Showing posts with label author. Show all posts
Showing posts with label author. Show all posts

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்

0 மறுமொழிகள்
தமிழ்மணி - பெரும்புலவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்


"சோழவளநாடு சோறுடைத்து" என்பர் புலவர்.

ஆனால் சோழநாடு சிறந்த புலவர் பெருமக்களை உடையதாகவும் இருந்தது.

பழந்தமிழ் நூல்களைத் திரட்டித் தந்த "தமிழ்த் தாத்தா" உ.வே.சாமிநாதய்யர் வழியில் வந்தவரே பெரும்புலவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்.



உ.வே.சா. போலவே இவரும் சங்க நூல்களை உரையோடு வெளியிட பெருமுயற்சி மேற்கொண்டார்.

நாராயணசாமி
நூலாசிரியராகவும்
மொழிபெயர்ப்பாளராகவும்
உரையாசிரியராகவும்
விளங்கினார்.

இவர் எழுதிய "நற்றிணை" உரையே இவர் புகழை காலா காலத்துக்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.

இலட்சுமி நாராயண அவதானிகள் என்னும் இயற்பெயர் கொண்ட நாராயணசாமி ஐயர், தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள பின்னத்தூரில் 1862ம் ஆண்டு ஆவணித் திங்கள் 29ம் நாள் பிறந்தார்.

இவருடைய தந்தையார் வேங்கடகிருஷ்ண அவதானிகள் எனவும் அப்பாசாமி ஐயர் எனவும் அழைக்கப்பட்டார். தாயார் சீதாலட்சுமி அம்மாள். இவரது தந்தையார் மருத்துவ நூலில் சிறந்த பயிற்சி உடையவர்.

நாராயணசாமி ஐயருடன் பிறந்தவர்கள் ஏழு பேர். ஆண்மக்கள் நான்கு பேர்; பெண்மக்கள் மூன்று பேர். ஆண்களுள் இவரே மூத்தவர். பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை இவரது அத்தையே மேற்கொண்டார்.

இவர் பள்ளிக் கல்வியை உரிய காலத்தில் ஒழுங்காகக் கற்றார். பின்னத்தூரில் பள்ளிக்கூடம் வைத்திருந்த முத்துராம பாரதியாரிடம் தமிழ் படித்தார். அக்காலத்தில் மன்னார்குடியில் இருந்த தமிழ்ப் பெரும் புலவர் நாராயணசாமி பிள்ளையின் இராமாயண விரிவுரையைக் கேட்டு தமிழின் மேல் பற்று கொண்டார். இந்நிகழ்ச்சியே இவருடைய தமிழ்ப் பயிற்சிக்குக் காரணமாய் அமைந்தது. கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டத்தை வாங்கி வாசித்தார். இவர் தமிழ் மொழியைப் கற்கவேண்டும் என்ற பேரவாவினால் எப்போதும் நூலும் கையுமாகவே இருந்தார். இதை குடும்பத்தார் விரும்பவில்லை.

இதனால் இவர் அத்தைக்குத் தெரியாமல் வயல் வரப்புகளுக்குச் சென்று கருவேல மரங்களுக்குக் கீழே அமர்ந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். இவர் தமிழ் படித்துக் கவிபாடும் ஆற்றலில் சிறந்து விளங்கினார். தமிழ் இலக்கியங்களைத் தாமே தனித்திருந்து கற்றபடியால் ஐயப்பாடுகள் உண்டாயின. அவற்றைக் களைந்து கொள்வதற்கு காலத்தை எதிர்பார்த்திருந்தார்.

அக்காலத்தில் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரின் மருகரும், "வித்வ சிரோமணி" என்னும் சிறப்புப் பெயர் பெற்றவருமாகிய பொன்னம்பலப் பிள்ளை என்பவர் தமிழ் அறிஞராக விளங்கினார். அவர் சிறிதுகாலம் திருமறைக்காட்டில் வந்து தங்கினார். நாராயணசாமி ஐயர் அவரிடம் சென்று அறிமுகம் செய்து கொண்டார். அவரிடம் தம்முடைய ஐயங்களைப் போக்கிக்கொண்டார். மேலும், அவரிடம் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தையும் பாடம் கேட்டார்.

இவர் மொழிநூல் புலமையோடு, புதிய நூல் படைக்கும் ஆற்றலும் பெற்றிருந்தார். "நீலகண்டேசுரக் கோவை" என்னும் கோவை நூல் பாடி, மன்னார்குடியில் தமிழறிஞர் பொன்னம்பல பிள்ளையின் முன்னிலையில் அரங்கேற்றினார். அத்துடன் அவர் வடமொழியும் கற்று புலமைப் பெற்றிருந்ததால், வடமொழியில் காளிதாசர் இயற்றிய பிரகசன நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

தமிழ் நாட்டின் பழைய வரலாறுகளையும், பெருமைகளையும் தேடி ஆராய்வதில் பெருவிருப்பம் கொண்டவராகவும், கோயில்களிலும், வரலாற்றுச் சின்னங்களிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளைப் படித்தறியும் ஆற்றல் பெற்றவராகவும் விளங்கினார்.
தமிழ்ப் புலவர்களின் வரலாறுகளை நன்கு அறிந்தவர். அவர்கள் பாடிய செய்யுள்களை நினைவில் வைத்துக்கொண்டு, தேவைப்படும்போது எடுத்துரைக்க வல்லவர். தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இவருக்குச் சிறந்த பயிற்சி இருந்தது. அதில் காட்டியிருந்த மேற்கோளுக்கெல்லாம் அகரவரிசை ஒன்றை இவர் எழுதி வைத்திருந்தார்.

நீலகண்டேசுரக் கோவை
பிரகசன நாடகம்
இடும்பாவன புராணம்
இறையனாராற்றுப்படை
சிவபுராணம்
களப்பாள் புராணம்
அரதைக் கோவை
வீரகாவியம்
சிவகீதை
நரிவிருத்தம்
மாணாக்கராற்றுப்படை
இயன்மொழி வாழ்த்து
தென்தில்லை உலா
தென்தில்லைக் கலம்பகம்
பழையது விடு தூது
மருதப்பாட்டு
செருப்புவிடு தூது
தமிழ் நாயக மாலை
இராமாயண அகவல்
நற்றிணை உரை

என்பன இவரால் இயற்றப்பட்டவை.

1899ம் ஆண்டு முதல் இவர் மறையும் வரை கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். இக்காலங்களில் சங்க இலக்கியங்களில் தனிக்கவனம் செலுத்தினார். குறுந்தொகையை நன்றாக ஆய்வு செய்தார். அப்போது, நற்றிணைக்கு உரையெழுதி முடித்துவிட்டார். அகநானூற்றுக்கு உரை எழுதிக் கொண்டிருந்தார்.
நற்றிணை உரை அச்சாகிக் கொண்டிருக்கும்பொழுது நாராயணசாமி ஐயருக்கு நீரிழிவு நோய் மிகுதியானது. இறப்பதற்குள் நற்றிணை உரை நூலைக் கண்ணால் பார்த்துவிட்டுச் சாகவேண்டும் என்பது அவருடைய இறுதி விருப்பமாக இருந்தது. ஆயினும் அவ்விருப்பம் நிறைவேறவில்லை.

1914ம் ஆண்டு ஜூலை 30ம் நாள் தமது பிறந்த ஊராகிய பின்னத்தூரில் காலமானார்.
இவர் எழுதிய நற்றிணை உரை தமிழ் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறது. இவர் இயற்றிய இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் என்னவாயிற்று என்றே தெரியவில்லை. இந்த இழப்பு அவருக்கல்ல; தமிழுக்குத்தான்!

எந்தவித எதிர்பார்ப்புமின்றி தமிழ்த் தொண்டாற்றி மறைந்துபோன அவர் இன்று உயிரோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரது உழைப்பும், பெயரும், புகழும் இருக்கின்றன. இதைவிட வேறென்ன வேண்டும்?

நன்றி: தமிழ்மணி (தினமணி)
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

மயிலை சீனி.வேங்கடசாமி

0 மறுமொழிகள்
தமிழ் மணி: தமிழ்ப் பேரவைச் செம்மல் மயிலை சீனி.வேங்கடசாமி


  • ஐந்தடிக்குட்பட்ட குறள் வடிவம்
  • பளபளக்கும் வழுக்கைத்தலை
  • வெண்மை படர்ந்த புருவங்களை எடுத்துக் காட்டும் அகன்ற நெற்றி
  • கனவு காணும் எடுப்பான மூக்கு
  • படபடவெனப் பேசத்துடிக்கும் மெல்லுதடுகள்
  • கணுக்கால் தெரியக் கட்டியிருக்கும் நான்கு முழ வெள்ளை வேட்டி
  • காலர் இல்லாத முழுக்கைச் சட்டை
  • சட்டைப்பையில் மூக்குக் கண்ணாடி, பவுண்டன் பேனா
  • கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல் உத்திரீயம்
  • இடது கரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புத்தகப் பை
இப்படியான தோற்றத்துடன் சென்னைக் கன்னிமரா நூலகத்தை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே அவர்தான் மயிலை சீனி.வேங்கடசாமி என்று எழுத்தாளர் நாரண.துரைக்கண்ணனால் போற்றப்படும் மயிலை சீனி.வேங்கடசாமி 16.12.1900ம் ஆண்டு பிறந்தார்.


தந்தை சீனிவாச நாயக்கர் ஒரு சித்த மருத்துவர். அவரின் இல்லத்தில் ஓலைச்சுவடிகள் மற்றும் நூல்களைச் சேகரித்து வாசிக்கும் பழக்கம் இருந்தது. வேங்கடசாமி தன் தமையனார் சீனி.கோவிந்தராஜனிடம் தமிழ்ப்பயிற்சி பெற்றார். தமிழ்ப்பற்று இவருக்கு முன்னோர்கள் வழி கிடைத்த சீதனமாகும். மயிலை புனித சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில், பள்ளி இறுதி வகுப்பை நிறைவு செய்தார். இருபதாவது வயதில் சென்னைக் கலைக் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டார். பின்பு ஆசிரியப் பயிற்சி முடித்து நகராட்சித் தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.

வேங்கடசாமி, சுயமரியாதை இயக்கச் சார்பாளராக வாழ்வைத் தொடங்கினார். நீதிக்கட்சி நடத்தப்பட்ட "திராவிடன்" நாளேட்டின் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பணிபுரிந்தார். பின்னாளில் "குடியரசு", "ஊழியன்" போன்ற இதழ்களில் செய்திக் கட்டுரைகள் எழுதினார். "கெளதம புத்தர்" என்ற நூலை எழுதினார். புத்தர் வரலாறு, பள்ளி வரலாற்றுப் பாடத்தில் கற்கும் கதையாக எழுதப்பட்டது. "புத்தர் ஜாதகக் கதைகள்" என்ற நூலைத் தமிழில் முதன் முதலாக எழுதினார். இக்கதைகளில் புத்தமதக் கோட்பாடுகள் எளிமையாகக் கூறப்பட்டுள்ளன.



வேங்கடசாமி 1950களின் இறுதிக் காலங்களில், கி.பி.3ம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.9ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சிபுரிந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவற்றை ஆய்வு செய்து மன்னர்களைப் பற்றிய நூல்களை உருவாக்கினார். "மகேந்திரவர்மன்" என்ற நூலை முதன்முதலாக வெளியிட்டார்.

"வாதாபிகொண்ட நரசிம்மன்" என்ற நூலில் நரசிம்மவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்ட பாறைக் கோயில்கள் குறித்தும், இம்மன்னன் காலத்தில் உருவாக்கப்பட்ட சிற்ப வடிவங்கள் பற்றியும் விரிவான தகவல்களைத் தந்துள்ளார். இந்த நூல் தமிழக சிற்ப வரலாற்றை தெரிந்துகொள்ள பெரிதும் உதவும்.

சேரன், செங்குட்டுவன் ஆய்வில் தொடங்கி, சங்க காலம் குறித்த ஆய்வுகளை நிகழ்த்தி உள்ளார். அக்காலத்தில் தமிழகம்;

சோழநாடு
பாண்டியநாடு
சேரநாடு
துளுநாடு
கொங்குநாடு
தொண்டைநாடு

என்று ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததாகத் தெளிவுபடுத்தி, இதற்கான வரைபடத்தையும் உருவாக்கியுள்ளார்.

ஒவ்வொரு நாடு தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டு துளுநாட்டு வரலாறு, கொங்குநாட்டு வரலாறு ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தமது அனைத்து ஆய்வுகளிலும் இலங்கை தொடர்பான குறிப்புகளைக் கொடுப்பதை மரபாகக் கொண்டிருந்தார் வேங்கடசாமி.

"தமிழ்நாட்டு வரலாறு" என்ற நூலில் "இலங்கையில் தமிழர்" என்ற ஆய்வை மேற்கொண்டார். தமிழக வரலாற்றை கட்டமைத்து ஒழுங்குபடுத்தியதில் வேங்கடசாமிக்குத் தனித்த இடமுண்டு.

மகாபலிபுரத்துச் சிற்பங்கள் தொடங்கி, பல்லவ மன்னர்கள் காலத்து கட்டடம் மற்றும் சிற்பக்கலை தொடர்பான ஆய்வையும் மேற்கொண்டார். இசைக் கூத்து குறித்தும் ஆய்வு செய்துள்ளார். "தமிழ் வளர்த்த அழகுக் கலைகள்" என்ற நூலில் தமிழர்களின் பழங்கால அழகுக் கலைகள் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.

19ம் நூற்றாண்டின் தமிழ் சமூக வரலாற்றை அறிவதற்கான தொகுப்பாக "19ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்" என்ற நூலை எழுதியுள்ளார். வேங்கடசாமி, கன்னடம், மலையாளம், பாலி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பயிற்சியுடையவராக இருந்தார். மலையாளத்திலிருந்து சில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

ஓவியங்கள் குறித்து ஆய்வு செய்த வேங்கடசாமி, பல்லவர் காலத்து ஓவியங்கள், பிற்காலச் சோழர்கால ஓவியங்கள், பிற்கால ஓவியங்கள் எனப் பல்வேறு ஓவியங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளார். குறிப்பாக, கைலாசநாதர் கோயில் ஓவியம், தஞ்சை பெரியகோயில் ஓவியம், மதுரை நாயக்கர்கால ஓவியம் குறித்து ஆய்வு செய்துள்ளார்.

1962ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சார்பில் அறக்கட்டளை சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இவற்றை "சங்ககால வரலாற்றில் சில செய்திகள்" என்னும் பெயரில் பின்னர் அப்பல்கலைக்கழகம் நூலாக வெளியிட்டது.

சங்ககாலத் தமிழரின் வணிகம், சங்ககால விளைபொருட்கள் போன்றவை குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டு, "பழங்காலத் தமிழர் வாணிகம்", "சங்க காலத்து பிராமிக் கல்வெட்டு எழுத்துக்கள்," என நூல்களாக வெளியிட்டார். தமிழக அரசு உருவாக்கிய, தமிழக வரலாறு எழுதும் தமிழ்நாட்டு வரலாற்றுக் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். "தமிழ்நாட்டு வரலாறு" சங்க காலம், அரசியல் என்ற இரண்டாம் தொகுதியில் மூவேந்தர்களைப் பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார்.

இவ்வளவு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இவர், தமிழ்நாட்டின் வரலாறு முழுமையாகவும், தெளிவாகவும், சரியாகவும் இன்னும் எழுதப்படாமல் இருப்பது பெருங்குற்றமாகும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

"அகல் வரலாறு அனைத்தும்
மிஞ்சுதல் இன்றி கற்றோன்
மேம்பாடு நூலாராய்ச்சி
கெஞ்சிடும் தனைத் துலக்க
கேண்மையோடு உயர்வு செய்வான்!"


என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், வேங்கடசாமியின் ஆய்வைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

திராவிடன்
செந்தமிழ்ச்செல்வி
ஊழியன்
ஆரம்பாசிரியன்
செந்தமிழ்
தமிழ்ப்பொழில் ஆராய்ச்சி
திருக்கோயில்
நண்பன்
கல்வி
இலட்சுமி
ஆனந்தபோதினி
தமிழ்நாடு
செளபாக்கியம்
ஈழகேசரி
கலைக்கதிர்

ஆகிய இதழ்களில் 200க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். தமிழில் 33 நூல்களை எழுதியுள்ளார்.

நம் சிற்பக் கலைப்பொருட்கள் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு கள்ளத்தனமாகக் கடத்தப்பட்டன. இதை அறிந்து மிகுந்த வேதனையடைந்த வேங்கடசாமி, அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

1980ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் செம்மல்கள் பேரவை, "தமிழ்ப்பேரவைச் செம்மல்" என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 2001ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் சார்பாக வேங்கடசாமிக்கு நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

1981 மே 8ம் தேதி வேங்கடசாமி இவ்வுலக வாழ்வை நீத்தார்.

வேங்கடசாமி ஓர்;

இலக்கியக்கடல்
வரலாற்றறிஞர்
மொழிநூற்புலவர்
சமயநூல் வித்தகர்
நுண்கலைவாணர்
சொல்லாய்வுச் செம்மல்
கல்வெட்டு, சாசனம்
தொல்லியல் துறைகளில் தனி முத்துரை பதித்தவர்
பன்மொழிப்புலவர்
சமூகவியல் அறிஞர்

என பல்வேறு பரிமாணங்களின் பெட்டகமாகத் திகழ்ந்தவர். அவரின் உயர்ந்த கருத்துகளை உள்ளத்தில் ஏந்திச் செயல்படுவது அனைத்து தமிழர்களின் கடமையாகும்.

பி.தயாளன்

நன்றி: தமிழ்மணி (தினமணி)
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

வாழும் வரலாறு முனைவர் சோ.ந.கந்தசாமி

0 மறுமொழிகள்
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தமிழறிஞர்கள் பதின்மரின் பெயர்ப்பட்டியல் ஒன்றை ஆயத்தம் செய்தால் அதில் அறிஞர் சோ.ந.கந்தசாமியார் அவர்களின் பெயரும் இடம்பெறும். தமிழ்,ஆங்கிலம்,வடமொழி,இந்தி உள்ளிட்ட பன்மொழிகளை அறிந்தும், அதில் பழுத்த புலமைபெற்றும், புலமைச் செருக்கு மிகுந்தும், தமிழ் வீறு கொண்டும் விளங்குபவர் நம் ஐயா கந்தசாமியார் அவர்கள்.

அவர்களை இருபான் ஆண்டுகளாக யான் நன்கு அறிவேன்.என் தமிழாசிரியர் வாரியங்காவல் புலவர் ந.சுந்தரேசனார் அவர்கள் அடிக்கடி ஐயா கந்தசாமியார் அவர்களின் பழுத்த தமிழறிவு பற்றி குறிப்பிட்டு அவர்போல் நீ தமிழ் படிக்கவேண்டும் என்று அடிக்கடி என்னைக் குறிப்பிடுவார். அது நாள் முதல் அறிஞர் கந்தசாமியார் அவர்களின் மேல் ஒருதலைக் காதல் எனக்கு ஏற்பட்டது.

பத்தாண்டுகளுக்கு (28,29,30-03.1998) முன்னர் யான் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் "சங்கப் பாடல்களில் நாட்டுப்புறவியல் கூறுகள்" என்னும் பொருளில் ஒரு கட்டுரை படித்தேன்.அறிஞர் சுப்பு ரெட்டியார் தலைமை. நம் ஐயா கந்தசாமியார், தி.வே.கோபாலையர்,கா.சிவத்தம்பி, பெ.மாதையன் உள்ளிட்ட சங்க இலக்கிய அறிஞர்கள் அவ்வுரை கேட்டு மகிழ்ந்து பாராட்டினர். அவ்வாய்வுரையால் ஈர்க்கப்பெற்று அன்று முதல் என்பால் அன்பு பாராட்டி வருபவர் நம் கந்தசாமியார் அவர்கள்.



ஐயா கந்தசாமியார் அவர்கள் ஒருவகையில் என் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள ஊரில் பிறந்தவர்கள் என்பதால் அவர்கள் மேல் எனக்கு என்றும் மதிப்பும் பாசமும் மிகுதி.அவர்களின் தமிழ்ப்புலமை நினைந்து அவர்களை என் ஆசிரியர்களுள் ஒருவராகவே மதித்துப் போற்றுகிறேன். அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிவு செய்வதில் மகிழ்கிறேன்.

அறிஞர் சோ.ந.கந்தசாமி எனத் தமிழறிஞர்களாலும் S.N.K என ஆங்கிலம் வல்லாராலும் அழைக்கப்பெறும் கந்தசாமியார் அவர்கள் 15.12.1936 இல் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் செயங்கொண்டசோழபுரம் அருகில் உள்ள இலையூர் என்னும் ஊரில் பிறந்தவர்.பெற்றோர் வை.சோ.நடராச முதலியார்,மீனாம்பாள் அம்மாள்.கந்தசாமியார் அவர்கள் தொடக்கக் கல்வியை இலையூரிலும்,உயர்நிலைக் கல்வியை உடையார்பாளையம் பள்ளியிலும் பயின்றவர்.பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை- பொருளாதாரம் பயின்றவர்.

சோ.ந.கந்தசாமியார் அவர்கள் முதுகலைத் தமிழ் இலக்கியம் தண்ணார் தமிழளித்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்(1958).எம்.லிட்(1963),முனைவர்(1971)பட்ட ஆய்வையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டவர்.மொழியியல் பட்டயம்,வடமொழிப் பட்டயம் உள்ளிட்ட கல்வியையும் அண்ணாமலையில் பயின்றவர்கள்.

தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணியைத் தொடர்ந்து நடத்தினார்.பின்னர் மலேசியாப் பல்கலைக்கழகத்திலும்(1979-85)தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும்1985-1997), சில காலம் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் தம் தமிழ்ப்பணியை அழுத்தமாகச் செய்தவர்.இவர் அறிஞர் அ.சிதம்பரநாதன் செட்டியார், தெ.பொ.மீ ஆகியோரின் மேற்பார்வையில் கற்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பாலிமொழிப் பாடல்கள் பலவற்றை மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றலுடையவர். கல்வெட்டுகளிலும் நல்ல புலமையுடையவர்.

சோ.ந. கந்தசாமியார் அவர்கள் நாற்பதாண்டுகள் கல்விப் பணியாற்றியுள்ளார். இவரிடம் கற்றவர்களும்,இவருடன் கற்றவர்களும் இவர் கல்வி கண்டு மருள்வது உண்டு. நினைவாற்றலில் வல்லவர்.எடுத்துரைப்பதில் ஆற்றலாளர்.மேடையை,வகுப்பறையத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்படியான பேச்சாற்றல் வல்லவர்.எதுகைகளும்,மோனைகளும் இவர் பேச்சில் சிந்திச் சிதறும்.

'அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அன்னைப் பல்கலைக்கழகமாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகம்' என்றும், 'எங்கள் மனசைக் கவர்ந்த பனசைக் கல்லூரி' என்றும் இவர் விளிக்கும் பாங்கு கற்றவர்களால் என்றும் நினைவுகூரத்தக்கன.இத்திறம் கண்ட கற்றார் களிப்புறுவர்.இவர் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத் தகுந்த மேலோர்.நூலோர்.

கந்தசாமியார் அவர்கள் மருதூரில் புகழ்பெற்ற விடுதலைப் போராட்டவீரர் முத்துக்குமாரசாமி அவர்களின் புதல்வியார் சமுனாதேவி அவர்களை இல்வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொண்டவர்.கந்தசாமியார் அவர்களுக்கு ஆண்மகன் ஒருவரும்,பெண்மக்கள் நால்வரும் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர்.இவர்கள் அனைவரும் உயர்கல்வி கற்று நல்ல நிலையில் உள்ளனர்.

அறிஞர் சோ.ந.கந்தசாமி அவர்கள் வகுப்பறையில் மட்டும் புலமை புலப்படும்படி விளங்கினார் என்று இல்லை.இவர் இயற்றிய நூல்களும் என்றும் பயன்படுத்தத் தக்கன. தரத்தன.இவர் இந்து நாளிதழில் முப்பத்தந்து ஆண்டுகளாக எழுதும் நூல் மதிப்புரைகள் அறிஞர் உலகால் என்றும் போற்றி மதிக்கப்படுவனவாகும்.

இவர் இயற்றிய நூல்களை இலக்கியம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு, இலக்கணம், மொழியியல், தத்துவம் என்னும் வகைகளில் அடக்கிப் பார்க்கலாம்.

இலக்கிய நூல்கள்

1.சங்க இலக்கியத்தில் மதுரை
2.திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்
3.இலக்கியமும் இலக்கிய வகையும்
4.தமிழிலக்கியச் செல்வம்(ஐந்து தொகுதிகள்)
5.திருமுறை இலக்கியம்
6.திருமுறையில் இலக்கிய வகை
7.உலகத் தமிழிலக்கிய வரலாறு(கி.பி.501-கி.பி.900)
8.மணிமேகலையின் காலம்
9.பரிபாடலின் காலம்
10.இலக்கியச்சோலையிலே

திறனாய்வு

11.Bharathidasan As a Romantic Poet
12.Anthology of Book Reviews
13.தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்

மொழிபெயர்ப்பு

14.English Translation of Sundarar Devaram Volume I (patikam 1-50)
15.Volume II(patikam 51-100) (Tota 1026 verses)
16.திருமந்திரம் எட்டாம் தந்திரம் English Translation of Tirumantiram(Total 527 verses)

இலக்கணம்

17.தமிழிலக்கணச் செல்வம்(இரு தொகுதிகள்)
18.தொல்காப்பியம் - எழுத்ததிகாரத் தெளிவு
19.புறத்திணை வாழ்வியல்
20.தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்(மூன்று தொகுதிகள்)
21.கலித்தொகை யாப்பியல்

மொழியியல்

22. A Linguistics Study of Paripatal(M.Lit.Thesis)
23.A Linguistis of Manimekalai

தத்துவம்

24.தமிழும் தத்துவமும்
25.தமிழிலக்கியத்தில் பௌத்தம்
26.தமிழிலக்கியத்தில் அறிவாராய்ச்சியியல்
27.இந்தியத் தத்துவக் களஞ்சியம்(மூன்று தொகுதிகள்)
28.Budhism As Expounded in Manimekalai(Ph.D. Dissertation)
29.Indian Epistemology as Expounded in the Tamil Classics
30.Tamil Literature and Indian Philosophy
31.The Yoga of Siddha Avvai(Published in Canada)
32.Advaitic Works and Thought in Tamil
33.The Encounter Between saiva sidhanta and Advaita vedanta

அறிஞர் சோ.ந.கந்தசாமி அவர்கள் பல்வேறு நூல்களை எழுதியதுடன் அமையாமல் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பல பொறுப்புகளை வகித்துக் கல்விப் பணியாற்றியுள்ளார். சாகித்திய அகாதெமியின் உறுப்பினராகவும்,பல்கலைக்கழ ஆட்சிக்குழு உறுப்பினர், ஆய்வுக்குழு உறுப்பினர், தேர்வுக்குழுத் தலைவர், பாடத்திட்டக் குழுத்தலைவர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்றுத் திறம்படப் பணிபுரிந்துள்ளார்.இந்திய நடுவண் தேர்வாணையத்தின்(U.P.S.C.) முதன்மைத் தேர்வாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

இவர்தம் தமிழ்ப்பணியறிந்த பல்வேறு நிறுவனங்கள் இவருக்குப் பல சிறப்புகளைச் செய்துள்ளன.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஆராய்ச்சிப் பரிசுகள் இவருக்குக் கிடைத்துள்ளன.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழாக் கவிதைக்கு முதற்பரிசாகத் தங்கப் பதக்கம் பெற்றவர்.. திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்கள் என்னும் இவர்தம் நூலுக்கும்,இந்தியத் தத்துவக்களஞ்சியம் என்ற நூலுக்கும் தமிழக அரசு சிறந்த நூலுக்கான பரிசு வழங்கிச் சிறப்பித்துள்ளது.இவர் அண்ணாமலை செட்டியார் தமிழிலக்கிய விருது பெற்ற பெருமைக்கு உரியவர். தருமபுர ஆதீனத்தின் சித்தாந்தக் கலாநிதி,குன்றக்குடி ஆதீனத்தின் தமிழாகரர்,திருவாவடுதுறை ஆதீனத்தின் சித்தாந்தச் செம்மணி,மெய்யப்பன் அறக்கட்டளையின் சிறந்த தமிழறிஞர் விருது உள்ளிட்ட பல பட்டங்களையும் விருதுகளையும் தன் தகுதியால் பெற்றுள்ளார்.

அலுவல் முறையில் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஆராய்ச்சிப் பணிகளிலும்,எழுத்துப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள பேராசிரியர் அவர்கள் மைசூரில் உள்ள செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனத்தின் முதுநிலை ஆய்வறிஞராகப் பணிபுரிகின்றார்.

சோ.ந.கந்தசாமியார் அவர்களின் தொடர்பு முகவரி :

முனைவர் சோ.ந.கந்தசாமி அவர்கள்61,ஐந்தாம் தெரு,நடராசபுரம்(தெற்கு).தஞ்சாவூர் - 613007தொலைப்பேசி : 04362 241027

மின்தமிழ் இடுகை: முனைவர் மு.இளங்கோவன்

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES