இன்று கவியரசர் கண்ணதாசன் நினைவு நாள்.
கவியரசு கண்ணதாசன் மறைந்து 27 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இப்போதும் ஒவ்வோர் அரசியல் நிகழ்வுகளின் போதும், இலக்கியக் கூட்டங்களிலும் கவியரசு கண்ணதாசனைப் பற்றிய நினைவோ, செய்தியோ இடம்பெறுகிறது என்பதே, அந்தக் கலைஞன் எந்த அளவுக்கு நமது தமிழ்ச் சமுதாயத்தின் உணர்வுகளுடன் ஒன்றியவனாக இருக்கிறான் என்பதற்கு உதாரணம்.
மகாகவி பாரதி, தன்னிலும் உயர்ந்த கவிஞனாக அடையாளம் காட்டுவது கவிச் சக்ரவர்த்தி கம்பனை என்றால், கவியரசு கண்ணதாசனோ, மகாகவி பாரதிதான் தனது மனம் கவர்ந்த கவிஞன் என்று வெளிப்படையாகப் பல நேரங்களில் எடுத்துரைத்திருக்கிறார். கவியரசரின் கவிதைகளில் நமக்கெல்லாம் ஓர் ஈர்ப்பு என்றால், கவியரசருக்கோ மகாகவி பாரதியிடம் இருந்தது காதல், மரியாதை, மயக்கம், பக்தி!
கவியரசு கண்ணதாசன் தனது மனதில்பட்டதை, தான் உண்மை என்று நம்பியதை, உணர்ந்ததை எதற்கும் அஞ்சாமல், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்தியம்பியவர்.
"போற்றுபவர் போற்றட்டும்; புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன். ஏற்றதொரு கருத்தை எனது உள்ளம் என்றால் எடுத்துரைப்பேன்; எவர்வரினும் நில்லேன்; அஞ்சேன்,"
என்பதைத் தனது கொள்கையாகக் கொண்டவர்.
அந்தவகையில், கவியரசர் நடத்திய "கண்ணதாசன்" இலக்கிய மாத இதழில் அவர் எழுதிய தலையங்கங்கள் அனைத்தும், அந்த மாமனிதனின் சீரிய சிந்தனையையும், தொலைநோக்குப் பார்வையையும், ஆணித்தரமான கருத்துகளையும் பிரதிபலித்தன. கவியரசருக்கு ஒரு கனவு இருந்தது. அதை 1978 செப்டம்பர் மாதக் "கண்ணதாசன்" மாத இதழில் தலையங்கமாக வெளிப்படுத்துகிறார் கவியரசர்.
"மகாகவி" பாரதி பற்றி "கவியரசர்" கண்ணதாசன் எழுதிய அந்தத் தலையங்கம் இன்றைய தலைமுறையினர் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அதுமட்டுமல்ல, ஒரு கவிஞன் தனக்கு முந்தைய தலைமுறைக் கவிஞனை எப்படி மதிக்க வேண்டும் என்பதையும், எந்த அளவுக்கு கவியரசர் பாரதியை நேசித்தார் என்பதையும் எடுத்துக்காட்டும் அந்தத் தலையங்கத்தை அப்படியே தருகிறோம்.
ஒரு கவிஞனின் சிறப்பை அவன் வாழ்ந்த காலத்தைக் கொண்டே நிர்ணயிக்க வேண்டும். பாரதி வாழ்ந்த காலம் தமிழுக்கு மிகவும் மோசமான காலம். தமிழ் படித்தவனுக்கு மரியாதை இல்லாத காலம். பிள்ளையைத் தமிழ் படிக்க வைப்பது வீண் என்று பெற்றோர்கள் நினைத்த காலம். ஆங்கிலம் படித்து குமாஸ்தாவாவதிலே உள்ள சுகம் தமிழ் படிப்பதிலே இல்லை என்று நினைத்த காலம். அதிலேயும் தமிழ்க் கவிதையை எவரும் சீந்தாத காலம். ஒரு
நெல்லையப்பரையும், வ. இராமசாமி ஐயங்காரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு அவர்கள் இரசித்தது போதும் என்று எழுதிக் குவித்தவன், பாரதி. இன்று என் பாடல்களை நான்கு கோடி மக்கள் இரசிக்கிறார்கள்; பாடுகிறார்கள். அதைக் கண்ணால் பார்க்கும்போதும், காதால் கேட்கும்போதும் எனக்கு உற்சாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மேலும் மேலும் நான் எழுதுகிறேன். அந்த வாய்ப்பே இல்லாமற் போனவன் பாரதி. தன் கவிதையை யார் இரசிக்கிறார்கள் என்று தெரியாமலேயே அவன் பாடினான். அதனால் தான் அவ்வளவு பாடல்களும் மனத்தின் அடித்தளத்தில் இருந்து வந்திருக்கின்றன. எல்லாம் இயற்கை; ஒன்றுகூட செயற்கை இல்லை. கம்பனுக்குப் பிறகு பாரதி ஒருவனே அப்படிப் பாடியவன்.
இடையில் பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. அப்போது எவ்வளவோ காவியங்கள் வெளிவந்திருக்கின்றன. எதுவும் பாரதிக்குப் பக்கத்தில் நிற்க முடிந்ததில்லை. இன்னும் அந்த இடத்தை நிரப்ப ஒருவனில்லை. பாரதியோடு பலர் என்னை ஒப்பிடும்போது எனக்கே மிகவும் வெட்கமாக இருக்கும். என் பாடல்களில் அவசரத்திற்காக எழுதப்பட்ட செயற்கைப் பாடல்களும் உண்டு. பாரதி முழுக்க முழுக்கத் தன்னுணர்வுக் கவிஞன்.
"காலம் எப்படி வரவேற்கும்; யார் எப்படி இரசிப்பார்கள்?" என்பது தெரியாமலேயே தனக்குத் தோன்றியதை எல்லாம் பாடினான். அதனால் எந்தக் கவிதையைப் பாடினாலும் தேன் வந்து பாய்கிறது காதுகளில். அவனது நூற்றாண்டு விழா விரைவில் வருகிறது(1982). அந்த விழாவைப் பிரமாண்ட தேசிய விழாவாகக் கொண்டாட வேண்டும். அந்த விழாவின் நினைவாக அவனது கட்டுரைகளையும், கவிதைகளையும் நான் பதிப்பிக்கிறேன். அவனது கட்டுரைகள் பலவற்றை பல நோக்கங்களுக்காகப் பல பேர் மறைத்துவிட்டார்கள். அனைத்தையும் தேடி எடுத்துவிட்டேன். அந்தக் கட்டுரைகளே பெரிய கருத்துச் சுரங்கங்கள். இன்றைக்குச் சொல்ல வேண்டிய பல விஷயங்களை பாரதி அன்றைக்கே சொல்லி இருக்கிறான். அவனது சிந்தனையில்தான் எவ்வளவு தெளிவு, எவ்வளவு தன்னம்பிக்கை. அவனது காலத்தில் வேறு எவனுமே அப்படிச் சிந்தித்தாகத் தெரியவில்லை.
பாரதி நூற்றாண்டு விழா நினைவாக தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் பணம் ஒதுக்க வேண்டும். பத்து லட்சம் ரூபாயை பாங்கிலே போட்டு வைத்து, அந்த வட்டியில் இருந்து ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் நல்ல எழுத்தாளருக்குப் பரிசு தர வேண்டும். அதற்கு, "பாரதி ஞானப் பரிசு" என்று பெயர் வைக்க வேண்டும். சென்னையில் ஒதுக்குப்புறத்தில் பத்து ஏக்கருக்கு குறையாமல் ஒரு நிலத்தை வாங்கி பாரதி மண்டபம் கட்டி, மாதந்தோறும் பெளர்ணமி இரவில் ஆண்களும் பெண்களும் அங்கே போய் பாரதி பாடல்களைப் பாட வேண்டும். விடிய விடிய ஆனந்தக் கூத்தாட வேண்டும். அந்த இடத்துக்குப் "பாரதி நகரம்" என்று பெயர் வைக்க வேண்டும். அரசாங்க அலுவலகம் தோறும் பாரதி படம் இருக்க வேண்டும். சோவியத் யூனியனில் லெனினுக்கு என்ன மரியாதையோ, அந்த மரியாதையை பாரதிக்குத் தர வேண்டும்.
பாரதி ஒரு ஜாதிக்கு, ஒரு மதத்துக்கு உரியவனல்ல; அவன் சர்வ சமரசவாதி. அவன் வங்காளத்தில் பிறந்திருந்தால் நோபல் பரிசு தாகூருக்குப் போயிருக்காது.
துர்பாக்கியம் பிடித்த தமிழகமே!
பாரதியைக் கொண்டாடு! அதன் மூலம் பாரதத்தை நீ கொண்டாடுகிறாய்,
தேச பக்தியைக் கொண்டாடுகிறாய்,
தெய்வ பக்தியைக் கொண்டாடுகிறாய்,
தமிழ் மொழியைக் கொண்டாடுகிறாய்,
பாரதியைக் கொண்டாடாதவனுக்குத் தமிழன் என்று சொல்லிக் கொள்ள அருகதை இல்லை.
செப்டம்பர், 1978.
ஜெயநந்தனன்
நன்றி: தினமணி
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு! (ஒரு)
காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
மானிட ஜாதியில் தனிமனிதன் நான்
படைப்பதனால் என்பேர் இறைவன்! (ஒரு)
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை! (ஒரு)
: பாடல்
மூலம்: தமிழ்நேசன்
மறுமொழிகள்
0 comments to "கவியரசர் கண்ணதாசன் நினைவு நாள்"
Post a Comment