மண்ணின் குரல்: பெப்ரவரி 2016:கழிஞ்சமலை சமணர் சின்னமும் கல்வெட்டுக்களும்

0 மறுமொழிகள்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 



மதுரைக்கு அருகே அரிட்டாபட்டி என அழைக்கப்படும் ஒரு பகுதியில் இளமைநாயகிபுரம் எனும் ஒரு சிற்றூரில் இருக்கும் கழிஞ்சமலை ​மலைப்பகுதியில் இரண்டு தமிழி கல்வெட்டுக்களும், 10ம் நூற்றாண்டு சமணப் பாறைச் சிற்பமும் அதன் கீழ் ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளன. 

1971ம் ஆண்டில்  பேராசிரியர். கே.வி.ராமன்,  டாக்டர்.​சுப்பராயலு இருவரும் முதல் தமிழி கல்வெட்டினையும் வட்டெழுத்துக் கல்வெட்டினையும் கண்டுபிடித்தனர். அதன் பின்னர் 2003ம் ஆண்டில் ஆய்வாளர்கள் பொ.ராசேந்திரன், சொ.சாந்தலிங்கம் ஆகியோர் இரண்டாவது தமிழி கல்வெட்டினைக் கண்டுபிடித்தனர். 

​இங்கிருக்கும் இரண்டு தமிழி கல்வெட்டுக்களும் கி.மு 3ம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.

அதற்கு அடுத்தார்போல சமண தீர்த்தங்கரர் சிற்பமும் வட்டெழுத்தும் பக்திகாலத்திற்க்குப்பின்னர் அதாவது 9, 10ம் நூற்றாண்டில் மீண்டும் சமணம் எழுச்சி பெற்ற காலத்தில் ​பொறிக்கப்பட்டது. சமண மறுமலர்ச்சியை மீண்டும் உண்டாக்கிய ​அச்சணந்தி முனிவர் ​இந்த தீர்த்தங்கரர் உருவத்தை செதுக்க வைத்து அதன் கீழ் இந்தக் கல்வெட்டுனைப் பொறிக்கச் செய்திருக்கின்றார்.  அச்சநந்தி செய்வித்த திருமேனி என்ற குறிப்பும் இந்த மலையின் பெயர் திருப்பிணையன் மலை,  ஊரின் பெயர் பாதிரிக்குடி ஆகிய தகவல்களும் கல்வெட்டாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. 

தமிழ் வட்டெழுத்து என்பது  தமிழ் பிராமியிலிருந்து (தமிழி) கி.பி3ம் நூற்றாண்டுக்குப் பின்னர் கி.பி 13ம் நூற்றாண்டு வரை   பாண்டிய நாட்டில் மிக அதிகமாக வழக்கில் இருந்தது. ஆனால் சோழர் ஆட்சியில்  தமிழ் எழுத்துக்கள் படிப்படியாக முக்கியத்துவம் பெற்று வளர இந்த வட்டெழுத்து எழுத்து வடிவமோ கேரளப்பகுதியில் பயன்பாட்டில் விரிவடைந்து கிரந்தத்தோடு கலந்து மளையாளமாக உருவெடுத்தது என்ற குறிப்பினை இப்பதிவில் கேட்கலாம்.

தற்சமயம் சமணப் பண்பாட்டு மையம் ஒன்று மதுரையில் உருவாக்கப்பட்டு செயல்படுவதையும், தமிழகத்தின் வட பகுதியிலிருந்து தமிழ்ச்சமணர்கள் மதுரைக்கு  வருவதையும் தங்கள் சமயத்தின் தாயகமாக இவர்கள் மதுரையைக் கருதுவதையும் இப்பதிவில் டாக்டர்.சாந்தலிங்கம் குறிப்பிடுகின்றார்.

ஏறக்குறைய 11 நிமிடப்  பதிவு இது. மிக விரிவாக டாக்டர்.சொ.சாந்தலிங்கம் அவர்கள் கழிஞ்சமலை கல்வெட்டுக்களின் காலம், அதன் சிறப்புக்கள் ஆய்வுகள் என தகவல்கள் வழங்குகின்றார்.

இங்குள்ள தமிழி கல்வெட்டுக்களின் இக்காலத் தமிழ் வடிவம்:
1.
நெல்வெளிஇய் சிழிவன் அதினன் வெளியன் முழாகை
கொடுபிதோன்

2. 
இலஞ்சிய் எளம் பேரா அதன் மகன் எமயவன்
இவ்முழ உகைய் கொடுபிதவன்

சிற்பத்தின் கீழ் இருக்கும் வட்டெழுத்து தரும் செய்தி
ஸ்ரீ திருபிணையன் மலை
பொற்கோட்டு கரணத்தார் பேரால்
அச்சணந்தி செய்வித்த திருமேனி
பாதிரிக்குடியார் ரஷை

(கல்வெட்டு குறிப்பு:  மாமதுரை - பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்)

விழியப் பதிவைக் காண:   http://video-thf.blogspot.de/2016/02/blog-post_26.html
யூடியூபில் காண:     https://www.youtube.com/watch?v=ue4gWjkPrK0&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

இந்த  தமிழ் கல்வெட்டுக்கள்  பதிவை செய்ய உதவிய நண்பர்கள் மதுமிதா, டாக்டர்.மலர்விழி மங்கை, டாக்டர்.ரேணுகா, டாக்டர்.சொ.சாந்தலிங்கம் ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மனமார்ந்த நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​






























மறுமொழிகள்

0 comments to "மண்ணின் குரல்: பெப்ரவரி 2016:கழிஞ்சமலை சமணர் சின்னமும் கல்வெட்டுக்களும்"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES