"திராவிட சாஸ்திரி!"

0 மறுமொழிகள்

செந்தமிழ் நடைகொண்ட "திராவிட சாஸ்திரி!"

தமிழை உயர்தனிச் செம்மொழி எனச்சுட்டிய ஆராய்ச்சியாளர். தாய்மொழியாம் தமிழுக்கு இயல், இசை, நாடக அணிகளைச் சூட்டி அழகு பார்த்தவர்! தன்னால் தமிழ் வாழவேண்டும் என்ற உணர்வாளர். தாய்மொழியிலேயே கல்வி கற்க வலியுறுத்தியவர். இம்மண்ணில் முப்பத்தி மூன்று ஆண்டுகளே வாழ்ந்தாலும், தமிழ்-தமிழர் முன்னேற்றத்துக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். "சூரிய நாராயண சாஸ்திரி" என்னும் தமது வடமொழிப் பெயரை முதன் முதலில் "பரிதிமாற் கலைஞன்" எனத் தமிழ்ப் பெயராக்கிக் கொண்டவர். நாடகத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர். நவீனத் தமிழிலக்கிய வரலாற்று ஆராய்ச்சிக்கு வித்திட்டவர். "சூரியநாராயண சாஸ்திரி", "பரிதிமாற் கலைஞர்" எனப் பெயர் கொண்ட பின்னரும், "திராவிட சாஸ்திரி" என விடாது மக்களால் புகழப்பட்டவர்!
மதுரைக்கு அருகில் உள்ள விளாச்சேரி என்னும் சிற்றூரில் கோவிந்த சாஸ்திரி - இலட்சுமியம்மாள் வாழ்விணையருக்கு 6.7.1870ம் ஆண்டு பிறந்தார் பரிதிமாற் கலைஞர்.
தமிழ்ப் பள்ளியில் சேர்ந்து அன்னைத் தமிழும் ஆரம்பக் கணிதமும் கற்றார். தம் தந்தையாரிடம் வடமொழியையும் முறையாகப் பயின்றார். பின்னர் மதுரை, பசுமலைக் கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார். அக்கல்லூரித் தமிழாசிரியர் மூலம் தமிழ் இலக்கணம் நன்கு கற்றார். மதுரையில் இருந்த உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து தமது கல்வியை மேலும் தொடர்ந்தார். மதுரைக் கலாசாலைத் தமிழாசிரியர் மகாவித்துவான் சு.சபாபதி முதலியாரிடம் தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களையும் கசடறக் கற்றார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் எஃப்ஏ தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்தார். இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி வழங்கிய உதவித் தொகையையும் பெற்றார். சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்ந்தார். பரிதிமாற் கலைஞர் கல்லூரியில் பயிலும் போதே "விவேக சிந்தாமணி" என்னும் இதழில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். தமிழிலும் வேதாந்த சாத்திரத்திலும் பல்கலைக் கழக அளவில் 1892ம் ஆண்டு நிகழ்ந்த பி.ஏ. தேர்வில் முதல் மாணவராகத் தேறினார். தமிழில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றதையொட்டி மன்னர் பாஸ்கர சேதுபதி பெயரால் நிறுவப்பட்ட பொற்பதக்கத்தையும் பரிசாகப் பெற்றார்.

யாழ்ப்பாணத் தமிழறிஞர் சி.வை.தாமோதரம் பிள்ளை அக்காலத்தில் சென்னையில் வாழ்ந்து வந்தார். பல்கலைக்கழக அளவில் தமிழில் முதலிடம் பெற்ற பரிதிமாற் கலைஞரைத் தமது இல்லத்துக்கு அழைத்தார். ஒரு வினாத்தாள் கொடுத்து விடை எழுதித் தருமாறு கூறினார். பரிதிமாற் கலைஞர் அரைமணி நேரத்தில் விடை எழுதி அளித்தார். "உமது விடைகள் உயரிய செந்தமிழ் நடையில் புதுக் கருத்துகளைக் கொண்டு விளங்குகின்றன. உம்மைத் "திராவிட சாஸ்திரி" என்று அழைத்தலே சாலப் பொருந்தும்," என்று பாராட்டி, தாம் பதிப்பித்த இலக்கண, இலக்கிய நூல்களைத், தம் கையெழுத்திட்டு அன்பளிப்பாக வழங்கினார்.

பரிதிமாற் கலைஞர், தமிழ் மீது உள்ள ஆராக்காதலால், தமிழாசிரியர் பணியை, தாம் பயின்ற கிறிஸ்தவக் கல்லூரியில் ஏற்றார். கல்லூரி அளவில் தமிழாசிரியர் பணியை விரும்பி ஏற்றுக்கொண்ட முதல் பட்டதாரி இவரேயாவார்.

பரிதிமாற் கலைஞர் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிப் புலமை படைத்தவர். மாணவர்களுக்கு இலக்கண, இலக்கியத்தை சுவையுடன் மேலும் கற்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும்படியாகக் கற்பிப்பார். சமகாலக் கருத்துகளைப் பண்டைய இலக்கியம் கொண்டும், தமிழர் பண்பாடு, நாகரிகம், மொழி வரலாறு முதலியவற்றை ஆராய்ச்சி நோக்கில், வரலாற்றுச் சான்றுகளோடு விளக்குவார். கல்லூரியில் பயிலும் மாணவர்களுள் இயல்பாகவே தமிழறிவும், தமிழார்வமும் உடைய மாணவர்களைத் தமது இல்லத்துக்கு அழைத்து அவர்களுக்கு தொல்காப்பியம், நன்னூல், இறையனார் அகப்பொருள், நம்பியகப்பொருள், மாறனலங்காரம், தண்டியலங்காரம் முதலியவற்றையும், சைவ சமய சாத்திர நூல்களையும் கற்பித்தார். ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு நடத்தினார். அம் மாணவர்கள் "இயற்றமிழ் மாணவர்கள்" என்று அழைக்கப்பட்டனர்.

1901ம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் மதுரையில் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. அத்தொடக்க விழாவில் பரிதிமாற் கலைஞர் கலந்து கொண்டு தமிழ்ச் சங்கம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விவரித்தார். தமிழ்ச்சங்கம் நடத்திய "செந்தமிழ்" இதழில், தமிழின் சிறப்புக் குறித்து "உயர்தனிச் செம்மொழி" என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதினார். தமிழைச் செம்மொழி என்று முதன் முதலில் மெய்ப்பித்து நிறுவியவர் பரிதிமாற் கலைஞரே ஆவார்.

பரிதிமாற் கலைஞர், "சென்னைச் செழுந்தமிழுரைச் சங்கம்" என்ற சங்கத்தை நிறுவி, அதன் மூலம் கல்லூரித் தமிழ்ப் பாடங்களுக்கு உரை எழுதி அளித்தார். 1902ம் ஆண்டு கல்லூரிப் பாடத்திட்டத்திலிருந்து தமிழை விலக்குவதற்குச் சென்னைப் பல்கலைக்கழகம் முடிவெடுத்தது. அதையறிந்த பரி திமாற் கலைஞர், மு.சி.பூரணலிங்கம் பிள்ளையுடன் இணைந்து அம்முடிவை முறியடித்தார்.

"தமிழ், தென்னாட்டில் வழங்கும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலியவற்றுக்கெல்லாம் தலைமையானது. எனவே, தமிழ் உயர் மொழியாகும். தான் வழங்கும் நாட்டில் பயிலும் ஏனைய மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல ஆற்றல் சான்றதே தனிமொழி. தமிழ் தனித்து இயங்கவல்லதால் தனிமொழியாம்," என்று விளக்கினார். "திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூயமொழியே செம்மொழியாம்," என்பது செம்மொழிக்கான இலக்கணம். தமிழ் மொழி, செம்மொழிக்கான இலக்கணத்தைக் கொண்டுள்ளது என்பதை நூறாண்டுகளுக்கு முன்பே எடுத்துரைத்தவர் பரிதிமாற் கலைஞர்.

குழந்தைகள் பன்னிரண்டு வயது வரை தமிழ் மொழியிலேயே கல்வி கற்க வேண்டுமென்று ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே முழங்கியவர்.
"மதிவாணன்" என்ற நாவல், "ரூபாவதி" அல்லது "காணாமற் போன மகள்", "கலாவதி" முதலிய உரைநடை நாடகங்கள், "மானவிஜயம்" என்ற செய்யுள் நாடகம், "தனிப்பாசுரத் தொகை", "பாவலர் விருந்து", "சித்திரகவி விளக்கம்" முதலான கவிதை நூல்கள், "தமிழ் மொழியின் வரலாறு" என்ற ஆய்வு நூல், "ஸ்ரீமணிய சிவனார் சரித்திரம்" என்ற வாழ்க்கை வரலாறு நூல், "நாடகவியல்" என்ற நாடக இலக்கண நூல் ஆகிய நூல்களை எழுதி உலகுக்கு அளித்துள்ளார் பரிதிமாற் கலைஞர்.

"தமிழ்ப்புலவர் சரிதம்" என்ற கட்டுரை நூலில், புகழ்பெற்ற ஒன்பது புலவர்களுடன் தமிழறிஞர்கள் பலரின் வரலாற்றை எழுதியுள்ளார். சபாபதி முதலியார் இயற்றியுள்ள "திருக்குளந்தை வடிவேல் பிள்ளைத் தமிழ்," "மதுரைமாலை" ஆகிய இரு நூல்களையும், "கலிங்கத்துப்பரணி", "நளவெண்பா", "திருவுத்தரக்கோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத் தமிழ்", மழவை மகாலிங்க அய்யரின் "இலக்கணச் சுருக்கம்", தாண்டவராய முதலியாரின் "பஞ்ச தந்திரம்", முதலிய 67 நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.

பரிதிமாற் கலைஞர் 2.1.1903ம் ஆண்டு தமது முப்பத்து மூன்றாம் வயதில் எலும்புருக்கி நோயால் தாக்கப்பட்டு மறைந்தார் என்பது முத்தமிழுக்கு நேர்ந்த பேரிழப்பாகும்.
"பரிதிமாற் கலைஞரால் இயற்றப்பட்ட நூல்கள் யாவும், தமிழ் அன்னைக்கு ஏற்ற அணிகள். அவைகளுள் ஒன்று "தமிழ் மொழியின் வரலாறு", தமிழ் நாட்டில், தமிழ் மொழி வரலாற்றுக்கு வழிகாட்டியவர் பரிதிமாற் கலைஞரே. அவர் நீண்ட நாள் உலகில் வாழ்ந்திருந்தால் தமிழ் அன்னை இழந்த அரியாசனத்தில் ஏறி அமர்ந்திருப்பாள். முத்தமிழும் ஆக்கம் பெற்றிருக்கும்" என்று புகழ்ந்துரைத்துள்ளார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.
சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் 1970ம் ஆண்டு பரிதிமாற் கலைஞருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. பரிதிமாற் கலைஞரின் பிறந்த ஊரான விளாச்சேரியில் அவர் வாழந்த வீட்டை நினைவு இல்லமாக்கிப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அவரது நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

தமிழே தன் இறுதி மூச்சாக வாழ்ந்தவர் பரிதிமாற் கலைஞர்! அவர் புகழ் "செம்மொழித் தமிழ்" உள்ளவரை சீரோடும் சிறப்போடும் நிலைத்து நீடு நிற்கும்!

பி. தயாளன்

நன்றி: தமிழ்மணி (தினமணி)
மின்தமிழ்
இடுகை: கண்ணன் நடராஜன்

மறுமொழிகள்

0 comments to ""திராவிட சாஸ்திரி!""

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES