தமிழ்மணி - பெரும்புலவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்
"சோழவளநாடு சோறுடைத்து" என்பர் புலவர்.
ஆனால் சோழநாடு சிறந்த புலவர் பெருமக்களை உடையதாகவும் இருந்தது.
பழந்தமிழ் நூல்களைத் திரட்டித் தந்த "தமிழ்த் தாத்தா" உ.வே.சாமிநாதய்யர் வழியில் வந்தவரே பெரும்புலவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்.
உ.வே.சா. போலவே இவரும் சங்க நூல்களை உரையோடு வெளியிட பெருமுயற்சி மேற்கொண்டார்.
நாராயணசாமி
நூலாசிரியராகவும்
மொழிபெயர்ப்பாளராகவும்
உரையாசிரியராகவும்
விளங்கினார்.
இவர் எழுதிய "நற்றிணை" உரையே இவர் புகழை காலா காலத்துக்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.
இலட்சுமி நாராயண அவதானிகள் என்னும் இயற்பெயர் கொண்ட நாராயணசாமி ஐயர், தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள பின்னத்தூரில் 1862ம் ஆண்டு ஆவணித் திங்கள் 29ம் நாள் பிறந்தார்.
இவருடைய தந்தையார் வேங்கடகிருஷ்ண அவதானிகள் எனவும் அப்பாசாமி ஐயர் எனவும் அழைக்கப்பட்டார். தாயார் சீதாலட்சுமி அம்மாள். இவரது தந்தையார் மருத்துவ நூலில் சிறந்த பயிற்சி உடையவர்.
நாராயணசாமி ஐயருடன் பிறந்தவர்கள் ஏழு பேர். ஆண்மக்கள் நான்கு பேர்; பெண்மக்கள் மூன்று பேர். ஆண்களுள் இவரே மூத்தவர். பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை இவரது அத்தையே மேற்கொண்டார்.
இவர் பள்ளிக் கல்வியை உரிய காலத்தில் ஒழுங்காகக் கற்றார். பின்னத்தூரில் பள்ளிக்கூடம் வைத்திருந்த முத்துராம பாரதியாரிடம் தமிழ் படித்தார். அக்காலத்தில் மன்னார்குடியில் இருந்த தமிழ்ப் பெரும் புலவர் நாராயணசாமி பிள்ளையின் இராமாயண விரிவுரையைக் கேட்டு தமிழின் மேல் பற்று கொண்டார். இந்நிகழ்ச்சியே இவருடைய தமிழ்ப் பயிற்சிக்குக் காரணமாய் அமைந்தது. கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டத்தை வாங்கி வாசித்தார். இவர் தமிழ் மொழியைப் கற்கவேண்டும் என்ற பேரவாவினால் எப்போதும் நூலும் கையுமாகவே இருந்தார். இதை குடும்பத்தார் விரும்பவில்லை.
இதனால் இவர் அத்தைக்குத் தெரியாமல் வயல் வரப்புகளுக்குச் சென்று கருவேல மரங்களுக்குக் கீழே அமர்ந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். இவர் தமிழ் படித்துக் கவிபாடும் ஆற்றலில் சிறந்து விளங்கினார். தமிழ் இலக்கியங்களைத் தாமே தனித்திருந்து கற்றபடியால் ஐயப்பாடுகள் உண்டாயின. அவற்றைக் களைந்து கொள்வதற்கு காலத்தை எதிர்பார்த்திருந்தார்.
அக்காலத்தில் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரின் மருகரும், "வித்வ சிரோமணி" என்னும் சிறப்புப் பெயர் பெற்றவருமாகிய பொன்னம்பலப் பிள்ளை என்பவர் தமிழ் அறிஞராக விளங்கினார். அவர் சிறிதுகாலம் திருமறைக்காட்டில் வந்து தங்கினார். நாராயணசாமி ஐயர் அவரிடம் சென்று அறிமுகம் செய்து கொண்டார். அவரிடம் தம்முடைய ஐயங்களைப் போக்கிக்கொண்டார். மேலும், அவரிடம் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தையும் பாடம் கேட்டார்.
இவர் மொழிநூல் புலமையோடு, புதிய நூல் படைக்கும் ஆற்றலும் பெற்றிருந்தார். "நீலகண்டேசுரக் கோவை" என்னும் கோவை நூல் பாடி, மன்னார்குடியில் தமிழறிஞர் பொன்னம்பல பிள்ளையின் முன்னிலையில் அரங்கேற்றினார். அத்துடன் அவர் வடமொழியும் கற்று புலமைப் பெற்றிருந்ததால், வடமொழியில் காளிதாசர் இயற்றிய பிரகசன நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
தமிழ் நாட்டின் பழைய வரலாறுகளையும், பெருமைகளையும் தேடி ஆராய்வதில் பெருவிருப்பம் கொண்டவராகவும், கோயில்களிலும், வரலாற்றுச் சின்னங்களிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளைப் படித்தறியும் ஆற்றல் பெற்றவராகவும் விளங்கினார்.
தமிழ்ப் புலவர்களின் வரலாறுகளை நன்கு அறிந்தவர். அவர்கள் பாடிய செய்யுள்களை நினைவில் வைத்துக்கொண்டு, தேவைப்படும்போது எடுத்துரைக்க வல்லவர். தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இவருக்குச் சிறந்த பயிற்சி இருந்தது. அதில் காட்டியிருந்த மேற்கோளுக்கெல்லாம் அகரவரிசை ஒன்றை இவர் எழுதி வைத்திருந்தார்.
நீலகண்டேசுரக் கோவை
பிரகசன நாடகம்
இடும்பாவன புராணம்
இறையனாராற்றுப்படை
சிவபுராணம்
களப்பாள் புராணம்
அரதைக் கோவை
வீரகாவியம்
சிவகீதை
நரிவிருத்தம்
மாணாக்கராற்றுப்படை
இயன்மொழி வாழ்த்து
தென்தில்லை உலா
தென்தில்லைக் கலம்பகம்
பழையது விடு தூது
மருதப்பாட்டு
செருப்புவிடு தூது
தமிழ் நாயக மாலை
இராமாயண அகவல்
நற்றிணை உரை
என்பன இவரால் இயற்றப்பட்டவை.
1899ம் ஆண்டு முதல் இவர் மறையும் வரை கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். இக்காலங்களில் சங்க இலக்கியங்களில் தனிக்கவனம் செலுத்தினார். குறுந்தொகையை நன்றாக ஆய்வு செய்தார். அப்போது, நற்றிணைக்கு உரையெழுதி முடித்துவிட்டார். அகநானூற்றுக்கு உரை எழுதிக் கொண்டிருந்தார்.
நற்றிணை உரை அச்சாகிக் கொண்டிருக்கும்பொழுது நாராயணசாமி ஐயருக்கு நீரிழிவு நோய் மிகுதியானது. இறப்பதற்குள் நற்றிணை உரை நூலைக் கண்ணால் பார்த்துவிட்டுச் சாகவேண்டும் என்பது அவருடைய இறுதி விருப்பமாக இருந்தது. ஆயினும் அவ்விருப்பம் நிறைவேறவில்லை.
1914ம் ஆண்டு ஜூலை 30ம் நாள் தமது பிறந்த ஊராகிய பின்னத்தூரில் காலமானார்.
இவர் எழுதிய நற்றிணை உரை தமிழ் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறது. இவர் இயற்றிய இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் என்னவாயிற்று என்றே தெரியவில்லை. இந்த இழப்பு அவருக்கல்ல; தமிழுக்குத்தான்!
எந்தவித எதிர்பார்ப்புமின்றி தமிழ்த் தொண்டாற்றி மறைந்துபோன அவர் இன்று உயிரோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரது உழைப்பும், பெயரும், புகழும் இருக்கின்றன. இதைவிட வேறென்ன வேண்டும்?
நன்றி: தமிழ்மணி (தினமணி)
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்
திருவள்ளுவர் யார் - நூல் திறனாய்வு நிகழ்ச்சி
4 years ago
மறுமொழிகள்
0 comments to "பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்"
Post a Comment