வணக்கம்.
சென்னை சாந்தோம் தேவாலயம் இன்று சென்னை நகரில் கத்தோலிக்க கிருத்துவர்களின் முக்கிய வழிபடுதலங்களில் ஒன்றாக விளங்குகின்றது. புனித தோமையர் கி.பி.52ம் ஆண்டு வாக்கில் இன்றைய தென் தமிழகப் பகுதிக்கு வந்ததாகவும், சில ஆண்டுகளில் அவர் இன்றைய மயிலாப்பூர் பகுதிக்கு வந்தடைந்ததாகவும் நம்பப்படுகின்றது.
புனித தோமையர் இங்கு வந்து புனித ஏசுவின் பெயரால் ஒரு வழிபடு தலத்தை அமைத்து ஏசுவின் புகழை பரப்பி வந்ததாகவும், அதன் பின்னர் இன்றைய செயிண்ட் தோமஸ் குன்று இருக்கும் இடத்தில் அவர் கொல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் அவரது சீடர்கள் அவரது உடலை இன்று சாந்தோம் தேவாலயம் இருக்கும் பகுதியில் புதைத்து கல்லறை எழுப்பியதாகவும் வழி வழியான செய்திகள் கிடைக்கின்றன.
போர்த்துக்கீசியர்கள் 1517ம் ஆண்டு புனித தோமாவின் கல்லறை சிதலமடைந்து காணப்பட்டதாகவும் 1523ம் ஆண்டில் கல்லறை மீது ஒரு கோயிலை எழுப்பியதாகவும் குறிப்புக்கள் வழி அறிகின்றோம்.
சாந்தோம் தேவாலயம் பழுதடைந்தமையினால் இக்கோயில் இருக்கும் இடத்தில் 1893ம் ஆண்டு பழைய கோயில் இடிக்கப்பட்டு இன்று காணும் இக்கோயில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.
155 அடி உயரம் கொண்டது இத்தேவாலயம். கல்லறை மேல் எழுப்பப்பட்ட தேவாலயம் என்ற சிறப்பு இக்கோயிலுக்குண்டு.
இந்த தேவாலயத்தின் ஒரு பகுதியாக ஒரு அருங்காட்சியகம் வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் கீழ்ப்பகுதியில், அதாவது நிலத்துக்கு அடியில் தான் செயின் தோமஸ் அவர்களின் கல்லறை உள்ள பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அதனைக் காண, படிகளில் இறங்கி இந்த அடித்தளப்பகுதிக்குச் செல்லவேண்டும். மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த தேவலயத்திற்குப் போப்பாண்டவர் இரண்டாம் பால் வருகை தந்த செய்திகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
முதல் தளத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் கல்வெட்டுக்கள், சிற்பங்கள், சின்னங்கள், புகைப்படங்கள், வரைப்படங்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்ற ன.
போர்த்துக்கீசியர் காலத்தில் கட்டப்பட்ட பழுதடைந்த பழைய கோயிலின் உடைந்த சுவர்களில் சில அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் வரலாற்றுச் சான்றுகள் பல மிக நேர்த்தியாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ் எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுக்கள், லத்தீன் எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுக்கள் ஆகியனவற்றோடு கிறித்துவ வழிபாட்டுச் சடங்கில் இடம்பெறும் சின்னங்கள் இங்கே காட்சி படுத்தப்பட்டுள்ளன. செயின் தோமஸ் அவர்களின் இறைத்தன்மைகளை விளக்கும் சித்திரங்கள் இங்கு சேகரிக்கப்பட்டு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள தமிழ் கல்வெட்டு ஒன்று கி.பி.12ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த விக்ரம சோழன் காலத்து கல்வெட்டாகும்.
விழியப் பதிவைக் காண: http://video-thf. blogspot.com/2018/02/blog- post_17.html
யூடியூபில் காண: https://www.youtube.com/ watch?v=eaj7fWY9__Y&feature= youtu.be
இப்பதிவினைச் செய்ய ஒத்துழைப்பு நல்கிய தேவாலய தந்தை லூயிஸ் மத்தியாஸ் மற்றும் அருங்காட்சியகப் பொறுப்பாளர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "மண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்"
Post a Comment