"திராவிட சாஸ்திரி!"

0 மறுமொழிகள்
செந்தமிழ் நடைகொண்ட "திராவிட சாஸ்திரி!"

தமிழை உயர்தனிச் செம்மொழி எனச்சுட்டிய ஆராய்ச்சியாளர். தாய்மொழியாம் தமிழுக்கு இயல், இசை, நாடக அணிகளைச் சூட்டி அழகு பார்த்தவர்! தன்னால் தமிழ் வாழவேண்டும் என்ற உணர்வாளர். தாய்மொழியிலேயே கல்வி கற்க வலியுறுத்தியவர். இம்மண்ணில் முப்பத்தி மூன்று ஆண்டுகளே வாழ்ந்தாலும், தமிழ்-தமிழர் முன்னேற்றத்துக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். "சூரிய நாராயண சாஸ்திரி" என்னும் தமது வடமொழிப் பெயரை முதன் முதலில் "பரிதிமாற் கலைஞன்" எனத் தமிழ்ப் பெயராக்கிக் கொண்டவர். நாடகத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர். நவீனத் தமிழிலக்கிய வரலாற்று ஆராய்ச்சிக்கு வித்திட்டவர். "சூரியநாராயண சாஸ்திரி", "பரிதிமாற் கலைஞர்" எனப் பெயர் கொண்ட பின்னரும், "திராவிட சாஸ்திரி" என விடாது மக்களால் புகழப்பட்டவர்!
மதுரைக்கு அருகில் உள்ள விளாச்சேரி என்னும் சிற்றூரில் கோவிந்த சாஸ்திரி - இலட்சுமியம்மாள் வாழ்விணையருக்கு 6.7.1870ம் ஆண்டு பிறந்தார் பரிதிமாற் கலைஞர்.
தமிழ்ப் பள்ளியில் சேர்ந்து அன்னைத் தமிழும் ஆரம்பக் கணிதமும் கற்றார். தம் தந்தையாரிடம் வடமொழியையும் முறையாகப் பயின்றார். பின்னர் மதுரை, பசுமலைக் கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார். அக்கல்லூரித் தமிழாசிரியர் மூலம் தமிழ் இலக்கணம் நன்கு கற்றார். மதுரையில் இருந்த உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து தமது கல்வியை மேலும் தொடர்ந்தார். மதுரைக் கலாசாலைத் தமிழாசிரியர் மகாவித்துவான் சு.சபாபதி முதலியாரிடம் தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களையும் கசடறக் கற்றார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் எஃப்ஏ தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்தார். இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி வழங்கிய உதவித் தொகையையும் பெற்றார். சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்ந்தார். பரிதிமாற் கலைஞர் கல்லூரியில் பயிலும் போதே "விவேக சிந்தாமணி" என்னும் இதழில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். தமிழிலும் வேதாந்த சாத்திரத்திலும் பல்கலைக் கழக அளவில் 1892ம் ஆண்டு நிகழ்ந்த பி.ஏ. தேர்வில் முதல் மாணவராகத் தேறினார். தமிழில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றதையொட்டி மன்னர் பாஸ்கர சேதுபதி பெயரால் நிறுவப்பட்ட பொற்பதக்கத்தையும் பரிசாகப் பெற்றார்.

யாழ்ப்பாணத் தமிழறிஞர் சி.வை.தாமோதரம் பிள்ளை அக்காலத்தில் சென்னையில் வாழ்ந்து வந்தார். பல்கலைக்கழக அளவில் தமிழில் முதலிடம் பெற்ற பரிதிமாற் கலைஞரைத் தமது இல்லத்துக்கு அழைத்தார். ஒரு வினாத்தாள் கொடுத்து விடை எழுதித் தருமாறு கூறினார். பரிதிமாற் கலைஞர் அரைமணி நேரத்தில் விடை எழுதி அளித்தார். "உமது விடைகள் உயரிய செந்தமிழ் நடையில் புதுக் கருத்துகளைக் கொண்டு விளங்குகின்றன. உம்மைத் "திராவிட சாஸ்திரி" என்று அழைத்தலே சாலப் பொருந்தும்," என்று பாராட்டி, தாம் பதிப்பித்த இலக்கண, இலக்கிய நூல்களைத், தம் கையெழுத்திட்டு அன்பளிப்பாக வழங்கினார்.

பரிதிமாற் கலைஞர், தமிழ் மீது உள்ள ஆராக்காதலால், தமிழாசிரியர் பணியை, தாம் பயின்ற கிறிஸ்தவக் கல்லூரியில் ஏற்றார். கல்லூரி அளவில் தமிழாசிரியர் பணியை விரும்பி ஏற்றுக்கொண்ட முதல் பட்டதாரி இவரேயாவார்.

பரிதிமாற் கலைஞர் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிப் புலமை படைத்தவர். மாணவர்களுக்கு இலக்கண, இலக்கியத்தை சுவையுடன் மேலும் கற்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும்படியாகக் கற்பிப்பார். சமகாலக் கருத்துகளைப் பண்டைய இலக்கியம் கொண்டும், தமிழர் பண்பாடு, நாகரிகம், மொழி வரலாறு முதலியவற்றை ஆராய்ச்சி நோக்கில், வரலாற்றுச் சான்றுகளோடு விளக்குவார். கல்லூரியில் பயிலும் மாணவர்களுள் இயல்பாகவே தமிழறிவும், தமிழார்வமும் உடைய மாணவர்களைத் தமது இல்லத்துக்கு அழைத்து அவர்களுக்கு தொல்காப்பியம், நன்னூல், இறையனார் அகப்பொருள், நம்பியகப்பொருள், மாறனலங்காரம், தண்டியலங்காரம் முதலியவற்றையும், சைவ சமய சாத்திர நூல்களையும் கற்பித்தார். ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு நடத்தினார். அம் மாணவர்கள் "இயற்றமிழ் மாணவர்கள்" என்று அழைக்கப்பட்டனர்.

1901ம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் மதுரையில் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. அத்தொடக்க விழாவில் பரிதிமாற் கலைஞர் கலந்து கொண்டு தமிழ்ச் சங்கம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விவரித்தார். தமிழ்ச்சங்கம் நடத்திய "செந்தமிழ்" இதழில், தமிழின் சிறப்புக் குறித்து "உயர்தனிச் செம்மொழி" என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதினார். தமிழைச் செம்மொழி என்று முதன் முதலில் மெய்ப்பித்து நிறுவியவர் பரிதிமாற் கலைஞரே ஆவார்.

பரிதிமாற் கலைஞர், "சென்னைச் செழுந்தமிழுரைச் சங்கம்" என்ற சங்கத்தை நிறுவி, அதன் மூலம் கல்லூரித் தமிழ்ப் பாடங்களுக்கு உரை எழுதி அளித்தார். 1902ம் ஆண்டு கல்லூரிப் பாடத்திட்டத்திலிருந்து தமிழை விலக்குவதற்குச் சென்னைப் பல்கலைக்கழகம் முடிவெடுத்தது. அதையறிந்த பரி திமாற் கலைஞர், மு.சி.பூரணலிங்கம் பிள்ளையுடன் இணைந்து அம்முடிவை முறியடித்தார்.

"தமிழ், தென்னாட்டில் வழங்கும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலியவற்றுக்கெல்லாம் தலைமையானது. எனவே, தமிழ் உயர் மொழியாகும். தான் வழங்கும் நாட்டில் பயிலும் ஏனைய மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல ஆற்றல் சான்றதே தனிமொழி. தமிழ் தனித்து இயங்கவல்லதால் தனிமொழியாம்," என்று விளக்கினார். "திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூயமொழியே செம்மொழியாம்," என்பது செம்மொழிக்கான இலக்கணம். தமிழ் மொழி, செம்மொழிக்கான இலக்கணத்தைக் கொண்டுள்ளது என்பதை நூறாண்டுகளுக்கு முன்பே எடுத்துரைத்தவர் பரிதிமாற் கலைஞர்.

குழந்தைகள் பன்னிரண்டு வயது வரை தமிழ் மொழியிலேயே கல்வி கற்க வேண்டுமென்று ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே முழங்கியவர்.
"மதிவாணன்" என்ற நாவல், "ரூபாவதி" அல்லது "காணாமற் போன மகள்", "கலாவதி" முதலிய உரைநடை நாடகங்கள், "மானவிஜயம்" என்ற செய்யுள் நாடகம், "தனிப்பாசுரத் தொகை", "பாவலர் விருந்து", "சித்திரகவி விளக்கம்" முதலான கவிதை நூல்கள், "தமிழ் மொழியின் வரலாறு" என்ற ஆய்வு நூல், "ஸ்ரீமணிய சிவனார் சரித்திரம்" என்ற வாழ்க்கை வரலாறு நூல், "நாடகவியல்" என்ற நாடக இலக்கண நூல் ஆகிய நூல்களை எழுதி உலகுக்கு அளித்துள்ளார் பரிதிமாற் கலைஞர்.

"தமிழ்ப்புலவர் சரிதம்" என்ற கட்டுரை நூலில், புகழ்பெற்ற ஒன்பது புலவர்களுடன் தமிழறிஞர்கள் பலரின் வரலாற்றை எழுதியுள்ளார். சபாபதி முதலியார் இயற்றியுள்ள "திருக்குளந்தை வடிவேல் பிள்ளைத் தமிழ்," "மதுரைமாலை" ஆகிய இரு நூல்களையும், "கலிங்கத்துப்பரணி", "நளவெண்பா", "திருவுத்தரக்கோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத் தமிழ்", மழவை மகாலிங்க அய்யரின் "இலக்கணச் சுருக்கம்", தாண்டவராய முதலியாரின் "பஞ்ச தந்திரம்", முதலிய 67 நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.

பரிதிமாற் கலைஞர் 2.1.1903ம் ஆண்டு தமது முப்பத்து மூன்றாம் வயதில் எலும்புருக்கி நோயால் தாக்கப்பட்டு மறைந்தார் என்பது முத்தமிழுக்கு நேர்ந்த பேரிழப்பாகும்.
"பரிதிமாற் கலைஞரால் இயற்றப்பட்ட நூல்கள் யாவும், தமிழ் அன்னைக்கு ஏற்ற அணிகள். அவைகளுள் ஒன்று "தமிழ் மொழியின் வரலாறு", தமிழ் நாட்டில், தமிழ் மொழி வரலாற்றுக்கு வழிகாட்டியவர் பரிதிமாற் கலைஞரே. அவர் நீண்ட நாள் உலகில் வாழ்ந்திருந்தால் தமிழ் அன்னை இழந்த அரியாசனத்தில் ஏறி அமர்ந்திருப்பாள். முத்தமிழும் ஆக்கம் பெற்றிருக்கும்" என்று புகழ்ந்துரைத்துள்ளார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.
சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் 1970ம் ஆண்டு பரிதிமாற் கலைஞருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. பரிதிமாற் கலைஞரின் பிறந்த ஊரான விளாச்சேரியில் அவர் வாழந்த வீட்டை நினைவு இல்லமாக்கிப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அவரது நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

தமிழே தன் இறுதி மூச்சாக வாழ்ந்தவர் பரிதிமாற் கலைஞர்! அவர் புகழ் "செம்மொழித் தமிழ்" உள்ளவரை சீரோடும் சிறப்போடும் நிலைத்து நீடு நிற்கும்!

பி. தயாளன்

நன்றி: தமிழ்மணி (தினமணி)
மின்தமிழ்
இடுகை: கண்ணன் நடராஜன்

மருது சகோதரர்கள்

0 மறுமொழிகள்
மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம்


இன்று மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட 207வது நினைவு தினம்.

இன்றைக்கு நடக்கும் மதக் கலவரங்கள், இனக் கலவரங்களால் மரத்துப் போனவர்களாய் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு மனிதர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கற்காலத்திலிருந்து நாகரிக மனிதனாய் மாறிய பின், மீண்டும் பழைய நிலைக்கே மனிதனின் மனோபாவம் மாறிக் கொண்டிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.
ஒருபுறம் உலக அளவில் சரிவை ஏற்படுத்திவரும் பொருளாதாரப் பிரச்சினை. மறுபுறம் பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற போர்வையில் மனிதனை மனிதனே கூறுபோட்டு சாய்க்கும் அவலம்.

மக்களாட்சித் தத்துவத்தில் மகத்தான நிலையை அடைந்த இந்தியாவில், இன்றைக்கும் மத நல்லிணக்கத்தை உறுதி செய்ய முடியாத நிலை. மதத்தின் பெயரால் அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் நிகழ்த்தப்படும் குண்டுவெடிப்புகள். அதில் பலியாகும் ஏராளமான உயிர்கள்.
ஏன் இந்த நிலை?

இருநூறாண்டுகளுக்கு முன்பே, இதற்குத் தீர்வு கண்டுள்ளனர் இரு குறுநில மன்னர்கள். கி.பி. 1780 - 1801 (சுமார் 20 ஆண்டுகள்) காலகட்டத்தில் சாதி, சமயச் சார்பற்ற, மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்த சிவகங்கை சீமை மருது சகோதரர்களின் ஆட்சி வரலாற்றில் தடம் பதித்துள்ளது.

இம்மன்னர்களைப் பற்றிய மற்றொரு சிறப்பும் உண்டு.

சுதந்திர இந்தியாவை ஏற்படுத்துவதற்காக அன்னியர்களை அப்புறப்படுத்த, அனைத்து மதத்தினரையும் ஒன்று திரட்டி முதல் போர்ப் பிரகடனம் அறிவித்த மகா வீரர்கள் அவர்கள்.
அவர்களது ஆட்சியில் விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் நீர்நிலைகள் ஏராளமாக அமைக்கப்பட்டன. மத வேறுபாடுகளைக் கடந்து, சகோதரத்துவத்தை அவர்கள் வளர்த்ததற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.
தங்களது ஆட்சிக் காலத்தில்,

இஸ்லாமியர்களுக்காக நரிக்குடியில் மசூதியும், திருப்பத்தூரில் கான்பா பள்ளிவாசலையும் கட்டி உள்ளனர். கிறிஸ்தவர்களுக்கு சருகணியில் தேவாலயம், குன்றக்குடி, காளையார்கோவில், திருமோகூர், மானாமதுரை, மதுரை ஆகிய இடங்களில் பெரிய சிவாலயங்களையும், முருகன் கோயிலையும் எழுப்பி திருப்பணி செய்து வழிபாடு நடத்தி ஆட்சி புரிந்தனர்.

மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கமே, வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் துணிவை அவர்களுக்குத் தந்தது.

சின்ன மருதும், பெரிய மருதும் தங்களது படை வலிமையினாலும், தந்திரத்தாலும், வீரத்தினாலும் கும்பினிப் படைகளை கதிகலங்கி ஓடச் செய்தனர்.

பிராமணர்கள், இஸ்லாமியர்கள், சத்திரியர்கள், கிறிஸ்தவர்கள், ஆதி திராவிடர்கள் ஆகியோரை இணைத்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராட, மருது சகோதரர்கள் அறைகூவல் விடுத்தனர்.

கன்னடத்தைச் சேர்ந்த நேதாஜி வாக், மலபாரைச் சேர்ந்த வர்மா, கன்னடத்தின் கிருஷ்ணப்ப நாயக்கர், கோயம்புத்தூரைச் சேர்ந்த கான் - இ - கான், திண்டுக்கல் கோபால் நாயக்கர் போன்ற புரட்சியாளர்களை ஓரணியில் சேர்த்து, வெள்ளையரை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் என்று எழுதிக் கையொப்பமிட்டு, திருச்சி கோட்டை வாசலில் அதை ஒட்டினர்.
இதைப் படிப்பவர்கள், ஏராளமான பிரதிகள் எடுத்து இச்செய்தியை எங்கும் பரவிடச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதவர்கள், காராம் பசுவைக் கொன்றதற்குச் சமமாகக் கருதப்படுவர் எனப் பிரகடனப்படுத்தினர். ஆங்கிலேயர்களுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், அவர்களது சூழ்ச்சியால் மாமன்னர்கள் சிறை பிடிக்கப்பட்டனர்.
கர்னல் அக்னியூ தலைமையில், 1801, அக்டோபர் 24ம் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

திருப்பத்தூரில் அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அரசு நினைவு மண்டபம் கட்டியுள்ளது.

அங்கே, அவர்களது முழு உருவச் சிலைகள் எழுப்பப்பட்டு, வெள்ளையனுக்கு எதிராக முதலில் வாள் சுழற்றியதற்கு மெளன சாட்சியாக அவை நிற்கின்றன.
மத நல்லிணக்கம் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்பது, அறிவியல் வளர்ச்சிபெறாத காலத்திலேயே மருது சகோதரர்களின் எண்ணத்தில் உதித்தது மனிதம் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.

நன்றி: தினமணி தலையங்கம் (24/10/2008)
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

கல்வெட்டுகள் கண்டெடுப்பு!

0 மறுமொழிகள்
1,200 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டெடுப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், புதுக்குடியில் 1,200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருச்சி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் இரு மாவட்ட எல்லையிலுள்ள புதுக்குடி கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த சிவாலயத்தில் புனரமைப்புப் பணி தற்போது நடந்து வருகிறது. இப்பணியின்போது மண்ணில் புதைந்திருந்த தொன்மையான கல்வெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இவற்றை ஆய்வு நடத்தி வரும் குடவாசல் பாலசுப்பிரமணியன் வியாழக்கிழமை(23/10/2008) கூறியது:

இக்கோயில் வளாகத்தில் கிடைத்த 15க்கும் மேற்பட்ட கல்வெட்டுச் சாசனங்களை படி எடுத்தோம். கி.பி. 800ல் தொடங்கி 1,600ஆம் ஆண்டு வரையுள்ள பல ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சாசனங்கள் கிடைத்துள்ளன. இவற்றில் மூன்று சாசனங்கள் முழுமையாகவுள்ளன. கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளில் அரிய தமிழ்ப் பாடல்களிலுள்ள புள்ளி பெற்ற மெய்யெழுத்துகள் காணப்படுகின்றன.

வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி பட்டம் புனைந்த ஆதித்த கரிகால் சோழனின் (இராஜராஜ சோழனின் அண்ணன்) 4ஆம் ஆட்சி ஆண்டான கி.பி. 960ல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு சாசனத்தில், புதுக்குடி என்னும் அவ்வூரின் பழம்பெயர் "நாங்கூர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராஜேந்திர சோழனின் சாசனங்களும் காணப்படுகின்றன. 16ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் இவ்வூரின் பெயர் மீசெங்கிளி நாட்டுப் புதுக்குடி என குறிக்கப்பட்டுள்ளது. "மீசெங்கிளி நாடு," தற்போதைய தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் ஒரு பகுதியாகும் என்றார்.

நன்றி: தினமணி
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

தெ.பொ.மீ

0 மறுமொழிகள்
பன்மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் 1901ம் ஆண்டு ஜனவரி 8ம் நாள் தமிழுலகம் ஒரு தவப்புதல்வனைக் கண்டெடுத்தது. ஆம்! அந்த நாள்தான் தெ.பொ.மீ. உலகைக் கண்திறந்து பார்த்த நாள். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தமிழ்ப்பற்றும், இறைப்பற்றும் ஒருங்கே பெற்ற பொன்னுசாமி கிராமணியார் இவரை மகவாகப் பெற்ற நாள். தமிழ் இலக்கிய உலகில் பேராசிரியர் தெ.பொ.மீ.யின் இடத்தை இன்னொருவரால் நிரப்ப முடியாது என்பது முற்றிலும் உண்மை.


பொன்னுசாமி கிராமணியாருக்குத் தமிழின் மீதும் தமிழறிஞர்களின் மீதும் இருந்த காதலால்தான் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் பெயரைத் தன் மகவுக்கு இட்டார். இவர் தெ.பொ.மீ. எனத் தமிழுலகில் அழைக்கப்பெற்றவர். இவரது தமையனார் தெ.பொ. கிருஷ்ணசாமி பாவலர், நாடகத்தின் வாயிலாக நாட்டிற்கு உழைத்த தொண்டர். தெ.பொ.மீ.யும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுப் புகழ் பெற்றவர். சென்னை மாநகராட்சியிலும், பல்வேறு துறைகளில் தலைவராகவும், மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும், மகரிஷி மகேஷ்யோகியின் அமைப்பைத் தென்னாட்டில் பரப்பும் பணிக்குப் பொறுப்பாளராகவும் பணியாற்றித் தமது நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தியவர்.
தமிழக அரசால் "கலைமாமணி" விருதையும் மத்திய அரசால் "பத்மபூஷண்" விருதையும் பெற்ற பேராசிரியர் தெ.பொ.மீ.வரலாறு, அரசியல், சட்டம் முதலிய துறைகளில் பட்டம் பெற்றவர். தமது இடையறாத முயற்சியால் தமிழ்

இலக்கியம்
இலக்கணம்
மொழியியல்
சமயம்
தத்துவம்
ஒப்பிலக்கியம்
காந்தியியல்

முதலிய பல்வேறு துறைகளில் கற்றுத்தேர்ந்து அனைவரும் வியக்கும் வகையில் இணையற்ற அறிஞர் ஆனார். அதோடன்றி பல்வேறு பரிணாமங்களால் துறைதோறும் தலைவர் ஆனார். எதைக் கற்றாலும் கசடறக் கற்றமையால் எல்லாத்துறையும் தலைமைத் தன்மை கொடுத்து அவரைப் போற்றியது. பதினெட்டு மொழிகளைக் கற்றிருந்தாலும் ஈராயிரம் ஆண்டு தமிழ் மொழியிலும் இலக்கியங்களிலும் அவர் பெற்ற புலமைக்கு ஈடில்லை. மொழியின் மீது அவர் கொண்ட நேசிப்பும் வாசிப்புமே இதற்குக் காரணம்.

920ல் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்று 1922ல் பி.எல். பட்டமும் பெற்றார். பெரும்பாலும் சட்டம் பயின்ற வல்லுநர்கள் தமிழார்வலர்களாக இருந்தமையை தமிழ் வரலாறு காட்டும். அவர்களுள் தெ.பொ.மீ.யும் ஒருவர்.

1923ல் எம்.ஏ. பட்டம் பெற்றார். வரலாறு, பொருளியல், அரசியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1923ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக தன்னைப் பதிவு செய்து கொண்டார். எனினும் தமிழ் கற்பிக்கும் பேராசிரியராகவே இவர் பணி பின்னாளில் தொடர்ந்தது.

1924ல் சென்னை நகராண்மைக் கழக உறுப்பினராகப் பணியாற்றினார். 1925ல் அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவராய் இருந்து தொண்டு புரிந்தார். தமிழ் இலக்கிய இலக்கண ஆர்வத்தால் 1934க்குள் பி.ஓ.எல், எம்.ஓ.எல். பட்டங்களும் பெற்றார். 1941ல் நாட்டு உரிமைக்காக மறியல் செய்து சிறை சென்றார்.

இவரது தமிழ்ப் புலமையைக் கண்ட அண்ணாமலை அரசர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு இவரைப் பேராசிரியராக நியமித்தார். 1944ல் பேராசிரியராகப் பொறுப்பேற்ற தெ.பொ.மீ. 1946ம் ஆண்டு வரை அங்கு பணியாற்றினார்.
மீண்டும் 1958ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல், இலக்கியத் துறைகளின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். இவரது தமிழ்ப்புலமையை உலகுக்கு அடையாளம் காட்டிய பெருமை, அண்ணாமலை அரசரையே சாரும். மொழிப்புலமை இவரை அயல்நாட்டுப் பல்கலைக்கழகமான சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1961ல் தமிழ்ப் பேராசிரியராக பொறுப்பேற்க வைத்தது.

1973,74ம் ஆண்டுகளில் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் கழகச் சிறப்பாய்வாளராக பொறுப்பேற்றார். 1974 முதல் ஆழ்நிலைத் தியானத் தேசியக் குழுவில் உறுப்பினராக இருந்து தொண்டு செய்துள்ளார்.
தருமபுர ஆதீனம் "பல்கலைச் செல்வர்" என்றும், குன்றக்குடி ஆதீனம் "பன்மொழிப் புலவர்" என்றும் விருதுகள் அளித்துச் சிறப்பித்தன.

அமெரிக்கா, ஜப்பான், இரஷ்யா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று தமிழின் புகழ் பரப்பிய பெருமகனார் தெ.பொ.மீ. யுனெஸ்கோவின் "கூரியர்" என்னும் இதழ்க்குழுவின் தலைவராக விளங்கிய இவர், ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் எனில் மிகையில்லை.
தமிழ் படித்தவர்கள் தமிழ்மொழியை மட்டுமே கற்க முடியும், பிற மொழிகள் அவர்களுக்கு வராது என்பதை மாற்றி, மொழியியல் என்ற புதிய துறையின் புதுமையைத் தமிழுக்குக் கொண்டுவந்து அதை வளர வைத்த முதல் முன்னோடி பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ.தான். தமிழ்மொழியின் மரபு சிதையாமல், மாண்பு குறையாமல், மாசுநேராமல் நவீனப்படுத்தி உலகை ஏற்றுக் கொள்ளச் செய்த தமிழ்த்தொண்டர் தெ.பொ.மீ. உலகப் பல்கலைக்கழகங்கள் பலவற்றிலும் மதிக்கப்பட்டு, பட்டங்களையும் பாராட்டுகளையும் பெற்ற பெருந்தகை.

"தமிழின் முக்கியத்துவம், அது பழமைச் சிறப்பு வாய்ந்த ஒரு செவ்வியல் மொழியாக இருப்பதுடன் அதே வேளையில் வளர்ந்து வரும் நவீன மொழியாகவும் ஒருங்கே விளங்குவதில்தான் சிறப்புப் பெறுகிறது," என்பது பன்மொழிப் புலவரான தெ.பொ.மீ.யின் கருத்து.

செவ்வியல் மொழியான தமிழுக்கு நாம் செய்திருக்க வேண்டிய பணி குறித்து தெ.பொ.மீ, "ஏராளமாகத் தமிழில் படைக்கப்பட்டுள்ள படைப்புகள் பிற ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப் படாமையால் பரவலாக அறிஞருலக ஆய்வுக்குக் கிடைக்காமல் இருக்கின்றன," என்று செவ்வியல் மொழியான தமிழுக்கு நாம் செய்திருக்க வேண்டிய பணியை நினைவூட்டியுள்ளார்.

இவர் மிகச் சிறந்த இலக்கியத் திறனாய்வாளராகவும் விளங்கியவர். தமிழுக்குப் பல புதிய சிந்தனைகளைத் தன் ஆய்வின் மூலம் தந்தவர். ஆராய்ச்சி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்தம் நூல்கள் காட்டுகின்றன. இதனால் அவர் "மின்வெட்டுப் பேராசிரியர்" என்றே பிறரால் அழைக்கப்பட்டார். இலக்கியத் துறையில் இருட்டாக இருந்த இடங்களைத் தன்னுடைய பேரறிவால், திறனாய்வுப் பார்வையில் விளங்கச் செய்தவர் தெ.பொ.மீ. திறனாய்வுத் துறையில் பல புதிய தடங்களைப் பதித்தவர். "ஒரு மொழியின் இலக்கியத்தைச் சிறந்தது எனச் சொல்ல வேண்டுமானால், பிறமொழி இலக்கியங்களைப் பற்றிய அறிவும், சிறப்பெனக் குறிப்பிடும் இலக்கியத்தின் மொழியில் நுண்மாண் நுழைபுலமும் பெற்றிருக்க வேண்டும். பிறவற்றை அறியாமலோ, தன்னுடையதை முழுமையாக உணராமலோ புதிய தடங்களைக் காண முடியாது," என்று கூறியுள்ளார் தெ.பொ.மீ.
உலகக் காப்பியங்களோடும், உலக நாடகங்களோடும் சிலப்பதிகாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து, அதை "நாடகக் காப்பியம்" என்றும் "குடிமக்கள் காப்பியம்" என்றும் ஒருவரியில் கூறியவர். சிலப்பதிகாரத்துக்கு இவரைப் போன்று வேறு யாரும் திறனாய்வு எழுதியதில்லை.

"தமிழ்மொழி உயர வேண்டுமானால் தமிழன் உயரவேண்டும்," எனச் சங்க நாதமிட்ட முதல் சான்றோர் தெ.பொ.மீ. தன்னலம் கருதாத மாமனிதர் தெ.பொ.மீ. இவரது எழுத்துகள் தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் பெருமையும் புகழும் சேர்ப்பன.

முனைவர் மு.வள்ளியம்மை

நன்றி: தமிழ்மணி (தினமணி)
மின்தமிழ் இடுகை

கவியரசர் கண்ணதாசன் நினைவு நாள்

0 மறுமொழிகள்
இன்று கவியரசர் கண்ணதாசன் நினைவு நாள்.

கவியரசு கண்ணதாசன் மறைந்து 27 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இப்போதும் ஒவ்வோர் அரசியல் நிகழ்வுகளின் போதும், இலக்கியக் கூட்டங்களிலும் கவியரசு கண்ணதாசனைப் பற்றிய நினைவோ, செய்தியோ இடம்பெறுகிறது என்பதே, அந்தக் கலைஞன் எந்த அளவுக்கு நமது தமிழ்ச் சமுதாயத்தின் உணர்வுகளுடன் ஒன்றியவனாக இருக்கிறான் என்பதற்கு உதாரணம்.

மகாகவி பாரதி, தன்னிலும் உயர்ந்த கவிஞனாக அடையாளம் காட்டுவது கவிச் சக்ரவர்த்தி கம்பனை என்றால், கவியரசு கண்ணதாசனோ, மகாகவி பாரதிதான் தனது மனம் கவர்ந்த கவிஞன் என்று வெளிப்படையாகப் பல நேரங்களில் எடுத்துரைத்திருக்கிறார். கவியரசரின் கவிதைகளில் நமக்கெல்லாம் ஓர் ஈர்ப்பு என்றால், கவியரசருக்கோ மகாகவி பாரதியிடம் இருந்தது காதல், மரியாதை, மயக்கம், பக்தி!

கவியரசு கண்ணதாசன் தனது மனதில்பட்டதை, தான் உண்மை என்று நம்பியதை, உணர்ந்ததை எதற்கும் அஞ்சாமல், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்தியம்பியவர்.

"போற்றுபவர் போற்றட்டும்; புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன். ஏற்றதொரு கருத்தை எனது உள்ளம் என்றால் எடுத்துரைப்பேன்; எவர்வரினும் நில்லேன்; அஞ்சேன்,"

என்பதைத் தனது கொள்கையாகக் கொண்டவர்.

அந்தவகையில், கவியரசர் நடத்திய "கண்ணதாசன்" இலக்கிய மாத இதழில் அவர் எழுதிய தலையங்கங்கள் அனைத்தும், அந்த மாமனிதனின் சீரிய சிந்தனையையும், தொலைநோக்குப் பார்வையையும், ஆணித்தரமான கருத்துகளையும் பிரதிபலித்தன. கவியரசருக்கு ஒரு கனவு இருந்தது. அதை 1978 செப்டம்பர் மாதக் "கண்ணதாசன்" மாத இதழில் தலையங்கமாக வெளிப்படுத்துகிறார் கவியரசர்.

"மகாகவி" பாரதி பற்றி "கவியரசர்" கண்ணதாசன் எழுதிய அந்தத் தலையங்கம் இன்றைய தலைமுறையினர் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அதுமட்டுமல்ல, ஒரு கவிஞன் தனக்கு முந்தைய தலைமுறைக் கவிஞனை எப்படி மதிக்க வேண்டும் என்பதையும், எந்த அளவுக்கு கவியரசர் பாரதியை நேசித்தார் என்பதையும் எடுத்துக்காட்டும் அந்தத் தலையங்கத்தை அப்படியே தருகிறோம்.

ஒரு கவிஞனின் சிறப்பை அவன் வாழ்ந்த காலத்தைக் கொண்டே நிர்ணயிக்க வேண்டும். பாரதி வாழ்ந்த காலம் தமிழுக்கு மிகவும் மோசமான காலம். தமிழ் படித்தவனுக்கு மரியாதை இல்லாத காலம். பிள்ளையைத் தமிழ் படிக்க வைப்பது வீண் என்று பெற்றோர்கள் நினைத்த காலம். ஆங்கிலம் படித்து குமாஸ்தாவாவதிலே உள்ள சுகம் தமிழ் படிப்பதிலே இல்லை என்று நினைத்த காலம். அதிலேயும் தமிழ்க் கவிதையை எவரும் சீந்தாத காலம். ஒரு

நெல்லையப்பரையும், வ. இராமசாமி ஐயங்காரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு அவர்கள் இரசித்தது போதும் என்று எழுதிக் குவித்தவன், பாரதி. இன்று என் பாடல்களை நான்கு கோடி மக்கள் இரசிக்கிறார்கள்; பாடுகிறார்கள். அதைக் கண்ணால் பார்க்கும்போதும், காதால் கேட்கும்போதும் எனக்கு உற்சாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மேலும் மேலும் நான் எழுதுகிறேன். அந்த வாய்ப்பே இல்லாமற் போனவன் பாரதி. தன் கவிதையை யார் இரசிக்கிறார்கள் என்று தெரியாமலேயே அவன் பாடினான். அதனால் தான் அவ்வளவு பாடல்களும் மனத்தின் அடித்தளத்தில் இருந்து வந்திருக்கின்றன. எல்லாம் இயற்கை; ஒன்றுகூட செயற்கை இல்லை. கம்பனுக்குப் பிறகு பாரதி ஒருவனே அப்படிப் பாடியவன்.

இடையில் பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. அப்போது எவ்வளவோ காவியங்கள் வெளிவந்திருக்கின்றன. எதுவும் பாரதிக்குப் பக்கத்தில் நிற்க முடிந்ததில்லை. இன்னும் அந்த இடத்தை நிரப்ப ஒருவனில்லை. பாரதியோடு பலர் என்னை ஒப்பிடும்போது எனக்கே மிகவும் வெட்கமாக இருக்கும். என் பாடல்களில் அவசரத்திற்காக எழுதப்பட்ட செயற்கைப் பாடல்களும் உண்டு. பாரதி முழுக்க முழுக்கத் தன்னுணர்வுக் கவிஞன்.

"காலம் எப்படி வரவேற்கும்; யார் எப்படி இரசிப்பார்கள்?" என்பது தெரியாமலேயே தனக்குத் தோன்றியதை எல்லாம் பாடினான். அதனால் எந்தக் கவிதையைப் பாடினாலும் தேன் வந்து பாய்கிறது காதுகளில். அவனது நூற்றாண்டு விழா விரைவில் வருகிறது(1982). அந்த விழாவைப் பிரமாண்ட தேசிய விழாவாகக் கொண்டாட வேண்டும். அந்த விழாவின் நினைவாக அவனது கட்டுரைகளையும், கவிதைகளையும் நான் பதிப்பிக்கிறேன். அவனது கட்டுரைகள் பலவற்றை பல நோக்கங்களுக்காகப் பல பேர் மறைத்துவிட்டார்கள். அனைத்தையும் தேடி எடுத்துவிட்டேன். அந்தக் கட்டுரைகளே பெரிய கருத்துச் சுரங்கங்கள். இன்றைக்குச் சொல்ல வேண்டிய பல விஷயங்களை பாரதி அன்றைக்கே சொல்லி இருக்கிறான். அவனது சிந்தனையில்தான் எவ்வளவு தெளிவு, எவ்வளவு தன்னம்பிக்கை. அவனது காலத்தில் வேறு எவனுமே அப்படிச் சிந்தித்தாகத் தெரியவில்லை.

பாரதி நூற்றாண்டு விழா நினைவாக தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் பணம் ஒதுக்க வேண்டும். பத்து லட்சம் ரூபாயை பாங்கிலே போட்டு வைத்து, அந்த வட்டியில் இருந்து ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் நல்ல எழுத்தாளருக்குப் பரிசு தர வேண்டும். அதற்கு, "பாரதி ஞானப் பரிசு" என்று பெயர் வைக்க வேண்டும். சென்னையில் ஒதுக்குப்புறத்தில் பத்து ஏக்கருக்கு குறையாமல் ஒரு நிலத்தை வாங்கி பாரதி மண்டபம் கட்டி, மாதந்தோறும் பெளர்ணமி இரவில் ஆண்களும் பெண்களும் அங்கே போய் பாரதி பாடல்களைப் பாட வேண்டும். விடிய விடிய ஆனந்தக் கூத்தாட வேண்டும். அந்த இடத்துக்குப் "பாரதி நகரம்" என்று பெயர் வைக்க வேண்டும். அரசாங்க அலுவலகம் தோறும் பாரதி படம் இருக்க வேண்டும். சோவியத் யூனியனில் லெனினுக்கு என்ன மரியாதையோ, அந்த மரியாதையை பாரதிக்குத் தர வேண்டும்.

பாரதி ஒரு ஜாதிக்கு, ஒரு மதத்துக்கு உரியவனல்ல; அவன் சர்வ சமரசவாதி. அவன் வங்காளத்தில் பிறந்திருந்தால் நோபல் பரிசு தாகூருக்குப் போயிருக்காது.

துர்பாக்கியம் பிடித்த தமிழகமே!
பாரதியைக் கொண்டாடு! அதன் மூலம் பாரதத்தை நீ கொண்டாடுகிறாய்,
தேச பக்தியைக் கொண்டாடுகிறாய்,
தெய்வ பக்தியைக் கொண்டாடுகிறாய்,
தமிழ் மொழியைக் கொண்டாடுகிறாய்,
பாரதியைக் கொண்டாடாதவனுக்குத் தமிழன் என்று சொல்லிக் கொள்ள அருகதை இல்லை.


செப்டம்பர், 1978.

ஜெயநந்தனன்

நன்றி: தினமணி

மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு! (ஒரு)

காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
மானிட ஜாதியில் தனிமனிதன் நான்
படைப்பதனால் என்பேர் இறைவன்! (ஒரு)

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை! (ஒரு)

: பாடல்

மூலம்: தமிழ்நேசன்

மென் விடுதலை வேட்கை!

2 மறுமொழிகள்
உபுண்டுவின் அடுத்த வெளியீடு இந்திரிபிட் ஐபக்ஸ் வெளிவர இன்னும் பதினாறு நாட்களே உள்ளன. முந்தைய வெளியீடுகளின் போது எளிய வெளியீட்டு நிகழச்சிகளை நடத்தியது போலவே இம்முறையும் வெளியீட்டு நிகழ்ச்சியொன்றை உபுண்டு தமிழ் குழுமம் நடத்த உள்ளது. நவம்பர் ஒன்று அதற்குரிய நாளாக கருதுகிறோம்.

சிறிய மாற்றமாக எப்போதும் சென்னையிலேயே இதனைச் செய்து வந்த நாங்கள் இம்முறை சென்னையைத் தாண்டி கொண்டாட வேண்டும் எனக் கருதுகிறோம். தாங்கள் வசிக்கும் ஊரில் இத்தகைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய இயலுமாயின் அதனை வரவேற்கிறோம்.

நவம்பர் 01, 02 சனி ஞாயிறாக இருப்பதால் உபுண்டுவை மக்களுக்கு/ மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் விழாவாகவும் இது அமையலாம். உபுண்டு நிறுவும் முறை, உபுண்டுவில் இணைய வசதிகள், உபுண்டுவில் தமிழ், உபுண்டுவில் பாடல் கேட்பது எனப் பலவற்றையும் செய்முறையாக விளக்கிக் காட்டலாம்... தாங்கள் சார்ந்துள்ள அமைப்புகள்/ கல்விக் கூடங்களில் இதற்கான ஏற்பாட்டை செய்ய இயலுமாயின் மகிழ்ச்சி. உபுண்டு ஆசான் திட்டத்தின் துவக்க நிகழ்ச்சியாகவும் இது அமையலாம்.

எங்கள் குழுமத்திலுருந்து இருவர் உங்களை நாடி உபுண்டுவுடன் வருவோம். தங்களால் தங்களூரில் ஒருங்கிணைத்து உதவ முடியுமா? மூன்று... ஐந்து கணினிகள்... பத்து.. இருபது.. எவ்வளவு பேர் இருந்தாலும் சரி.. மென் விடுதலை வேட்கை இருந்தால் போதும்... எமது முகவரிக்கு விரைந்து மடல் அனுப்பவும். இச்செய்தியை பிறருக்கும் தெரியப்படுத்தி உதவுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

ஆமாச்சு

தொடர்பிற்கு இங்கே சுட்டவும்!

உபுண்டு ஆசான்

கைப்பிடி தோழர்கள்

கணிமொழி

இலக்கணத் தாத்தா!

0 மறுமொழிகள்
"இலக்கணத் தாத்தா" என்று அறிஞர் பெருமக்களால் அன்போடு அழைக்கப்பட்ட பெருமைமிக்கவர் வித்துவான் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை. தமிழ்த்தொண்டே தம் தொண்டு எனக் கொண்டுழைத்த அவர், புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை மரபைச் சார்ந்தவர். ஒரு பெரிய நிறுவனம் சாதிக்க வேண்டிய, சாதிக்க முடியாத அருந்தமிழ்ப் பணியை ஆற்றி மறைந்தவர்.

மே.வீ.வே. சென்னை, சைதாப்பேட்டை மேட்டுப்பாளையத்தில் 1896 ஆகஸ்ட் 31ம் தேதி பிறந்தார். தமது இளமைக் கல்வியை சைதாப்பேட்டை மாதிரிப் பள்ளியில் தொடங்கினார். ஆனால் வறுமையின் காரணமாகக் கல்வியைத் தொடர முடியவில்லை. அப்போது சென்னை வேப்பேரியில் உள்ள எஸ்.பி.சி.கே. அச்சகத்தில் அச்சுக் கோப்பாளராகவும், அஞ்சலகத்திலும், வழக்குரைஞர்களிடத்தும் உதவியாளராகவும் பணிபுரிந்தார். என்றாலும், தமிழார்வம் காரணமாக கா.ர.கோவிந்தராச முதலியாரிடத்தில் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். கலாநிலையம் சேஷாசல ஐயர் நடத்தி வந்த இரவுப் பள்ளியில் ஆங்கிலமும் கற்றார். அதன்பின்பு வித்துவான் தேர்வில் வெற்றி கண்டு பட்டம் பெற்றார்.
1920ல் சென்னை முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியிலும், புரசைவாக்கம் பெப்ரீஷியல் உயர்நிலைப் பள்ளியிலும் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்த இவர், உடல்நலக் குறைவு காரணமாகப் பணியை விட்டு விலக நேர்ந்தது. எனினும் பணியினை துறந்தாரே அன்றி தமிழைத் துறக்கவில்லை. 1928ல் தென்னிந்திய தமிழ்க் கல்விச் சங்கத்தின் துணைத் தலைவர் தேர்வு, வித்துவான் தேர்வு முதலியவற்றிற்குரிய தனி வகுப்புகளை நடத்தி வந்தார். தேர்வுகளில் தேர்ச்சி அடைவதற்காக மட்டும் பாடம் சொல்லித் தரும் இன்றைய ஆசிரியர்களைப் போல் அல்லாமல் தமது மாணவர்கள் அறிஞர் பலரும் வியக்கும்படி புலமைப் பெற்றுத் திகழ வேண்டும் என்று விரும்பியவர் மே.வீ.வே. அவர் தமது மாணவர்களை நோக்கி,

"வித்துவான் பட்டம் பெற்றீர்கள். அதனைக் காற்றில் பறக்கவிடும் பட்டமாக்காதீர்கள். மேன்மேலும் பயின்று தக்க அறிவைப் பெருக்கிக் கொள்ளுங்கள்; பிறருக்கும் வழங்குங்கள். வழியில் கேட்ட ஐயத்திற்கு வீட்டில் விடை எண்ணாதீர்கள். தக்கவாறு பொருள் உணர்ந்து கேட்போர் ஐயமற வெளியிடுங்கள்," என்று கூறுவதிலிருந்து தமது மாணாக்கர் எப்படித் திகழ வேண்டும் என்று விரும்பினார் என்பதை அறியலாம்.

புரசை - லுத்ரன் மிஷன் பள்ளிப் பாதிரியார்களால் நடத்தப்பட்டு வந்த குருகுல மதக் கல்லூரியில் இந்துமதச் சித்தாந்தப் பேராசிரியராக இவர் பணியாற்றிய போது ஜெர்மானியர் பலருக்கும் தமிழ் போதிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இவரிடம் தமிழ் பயின்ற ஜெர்மானியர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்,

டாக்டர். ஸ்டாலின்,
டாக்டர். கிராபே (இவர் பெரிய புராணத்தை ஜெர்மனியில் மொழிபெயர்த்த எல்வின் மகள்),
ஹில்டகார்டு மற்றும் பலர்.

இதேபோல, செக்.நாட்டு திராவிட மொழி ஆராய்ச்சியாளர் டாக்டர் கமில் சுவலபிலும் மே.வீ.வே.யின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவலபில், மே.வீ.வே. மீது அதிக மரியாதை கொண்டிருந்தார் என்பதை அவர் எழுதிய தமிழகச் சித்தர்களைப் பற்றிய "The Poets of the Powers" என்னும் நூலில் இவரின் புகைப்படத்தை வெளியிட்டு "எனது குரு" என்று குறிப்பிட்டதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
தமிழிலும், ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்ற மே.வீ.வே. பாடம் போதிக்கும் மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் எழுதுவதிலும் இவருக்கு இணை இவரே. டாக்டர். உ.வே.சா. கூட தாம் பதிப்பிக்கும் நூல்களில் சில குழப்பங்களுக்கு மே.வீ.வே.வையே நாடினார் என்பதும் இங்கே பதிவு செய்யக் கூடிய விஷயமாகும்.
தமிழ் மொழியை தொல்பொருள் ஆராய்ச்சியாக ஆராய்ந்த சிற்பி மே.வீ.வே. அரசாங்க இலக்கிய - இலக்கண பாடநூல் குழுவிலும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி திருத்தக் குழுவிலும் தலைமைப் பதிப்பாசிரியராகத் தமது இறுதிக் காலம் வரை இவர் இருந்துள்ளார். அத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கம்பராமாயணப் பதிப்புக் குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.

மே.வீ.வே. தாமாக முயன்று பதிப்பித்த நூல்கள்;

இறையனார் அகப்பொருள்
தொல்.சொல் (நச்சர் உரை)
தஞ்சைவாணன் கோவை
வீரசோழியம்
யாப்பருங்கலம் காரிகை
அஷ்டபிரபந்தம்
யசோதரகாவியம்
நளவெண்பா
முதலியன.

இலக்கண உலகில் இவர் பதிப்பித்த யாப்பருங்கலக்காரிகை இன்றும் அறிஞர்களால் போற்றப்படுகிறது. இதற்கு இணையான ஒரு பதிப்பு இன்றுவரை இல்லை என்றே கூறலாம். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்நூலை மீள்பதிப்பு செய்துள்ளது. இவர் பதிப்பாளராக மட்டுமன்றி படைப்பாளராகவும் இருந்துள்ளார்.

பத்திராயு(அ) ஆட்சிக்குரியோர்
திருக்கண்ணபிரானார்
அற்புதவிளக்கு
குணசாகரர் (அ) இன்சொல் இயல்பு
அரிச்சந்திர புராணச் சுருக்கம்
அராபிக்கதைகள்

முதலியன இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. இது தவிர;

அம்பலவாணன்
இளங்கோவன்

என்னும் இரு புதினங்களையும் படைத்துள்ளார்.

இவரது பதிப்புப்பணி - படைப்புப்பணி குறித்துத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. பின்வருமாறு கூறுகிறார்;

"திரு.வேணுகோபாலப்பிள்ளை விளம்பரமின்றி ஆரவாரமின்றி, அமைதியில் நின்று தமிழ்த்தாய்க்குத் தொண்டு செய்வோருள் ஒருவர். திரு.பிள்ளை, நூல்களைப் பிழையின்றி பதிப்பிப்பதில் பெயர் பெற்றவர். இவரது தமிழில் தமிழூர்தல் வெள்ளிடைமலை. தமிழறிஞர் வேணுகோபாலரின் பிழையற்ற உரைநடை, தற்போது கறைபட்டுள்ள தமிழுலகைத் தூய்மைச் செய்யும் பெற்றி வாய்ந்தது." (நவசக்தி 8.4.1938).
திருத்தமான செயல்களுக்கு அடிப்படை மொழியே. மொழி செப்பமாக இல்லாவிட்டால் கருதிய எச்செயலும் கருதியபடி நடவாது என்பதை உணர்ந்த மே.வீ.வே. மொழியில் பிழை நேராதபடி எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளார். "தமிழ் நூல்கள் சிறியவையாயினும் பெரியவையாயினும் பிழையின்றி திருத்தமான முறையில் கண்கவர் வனப்புடன் வெளிவருதல் வேண்டும் என்பதே என் வாழ்வின் குறிக்கோள்" என்னும் அவரின் கூற்றே இதற்குப் போதிய சான்று.

1939-45ல் உலகையே உலுக்கிய இரண்டாம் உலகப்போர் சென்னையையும் விட்டு வைக்கவில்லை. அதனால் பாதிப்புக்குள்ளான பலர் பல்வேறு இடங்களில் சிதறினர். மே.வீ.வே. காஞ்சிபுத்துக்கு இடம் பெயர்ந்தார். அங்கும் அவரது தமிழ்ப்பணி ஓயவில்லை. "கச்சித் தமிழ்க் கழகம்" என்னும் ஓர் அமைப்பை நிறுவி பலருக்கும் தமிழ் உணர்வை ஊட்டினார். அத்துடன் சீவகசிந்தாமணி குறித்து நெடியதோர் சொற்பொழிவாற்றினார். இவரது பேச்சைக் கேட்ட பலரும் இவரை சமண மதத்தவர் என்றே எண்ணலாயினர். அதனால்தான் திரு.வி.க. "சிந்தாமணிச்செல்வர்" என்னும் பட்டமளித்து இவரைப் பாராட்டினார். சுவாமி விபுலானந்த அடிகளும் "உமது தமிழறிவு நாட்டிற்குப் பயன்படுவதாகுக," என்றும் பாராட்டி மகிழ்ந்தார்.

இது தவிர;

செந்தமிழ்க்களஞ்சியம் (அறிஞர் அண்ணா வழங்கியது)
கன்னித் தமிழ்க்களஞ்சியம்
கலைமாமணி

ஆகிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். நியூயார்க் உலகப் பல்கலைக்கழகம் மே.வீ.வே.க்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.
படிப்பது, எழுதுவது, பதிப்பிப்பது, பாடம் சொல்லித்தருவது என்ற வட்டத்துக்குள்ளேயே தமது வாழ்நாளைக் கழித்தவர். எந்த ஒரு நூலையும் நன்கு படித்து தேர்ந்த பின்னரே அதைப் பற்றிய கருத்தையோ விளக்கத்தையோ கூறும் இயல்புள்ள இவர், அரைகுறையாகப் படித்துவிட்டு கருத்துக் கூறுவது தவறு என்று பிறருக்கு அறிவுரை கூறுவார்.
தமிழ் இலக்கிய உலகில் 89 ஆண்டுகள் வரை உலவிய மே.வீ.வே. 4.2.1985 அன்று இரும்புண்ட நீரானார். நல்லவர்கள் உதிப்பதும் - மறைவதும் நன்நாளில் என்பதற்கேற்ப இவர் கோகுலாஷ்டமியில் பிறந்து தைப்பூசத்தில் மறைந்தார். இவரது பெருமையை பறைசாற்றும் வகையில் ஜெர்மனி கோல் பல்கலைக்கழகம் இவரது பெயரைச் சூட்டி கெளரவித்தது. தமிழக அரசு இவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடி மகிழ்ந்தது.

இவை அனைத்தினூடே கவியரசு கண்ணதாசன் உள்ளிட்ட பலரும் எழுதிய "பாவலர் போற்றும் மகாவித்துவான் மே.வீ.வே." என்னும் தொகுப்பு நூல் இவரது புகழை இன்றளவும் பேசிக்கொண்டிருக்கிறது.

டாக்டர் ப.சரவணன்

நன்றி: தமிழ்மணி (தினமணி)
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES