மண்ணின் குரல்: பெப்ரவரி 2016:கழிஞ்சமலை சமணர் சின்னமும் கல்வெட்டுக்களும்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. மதுரைக்கு அருகே அரிட்டாபட்டி என அழைக்கப்படும் ஒரு பகுதியில் இளமைநாயகிபுரம் எனும் ஒரு சிற்றூரில் இருக்கும் கழிஞ்சமலை ​மலைப்பகுதியில் இரண்டு தமிழி கல்வெட்டுக்களும், 10ம் நூற்றாண்டு சமணப் பாறைச் சிற்பமும் அதன் கீழ் ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளன. 

1971ம் ஆண்டில்  பேராசிரியர். கே.வி.ராமன்,  டாக்டர்.​சுப்பராயலு இருவரும் முதல் தமிழி கல்வெட்டினையும் வட்டெழுத்துக் கல்வெட்டினையும் கண்டுபிடித்தனர். அதன் பின்னர் 2003ம் ஆண்டில் ஆய்வாளர்கள் பொ.ராசேந்திரன், சொ.சாந்தலிங்கம் ஆகியோர் இரண்டாவது தமிழி கல்வெட்டினைக் கண்டுபிடித்தனர். 

​இங்கிருக்கும் இரண்டு தமிழி கல்வெட்டுக்களும் கி.மு 3ம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.

அதற்கு அடுத்தார்போல சமண தீர்த்தங்கரர் சிற்பமும் வட்டெழுத்தும் பக்திகாலத்திற்க்குப்பின்னர் அதாவது 9, 10ம் நூற்றாண்டில் மீண்டும் சமணம் எழுச்சி பெற்ற காலத்தில் ​பொறிக்கப்பட்டது. சமண மறுமலர்ச்சியை மீண்டும் உண்டாக்கிய ​அச்சணந்தி முனிவர் ​இந்த தீர்த்தங்கரர் உருவத்தை செதுக்க வைத்து அதன் கீழ் இந்தக் கல்வெட்டுனைப் பொறிக்கச் செய்திருக்கின்றார்.  அச்சநந்தி செய்வித்த திருமேனி என்ற குறிப்பும் இந்த மலையின் பெயர் திருப்பிணையன் மலை,  ஊரின் பெயர் பாதிரிக்குடி ஆகிய தகவல்களும் கல்வெட்டாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. 

தமிழ் வட்டெழுத்து என்பது  தமிழ் பிராமியிலிருந்து (தமிழி) கி.பி3ம் நூற்றாண்டுக்குப் பின்னர் கி.பி 13ம் நூற்றாண்டு வரை   பாண்டிய நாட்டில் மிக அதிகமாக வழக்கில் இருந்தது. ஆனால் சோழர் ஆட்சியில்  தமிழ் எழுத்துக்கள் படிப்படியாக முக்கியத்துவம் பெற்று வளர இந்த வட்டெழுத்து எழுத்து வடிவமோ கேரளப்பகுதியில் பயன்பாட்டில் விரிவடைந்து கிரந்தத்தோடு கலந்து மளையாளமாக உருவெடுத்தது என்ற குறிப்பினை இப்பதிவில் கேட்கலாம்.

தற்சமயம் சமணப் பண்பாட்டு மையம் ஒன்று மதுரையில் உருவாக்கப்பட்டு செயல்படுவதையும், தமிழகத்தின் வட பகுதியிலிருந்து தமிழ்ச்சமணர்கள் மதுரைக்கு  வருவதையும் தங்கள் சமயத்தின் தாயகமாக இவர்கள் மதுரையைக் கருதுவதையும் இப்பதிவில் டாக்டர்.சாந்தலிங்கம் குறிப்பிடுகின்றார்.

ஏறக்குறைய 11 நிமிடப்  பதிவு இது. மிக விரிவாக டாக்டர்.சொ.சாந்தலிங்கம் அவர்கள் கழிஞ்சமலை கல்வெட்டுக்களின் காலம், அதன் சிறப்புக்கள் ஆய்வுகள் என தகவல்கள் வழங்குகின்றார்.

இங்குள்ள தமிழி கல்வெட்டுக்களின் இக்காலத் தமிழ் வடிவம்:
1.
நெல்வெளிஇய் சிழிவன் அதினன் வெளியன் முழாகை
கொடுபிதோன்

2. 
இலஞ்சிய் எளம் பேரா அதன் மகன் எமயவன்
இவ்முழ உகைய் கொடுபிதவன்

சிற்பத்தின் கீழ் இருக்கும் வட்டெழுத்து தரும் செய்தி
ஸ்ரீ திருபிணையன் மலை
பொற்கோட்டு கரணத்தார் பேரால்
அச்சணந்தி செய்வித்த திருமேனி
பாதிரிக்குடியார் ரஷை

(கல்வெட்டு குறிப்பு:  மாமதுரை - பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்)

விழியப் பதிவைக் காண:   http://video-thf.blogspot.de/2016/02/blog-post_26.html
யூடியூபில் காண:     https://www.youtube.com/watch?v=ue4gWjkPrK0&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

இந்த  தமிழ் கல்வெட்டுக்கள்  பதிவை செய்ய உதவிய நண்பர்கள் மதுமிதா, டாக்டர்.மலர்விழி மங்கை, டாக்டர்.ரேணுகா, டாக்டர்.சொ.சாந்தலிங்கம் ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மனமார்ந்த நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​
THF Announcement: E-books update:21/2/2016 *கொரிய தமிழ் ஆய்வு (உலகத்தாய் மொழிகள் தின சிறப்பு வெளியீடு)

1 மறுமொழிகள்
வணக்கம்.

இன்று 21ம் தேதி பெப்ரவரி மாதம் உலகத்தாய்மொழிகளின் தினம்.

நம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பினை வியந்து போற்றுதலும் அதன் தொண்மைச்சிறப்பை ஆராய்வதும் காலத்தின் தேவை. உலக மொழிகள் பலவற்றினுள் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு உள்ள மொழியாக தமிழ் மொழி துலங்குகின்றது.

தமிழ் மொழிக்கும் உலக மொழிகள் ஏனையவற்றிற்குமான தொடர்பினை அறிவியல் பூர்வமாக ஆராய வேண்டியது அவசியம். அந்த வகையில் தமிழ் மொழிக்கும் கொரிய மொழிக்கும், தமிழ் நிலப்பரப்பிற்கும் கொரிய நிலப்பரப்பின் பண்பாட்டுக் கூறுகளுக்கும் உள்ள ஒற்றுமைக் கூறுகளைக் கண்டறியும் பணியில்  தமிழ் மரபு அறக்கட்டளைக் கடந்த சில ஆண்டுகளாகச் செயலாற்றி வருகின்றது.  தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுவான மின்தமிழில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக கலந்துரையாடப்பட்டு வரும் இழைகளில் உள்ள தகவல்களும் ஆய்வுத்தரவுகளும் இதற்குச்  சான்றாக அமைகின்றன.

அந்த ரீதியில், தமிழ் மரபு அறக்கட்டளையின் உறுப்பினர்களும் ஆர்வலர்களும் வழங்கியுள்ள கட்டுரையின் தொகுப்பு ஒன்று மின்னூலாக இன்று வெளியிடப்படுவதில் நாம் பெருமை கொள்கின்றோம்.
Book Title: Historical, Archaeological, Linguistic, Cultural and Biological links between Korea and India - Kaya and Pandiya

Editor: Narayanan Kannan, PhD


இந்த நூலின் உள்ளடக்கம் :

 1. Introduction
 2. கொரிய தமிழ் ஆய்வுகளில் தமிழ் மரபு அறக்கட்டளையின் பங்கு - முனைவர்.சுபாஷிணி
 3. In search of an ancient relationship between Tamil Nadu, India and Kaya Kingdom, Korea: Discovery, research, hopes, and questions - Prof. Dr.N.Kannan
 4. தமிழ் கொரிய உறவுப்பாலம் - ஒரிசா பாலசுப்ரமணி  +B
 5. The legend of Queen Heo Hwang-Ok - the first queen of Korea. Historizing her as the princess from India - Prof.Dr.V.Nagarajan
 6. பாண்டியர் சின்னங்கள் - ராஜா சுப்பிரமனியன்
 7. தமிழ் மற்றும் கொரிய மக்களின் பண்பாட்டு ஒற்றுமைகள் - சிந்தியா லிங்கசாமி
 8. கொரிய இளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - முனைவர். இராம. மலர்விழி மங்கையர்க்கரசி
 9. கொரியாவில் தமிழரின் நெசவுக்கலையும் மரபும் பண்பாடும் மொழிக்கூறுகளும் - பேரா.முனைவர் ப.பானுமதி
 10. கொரியாவின் முதல் அரசி தமிழ்நாட்டின் இளவரசி செம்பவளம் - சூதுபவளம் பற்றிய ஒரு தகவல் தொகுப்பு - திருமதி.பவளசங்கரி
 11. ஒரு தமிழனின் பார்வையில் தமிழ், கொரியப் பண்பாடுகளில் ஒப்புடைமை - திரு.தேவ் எஸ் மகாதேவன்
 12. Tamilakam's Contribution  to Ancient Maritime Trade and Cultural Exchange - Mr.K.R.A.Narasiah

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 444

இது ஒரு தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு. 
இந்த வெளியீடு மலர உழைத்த ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த நன்றி! . 


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​மண்ணின் குரல்: பெப்ரவரி 2016:மாங்குளம் தமிழி கல்வெட்டுக்கள்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 


மாங்குளம் தமிழி கல்வெட்டுக்கள்

தமிழகச் சிற்பிகளும் கல்வெட்டுக் கலைஞர்களும் தமிழ் மண்ணில் விட்டுச் சென்றிருக்கும் சான்றுகள் தமிழ் தொடர்பான ஆய்வுகளுக்கு மிக முக்கியமானவையாகத் திகழ்பவை. கி.மு 6 என்ற கால நிலையிலேயே கல்வெட்டு பொறிக்கும் திறன் பெற்றோராகத் தமிழர் தொழிற்கலை அறிவு பெற்றிருந்தார்கள் என்பதற்கு இது சான்றாக அமைவது  என்பதோடு இக்காலத்திற்கு முன்பே தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது பேச்சு, வடிவம், இலக்கணம் என்ற வகையில் வளர்ச்சி பெற்றிருந்தது என்பதற்கு மிக நல்ல சான்றாகவும் அமைகின்றது.

கி.மு.5ம் நூற்றாண்டு வாக்கில் மதுரை  நகரைச் சுற்றியுள்ள குன்றுகளில்  பல சமண முனிவர்கள் தங்கியிருந்தமைக்கானச் சான்றுகளை  இன்றும் பாறைகளில் உள்ள படுக்கைகள், தொல் தமிழ் எழுத்துக்கள் என்பனவற்றிலிருந்து அறியமுடிகின்றது.  இம்முனிவர்களை அச்சயமம் பாண்டி நாட்டை ஆண்ட பாண்டிய மன்னர்கள் ஆதரித்து, இவர்கள் தங்கவும் பள்ளிகள் அமைத்து கல்விச்சேவை புரியவும் உதவி இருக்கின்றனர்.  பொருள் வளம் மிக்க வணிகப்பெருமக்களும்  சமண முனிவர்கள் குன்றுகளின் பாறைப்பகுதிகளில் தங்கியிருக்க  வசதியை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றனர். அத்தகைய செய்திகளை இப்பாறைகளில் வடிக்கப்பட்டுள்ள தொல் தமிழ் எழுத்துக்களின் வழி அறிந்து  கொள்ள முடிகின்றது.

மாங்குளம், மதுரையிலிருந்து ஏறக்குறைய 20கிமீ.தூரத்தில் இருக்கும் ஊர். ரோவர்ட் சீவல் என்பவர் தாம் 1882ம் ஆண்டில் இங்கிருக்கும் மாங்குளம் கல்வெட்டுக்களைக் கண்டறிந்தவர் என்ற சிறப்பினைப் பெறுபவர். கல்லில் பொறித்த எழுத்துக்களைப் பார்த்து இவை என்ன குறியீடுகளோ என்று அவர் யோசித்திருக்கக்கூடும். ஆயினும் இவை என்ன எழுத்துக்கள் என்பது கடந்த நூற்றாண்டில் தான் உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் கிடைக்கக்கூடிய சமண நெறி சார்ந்த  கல்வெட்டுக்களிலேயே இந்த மாங்குளம் கல்வெட்டுக்கள் தாம் மிகப்பழமையானவை என்ற சிறப்பைப் பெறுபவை.

இம்மலையில் ஐந்து குகைப்பகுதிகள் உள்ளன. சற்றே தூரத்தில் இடைவெளி விட்டு இவை அமைந்திருக்கின்றன. கற்படுக்கைகள்  உள்ள பகுதிகளில்  மழை நீர் வடிய உருவாக்கப்படும் காடி வெட்டப்பட்டுள்ளது. அதன் கீழே அல்லது அருகாமையில் கல்வெட்டுக்கள் வெட்டப்பட்டுள்ளன. 

நெடுஞ்செழியன் என்ற சங்ககால பாண்டிய மன்னனின் பெயர் இங்குள்ள கல்வெட்டுக்களில் இருமுறை குறிப்பிடப்படுகின்றன.  அதோடு செழியன், வழுதி என்ற பாண்டிய குடிப் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இங்குள்ள கல்வெட்டுக்கள்:

1.
கணிய் நந்தஅ ஸிரிய்இ குவ் அன்கேதம்மம் இத்தாஅ
நெடுஞ்செழியன் பண அன் கடல் அன் வழுத்திப்
கொட்டு பித்தஅ பளிஇய்

2. 
கணிய் நத்திய் கொடிய் அவன்

3. 
கணிய் நந்தஸிரிய் குஅன்தமம் ஈதா நெடுஞ்செழியன்
ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇயபளிய்

4.
கணி இ நதஸிரிய்குவ(ன்) வெள் அறைய் நிகமது காவிதிஇய்
காழிதிக அந்தை அஸீதன் பிணஉ கொடுபிதோன்

5.
சந்தரிதன் கொடுபிதோன்

6.
வெள்அறை நிகமதோர் கொடி ஓர்

(குறிப்பு: பாண்டிய நாட்டு வரலாற்று மைய வெளியீடான  மாமதுரை (ஆசிரியர்கள்- பொ.இராசேந்திரன், சொ.சாந்தலிங்கம்) என்ற நூலில் உள்ள குறிப்பு மேலே வழங்கப்பட்டுள்ளன.)


தமிழ் எழுத்துக்களோடு சமஸ்கிருத எழுத்தும் கலந்த நிலையில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.

தமிழ் எழுத்தின் சிறப்பு எனச் சொல்லப்படும்  எழுத்து வெட்டப்பட்ட பழமையான கல்வெட்டு இவைதாம் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றே. 

இப்பகுதியில் 2007ம் ஆண்டில் தமிழக தொல்லியல் துறையினால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் செங்கற்களினால் உருவாக்கப்பட்ட கட்டிட கட்டுமானப் பகுதி ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில்  கூறைகளுடன் கூடிய அமைப்பாக இது உருவாக்கப்பட்டமை அறியப்பட்டது. கூறைகளுக்கு இடையே மரத்துளைகள் உருவாக்கி அதனை மரச்சட்டங்களை வைத்து இணைத்து இரும்பினால் ஆன ஆணியை கொண்டு இணைத்து இக்கூறைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம். இங்கு கிடைத்த வெவேறு அளவிலான பழங்கால ஆணிகள் இதனை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.

இந்த மாங்குளம் கல்வெட்டுப் பகுதி இன்று தமிழக தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் சின்னமாக இருக்கின்றது. மேலே பாறைக்குச் செல்லும் பாதைகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் படுக்கைகள் இருக்கும் பகுதிகளில் இங்கு வரும் பொதுமக்கள் தங்கள் பெயர்களை எழுதி,இப்புராதனச் சின்னங்களை சிதைத்து வருகின்றனர் என்பது வேதனைக்குறிய விடயம். 
அருகாமையில் இருக்கும் குடியானவர்களின் ஆடுகள் இப்பகுதியில் மேய்வதால் ஆட்டுப்புழுக்கைகள் நடைபாதையெங்கும் நிறைந்து கிடக்கின்றன.

இப்பகுதியை  சுத்தம் செய்து பாதுகாக்கும் முயற்சி மிக அவசியம்.


ஏறக்குறைய 20 நிமிடப்  பதிவு இது. மிக விரிவாக டாக்டர்.சொ.சொக்கலிங்கம் அவர்கள் மாங்குளம் கல்வெட்டுக்களின் காலம், அதன் சிறப்புக்கள் ஆய்வுகள் என தகவல்கள் வழங்குகின்றார்.

இந்த மாங்குளம் தமிழ் கல்வெட்டுக்கள்  பதிவை செய்ய உதவிய நண்பர்கள் மதுமிதா, டாக்டர்.மலர்விழி மங்கை, டாக்டர்.ரேணுகா, டாக்டர்.சொ.சாந்தலிங்கம் ஆகியோருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் மனமார்ந்த நன்றி.


விழியப் பதிவைக் காண:   http://video-thf.blogspot.de/2016/02/blog-post.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=2uH2fyvkLlo&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES