Showing posts with label Ramnad Raja. Show all posts
Showing posts with label Ramnad Raja. Show all posts

பாண்டித்துரைத் தேவர்!

0 மறுமொழிகள்
பைந்தமிழ் காத்த பாண்டித்துரைத் தேவர்!

"செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்கு அளித்தேனே!"

என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு ஓர் உதாரணம் வள்ளல் பாண்டித்துரைத்தேவர்.

"சேது சமஸ்தானம்" என அழைக்கப்பட்ட இராமநாதபுரம் மாமன்னராக விளங்கிய பாண்டித்துரைத்தேவர், வள்ளல் பொன்னுசாமி - பர்வதவர்த்தினி நாச்சியார் தம்பதிக்கு 1867ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி இராமநாதபுரம், இராஜவீதி "கவுரி விலாசம்" என்ற இல்லத்தில் பிறந்தார்.

பெற்றோர் இட்ட பெயர் உக்கிரபாண்டியன்.

நாடறிந்த பெயரே பாண்டித்துரைத் தேவர்.
பொன்னுசாமி தேவர் இறந்தபோது பாலகராக இருந்த பாண்டித்துரைத் தேவரை வளர்க்கும் பொறுப்பை ஏஜண்ட் சேஷாத்திரி அய்யங்கார் ஏற்றார்.

அழகர் ராஜு எனும் புலவர் இளம் பருவம் முதல் பாண்டித்துரைத் தேவருக்கு தமிழ் அறிவை ஊட்டி வந்தார். வக்கீல் வெங்டேசுவர சாஸ்திரி ஆங்கில ஆசிரியராய் இருந்தார். பாண்டித்துரைத் தேவர் தமிழ், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றார்.

சிவ பக்தராகத் திகழ்ந்த பாண்டித்துரைத் தேவர் தந்தையின் அரண்மனையை அடுத்து மாளிகை ஒன்றைக் கட்டினார். சிவபெருமான் மீதான பக்தி காரணமாக அம்மாளிகைக்குச் "சோமசுந்தர விலாசம்" என்று பெயரிட்டார்.

1901ம் ஆண்டு சொற்பொழிவாற்றுவதற்காக வள்ளல் பாண்டித்துரைத்தேவர் மதுரை வருகை தந்தார். அப்போது, "திருக்குறள் பரிமேலழகர் உரை" நூலை, விழா ஏற்பாடு செய்த அமைப்பாளரிடம் கேட்டார் தேவர். எங்கு தேடியும் அந்நூல் கிடைக்காதது கண்டும், பாண்டிய மன்னர்கள் முச்சங்கம் கண்டு முத்தமிழ் வளர்த்த மதுரையில், திருக்குறள் பரிமேலழகர் உரை கிடைக்காதது கண்டும், தமிழ்ப் பற்றுள்ள தேவரின் மனம் வருந்தியது.



தேவர் உடனடியாக, தமிழ் வளர்த்த மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். பழந்தமிழ் நூல்கள் அனைத்தையும் வெளியிட விரும்பினார். தமிழ்ச் சங்கம் சார்பில் தரமான தமிழ்க் கல்லூரியும் அமைத்தார் தேவர்.

பாண்டித்துரைத்தேவர் தலைமையில் 1901ம் ஆண்டு மே 24ம் தேதி, மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ, பெரும்புலவர்களின் ஆலோசனைக் கூட்டம் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் கூட்டப்பட்டது.

நற்றமிழ் வளர்த்த மதுரையில் பாண்டித்துரைத்தேவர், தலைவராக வீற்றிருக்க 1901ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் மலர்ந்து, தமிழ் மணம் வீசியது.

அந்நாளில்தான் பழந்தமிழ்க் கருவூலமாக, பாண்டியன் நூலகமும் உருவானது. "தமிழ் ஆய்வு மையம்" அமைத்த பாண்டித்துரைத்தேவர், மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில், ஆய்வு நுணுக்கமும், ஆழமான புலமையும் மிக்க பெரும் புலவர்களின் கட்டுரைப் பெட்டகமாக 1903ல் "செந்தமிழ்" என்னும் நற்றமிழ் மாத இதழும் மலரச் செய்தார். அந்த "செந்தமிழ்" ஏடு நூற்றாண்டு விழா கண்ட ஏடு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சமயத்தில் பாண்டித்துரைத் தேவர் வெளியிட்ட ஓர் அறிக்கை மூலம், பாரதியாரின் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" பாட்டு பிறந்த கதையை பாராதிதாசனின் "பாரதியாரோடு பத்தாண்டுகள்" நூல் வாயிலாக அறியலாம்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தை முன்னின்று நடத்திக் கொண்டு இருந்த பாண்டித்துரைத் தேவர் செய்தி ஏடுகளில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதன் கருத்து பின் வருமாறு:-
தமிழ்நாட்டைப் பற்றி சுருக்கமாக எல்லாரும் பாடக் கூடிய மெட்டில் தமிழ்த் தாய் வாழ்த்து எழுதி அனுப்புக. நல்லதற்குப் பரிசு தருகின்றோம் என்பது.

அந்த போட்டியில் கலந்து கொள்ளும்படி நானும் வாத்தியார் சுப்பிரமணியன் முதலியவர்களும் பாரதியாரைக் கேட்டோம்.

அவர் முதலில் மறுத்தார். எங்களுக்காகவாவது எழுதுக என்றோம்

"செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்று தொடங்கி பாட்டொன்று எழுதினார் என்று குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.

சேது சமஸ்தானப் பெரும் புவலர்களாக விளங்கிய;

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர்,
இரா.இராகவையங்கார்,
மு.இராகவையங்கார்,
அரசன் சண்முகனார்,
இராமசாமிப்புலவர்,
சபாபதி நாவலர்,
சிங்காரவேலு முதலியார்,
நாராயண அய்யங்கார்,
சுப்பிரமணியக் கவிராயர்,
சிவஞானம் பிள்ளை,
சிவகாமி ஆண்டார்,
யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர்,
புலவர் அப்துல்காதிர் இராவுத்தர்,
எட்டயபுரம் சாமி அய்யங்கார்,
பரிதிமாற்கலைஞர்,
அரங்கசாமி அய்யங்கார்,
சி.வை.தாமோதரம் பிள்ளை

ஆகியோரின் தரமான படைப்புகள் வெளிவர, மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான "செந்தமிழ்" ஏடே உதவியது.

உலக மொழிகளிலேயே, தமிழ்மொழி, செம்மொழி மட்டுமல்ல, உயர்தனிச் செம்மொழி என்று முதன் முதலாக ஆதாரத்துடன் ஆய்வு செய்து வெளியிட்டவர், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவு பெற்ற பரிதிமாற்கலைஞர் ஆவார்.

அழுத்தமான தமிழ்ப் பற்றின் காரணமாக "சூரிய நாராயண சாஸ்திரி" என்ற தன் வட மொழிப் பெயரை "பரிதிமாற் கலைஞர்" என்று பைந்தமிழில் மாற்றிக் கொண்டவர். மேலும் முதன் முதலாக "தமிழ் மொழி வரலாறு" படைத்த சிறப்பும் உடைய பெரும்புலவரே பரிதிமாற்கலைஞர்.

மேலும் சென்னைப் பல்கலைக்கழத்திலிருந்தே தமிழ்ப்பாடத்தை அகற்ற, வெள்ளை அரசு திட்டமிட்டபோது, அதைத் தடுத்து நிறுத்திய பெருமை, பாண்டித்துரைத் தேவர் அமைத்த மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தையே சாரும்! மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இருக்க உரிய தீர்மானம் நிறைவேற்றப் பாடுபட்டவர் பரிதிமாற்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ்ச் செம்மொழி" என்று அன்றே மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் ஆய்வு செய்து பரிதிமாற் கலைஞர் வெளியிட ஆதாரமாக, ஆதரவாக விளங்கிய பாண்டித்துரைத் தேவரும், பாஸ்கரசேதுபதியும் நன்றியுடன் போற்றத்தக்கவர்கள்.

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் ஓட்டிய வ.உ.சியின் சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்கிய பாண்டித்துரைத் தேவர் பின்னர் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

சிவஞானபுரம் முருகன் காவடிச் சிந்து, சிவஞான சுவாமிகள் பேரில் இரட்டை மணிமாலை, இராஜ இராஜேஸ்வரி பதிகம், தனிப்பாடல்கள் உள்ளிட்டவற்றை இயற்றியுள்ளார் பாண்டித்துரைத் தேவர்.

தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை. செத்தாலும் கூட செந்தமிழாய் பூப்பார்கள். அப்பூக்களில் ஒருவர் பாண்டித்துரைத் தேவர்.

புலவர் முத்து வேங்கடேசன்

நன்றி: தமிழ்மணி (தினமணி)
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES