அதிக அளவில் கிடைத்துள்ளன. பிராமி, இந்திய மொழிகளுக்கான எழுத்துக்களின் தாய், என்று, ஐராவதம் மகாதேவன் கூறுகிறார்.புதிய கற்காலத்தில், இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் (விந்திய மலைப் பகுதி நீங்கலாக), திராவிட இன மொழிகளே பேசப்பட்டன, என்று, பேராசிரியர் பி.டி. சீனிவாச ஐயங்காரும் (Stone age in India), பேராசிரியர் டி.ஆர். சேஷ ஐயங்காரும் (Dravidian India), திராவிட மொழி, தென்னிந்திய மொழி மட்டுமன்று, காஷ்மீர் முதல், கன்னியாகுமரி வரை பேசப்பட்ட மொழி என்று, அறிஞர் அம்பேத்கரும் (The untouchables), கூறியுள்ளார்.

தமிழ் பிராமி எழுத்துக்களோடு கிடைத்துள்ள குறியீடுகளை, அதற்கும் முற்பட்ட சிந்துவெளி எழுத்துக்களோடு, இணைத்துக் கொள்ளத் தேவைப்படும் "இணைப்புக் கண்ணிகள்" கிடைக்குமாயின், தமிழின் தலையெழுத்துத் தீர்மானமாகிவிடும்.இப்படத்தில் உள்ள தமிழ் இலக்கியம் எது? தெரிந்து கொள்ள சொடுக்குக!

தமிழ் எழுத்துரு மாற்றம் பற்றிய மேல்விவரங்கள் அறிய...
தமிழ் மரபு அறக்கட்டளைப் பக்கங்கள்!

"இராவ்சாகேப்" மு.இராகவையங்காரின் செந்தமிழ்ப்பணி

0 மறுமொழிகள்
இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் அறிஞர் பெருமக்களுள் மு.இராகவையங்காரும் ஒருவர்.

தமிழறிஞராக,
இலக்கிய ஆசிரியராக,
கவிஞராக

விளங்கிய பெருமை இவருக்கு உண்டு. பாண்டித்துரைத் தேவர்களால் 1902 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட "செந்தமிழ்" இதழின் பதிப்பாசிரியராக 1906 ஆம் ஆண்டு முதல் 1910 ஆம் ஆண்டு வரை இருந்து பல்வேறு பணிகளைச் செய்துள்ளார்.மு.இராகவையங்கார் (1878 - 1960)


தமிழ்க் கல்வியைப் பரப்புவதற்காகவும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செய்திகளை வெளியிடுவதற்காகவும் தொடங்கப்பட்ட "செந்தமிழ்" எனும் திங்களிதழின் முதல் பதிப்பாசிரியராக இரா.இராகவையங்கார் 1902 முதல் 1906 வரை இருந்தார். இவருக்கு உறுதுணையாகத் துணைப் பதிப்பாசிரியராக அன்னாரின் மருமகனான மு.இராகவையங்கார் இருந்தார்.

"தமிழ்க் கல்வியிலும், தமிழாராய்ச்சியிலும் பேரவாக் கொண்ட தமிழ் மக்கட்கு உறுதுணையாய் நின்றது செந்தமிழ்ப் பத்திரிகையேயாம். ஒவ்வொரு மாதத்துப் பத்திரிகையிலும் அதுவரை அறியாத அரிய விஷயங்கள் குறித்துச் சிறந்த கட்டுரைகள் பல வெளிவந்து கொண்டேயிருந்தன. பத்திராசிரியர் எழுதியனவெல்லாம் தமிழ்மணமும், ஆராய்ச்சி நலமும் செறிந்து விளங்கின; கற்பார்க்குப் பெருவிருந்தாயமைந்தன. ஒவ்வொரு மாதமும் செந்தமிழ் எப்போது வெளிவருமென்று பேராவலோடு தமிழன்பர்கள் எதிர்பார்த்த வண்ணமாயிருந்தார்கள். தமிழ் நாட்டுப் பெரும் பேராசிரியனாயமைந்து, தமிழ்மக்கள் வீடுதொறுஞ் சென்று, தமிழ்க்கல்வி நலத்தை அவர்கள் நுகரும்படி செய்துவந்த பெருமை செந்தமிழ்ப் பத்திரிகைகே உரியதாயிருந்தது. இப்பத்திரிகையின் உயிர் நிலையாயிருந்தவர் மு. இராகவையங்காரவர்களே. பலர் சிறந்த தமிழறிஞர்களாக விளங்குவதற்கும், அறிவுநலமிக்க பலர் தமிழாராய்ச்சியை மேற்கொள்ளுதற்கும் அவரே காரணமாயிருந்தார்," என்று ச.வையாபுரிப்பிள்ளை, "தமிழ்ச்சுடர் மணிகள்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அது இங்கு நினைவு கூரத்தக்கது.

"செந்தமிழ்" இதழில் இவர் ஆசிரியராக இருந்த காலத்தில்

இலக்கியம்,
இலக்கணம்,
வரலாறு,
மூலபாடம்

ஆகிய தலைப்புகளில் 53 கட்டுரைகள் இவரால் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன. இக் கட்டுரைகளில் சில பல்வேறு விவாதங்களுக்கு இடந்தந்தும், சில மறுப்பதற்கென்றும் எழுதப்பட்டன. மறுப்பதற்குத் தகுந்த காரணங்கள் பலவற்றைச் சான்றுகளுடன் மு.இராகவையங்கார் தம் கட்டுரைகளில் தருகிறார்.

சேர வேந்தர் தாயவழக்கு,
சேர நாட்டின் தலைநகரம் வஞ்சியா? கரூரா?

என்ற இவ்விரண்டும் பற்றி இவரும், நாவலர் ச.சோமசுந்தர பாரதியாரும் எழுதிய கட்டுரைகள் ஆராய்ச்சிக்கு இடந்தந்து நின்றன.

சில கட்டுரைகள் எழுத நேர்ந்தமைக்குரிய காரணங்களைக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறும் பழக்கத்தை இவரிடம் காண முடிகிறது. பல கட்டுரைகளின் முன்னுரையில் அல்லது கட்டுரைத் தலைப்பில் இடுக்குறியிட்டு அதன் அடிக்குறிப்பில் அக்கட்டுரை எழுத நேர்ததற்கான காரணத்தைக் கூறுவதை மரபாகக் கொண்டிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

"செந்தமிழ்" இதழில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதைய்யர் இறைவன் திருவடி நீழலடைந்த பொழுது பாடிய 12 கவிதைகளும், சேதுபதியின் 34ஆவது வெள்ளணி நாள் விழாவையொட்டிப் பாடிய 5 கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகள் பாடியதன் மூலம் ஒரு கவிஞராகவும் விளங்கியதைக் காண முடிகிறது.

மதுரைத் தமிழ்ச் சங்கத்திலுள்ள நூல்களில் அருமையான சில நூல்களைப் பற்றிய சிறப்புச் செய்திகளை "நூலாராய்ச்சி" எனும் தலைப்பில் எழுதியுள்ளார். "பூருரவா சரிதை" என்ற நூலைப் பற்றி சில குறிப்புகள் கூறிய ஐயங்கார், நூலாராய்ச்சியை எழுதும் முயற்சியைத் தொடராமல் விட்டுவிட்டார். இதற்குரிய காரணம் எதுவெனத் தெரியவில்லை.

"செந்தமிழ்" இதழின் பதிப்பாசிரியராக இருந்த காலத்தில் "பத்திராசிரியர் குறிப்புகள்" எனும் தலைப்பில், நூல் பதிப்பிக்கும்பொழுது நூலுக்கு முன் பகுதியிலும், சிலர் எழுதிய கட்டுரைகளில் ஐயங்கள் ஏதாவது எழுமாயின் அவற்றைக் குறிப்பிட்டுச் சில விளக்கங்களையும் எழுதியிருக்கிறார்.

"புத்தகக் குறிப்புகள்" எனுந்தலைப்பில் அந்தக் காலத்தில் வெளிவந்த நூல்களைப் பற்றி "மதிப்புரை" எழுதியுள்ளார். நூலாசிரியரைப் பற்றியும், நூலைப் பற்றியும் பாராட்டிக் கூறுவதாகவே இம்மதிப்புரைகள் அமைந்துள்ளன. சில நூல்கள் அறிமுகம் மட்டும் செய்து வைக்கப்படுகிறது. இவ்வாறு 62 நூல்களைப் பற்றிய குறிப்புகளை இப்பகுதியில் ஐயங்கார் எழுதியுள்ளார். ஒரு நூலைப் படித்து அதற்கு மதிப்புரை எவ்வாறு எழுத வேண்டும் என்ற நெறிமுறையை இவரெழுதிய மதிப்புரைகள் மூலம் அறிய முடிகிறது.

"செந்தமிழ்" இதழின் ஆசிரியராக இருந்த காலத்தில் இவர் பதிப்பித்த நூல்கள், பாடல்கள் பலப்பல. சிலவற்றுக்கு "உரைக்குறிப்புகள்" எழுதியுள்ளார். சிலவற்றை மூலத்துடன் பதிப்பித்துள்ளார். எல்லா நூலுக்கும் எழுதிய "முன்னுரை"யில் தாம் அந்நூலைப் பதிப்பிக்க நேர்ந்த காரணத்தைக் கூறியுள்ளார்.

பெருந்தொகை (இரண்டு தொகுதிகள்),
நிகண்டகராதி,
திருக்குறள் பரிமேலழகர் உரை(கையடக்கப் பதிப்பு),
நரி விருத்தம் (அரும்பதவுரையுடன்)

போன்ற நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

ஏடுகளில் எழுதப்பட்ட பழந்தமிழ் நூல்களில் பாடவேறுபாடுகள் அமைவது உண்டு. உரையாசிரியர்கள் அவற்றுள் ஏற்புடையனவற்றைக் கொண்டு ஏலாதனவற்றை விலக்கி விடுவதுண்டு. அம்முறையில் ஐயங்கார் தாம் பதிப்பித்த நூல்களில் உள்ள பாடல்களில் காணப்படும் பாடவேறுபாடுகள் சிலவற்றை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். சான்றுக்குப் பெரியாழ்வார் திருமொழி முதற்பத்தில் காணப்படும்,

"வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்
கண்ணன் கேசவ நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ண மெதிரெ'திர் தூவிடக்
கண்ணன் முற்றங் கலந்தள றாயிற்றே." (1)

"பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார்." (3)

என்ற பாசுரங்களில் "நம்பி பிறந்தினில்", "பிள்ளை பிறந்தினில்," என்று வழங்கப்படுகின்றன. "பிறந்தினில்" என்பதற்குப் - பிறந்தபோது, பிறந்தவளவில் எனவும், "பிறந்தவிதனில்" என்பதன் விகாரமாகவுமாம் எனவும் சிலர் பொருளுரைத்துள்ளனர். இதை,

"நம்பி பிறந்தீனில்," "பிள்ளை பிறந்தீனில்,"

என்று பாடங்கொள்வதே பொருந்தும். கண்ணன் அவதரித்த சூதிகாகிருதம் என்பது இங்கே பொருளாம். பிறந்த ஈனில் - பிறந்தீனில்; பிறந்தகம் என்பது போல, ஈன்இல் - பிரசவ வீடு, பிறந்த பிள்ளையைக் காணப்புகுவதற்கும், புக்குப் போதுதற்கும் "பிரசவவீடு" என்ற பொருளே மிகவும் ஏற்புடையதாகும். இப்பொருளில்,

குறுந்தொகை,
பதினொராந்திருமுறை,
திருக்கோவையார்

முதலான நூல்களில் வழங்கப்படும் மேற்கோள்களை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார்.

மு.இராகவையங்கார் தம் 24 ஆம் வயதில் முதன்முதல் "செந்தமிழ்" இதழ் மூலம் ஆய்வுப்பணியைத் தொடங்கி ஏறத்தாழ 58 ஆண்டுகள் வரை எழுத்துப் பணியைத் தம் மூச்சாகக் கொண்டிருந்தார். தமிழ் இலக்கிய வரலாற்றில் இவருக்கென்று ஓரிடம் இருப்பது வெள்ளிடைமலை. இன்றைய இளம் ஆய்வாளர்களுக்கு இவர் ஆய்வுப் போக்கு, நெறிமுறைகள் பெரிதும் உறுதுணை புரியும்.

ம.சா.அறிவுடைநம்பி

நன்றி: தமிழ்மணி (தினமணி)
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

இளமையின் இயல்பும், முதுமையின் ஏக்கமும்!

0 மறுமொழிகள்
சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் புறத்திணை சார்ந்தவை இரண்டு. அவை

புறநானூறும்,
பதிற்றுப்பத்தும்

ஆகும்.

பதிற்றுப்பத்து சிறப்புப் பார்வையில் சேர மன்னர்கள் பற்றிய வரலாற்றுப் பதிவாய் அமைந்தது.

புறநானூறு, கடவுள் வாழ்த்து உள்பட 400 அகவற்பாக்களைக் கொண்டது. இதனைத் தொகுத்தோர், தொகுப்பித்தோர் பெயர்கள் தெரியவில்லை. இத்தகைய சீரும் சிறப்பும் வாய்ந்த புறநானூற்றில் 243ம் பாடலாக இடம் பெற்றிருப்பது தொடித்தலை விழுத்தண்டினார் பாடல்,

"ஒரு சிறு சொல்லேனும் வறிதே விரவாமல் உய்த்துணருந்தோறும் "நவில்தொறும் நூல் நயம் போலும்" என்னும் முதுமொழிக்கிணங்க, இன்பஞ் செய்வன சங்கப் பாடல்களேயாகும்" (உரைநடைக் கோவை: 2 ம் பாகம், ப.96) என்னும் பண்டிதமணியின் புகழாரத்துக்குப் பொருத்தமான ஓர் உதாரணமாக விளங்கும் இப்பாடலின் திறத்தினைக் கோடிட்டுக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இளமையின் இயல்பும், முதுமையின் ஏக்கமும்:

"இப்பொழுது நினைத்தால் வருந்தத் தக்கதாக உள்ளது" (இனி நினைந்து இரக்கம் ஆகிறது) எனத் தொடங்கித் தம் இளமைக் கால அனுபவங்களை -இன்றைய ஊடக மொழியில் குறிப்பிடுவது என்றால் மலரும் நினைவுகளை - ஒவ்வொன்றாகப் பதிவு செய்ய முற்படுகிறார் முதியவர் ஒருவர்.

சிறுவர் விளையாட்டில் மணலைத் திரட்டிச் செய்யப்பட்ட தெய்வ வடிவுக்கு - பாவைக்கு - பறித்த பூவைச் சூட்டியதும்; குளிர்ந்த பொய்கையில் விளையாடும் இளம் பெண்களோடு கைகோர்த்துத் தழுவும் போது தழுவியும், அசைந்தாடும் போது அசைந்தாடியும் ஒளிவு மறைவு என்பவை அறியாத வஞ்சனை இல்லாத கூட்டத்தோடு விளையாடி மகிழ்ந்ததும்; உயர்ந்த கிளைகளை உடைய மருத மரத்தின் உயரம் தாழ்ந்து நீரோடு படிந்து காணப்பெற்ற கிளையைப் பற்றி ஏறி, சிறப்பு மிகக் கரையில் நிற்பவர் வியப்பவும் அலைத்துளி மேலே எழும்பவும் ஆழமிக்க நீண்ட அந்த நீர் நிலையில் "துடும்" என்று ஒலி உண்டாகக் குதித்து மூழ்கி அடிமணலை அள்ளிக் காட்டியதும் ஆகிய அந்தக் களங்கமில்லா இளமை வருந்தச் செய்கிறது. இனி அது எப்பொழுது வாய்க்கும்?"இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கயம் ஆடும் மகளிரோடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படுகோடு ஏறிச்சீர் மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே யாண்டு உண்டு கொல்லோ?"

இங்கே பதினொரு அடிகளில் முதியவர் தம் இளமைக் காலத்தில் நிகழ்ந்த மூன்று பசுமையான அனுபவங்களை எண்ணிப் பார்த்து மனம் மகிழ்கிறார்; நெகிழ்கிறார். "இனி நினைந்து இரக்கம் ஆகின்று" என்னும் முதல் அடியிலும், "கல்லா இளமை, அளிதோ தானே யாண்டு உண்டு கொல்லோ?" என்னும் பத்து, பதினொன்றாம் அடிகளிலும் முதியவரின் நெஞ்சில் குடிகொண்டிருக்கும் ஆழ்ந்த ஏக்கம் அழுத்தமாக வெளிப்பட்டுள்ளது. "மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு" என்னும் பாடலின் ஐந்தாம் அடி ஒளிவுமறைவு, சூதுவாது என்பவை அறியாத - களங்கமோ, வஞ்சனையோ துளியும் இல்லாத - இளமைப் பருவத்தை நன்கு அடையாளம் காட்டி நிற்கிறது.

பாடலின் கடைசி மூன்று அடிகள் அழகிய சொல்லோவியமாய் அமைந்து முதியவர் ஒருவரை நம் மனக்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன. பூண் பிடித்த வளைந்த உச்சியை உடைய பெரிய கம்பினை ஊன்றி, தளர்ந்து நடுங்கியவாறு, இருமலின் இடையிடையே சில சொற்களைச் சொல்லும் ஒரு பெரிய முதியவரைப் படம் பிடித்துக் காட்டும் அடிகள் இதோ:

"தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே."

இதைவிட இரத்தினச் சுருக்கமாய் வேறு எவராலும் முதுமையைச் சித்திரிக்க முடியாது. இப்பாடலைப் பாடிய புலவரின் இயற்பெயர் தெரியாது.

முதுமையின் அடையாளமான கைத்தடியினை(walking stick) "தொடித்தலை விழுத்தண்டு" என்னும் அழகிய சொற்றொடரால் சுட்டியமையால், இவர் "தொடித்தலை விழுத்தண்டினார்" என்னும் சிறப்புப் பெயரினைப் பெற்றார்.
குண்டலகேசி உணர்த்தும் யாக்கை நிலையாமை:

"பாளையாம் தன்மை செத்தும்
பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் வியல்பும் இன்னே
மேல்வரும் மூப்பும் ஆகி
நாளுநாள் சாகின் றோமால்
நமக்குநாம் அழாதது என்னோ?"

என்பது உடம்பின் நிலையாமையை எடுத்துரைக்கும் குண்டலகேசிப் பாடல்,

"பாளை போன்ற இளங்குழந்தைப் பருவம் செத்து, குழந்தைப் பருவம் பிறக்கிறது.
குழந்தைப் பருவம் செத்து, காளைப் பருவம் ஏற்படுகிறது.
காளைப் பருவம் செத்து, காதலுக்குரிய இளமைப் பருவம் பிறக்கிறது.
அதுவும் மாறி முதுமை உண்டாகிறது.

இவ்வாறு ஒரு நிலை செத்து அடுத்த நிலை ஏற்படுவதால், நாம் நாள்தோறும் செத்துக் கொண்டிருக்கிறோமே! நமக்காகவே நாம் அழவேண்டி இருக்கிறதே! அவ்வாறு அழாதது ஏனோ" என வினவுகிறது இப்பாடல்.

இதன் அடிப்படையில் சிந்தித்துப் பார்க்கும்போது தொடித்தலை விழுத்தண்டினாரின் புறநானூற்றுப் பாடலைக் கையறுநிலைத் துறையில் சேர்த்திருப்பது பொருத்தமானதாகவே தோன்றுகிறது.

பேராசிரியர் இரா. மோகன்

நன்றி: தமிழ்மணி (தினமணி)
மின்தமிழ் இடுகை: டாக்டர் கண்ணன் நடராஜன்

வாழும் வரலாறு முனைவர் சோ.ந.கந்தசாமி

0 மறுமொழிகள்
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தமிழறிஞர்கள் பதின்மரின் பெயர்ப்பட்டியல் ஒன்றை ஆயத்தம் செய்தால் அதில் அறிஞர் சோ.ந.கந்தசாமியார் அவர்களின் பெயரும் இடம்பெறும். தமிழ்,ஆங்கிலம்,வடமொழி,இந்தி உள்ளிட்ட பன்மொழிகளை அறிந்தும், அதில் பழுத்த புலமைபெற்றும், புலமைச் செருக்கு மிகுந்தும், தமிழ் வீறு கொண்டும் விளங்குபவர் நம் ஐயா கந்தசாமியார் அவர்கள்.

அவர்களை இருபான் ஆண்டுகளாக யான் நன்கு அறிவேன்.என் தமிழாசிரியர் வாரியங்காவல் புலவர் ந.சுந்தரேசனார் அவர்கள் அடிக்கடி ஐயா கந்தசாமியார் அவர்களின் பழுத்த தமிழறிவு பற்றி குறிப்பிட்டு அவர்போல் நீ தமிழ் படிக்கவேண்டும் என்று அடிக்கடி என்னைக் குறிப்பிடுவார். அது நாள் முதல் அறிஞர் கந்தசாமியார் அவர்களின் மேல் ஒருதலைக் காதல் எனக்கு ஏற்பட்டது.

பத்தாண்டுகளுக்கு (28,29,30-03.1998) முன்னர் யான் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் "சங்கப் பாடல்களில் நாட்டுப்புறவியல் கூறுகள்" என்னும் பொருளில் ஒரு கட்டுரை படித்தேன்.அறிஞர் சுப்பு ரெட்டியார் தலைமை. நம் ஐயா கந்தசாமியார், தி.வே.கோபாலையர்,கா.சிவத்தம்பி, பெ.மாதையன் உள்ளிட்ட சங்க இலக்கிய அறிஞர்கள் அவ்வுரை கேட்டு மகிழ்ந்து பாராட்டினர். அவ்வாய்வுரையால் ஈர்க்கப்பெற்று அன்று முதல் என்பால் அன்பு பாராட்டி வருபவர் நம் கந்தசாமியார் அவர்கள்.ஐயா கந்தசாமியார் அவர்கள் ஒருவகையில் என் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள ஊரில் பிறந்தவர்கள் என்பதால் அவர்கள் மேல் எனக்கு என்றும் மதிப்பும் பாசமும் மிகுதி.அவர்களின் தமிழ்ப்புலமை நினைந்து அவர்களை என் ஆசிரியர்களுள் ஒருவராகவே மதித்துப் போற்றுகிறேன். அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிவு செய்வதில் மகிழ்கிறேன்.

அறிஞர் சோ.ந.கந்தசாமி எனத் தமிழறிஞர்களாலும் S.N.K என ஆங்கிலம் வல்லாராலும் அழைக்கப்பெறும் கந்தசாமியார் அவர்கள் 15.12.1936 இல் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் செயங்கொண்டசோழபுரம் அருகில் உள்ள இலையூர் என்னும் ஊரில் பிறந்தவர்.பெற்றோர் வை.சோ.நடராச முதலியார்,மீனாம்பாள் அம்மாள்.கந்தசாமியார் அவர்கள் தொடக்கக் கல்வியை இலையூரிலும்,உயர்நிலைக் கல்வியை உடையார்பாளையம் பள்ளியிலும் பயின்றவர்.பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை- பொருளாதாரம் பயின்றவர்.

சோ.ந.கந்தசாமியார் அவர்கள் முதுகலைத் தமிழ் இலக்கியம் தண்ணார் தமிழளித்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்(1958).எம்.லிட்(1963),முனைவர்(1971)பட்ட ஆய்வையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டவர்.மொழியியல் பட்டயம்,வடமொழிப் பட்டயம் உள்ளிட்ட கல்வியையும் அண்ணாமலையில் பயின்றவர்கள்.

தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணியைத் தொடர்ந்து நடத்தினார்.பின்னர் மலேசியாப் பல்கலைக்கழகத்திலும்(1979-85)தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும்1985-1997), சில காலம் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் தம் தமிழ்ப்பணியை அழுத்தமாகச் செய்தவர்.இவர் அறிஞர் அ.சிதம்பரநாதன் செட்டியார், தெ.பொ.மீ ஆகியோரின் மேற்பார்வையில் கற்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பாலிமொழிப் பாடல்கள் பலவற்றை மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றலுடையவர். கல்வெட்டுகளிலும் நல்ல புலமையுடையவர்.

சோ.ந. கந்தசாமியார் அவர்கள் நாற்பதாண்டுகள் கல்விப் பணியாற்றியுள்ளார். இவரிடம் கற்றவர்களும்,இவருடன் கற்றவர்களும் இவர் கல்வி கண்டு மருள்வது உண்டு. நினைவாற்றலில் வல்லவர்.எடுத்துரைப்பதில் ஆற்றலாளர்.மேடையை,வகுப்பறையத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்படியான பேச்சாற்றல் வல்லவர்.எதுகைகளும்,மோனைகளும் இவர் பேச்சில் சிந்திச் சிதறும்.

'அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அன்னைப் பல்கலைக்கழகமாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகம்' என்றும், 'எங்கள் மனசைக் கவர்ந்த பனசைக் கல்லூரி' என்றும் இவர் விளிக்கும் பாங்கு கற்றவர்களால் என்றும் நினைவுகூரத்தக்கன.இத்திறம் கண்ட கற்றார் களிப்புறுவர்.இவர் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத் தகுந்த மேலோர்.நூலோர்.

கந்தசாமியார் அவர்கள் மருதூரில் புகழ்பெற்ற விடுதலைப் போராட்டவீரர் முத்துக்குமாரசாமி அவர்களின் புதல்வியார் சமுனாதேவி அவர்களை இல்வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொண்டவர்.கந்தசாமியார் அவர்களுக்கு ஆண்மகன் ஒருவரும்,பெண்மக்கள் நால்வரும் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர்.இவர்கள் அனைவரும் உயர்கல்வி கற்று நல்ல நிலையில் உள்ளனர்.

அறிஞர் சோ.ந.கந்தசாமி அவர்கள் வகுப்பறையில் மட்டும் புலமை புலப்படும்படி விளங்கினார் என்று இல்லை.இவர் இயற்றிய நூல்களும் என்றும் பயன்படுத்தத் தக்கன. தரத்தன.இவர் இந்து நாளிதழில் முப்பத்தந்து ஆண்டுகளாக எழுதும் நூல் மதிப்புரைகள் அறிஞர் உலகால் என்றும் போற்றி மதிக்கப்படுவனவாகும்.

இவர் இயற்றிய நூல்களை இலக்கியம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு, இலக்கணம், மொழியியல், தத்துவம் என்னும் வகைகளில் அடக்கிப் பார்க்கலாம்.

இலக்கிய நூல்கள்

1.சங்க இலக்கியத்தில் மதுரை
2.திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்
3.இலக்கியமும் இலக்கிய வகையும்
4.தமிழிலக்கியச் செல்வம்(ஐந்து தொகுதிகள்)
5.திருமுறை இலக்கியம்
6.திருமுறையில் இலக்கிய வகை
7.உலகத் தமிழிலக்கிய வரலாறு(கி.பி.501-கி.பி.900)
8.மணிமேகலையின் காலம்
9.பரிபாடலின் காலம்
10.இலக்கியச்சோலையிலே

திறனாய்வு

11.Bharathidasan As a Romantic Poet
12.Anthology of Book Reviews
13.தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்

மொழிபெயர்ப்பு

14.English Translation of Sundarar Devaram Volume I (patikam 1-50)
15.Volume II(patikam 51-100) (Tota 1026 verses)
16.திருமந்திரம் எட்டாம் தந்திரம் English Translation of Tirumantiram(Total 527 verses)

இலக்கணம்

17.தமிழிலக்கணச் செல்வம்(இரு தொகுதிகள்)
18.தொல்காப்பியம் - எழுத்ததிகாரத் தெளிவு
19.புறத்திணை வாழ்வியல்
20.தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்(மூன்று தொகுதிகள்)
21.கலித்தொகை யாப்பியல்

மொழியியல்

22. A Linguistics Study of Paripatal(M.Lit.Thesis)
23.A Linguistis of Manimekalai

தத்துவம்

24.தமிழும் தத்துவமும்
25.தமிழிலக்கியத்தில் பௌத்தம்
26.தமிழிலக்கியத்தில் அறிவாராய்ச்சியியல்
27.இந்தியத் தத்துவக் களஞ்சியம்(மூன்று தொகுதிகள்)
28.Budhism As Expounded in Manimekalai(Ph.D. Dissertation)
29.Indian Epistemology as Expounded in the Tamil Classics
30.Tamil Literature and Indian Philosophy
31.The Yoga of Siddha Avvai(Published in Canada)
32.Advaitic Works and Thought in Tamil
33.The Encounter Between saiva sidhanta and Advaita vedanta

அறிஞர் சோ.ந.கந்தசாமி அவர்கள் பல்வேறு நூல்களை எழுதியதுடன் அமையாமல் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பல பொறுப்புகளை வகித்துக் கல்விப் பணியாற்றியுள்ளார். சாகித்திய அகாதெமியின் உறுப்பினராகவும்,பல்கலைக்கழ ஆட்சிக்குழு உறுப்பினர், ஆய்வுக்குழு உறுப்பினர், தேர்வுக்குழுத் தலைவர், பாடத்திட்டக் குழுத்தலைவர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்றுத் திறம்படப் பணிபுரிந்துள்ளார்.இந்திய நடுவண் தேர்வாணையத்தின்(U.P.S.C.) முதன்மைத் தேர்வாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

இவர்தம் தமிழ்ப்பணியறிந்த பல்வேறு நிறுவனங்கள் இவருக்குப் பல சிறப்புகளைச் செய்துள்ளன.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஆராய்ச்சிப் பரிசுகள் இவருக்குக் கிடைத்துள்ளன.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழாக் கவிதைக்கு முதற்பரிசாகத் தங்கப் பதக்கம் பெற்றவர்.. திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்கள் என்னும் இவர்தம் நூலுக்கும்,இந்தியத் தத்துவக்களஞ்சியம் என்ற நூலுக்கும் தமிழக அரசு சிறந்த நூலுக்கான பரிசு வழங்கிச் சிறப்பித்துள்ளது.இவர் அண்ணாமலை செட்டியார் தமிழிலக்கிய விருது பெற்ற பெருமைக்கு உரியவர். தருமபுர ஆதீனத்தின் சித்தாந்தக் கலாநிதி,குன்றக்குடி ஆதீனத்தின் தமிழாகரர்,திருவாவடுதுறை ஆதீனத்தின் சித்தாந்தச் செம்மணி,மெய்யப்பன் அறக்கட்டளையின் சிறந்த தமிழறிஞர் விருது உள்ளிட்ட பல பட்டங்களையும் விருதுகளையும் தன் தகுதியால் பெற்றுள்ளார்.

அலுவல் முறையில் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஆராய்ச்சிப் பணிகளிலும்,எழுத்துப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள பேராசிரியர் அவர்கள் மைசூரில் உள்ள செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனத்தின் முதுநிலை ஆய்வறிஞராகப் பணிபுரிகின்றார்.

சோ.ந.கந்தசாமியார் அவர்களின் தொடர்பு முகவரி :

முனைவர் சோ.ந.கந்தசாமி அவர்கள்61,ஐந்தாம் தெரு,நடராசபுரம்(தெற்கு).தஞ்சாவூர் - 613007தொலைப்பேசி : 04362 241027

மின்தமிழ் இடுகை: முனைவர் மு.இளங்கோவன்

தமிழண்ணலுக்கு ம.கா.ப கௌரவம்

0 மறுமொழிகள்
This year’s Tamil Isai Kavalar Dr. Rajah Sir Muthiah Chettiar Birth Anniversary Commemoration Award was presented to Rm. Periyakaruppan (Tamizhannal) for his contribution to the growth of Tamil literature. The award was distributed at a function held at Raja Muthiah Mandram (Madurai) to commemorate the 104th birth anniversary of Raja Sir Muthiah Chettiar of Chettinad here on Tuesday(05/08/ 2008).


Praise for Exemplary WORK: Madurai Kamaraj University Vice-Chancellor R. Karpaga Kumaravel, third from right, presenting Dr. Rajah Sir Muthiah Chettiar Birth Anniversary Commemoration Award to Rama. Periyakaruppan in the city on Tuesday.
— Photo: S. James


Tamizhannal is the 24th recipient of the award, instituted in 1984 to honour scholars. The award carries a purse of Rs.25,000 and a citation. Conferring the award on Dr. Periyakaruppan, R. Karpaga Kumaravel, Vice-Chancellor of Madurai Kamaraj University, eulogised Sir Muthiah Chettiar and his service to education and the development of Tamil language.

Pointing that he was an alumnus of Annamalai University, the Vice-Chancellor recollected the services rendered by the Raja’s family, especially in making education accessible to all. He also said that members of the Raja’s family were philanthropists and educationists. Lauding the services rendered by the Tamizhannal to Tamil, the Vice-Chancellor said that the university was ready to use the scholar’s knowledge, experience, expertise and services in favour of the present students of the university. He also urged Tamil professor R. Mohan to write a biography of Tamizhannal that could be published through the publication wing of the university.

Tamizhannal, who started his career as a school teacher in Karaikudi, has authored more than 60 books under various titles such as classical Tamil, traditional grammar, functional grammar and folklore.

He has guided more than 50 students in their doctoral research.

R. Chokkalingam, president, Kaviarasu Kannadasan Narpani Mandram, delivered the Raja Sir Muthiah Chettiar birthday commemoration lecture.

Staff Reporter
Courtesy: The HIndu

இலத்திரன் சுவடி இடுகை: கண்ணன் நடராஜன்

பேரா.ச.அகத்தியலிங்கம் மறைவு

0 மறுமொழிகள்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் உலக அளவில் மொழியியல்
துறையில் புகழ்பெற்றவருமான முனைவர் ச.அகத்தியலிங்கம் அவர்கள்(அகவை 79)
புதுச்சேரி அருகே கிளியனூர் காமராசர் குடியிருப்பு அருகில் நடைபெற்ற
மகிழ்வுந்து விபத்தில் 04.08.2008 திங்கள் கிழமை காலை 11 மணியளவில்
நேர்ச்சி இடத்திலேயே இறந்தார். அவர் துணைவியார்
பொன்னம்மாள்அவர்களும்(அகவை 78)ஓட்டுநர் சீவபாலன்(அகவை 28) அவர்களும்
சிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பிறகு இறந்தனர்.
அகத்தியலிங்கனாரின் பெயர்த்தி இலதா பிரியா(அகவை 22) மருத்துவமனையில்
சேர்க்கப்பெற்றுள்ளார்.

மறைந்த துணைவேந்தர் அவர்களுக்கு இரண்டு பெண்மக்கள்.1.சண்முகசுந்தரி.இவர்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல்வழிக் கல்விப் பிரிவில் திருச்சி
அலுவலகத்தில் பணிபுரிகிறார்.2.அருணாசலவடிவு. இவர்
சென்னைப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியராப் பணிபுரிகின்றார்.துணைவேந்தரின்
மறைவைக் கேள்வியுற்ற அவரின் குடும்பத்தினரும்,நண்பர்களும் மாணவர்களும்
உடல் வைக்கப்பெற்றுள்ள சிப்மர் மருத்துவமனைக்குத் திரண்டுவந்துள்ளனர்.

இன்று (05.08.2008) நண்பகல் மருத்துவமனை உடற்கூறு ஆய்வுக்குப்பிறகு
பிற்பகல் 3 மணியளவில் துணைவேந்தர் வாழ்ந்து வந்த சிதம்பரம் மாரியப்பா
நகரில் உள்ள அவர்தம் இல்லத்தில் மக்களின் பார்வைக்குத் துணைவேந்தரின்
உடல் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்னைப்பல்கலைக்கழக
முன்னாள் துணைவேந்தர் முனைவர்
பொற்கோ பேராசிரியர் செ.வை.சண்முகம் உள்ளிட்ட அறிஞர்கள்
ச.அகத்தியலிங்கனாரின் உடலுக்கு வணக்கம் செலுத்த உள்ளனர்.

முனைவர் ச.அகத்தியலிங்கனாரின் வாழ்க்கைக் குறிப்புச.அகத்தியலிங்கனார் நாகர்கோயில் அருகில் உள்ள கேசவன்புதூரில் 1929 ஆகத்து
மாதம் 19 ஆம் நாள் பிறந்தவர்.பெற்றோர் சண்முகம் பிள்ளை அருணாசல
வடிவு.நாகர் கோயில் இந்து கல்லூரியில் இளம் அறிவியல் கணக்குப்பாடம்
பயின்ற இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம்
பயின்றவர்.இங்குப் பயிலும்பொழுது குமரி அனந்தன் அவர்கள் இவருக்கு
நெருங்கிய நண்பரானார்.

கேரளா பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியன்
அவர்களின் மேற்பார்வையில் மொழியியல் துறையில் முனைவர் பட்டம்
பெற்றார்.பிறகு அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில்
மற்றுமொரு முனைவர் பட்டம் பெற்றார்.
இவ்வாறு அமெரிக்காவில் இவர் முனைவர் பட்டம் பெற்றபொழுது உலகின்
மிகச்சிறந்த மொழியியல் அறிஞர்களிடம் பாடம் கேட்கும் வாய்ப்பைப் பெற்றார்.

மொழியியல் துறையில் தமிழ் மொழியின் சிறப்பு அறியப்படாமல் இருந்தது.இம்
மேல்நாட்டுச் சிந்தனை மரபை உடைத்துத் தமிழுக்கு உலக அளவில் புகழ்
கிடைக்கவும் உலக மொழியியல் அறிஞர்கள் தமிழின் பக்கம் கவனத்தைத்
திருப்பவும் அகத்தியலிங்கனாரின் பணி குறிப்பிடும்படியாக
இருந்தது.அயல்நாட்டு மாணவர்கள் தமிழ் கற்கவும் தமிழ்மொழியின் அமைப்பை
ஆராயவுமான சூழலை உருவாக்கியவர்

அகத்தியலிங்கனார்.பொற்கோ கி.அரங்கன் கருணாகரன் செ.வை.சண்முகம் க.இராமசாமி
உள்ளிட்ட அறிஞர்கள் மொழியியல் துறையில் சிறந்த ஆய்வுகளை நிகழ்த்த நம்
அகத்தியலிங்கனார் காரணமாக அமைந்தார்கள்.இவரிடம் மொழியியல் கற்றவர்கள் உலக
அளவில் உள்ளனர். இவர் தமிழ் ஆங்கிலம் மலையாளம் மொழிகளில் நல்ல
புலமைபெற்றவர்.

அகத்தியலிங்னார் தாம் பயின்ற இந்து கல்லூரியில் தமிழ்விரிவுரையாளர்
பணியைத் தொடங்கித் தில்லிப் பல்கலைக்கழகத்தில் சில காலம்
இணைப்பேராசிரியராகப் பணியாற்றினார்.1968 முதல்1989 வரை அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் இயக்குநராகவும் பேராசிரியராகவும்
பணிபுரிந்தார்.தமிழ்த்துறையில் புல முதன்மையராகவும்
பணிபுரிந்தவர்.சிக்காகோ பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் வருகைதரு
பேராசிரிராகவும் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மூன்றாண்டுகள்
பணிபுரிந்தவர்.உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வருகைதரு
பேராசிரியாகவும் மைசூர் செம்மொழி நிறுவனத்தில் முதுநிலை ஆய்வறிஞராகவும்
பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.உலக அளவில் பல்வேறு பல்கலைக்கழகங்கள்
தமிழ் அமைப்புகள் மொழியியல் அமைப்புகளில் பொறுப்பு வகித்த பெருமைக்கு
உரியவர்.அனைத்து இந்திய மொழியியல் கழகத்தை உருவாக்கியவர்களில்
குறிப்பிடத்தக்கவர்.இதன் வழியாக தரமான தமிழ் மொழியியல் ஆய்வுகள்
வெளிப்பட்டன.பல ஆய்வாளர்கள் உருவானார்கள்.அண்ணாமலைப்பல்கலைக்கழக
வரலாற்றிலும் மொழியியல் வரலாற்றிலும் அகத்தியலிங்கனாரின் பணிகள் என்றும்
நினைவுகூரும் வண்ணம் பல உள்ளன.

அகத்தியலிங்கனார் தமிழில் 24 நூல்களையும் ஆங்கிலத்தில் 9 நூல்களையும்
எழுதியுள்ளார். 200 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வரைந்த மெருமைக்கு
உரியவர்.இவை யாவும் மொழியியல், சங்க இலக்கியம், தொல்காப்பியம் பற்றியன
என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.உலக மொழிகள் பற்றி இவர் எழுதிய நூல்கள்
உலக மொழிகள்
பலவற்றின் வரலாற்றையும் சிறப்பையும் அதன் அமைப்புகளையும் நமக்கு
எடுத்துரைக்கின்றன.

அதுபோல் சங்க இலக்கியம் குறித்துச் சங்கத்தமிழ் என்னும் பெயரில் 5
தொகுதிகளை எழுதியுள்ளார்.உலகமொழிகள் என்ற வரிசையில் 7 தொகுதிகள்
வெளிவந்துள்ளன.தொல்காப்பியம் பற்றி 3 தொகுதிகள் வெளிவந்துள்ளன.இவர்தம்
தமிழ்,
ஆங்கிலக் கட்டுரைகள் பலவும் உலகத்தரம் வாய்ந்த இதழ்களில் வெளிவந்துள்ளன.

அகத்தியலிங்கனார் இதுவரை 55 முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு நெறியாளராக
இருந்து நெறிப்படுத்திய பெருமைக்கு உரியவர்.இவரின் மொழியியல் பணிகள்
ஆய்வுகள் நூல்கள் இவருக்கு உயரிய விருதுகள் பட்டங்கள் பதவிகள் கிடைக்க
காரணமாயின.அவ்வகையில் இவர் தமிழக அரசின் திரு.வி.க.விருது உள்ளிட்ட பல
விருதுகளைப் பெற்றுள்ளார்.உலக நாடுகள் பலவற்றிற்கு இவர் பயணம் செய்து
தமிழின் பெருமை பற்றி பேசிய பெருமைக்கு உரியவர்.பல பல்கலைக்கழகங்களில்
கல்விக்குழு அறிவுரைஞர் குழு எனப் பலவற்றறில் இணைந்து பணிபுரிந்த
பெருமைக்கு உரியவர்.

பணி ஓய்வு பெற்ற பிறகும் தம் இலத்தில் அமர்ந்தபடியே பல்வேறு ஆய்வுகளைச்
செய்துவந்தார்.உலக நாடுகள் இவரை அழைத்துப்பெருமை கொண்டன. அவ்வகையில்
அண்மையில் சிங்கப்பூர் சென்று ஆய்வரங்கில் கலந்துகொண்டு உரையாற்றி
மீண்டுள்ளார்.எதிர்பாராமல் நடந்த சாலை விபத்தில் இயற்கை எய்திய
ச.அகத்தியலிங் கனாரின் பிரிவு அறிந்து தமிழ் அறிஞர் உலகமும் மொழியியல்
துறையினரும் கலங்கிநிற்கின்றனர்.

மின்தமிழ் இடுகை: முனைவர் மு.இளங்கோவன்

மறைக்கப்பட்ட மாமனிதர் பா.வே. மாணிக்க நாயக்கர்!

1 மறுமொழிகள்
1871-1931 ஆகிய இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த பொறியியல் அறிஞராகவும்,தமிழறிஞராகவும் பா.வே.மாணிக்க நாயக்கரைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆங்கில மொழிப்பற்றும் தமிழுணர்வு இன்மையும் நிறைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் மாணிக்க நாயக்கரை நினைத்துப் பார்ப்பது தேவையான ஒன்றாகும்.

மாணிக்க நாயக்கர் சேலம், பாகல்பட்டி என்னும் சிற்றூரில் பெற்றோர் வேங்கடசாமி நாயக்கர் -முத்தம்மையார் தம்பதிக்குப் பிறந்தார். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்று, 1896ல் தமது 24ம் வயதில் பொதுப்பணித் துறையில் கட்டுமானப் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார்.

மறைமலையடிகளார் தொடங்கிய "தனித்தமிழ்" இயக்கத்துக்கு மாணிக்க நாயக்கர் புரவலராக இருந்துள்ளார். இவர் கட்டுமானப் பொறியியல் அறிஞராகப் பணியாற்றியபோதும் இவரது மரபுநிலை காரணமாக இயற்கையிலேயே தமிழில் சிறந்த புலமை பெற்றிருந்தார்.

ந.மு.வேங்கடசாமி நாட்டார்,
சுத்தானந்த பாரதியார்,
கரந்தைத் தமிழ்ச் சங்கம் நிறுவிய உமாமகேசுவரனார்,
ஈ.வெ.ரா.பெரியார்,
நாமக்கல் கவிஞர்,
மு.இராகவையங்கார்,
ஆபிரகாம் பண்டிதர்
முதலியோர் நாயக்கரின் சமகால அறிஞர்கள் ஆவர்.

மாணிக்க நாயக்கர் திருச்சிராப்பள்ளியில் செயற்பொறியாளராகப் பணியாற்றியபோது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புலவர்களை வரவழைத்து இலக்கிய உரையாடல் நடத்துவது வழக்கம். 1919ம் ஆண்டு தமிழ்ப் புலவர்களின் மாநாடு ஒன்றைக் கூட்டினார். வட ஆந்திர நாட்டிற்கு இவர் மாற்றம் செய்யப்பட்டதால் மீண்டும் இந்த மாநாட்டைக் கூட்ட இயலவில்லை.

பல அறிஞர்களின் தொடர்பு இவருக்கு இருந்ததால் நாயக்கர்
அறிவியல் சிந்தனை,
தமிழ் ஒலி இலக்கணம்,
தமிழ் எழுத்துகளின் நுண்பொருள் விளக்கம்,
ஆயுத எழுத்தைப் பயன்படுத்தி எல்லா மொழிச் சொற்களையும் எழுதுதல்,
விலங்கியல் தொடர்பான அறிவு
போன்றவை அவரிடம் அமைந்திருந்தன.

"தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும்," என்னும் தமது கருத்தை 1931ம் ஆண்டுக்கு முன்பே நாயக்கர் கொண்டிருந்தார்."அறிவியல் தமிழ்ச் சொற்களின் அகராதி" என்னும் தலைப்பில் இவரது தொகுப்புகள் சென்னை மறைமலையடிகள் நூலகத்தில் இன்றும் உள்ளன.

நாமக்கல் கவிஞரின் ஓவியத் திறமையை அறிந்த பா.வே.மாணிக்க நாயக்கர் அவரை தில்லிக்கு அழைத்துச் சென்று, ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளச் செய்தார். முடிசூட்டு விழா நிகழ்ச்சியை ஓவியமாகத் தீட்டிய நாமக்கல் கவிஞருக்குத் தங்கப்பதக்கம் கிடைக்கக் காரணமாகவும் இருந்துள்ளார். 1923 - 24ல் "செந்தமிழ்ச்செல்வி" இதழ் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் இருந்து பல, தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் அந்த இதழில் எழுதிவந்துள்ளார்.

தமிழகம்,
அறிவியல் தமிழ்ச் சொற்கள்,
வடிவு திருந்த அறிவு வளர்ந்த கதை,
கம்பன் புளுகும் வான்மீகி வாய்மையும்

ஆகிய கட்டுரைகள் செந்தமிழ்ச்செல்வி திங்களிதழில் வெளிவந்தன.

"அறிவியல் தமிழ்" பற்றிய சில தொடர்கள் "தமிழகம்" என்னும் இதழிலும், "ஜஸ்டிஸ்" இதழிலும் வெளிவந்தன.
1913ம் ஆண்டு மாணிக்க நாயக்கர் நீண்ட விடுப்பில், தமது சொந்தச் செலவில் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டார். அங்குள்ள மான்செஸ்டர் தொழில் பள்ளியில் தமது "Calculograph" என்னும் தலைப்பில் அமைந்த ஆய்வுக் கட்டுரையைப் படித்தார்.

தமிழ் உச்சரிப்பு (Tamil Phonology) என்னும் தலைப்பில் அமைந்த சொற்பொழிவுகளை தமிழ் நாட்டின் பல ஊர்களிலும் நிகழ்த்தியுள்ளார். ஆந்திர நாட்டில் பணியாற்றியபோது "திராவிடர் - ஆரியர் நாகரிகம்" என்னும் சொற்பொழிவை தெலுங்கு மொழியில் உரையாற்றினார்.

மாணிக்க நாயக்கரின் சொற்பொழிவுகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அமைந்தன. காரணம், ஆங்கிலேயரிடையே தமிழ் மொழியின் சிறப்பைப் பரப்ப வேண்டும் என்பதே. இவரது ஆங்கிலச் சொற்பொழிவுகளைத் தமிழாக்கம் செய்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்

காழி.சிவ.கண்ணுசாமிப்பிள்ளை,
க.ப.சந்தோஷம்
ஆகியோர்.

1926ம் ஆண்டு வெளியான "Madras - 200" என்னும் நூலில் விளக்கப்படங்கள் பல காணப்படுகின்றன. இந்த நூல் அன்றைய சூழலில் கற்றவர் நடுவில் மிகவும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அன்றைய "ஜஸ்டிஸ்" இயக்கம் நாயக்கரின் பணிகளைப் பாராட்டி ஒரு கையேடு வெளியிட்டது. இந்நூலைப் படிக்கும் போது, அந்த இயக்கம் அவரை முழுமையாக ஆதரித்ததை அறியமுடிகிறது. "மொழிமுதல் தமிழர் கடவுட் கொள்கை" என்னும் சொற்பொழிவில் இறைவடிவம் உருவம் அற்றது என்றும், அதற்குச் சான்றாகத் தொல்காப்பியரின்

கொடிநிலை,
கந்தழி,
வள்ளி

என்னும் நூற்பாவையும் காட்டுகிறார்.

"தமிழ் எழுத்துகளின் நுண்பொருள் விளக்கம்" என்னும் தமது நூலில் தமிழ் எழுத்துகளுக்கெல்லாம் முளை எழுத்து (Root letter)"ஓ" என்றும் அது எல்லா வடிவங்களும் பிறக்கக் காரணமானது என்றும் கூறி ஓங்காரத் தத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஈ.வெ.ரா தமது கட்டுரை ஒன்றில் "பா.வே.மாணிக்க நாயக்கர் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்காக எவ்வளவோ செய்தார். அவரது ஓங்காரத்தின் மீது நான் கொண்டிருந்த வெறுப்பு அவரை முழுவதும் அறிந்துகொள்ள இயலாதபடி செய்துவிட்டது. அவர் இருந்திருந்தால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு எவ்வளவோ செய்திருப்பார்," என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். மாணிக்க நாயக்கர் ஈரோட்டில் பணியாற்றியபோது பெரியாரின் இல்லத்தில் சிலகாலம் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1916ம் ஆண்டு மு.இராகவையங்கார் எழுதி, மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் வெளியிட்ட "தொல்காப்பிய ஆராய்ச்சி" என்னும் நூலை மாணிக்க நாயக்கர் படிக்க நேர்ந்தது. அதைப்படித்த நாயக்கருக்கு தொல்காப்பியத்துக்கு உண்மைப் பொருள் காண்பதற்குப் பதிலாகப் பல ஐயங்கள் எழுந்தன.

தமது ஐயங்களைக் குறிப்பிட்டு இராகவையங்காருக்கு நான்கு கடிதங்கள் எழுதியுள்ளார். அவற்றுக்கு இரு கடிதங்கள் வாயிலாக இராகவையங்கார் பதில்கள் எழுதியுள்ளார். இந்த பதில்கள் பெரும்பாலும் வினா வடிவிலேயே இருந்தன. இந்த வினாக்கள் தொடர்பாக ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களிடமிருந்தும் நாயக்கருக்கு இரு கடிதங்கள் வந்தன.

மேற்குறிப்பிட்ட எட்டு கடிதங்களையும் தொகுத்து "தமிழ்வகைத் தொடர் - தொல்காப்பிய ஆராய்ச்சி" என்னும் பெயரில் 1924ம் ஆண்டில் நாயக்கரே தமது சொந்தச் செலவில் நூலாக வெளியிட்டார்.

"ஐரோப்பியர்கள் டார்வின் என்பவருக்குப் பிறகு கண்டறிந்த இயற்கை உண்மைகளையும், இன்னும் காணாதிருக்கின்ற பெரும் பகுதிகளையும் நம் தமிழ் முன்னோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நன்கு உணர்ந்திருக்கிறார்கள்," என்பது நாயக்கரின் ஆழ்ந்த நம்பிக்கையாக இருந்தது என்பது அவர் "அஞ்ஞானம்" என்னும் நூலுக்கு எழுதிய முன்னுரையிலிருந்து தெரியவருகிறது.

"பண்டைத் தமிழ் மொழிச் செவ்வியையும், தமிழகத்தோர் வன்மையும், சிறக்கப் பரக்கச் சிதைவின்றிக் காட்டக் கிடைத்த அழியாப் பெருந்திடரித் (திடர் - மலை) தொல்காப்பியம் ஒன்றே" என்னும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார் மாணிக்க நாயக்கர்.

சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணைக்கான வரைமுறை அமைத்தவர் அவர்தான் என்றும் செவிவழிச் செய்தி உண்டு. இவர் சோதிடக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்ததால் தமது ஆயுட்காலத்தைக் கணக்கிட்டு, தமது ஆயுள் 60 ஆண்டுகள் என்று குறித்து வைத்திருந்தார். அதன்படி தமது அறுபதாம் வயதில் (25.12.1931) நள்ளிரவில் இயற்கை எய்தினார் என்பது வியப்பான செய்தி. நாயக்கரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நாமக்கல் கவிஞர் புகழ்பெற்றார். ஆனால் பல

தமிழ் இலக்கியப் பணிகளையும்,
அறிவியல் சிந்தனைகளையும்,
கணக்கியல் முறைகளையும்
அறிமுகப்படுத்திய அந்த அறிஞரை இன்று தமிழ் உலகம் மறந்துவிட்டது.

1941ல் சென்னை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் நடத்திய புறநூனூற்று மாநாட்டில் பா.வே.மாணிக்க நாயக்கரின் திருவுருவப்படம் திறக்கப்பட்டது. தமிழ்ச் சமுதாயம் அவரை மறந்துவிட்டாலும் அவரது படைப்புகளும், ஆய்வுப் பணிகளும் மூத்த தமிழறிஞர்களின் மனதில் பதிந்துதான் உள்ளது. அவற்றை எதிர்கால இளைஞர்களுக்குக் கொண்டு செல்வது அரசின் கடமையாகும்.

புலவர் பா.அன்பரசு

நன்றி: தமிழ்மணி (தினமணி)
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES