Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

மயிலை சீனி.வேங்கடசாமி

0 மறுமொழிகள்
தமிழ் மணி: தமிழ்ப் பேரவைச் செம்மல் மயிலை சீனி.வேங்கடசாமி


  • ஐந்தடிக்குட்பட்ட குறள் வடிவம்
  • பளபளக்கும் வழுக்கைத்தலை
  • வெண்மை படர்ந்த புருவங்களை எடுத்துக் காட்டும் அகன்ற நெற்றி
  • கனவு காணும் எடுப்பான மூக்கு
  • படபடவெனப் பேசத்துடிக்கும் மெல்லுதடுகள்
  • கணுக்கால் தெரியக் கட்டியிருக்கும் நான்கு முழ வெள்ளை வேட்டி
  • காலர் இல்லாத முழுக்கைச் சட்டை
  • சட்டைப்பையில் மூக்குக் கண்ணாடி, பவுண்டன் பேனா
  • கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல் உத்திரீயம்
  • இடது கரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புத்தகப் பை
இப்படியான தோற்றத்துடன் சென்னைக் கன்னிமரா நூலகத்தை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே அவர்தான் மயிலை சீனி.வேங்கடசாமி என்று எழுத்தாளர் நாரண.துரைக்கண்ணனால் போற்றப்படும் மயிலை சீனி.வேங்கடசாமி 16.12.1900ம் ஆண்டு பிறந்தார்.


தந்தை சீனிவாச நாயக்கர் ஒரு சித்த மருத்துவர். அவரின் இல்லத்தில் ஓலைச்சுவடிகள் மற்றும் நூல்களைச் சேகரித்து வாசிக்கும் பழக்கம் இருந்தது. வேங்கடசாமி தன் தமையனார் சீனி.கோவிந்தராஜனிடம் தமிழ்ப்பயிற்சி பெற்றார். தமிழ்ப்பற்று இவருக்கு முன்னோர்கள் வழி கிடைத்த சீதனமாகும். மயிலை புனித சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில், பள்ளி இறுதி வகுப்பை நிறைவு செய்தார். இருபதாவது வயதில் சென்னைக் கலைக் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டார். பின்பு ஆசிரியப் பயிற்சி முடித்து நகராட்சித் தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.

வேங்கடசாமி, சுயமரியாதை இயக்கச் சார்பாளராக வாழ்வைத் தொடங்கினார். நீதிக்கட்சி நடத்தப்பட்ட "திராவிடன்" நாளேட்டின் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பணிபுரிந்தார். பின்னாளில் "குடியரசு", "ஊழியன்" போன்ற இதழ்களில் செய்திக் கட்டுரைகள் எழுதினார். "கெளதம புத்தர்" என்ற நூலை எழுதினார். புத்தர் வரலாறு, பள்ளி வரலாற்றுப் பாடத்தில் கற்கும் கதையாக எழுதப்பட்டது. "புத்தர் ஜாதகக் கதைகள்" என்ற நூலைத் தமிழில் முதன் முதலாக எழுதினார். இக்கதைகளில் புத்தமதக் கோட்பாடுகள் எளிமையாகக் கூறப்பட்டுள்ளன.



வேங்கடசாமி 1950களின் இறுதிக் காலங்களில், கி.பி.3ம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.9ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சிபுரிந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவற்றை ஆய்வு செய்து மன்னர்களைப் பற்றிய நூல்களை உருவாக்கினார். "மகேந்திரவர்மன்" என்ற நூலை முதன்முதலாக வெளியிட்டார்.

"வாதாபிகொண்ட நரசிம்மன்" என்ற நூலில் நரசிம்மவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்ட பாறைக் கோயில்கள் குறித்தும், இம்மன்னன் காலத்தில் உருவாக்கப்பட்ட சிற்ப வடிவங்கள் பற்றியும் விரிவான தகவல்களைத் தந்துள்ளார். இந்த நூல் தமிழக சிற்ப வரலாற்றை தெரிந்துகொள்ள பெரிதும் உதவும்.

சேரன், செங்குட்டுவன் ஆய்வில் தொடங்கி, சங்க காலம் குறித்த ஆய்வுகளை நிகழ்த்தி உள்ளார். அக்காலத்தில் தமிழகம்;

சோழநாடு
பாண்டியநாடு
சேரநாடு
துளுநாடு
கொங்குநாடு
தொண்டைநாடு

என்று ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததாகத் தெளிவுபடுத்தி, இதற்கான வரைபடத்தையும் உருவாக்கியுள்ளார்.

ஒவ்வொரு நாடு தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டு துளுநாட்டு வரலாறு, கொங்குநாட்டு வரலாறு ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தமது அனைத்து ஆய்வுகளிலும் இலங்கை தொடர்பான குறிப்புகளைக் கொடுப்பதை மரபாகக் கொண்டிருந்தார் வேங்கடசாமி.

"தமிழ்நாட்டு வரலாறு" என்ற நூலில் "இலங்கையில் தமிழர்" என்ற ஆய்வை மேற்கொண்டார். தமிழக வரலாற்றை கட்டமைத்து ஒழுங்குபடுத்தியதில் வேங்கடசாமிக்குத் தனித்த இடமுண்டு.

மகாபலிபுரத்துச் சிற்பங்கள் தொடங்கி, பல்லவ மன்னர்கள் காலத்து கட்டடம் மற்றும் சிற்பக்கலை தொடர்பான ஆய்வையும் மேற்கொண்டார். இசைக் கூத்து குறித்தும் ஆய்வு செய்துள்ளார். "தமிழ் வளர்த்த அழகுக் கலைகள்" என்ற நூலில் தமிழர்களின் பழங்கால அழகுக் கலைகள் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.

19ம் நூற்றாண்டின் தமிழ் சமூக வரலாற்றை அறிவதற்கான தொகுப்பாக "19ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்" என்ற நூலை எழுதியுள்ளார். வேங்கடசாமி, கன்னடம், மலையாளம், பாலி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பயிற்சியுடையவராக இருந்தார். மலையாளத்திலிருந்து சில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

ஓவியங்கள் குறித்து ஆய்வு செய்த வேங்கடசாமி, பல்லவர் காலத்து ஓவியங்கள், பிற்காலச் சோழர்கால ஓவியங்கள், பிற்கால ஓவியங்கள் எனப் பல்வேறு ஓவியங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளார். குறிப்பாக, கைலாசநாதர் கோயில் ஓவியம், தஞ்சை பெரியகோயில் ஓவியம், மதுரை நாயக்கர்கால ஓவியம் குறித்து ஆய்வு செய்துள்ளார்.

1962ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சார்பில் அறக்கட்டளை சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இவற்றை "சங்ககால வரலாற்றில் சில செய்திகள்" என்னும் பெயரில் பின்னர் அப்பல்கலைக்கழகம் நூலாக வெளியிட்டது.

சங்ககாலத் தமிழரின் வணிகம், சங்ககால விளைபொருட்கள் போன்றவை குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டு, "பழங்காலத் தமிழர் வாணிகம்", "சங்க காலத்து பிராமிக் கல்வெட்டு எழுத்துக்கள்," என நூல்களாக வெளியிட்டார். தமிழக அரசு உருவாக்கிய, தமிழக வரலாறு எழுதும் தமிழ்நாட்டு வரலாற்றுக் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். "தமிழ்நாட்டு வரலாறு" சங்க காலம், அரசியல் என்ற இரண்டாம் தொகுதியில் மூவேந்தர்களைப் பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார்.

இவ்வளவு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இவர், தமிழ்நாட்டின் வரலாறு முழுமையாகவும், தெளிவாகவும், சரியாகவும் இன்னும் எழுதப்படாமல் இருப்பது பெருங்குற்றமாகும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

"அகல் வரலாறு அனைத்தும்
மிஞ்சுதல் இன்றி கற்றோன்
மேம்பாடு நூலாராய்ச்சி
கெஞ்சிடும் தனைத் துலக்க
கேண்மையோடு உயர்வு செய்வான்!"


என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், வேங்கடசாமியின் ஆய்வைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

திராவிடன்
செந்தமிழ்ச்செல்வி
ஊழியன்
ஆரம்பாசிரியன்
செந்தமிழ்
தமிழ்ப்பொழில் ஆராய்ச்சி
திருக்கோயில்
நண்பன்
கல்வி
இலட்சுமி
ஆனந்தபோதினி
தமிழ்நாடு
செளபாக்கியம்
ஈழகேசரி
கலைக்கதிர்

ஆகிய இதழ்களில் 200க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். தமிழில் 33 நூல்களை எழுதியுள்ளார்.

நம் சிற்பக் கலைப்பொருட்கள் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு கள்ளத்தனமாகக் கடத்தப்பட்டன. இதை அறிந்து மிகுந்த வேதனையடைந்த வேங்கடசாமி, அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

1980ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் செம்மல்கள் பேரவை, "தமிழ்ப்பேரவைச் செம்மல்" என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 2001ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் சார்பாக வேங்கடசாமிக்கு நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

1981 மே 8ம் தேதி வேங்கடசாமி இவ்வுலக வாழ்வை நீத்தார்.

வேங்கடசாமி ஓர்;

இலக்கியக்கடல்
வரலாற்றறிஞர்
மொழிநூற்புலவர்
சமயநூல் வித்தகர்
நுண்கலைவாணர்
சொல்லாய்வுச் செம்மல்
கல்வெட்டு, சாசனம்
தொல்லியல் துறைகளில் தனி முத்துரை பதித்தவர்
பன்மொழிப்புலவர்
சமூகவியல் அறிஞர்

என பல்வேறு பரிமாணங்களின் பெட்டகமாகத் திகழ்ந்தவர். அவரின் உயர்ந்த கருத்துகளை உள்ளத்தில் ஏந்திச் செயல்படுவது அனைத்து தமிழர்களின் கடமையாகும்.

பி.தயாளன்

நன்றி: தமிழ்மணி (தினமணி)
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

சிங்கப்பூரில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைகிறது!

1 மறுமொழிகள்
வியாழக்கிழமை, ஜூலை 10, 2008

திருச்சி: சிங்கப்பூரில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆசிய மொழிகளின் பண்பாட்டு துறைப் பேராசிரியர் ஆ.ரா. சிவக்குமாரன்.

திருச்சி தேசியக் கல்லூரியில் தத்துவப் பேரவை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் அவர் பேசியது:

"உலக வரைபடத்தில் சிங்கப்பூர் ஒரு சிறு புள்ளிபோல் காட்சியளித்தாலும், உலக நாடுகள் மத்தியில் அனைத்து துறைகளிலும் உயர்ந்து பெரும் புள்ளியாகவே உள்ளது.

சிங்கப்பூரின் அபார வளர்ச்சிக்கான காரணத்தில் முக்கியமானது அரசியல் பின்னணி, மக்களின் கடின உழைப்பு, சரியான சட்டங்கள்தான்.

சிங்கப்பூரில் இயற்கை வளங்கள் கிடையாது. தண்ணீர் கூட மலேசியாவில் இருந்துதான் விலைக்கு வாங்கப்படுகிறது. ஆனால், அதே தண்ணீரை சுத்தம் செய்து மலேசியாவுக்கே திரும்பி விற்கின்றனர்.

சிங்கப்பூரில் 77 சதவிகித சீனர்களும், 14 சதவிகித மலாய்களும், 8 சதவிகித இந்தியர்களும் உள்ளனர். 8 சதவிகித இந்தியர்களில் 65 சதம் பேர் தமிழர்கள்.

தமிழையும் ஆட்சி மொழியாகக் கொண்ட சிங்கப்பூரில் தமிழ் மொழிக்கு பல்வேறு வசதிகளை அங்குள்ள அரசு செய்து வருகிறது.

ஆனால், அங்குள்ள தமிழர்கள் தமிழ் மொழியைப் பேசினால் ஏதோ தரம் குறைந்தவர்கள் என்ற நிலைக்கு தள்ளப்படுவதால், ஆங்கிலத்திலேயே பேசி வருகின்றனர். குழந்தைகளும் வீட்டில் ஆங்கிலத்தில் பேசி வருவதால் எதிர்காலத்தில் தமிழ்மொழி வழக்கற்றுப் போகும் நிலை உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு தமிழை தெளிவாக பேச குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். தமிழில் பேச கூச்சப்படுவதால் வாய்மொழித் தேர்வில் அவர்கள் குறைவான மதிப்பெண்களையே பெறுகின்றனர்.

தமிழ் பண்பாடு சிங்கப்பூரில் தமிழ்நாட்டைப்போல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள செண்பகவிநாயகர் கோயிலில் ஞாயிறு பள்ளி நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு தமிழும், சைவமும் கற்பிக்கப்படுகிறது.

சிங்கப்பூரின் முன்னேற்றத்துக்கு அடிப்படைக் காரணமே, அங்குள்ள மக்கள் சட்டத்தை மதிப்பதுதான். சட்டத்தை மதிக்காதவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது.

ஒருமுறை தவறு செய்தவர்கள், மறுமுறை தவறு செய்யும் போது தண்டனை மேலும் அதிகரிக்கப்படும். சாதாரன குடிமகன் முதல் அரசு பதவிகளில் இருப்பவர்கள் வரை யாருக்கும் பாகுபாடு கிடையாது. அனைவருக்கும் தண்டனை ஒன்றே.

தமிழகத்தைப் போல் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களிடையே ஜாதிப் பிரிவுகள் கிடையாது. பெரும்பாலான திருமணங்கள் கலப்பு திருமணங்களே. ஜாதியால் தனித்து இயங்கும் நிலை இல்லை.

தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்து வழங்கியது போல் தற்போது ஹிந்திக்கும் ஆட்சி மொழி அந்தஸ்து கேட்டு வருகின்றனர். இதனால் தமிழ் மொழிக்கான அரசின் சலுகை ஏதும் குறைந்து விடப்வதில்லை.

தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் சென்ற தமிழாசிரியர்கள் தற்போது கோடீஸ்வரர்களாக உள்ளனர். மொழி, கலாசாரம், பண்பாடு என அரசு எதற்கும் வேறுபாடு காட்டுவது கிடையாது' என்றார் சிவக்குமாரன்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கே. அன்பரசு, தத்துவப் பேரவை துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source: ThatsTamil

மின்தமிழ் இடுகை: நாக.இளங்கோவன்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் இராசேந்திரன்

0 மறுமொழிகள்
"சமூக மதிப்போடு சம்பாத்தியமும் தரும் மொழி தமிழ்''!

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக ஒன்பதாண்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் பொறுப்பில் இரண்டரை ஆண்டுகள், மொழிபெயர்ப்பியல் அகர முதலித் திட்டக் கூடுதல் முழுப் பொறுப்பு இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக மூன்றாண்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வுப்பணி தனி அலுவலராக இரண்டாண்டுகள், தமிழ்ப் பல்கலைக் கழகச் சிறப்புத்தகைமை மற்றும் விரிவுரையாளராக மூன்றாண்டுகள், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் ஆய்வு நூலகத்தில் பன்னிரண்டாண்டுகள், குறள்பீடம் பொறுப்பு, மொழிபெயர்ப்புத் துறையின் துணை இயக்குநர் என்று 34 ஆண்டுப்பணி அனுபவம்.

மேலும்

சுவடிகளைப் பதிப்பித்தல், வெளியிடல், தமிழ்ப் பயிற்றுவித்தல், தமிழ் ஆய்வு, தமிழாய்விதழ் பதிப்பு, மின்-அகராதி, பிழைதிருத்தி போன்ற கணினித் தமிழ் வளர்ச்சிப் பணிகள், சங்க இலக்கியங்களை இந்தியிலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்தல், செம்மொழித் தமிழ் இலக்கியத் தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகள், பயிலரங்குகள், தமிழாய்வு மற்றும் நிர்வாகப் பணிகளாக என் 34 ஆண்டுக் காலப் பணி அனுபவங்கள்.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானதற்கு இவரைவிடச் சிறந்த அனுபவசாலி நிச்சயமாக இருக்கமுடியாது.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முனைவர் ம. இராசேந்திரனை சென்னை, திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

உங்கள் குடும்பம் பற்றி?

பிறந்த ஊர், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்னவாசல். சொந்தஊர் குடவாசல். ஞானாம்பாள் - மகாதேவன் தம்பதியரின் ஒரே மகன். இரண்டு சகோதரிகள். என் தந்தை ஒரு தவில் வித்வான். எங்கள் குடும்பம் ஓர் இசைக்குடும்பம். எனக்கு ஒரு வயதாக இருக்கும்போதே தந்தை காலமாகிவிட்டார். தாயின் அரவணைப்பிலும் தாய்மாமன் வளர்ப்பிலும் பள்ளிப்படிப்பை முடித்தேன்.

இசைக் குடும்பத்தில் இருந்து வந்த நீங்கள் இசை பயிலாமல், தமிழில் ஆர்வம் காட்டியதற்குக் காரணம் என்ன?

இசையும் தமிழும் பிரிக்கமுடியாவை. இசை குடும்பத்தில் இருந்து வந்த நான், இசையும் தமிழுமாக வளர்ந்து, திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றேன். எங்கள் தலைமுறையில் முதன்முதல் படித்து பட்டம் பெற்றது நான்தான். நான் கோபாலகிருஷ்ண ஐயரின் மாணவன் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். அன்றைக்கு இருந்த ஆசிரியர்கள் தமிழுணர்வோடு பேசிப்பழகியதாலும் பாடம் நடத்தியதாலும் எனக்கு தமிழ்மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.

உங்களது தொடர் வளர்ச்சிக்குக் காரணம்?

தொடந்து படித்ததுதான்.

உங்கள் துணைவியார், குழந்தைகள் பற்றிக் கூறுங்களேன்?

துணைவியார் பெயர் மைதிலி.

இரண்டு பெண்கள். மூத்தபெண் தென்றல், இளையவள் எழில். என்னுடைய இரண்டு பெண்களுக்கும் கலப்புமணம்தான் நடந்தது. தமிழ்மேக்னா என்று ஒரே ஒரு பேத்தி.



உங்கள் குடும்பத்தில் தமிழிலக்கிய ஆர்வம் எப்படி?

குடும்பத்தில் அனைவருக்குமே தமிழார்வம் அதிகம். என்னுடைய இளைய மகள் மூன்று வயதிலேயே கவிதை சொல்வாள். இதைக்கண்டு நான் வியந்ததுண்டு.

இன்றைக்குத் தமிழ் படித்தால் சமுதாயத்தில் மதிப்பு கிடைப்பதில்லை என்றும், தொழில்நுட்பத்துறை போன்றவற்றில்தான் பணி வாய்ப்புகளும் ஊதியமும் அதிகம் என்றும் கூறிவருகின்றனரே அது குறித்து தங்கள் கருத்தென்ன?

சமூக மதிப்பைத் தருவது மொழி. சம்பாத்தியம் தருவது தொழில்நுட்பத்துறை. சம்பாத்தியம் மட்டுமே வாழ்க்கையாகாது. சமூகத்தில் மதிப்போடு சம்பாத்தியத்தையும் தரும் ஒரே மொழி தமிழ்மொழி மட்டும்தான்.

உ.வே.சா. தமிழ்ப்படித்ததால் அவருக்கு எந்தவித இழப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. பார்க்கப்போனால் அவர் தமிழ்பயிலாமல் இருந்திருந்தால் இன்றைக்குத் தமிழ் இலக்கியத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும். என்னைப் பொறுத்தவரை தமிழால் உயர்ந்தவர்கள்தான் அதிகம்.

செம்மொழி ஆய்வு மையம் குறித்து உங்கள் புதிய பணியின் பங்களிப்பென்ன?

செம்மொழி ஆய்வு மையம் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படவுள்ளது. அந்த நிதி பகிர்வில் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு எந்தவித தொடர்பும் கிடையாது. ஆனால், அதன் பணிகளில் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடர்ந்துச் செயலாற்றும்.

தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பதவி கிடைத்தது குறித்து உங்கள் கருத்து என்ன?

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட சூழலிலும், ஏற்கெனவே தமிழ் பாடங்களைப் பள்ளிக்குழந்தைகள் படிக்க நேர்ந்ததும், ஆலயங்களில் தமிழ் அனுமதிக்கப்பட்டிருப்பதுமான இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரானது குறித்து மிகுந்த பெருமைப்படுகிறேன்.

தமிழ் வளர்ச்சி குறித்து தங்கள் கருத்து என்ன?

தமிழைத் தனியாக வளர்க்க முடியாது. சார்புப் படுத்தித்தான் வளர்க்கமுடியும், பக்தி காலத்தில் பக்தியை வளர்ப்பதற்காக மொழி வளர்க்கப்பட்டது. ஜனநாயகத் தேர்தல் காலத்திலும் மொழி வளர்க்கப்பட்டது. இன்றைக்கு மொழி வளர்த்தெடுக்கப்போவது எது என்பதைக் கண்டறிந்தால் போதும். அது உலகமயமாக்களில்தான் உள்ளது. உலகமயமாக்கல் என்பது முதலில் குடும்பத்தில் இருந்து உருவாகவேண்டும். ஏனென்றால், ஒரு குடும்பத்தில் உள்ள நபர்கள் வேறு வேறு நிறுவனங்களில் பணிபுரிபவராகவும், ஒரு தொலைக்காட்சியில் பல்வேறு அலைவரிசைகளைப் பார்ப்பவராகவும் இருக்கின்றனர். எதிலும் ஒற்றுமை கிடையாது. உலகமயமாக்கல் என்பது முதலில் வீட்டுக்குள்ளேயே உருவாகவேண்டும். இந்த ஒற்றுமைதான் உலகமயமாவதற்கு நம்மைத் தயார்படுத்தும்.

கி.மஞ்சுளா

படங்கள்: ஏ.எஸ். கணேஷ்

நன்றி: தினமணியின் ஞாயிறு கொண்டாட்டம்
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

ஈன்றாரை இழந்த புறப்பாடல்கள்!

0 மறுமொழிகள்
காதலை மொழிவது அகநானூறு என்றால், காதலைத் தவிர்த்த உணர்வுகளை மொழிவது புறநானூறு. நானூறு இனிய பாடல்களின் தொகுப்பு.

எல்லாப் பாடல்களுக்கும் பாடியவர் யார்?

பாடப்பட்டவர்கள் யார் யார்? என்றெல்லாம் குறிப்புகள் கிடைத்திருக்கின்றன.

ஆனால் பாடிய புலவர் பெருமக்கள் யார் என்று தெரியாத நிலையில் புறநானூற்றில் பதினான்கு பாடல்கள் உள்ளன. பாடல்களின் பொருளாழம் கருதி இவை இன்றளவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அத்தகு "ஈன்றாரை இழந்த புறப்பாடல்களில்" சில:
ஒருத்தி தன் கணவனுடன் காட்டுவழியாக வந்துகொண்டிருக்கிறாள். அங்கு நேர்ந்த போரில் கணவன் இறந்துவிடுகிறான். வருத்தத்துடன் அருகிருக்கும் குயவனை நாடிச் செல்லும் அவள், குயவனிடம் இவ்வாறு வேண்டுகிறாள்: "குயவனே! என் அன்பிற்குரிய கணவன் வீர மரணம் அடைந்துவிட்டான். அவனை அடக்கம் செய்ய பெரிய தாழியை செய்துகொடு. அந்தத் தாழியில் அவனுடன் நானும் அடக்கம் ஆகவேண்டும். அதற்கேற்ப பெரிய தாழியாகச் செய்," என்று வேண்டுகிறாள். பாடல் இதுதான்:


"கலம்செய் கோவே கலம் செய் கோவே
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லிபோலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி
வியன்மலர் அகன்பொழில் ஈமத்தாழி
அகலிது ஆக வனைமோ
நனைத்தலை மூதூர்க் கலம் செய் கோவே". - (புறம்-256)

கணவனின் வீர உணர்வைத் தனித் தகுதியாகவே போற்றிய மனைவியாகத் திகழும் இவள், காட்டு வழியே அவனுடன் பயணம் செய்ததை அழகியதோர் உவமையாகச் சொல்கிறாள். வண்டிச் சக்கரத்தில் உள்ள ஆரத்தைப் பொருத்தி, அதாவது அதன்மேல் ஒட்டிக்கொண்டு வந்த சிறிய பல்லியைப்போல் பாலையைக் கடந்து வந்தேன் என்கிறாள். பயணத்தின் பொழுது ஆரத்தைவிட்டு விழாத வண்ணம் பல்லி எவ்வாறு உறுதியாகப் பற்றிக்கொண்டு வந்ததோ, அதுபோல் நானும் கணவனை உறுதியோடும், உரிமையோடும் பற்றி வந்தேன்' என்பது இங்கே நுட்பமான பொருளாகும். பாடல் இருக்கிறது, பாடலை ஈன்றவர் யார் எனத் தெரியவில்லை.

*****

இரண்டு தலைவர்களுக்கிடையில் பகை. ஒருவனது பசுக்கூட்டத்தை அடுத்தவனின் வீரர்கள் தங்கள் ஊருக்குக் கடத்திச் செல்கின்றனர். ஒரு வீரன் மட்டும் விரைந்து சென்று பகைத் தலைவனை வழி மறைத்து வீரர்களுடன் போரிட்டுப் பசுக்களை மீட்டு வந்து தமது தலைவனிடம் ஒப்படைக்கிறான். இவனது இந்த வீரம் பகைத் தலைவனுக்கு செருப்புக்கும் பாதத்திற்கும் இடையில் சிக்கிய சிறு கல் போல் இருந்து மிகவும் உறுத்தியதாம்; வருத்தியதாம்.


"செருப்பு இடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்
அவ்வயிற்று அகன்ற மார்பின் பைங்கன்
குச்சின் நிரைத்த குருஉமயிர் மோவாய்ச்
செவி இறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு
யார் கொலோ அளியன் தானே".... - என்று நீள்கிறது இந்தப் புறப்பாடல் (257)

அந்த வீரனின் புறத்தோற்றத்தை இவ்வாறு சொல்லோவியமாக்கிக் காட்டுகிறார் புலவர். அவன் திரண்ட கால்களை உடையவன். அழகிய வயிற்றை உடையவன். குச்சுப்புல் நிரைத்தது போன்ற நிறம் பொருந்திய தாடியை உடையவன். காதுகளையும் கடந்து செல்லும் முன்னே தாழ்ந்த கதுப்பினையுடையவன்.

*****

கடத்திச் சென்ற பசுக் கூட்டங்களை மீட்டு வருகையில் இந்தத் தலைவனைப் பகைவர்கள் சூழ்ந்து நின்று கொன்று விடுகின்றனர். அவனுக்கு நடுகல், அதாவது நினைவுச்சின்னம் எழுப்பி ஊரார் போற்றி வணங்குகின்றனர். இந்நிலையில் அவ்வூருக்கு வருகை தரும் பாணன் ஒருவனை நோக்கி இவ்வாறு கூறுகிறான் தலைவனின் நண்பன்:

"ஒரு பெரிய ஆண் யானையின் காலடியைப்போல விளங்கும் ஒரு கண்ணையுடைய பெரிய பறையையுடையவனே! இரவலனே! புகழ் பூத்த எம் தலைவனின் நடுகல்லை வணங்கிச்செல்க. அப்பொழுதுதான் நாட்டில் மழை பொழியும்; வளம் கொழிக்கும்; மலர்கள் நிறைந்த இடத்தில் தேனை உண்ண வண்டுகள் மொய்க்கும்'' என்று தனது நம்பிக்கையையும் தெரிவிக்கிறான். தலைவன் மீது கொண்ட பற்றினை விளக்கும் புறப்பாடல் இதோ:


"பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
இரும்பறை இரவல! சேறி ஆயின்
தொழாதனை கழிதல் ஓம்புமதி வழாது
வண்டுமேம் படூஉம் இவ் வறநிலை யா
ேபல்லாத் திரள்நிறை பெயர்தாப் பெயர்தந்து
கல்லா இளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனல் சிறையின் விளங்கியோன் கல்லே!" - (புறம்-263)
*****

வீரனொருவன் பகைவரின் யானைகளைக் கொன்றுவிட்டு தானும் புண்பட்ட நிலையில் நிற்கிறான். அவ்வேளையிலும் தம்மைத் தாக்கவரும் யானையை எதிர்த்துக் கொல்கிறான். அவனது இந்த வீரத்தைக் கண்ட அவனது மன்னனும், இத்தகைய போர்க்களத்தில் இறப்பதைவிடவும், புலவர்களால் பாராட்டப்பெறும் சூழல் நமக்கு வேறில்லை என உணர்ந்து போரிட்டு இறந்துவிடுகிறான். அத்தகைய தலைவன் இப்போது எங்கு உள்ளானோ என்கிறார் புலவர்.


"ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ
குன்றத்து அன்ன களிற்றோடு பட்டோன்
வம்பலன் போலத் தோன்றும் உதுக்காண்
....... ........ .........


நீரும் புல்லும் ஈயாது உமணர்
யாரும் இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
வாழா வான்பகடு ஏய்ப்பத் தெறுவர்
பேருயிர் கொள்ளும் மாதோ....." (புறம்-307)

இங்கே ஓர் உவமை! எதிர் வரும் பகைவரையெல்லாம் தீர்த்துக் கட்டுகிறான் இந்த வீரன். இது எப்படி இருக்கிறதென்றால், "புல்லும் நீரும் இன்றி, உப்பு வாணிகரால் கைவிடப்பட்ட - முடமாகிவிட்ட எருமைக்கடா தன்னருகே உள்ள அனைத்தையும் தின்று தீர்த்துவிடுவதைப் போல் உள்ளது," என்கிறார் புலவர்.

இந்தப் பாடல் தலைவனொருவனின் ஊர்நலம் கூறும் பாங்கினைக் கொண்டுள்ளது. ஆம்! இவ்வூரில், புலியிடம் அகப்பட்டுக்கொண்டு பிறகு தப்பித்தாவிச் செல்கின்ற ஒரு மான் கன்றுக்குச் சினமில்லாத ஒரு முதிய பசு தன் பாலைத் தரும் பண்புடையது. மேலும் பரிசிலரான பாணர்க்கு அவர்கள் எண்ணிய வண்ணம் நல்கும் ஈகை; போர்க்களத்தில் உரல் போன்ற கால்களையுடைய களிற்றைக் கொல்வதற்காக மட்டும் வாளை உறையினின்றும் எடுக்கும் பண்பு இவற்றை உடையவனது ஊராம் இந்த ஊர்.


"புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
சினங்கழி மூதாக் கன்று மடுத்து ஊட்டும்
கா...........பரிசிலர்க்கு
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை
வெள்வேல் ஆவம் ஆயின் ஒள்வாள்
கறையடி யானைக்கு அல்லது
உறை கழிப் பறியா வேலோன் ஊரே!" - (புறம்-323)

கவிமாமணி டாக்டர் வேலூர் ம. நாராயணன்.

நன்றி: தமிழ்மணி (தினமணி)

மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES