காதலை மொழிவது அகநானூறு என்றால், காதலைத் தவிர்த்த உணர்வுகளை மொழிவது புறநானூறு. நானூறு இனிய பாடல்களின் தொகுப்பு.
எல்லாப் பாடல்களுக்கும் பாடியவர் யார்?
பாடப்பட்டவர்கள் யார் யார்? என்றெல்லாம் குறிப்புகள் கிடைத்திருக்கின்றன.
ஆனால் பாடிய புலவர் பெருமக்கள் யார் என்று தெரியாத நிலையில் புறநானூற்றில் பதினான்கு பாடல்கள் உள்ளன. பாடல்களின் பொருளாழம் கருதி இவை இன்றளவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அத்தகு "ஈன்றாரை இழந்த புறப்பாடல்களில்" சில:
ஒருத்தி தன் கணவனுடன் காட்டுவழியாக வந்துகொண்டிருக்கிறாள். அங்கு நேர்ந்த போரில் கணவன் இறந்துவிடுகிறான். வருத்தத்துடன் அருகிருக்கும் குயவனை நாடிச் செல்லும் அவள், குயவனிடம் இவ்வாறு வேண்டுகிறாள்: "குயவனே! என் அன்பிற்குரிய கணவன் வீர மரணம் அடைந்துவிட்டான். அவனை அடக்கம் செய்ய பெரிய தாழியை செய்துகொடு. அந்தத் தாழியில் அவனுடன் நானும் அடக்கம் ஆகவேண்டும். அதற்கேற்ப பெரிய தாழியாகச் செய்," என்று வேண்டுகிறாள். பாடல் இதுதான்:
"கலம்செய் கோவே கலம் செய் கோவே
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லிபோலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி
வியன்மலர் அகன்பொழில் ஈமத்தாழி
அகலிது ஆக வனைமோ
நனைத்தலை மூதூர்க் கலம் செய் கோவே". - (புறம்-256)
கணவனின் வீர உணர்வைத் தனித் தகுதியாகவே போற்றிய மனைவியாகத் திகழும் இவள், காட்டு வழியே அவனுடன் பயணம் செய்ததை அழகியதோர் உவமையாகச் சொல்கிறாள். வண்டிச் சக்கரத்தில் உள்ள ஆரத்தைப் பொருத்தி, அதாவது அதன்மேல் ஒட்டிக்கொண்டு வந்த சிறிய பல்லியைப்போல் பாலையைக் கடந்து வந்தேன் என்கிறாள். பயணத்தின் பொழுது ஆரத்தைவிட்டு விழாத வண்ணம் பல்லி எவ்வாறு உறுதியாகப் பற்றிக்கொண்டு வந்ததோ, அதுபோல் நானும் கணவனை உறுதியோடும், உரிமையோடும் பற்றி வந்தேன்' என்பது இங்கே நுட்பமான பொருளாகும். பாடல் இருக்கிறது, பாடலை ஈன்றவர் யார் எனத் தெரியவில்லை.
*****
இரண்டு தலைவர்களுக்கிடையில் பகை. ஒருவனது பசுக்கூட்டத்தை அடுத்தவனின் வீரர்கள் தங்கள் ஊருக்குக் கடத்திச் செல்கின்றனர். ஒரு வீரன் மட்டும் விரைந்து சென்று பகைத் தலைவனை வழி மறைத்து வீரர்களுடன் போரிட்டுப் பசுக்களை மீட்டு வந்து தமது தலைவனிடம் ஒப்படைக்கிறான். இவனது இந்த வீரம் பகைத் தலைவனுக்கு செருப்புக்கும் பாதத்திற்கும் இடையில் சிக்கிய சிறு கல் போல் இருந்து மிகவும் உறுத்தியதாம்; வருத்தியதாம்.
"செருப்பு இடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்
அவ்வயிற்று அகன்ற மார்பின் பைங்கன்
குச்சின் நிரைத்த குருஉமயிர் மோவாய்ச்
செவி இறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு
யார் கொலோ அளியன் தானே".... - என்று நீள்கிறது இந்தப் புறப்பாடல் (257)
அந்த வீரனின் புறத்தோற்றத்தை இவ்வாறு சொல்லோவியமாக்கிக் காட்டுகிறார் புலவர். அவன் திரண்ட கால்களை உடையவன். அழகிய வயிற்றை உடையவன். குச்சுப்புல் நிரைத்தது போன்ற நிறம் பொருந்திய தாடியை உடையவன். காதுகளையும் கடந்து செல்லும் முன்னே தாழ்ந்த கதுப்பினையுடையவன்.
*****
கடத்திச் சென்ற பசுக் கூட்டங்களை மீட்டு வருகையில் இந்தத் தலைவனைப் பகைவர்கள் சூழ்ந்து நின்று கொன்று விடுகின்றனர். அவனுக்கு நடுகல், அதாவது நினைவுச்சின்னம் எழுப்பி ஊரார் போற்றி வணங்குகின்றனர். இந்நிலையில் அவ்வூருக்கு வருகை தரும் பாணன் ஒருவனை நோக்கி இவ்வாறு கூறுகிறான் தலைவனின் நண்பன்:
"ஒரு பெரிய ஆண் யானையின் காலடியைப்போல விளங்கும் ஒரு கண்ணையுடைய பெரிய பறையையுடையவனே! இரவலனே! புகழ் பூத்த எம் தலைவனின் நடுகல்லை வணங்கிச்செல்க. அப்பொழுதுதான் நாட்டில் மழை பொழியும்; வளம் கொழிக்கும்; மலர்கள் நிறைந்த இடத்தில் தேனை உண்ண வண்டுகள் மொய்க்கும்'' என்று தனது நம்பிக்கையையும் தெரிவிக்கிறான். தலைவன் மீது கொண்ட பற்றினை விளக்கும் புறப்பாடல் இதோ:
"பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
இரும்பறை இரவல! சேறி ஆயின்
தொழாதனை கழிதல் ஓம்புமதி வழாது
வண்டுமேம் படூஉம் இவ் வறநிலை யா
ேபல்லாத் திரள்நிறை பெயர்தாப் பெயர்தந்து
கல்லா இளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனல் சிறையின் விளங்கியோன் கல்லே!" - (புறம்-263)
*****
வீரனொருவன் பகைவரின் யானைகளைக் கொன்றுவிட்டு தானும் புண்பட்ட நிலையில் நிற்கிறான். அவ்வேளையிலும் தம்மைத் தாக்கவரும் யானையை எதிர்த்துக் கொல்கிறான். அவனது இந்த வீரத்தைக் கண்ட அவனது மன்னனும், இத்தகைய போர்க்களத்தில் இறப்பதைவிடவும், புலவர்களால் பாராட்டப்பெறும் சூழல் நமக்கு வேறில்லை என உணர்ந்து போரிட்டு இறந்துவிடுகிறான். அத்தகைய தலைவன் இப்போது எங்கு உள்ளானோ என்கிறார் புலவர்.
"ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ
குன்றத்து அன்ன களிற்றோடு பட்டோன்
வம்பலன் போலத் தோன்றும் உதுக்காண்
....... ........ .........
நீரும் புல்லும் ஈயாது உமணர்
யாரும் இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
வாழா வான்பகடு ஏய்ப்பத் தெறுவர்
பேருயிர் கொள்ளும் மாதோ....." (புறம்-307)
இங்கே ஓர் உவமை! எதிர் வரும் பகைவரையெல்லாம் தீர்த்துக் கட்டுகிறான் இந்த வீரன். இது எப்படி இருக்கிறதென்றால், "புல்லும் நீரும் இன்றி, உப்பு வாணிகரால் கைவிடப்பட்ட - முடமாகிவிட்ட எருமைக்கடா தன்னருகே உள்ள அனைத்தையும் தின்று தீர்த்துவிடுவதைப் போல் உள்ளது," என்கிறார் புலவர்.
இந்தப் பாடல் தலைவனொருவனின் ஊர்நலம் கூறும் பாங்கினைக் கொண்டுள்ளது. ஆம்! இவ்வூரில், புலியிடம் அகப்பட்டுக்கொண்டு பிறகு தப்பித்தாவிச் செல்கின்ற ஒரு மான் கன்றுக்குச் சினமில்லாத ஒரு முதிய பசு தன் பாலைத் தரும் பண்புடையது. மேலும் பரிசிலரான பாணர்க்கு அவர்கள் எண்ணிய வண்ணம் நல்கும் ஈகை; போர்க்களத்தில் உரல் போன்ற கால்களையுடைய களிற்றைக் கொல்வதற்காக மட்டும் வாளை உறையினின்றும் எடுக்கும் பண்பு இவற்றை உடையவனது ஊராம் இந்த ஊர்.
"புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
சினங்கழி மூதாக் கன்று மடுத்து ஊட்டும்
கா...........பரிசிலர்க்கு
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை
வெள்வேல் ஆவம் ஆயின் ஒள்வாள்
கறையடி யானைக்கு அல்லது
உறை கழிப் பறியா வேலோன் ஊரே!" - (புறம்-323)
கவிமாமணி டாக்டர் வேலூர் ம. நாராயணன்.
நன்றி: தமிழ்மணி (தினமணி)
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்
திருவள்ளுவர் யார் - நூல் திறனாய்வு நிகழ்ச்சி
4 years ago
மறுமொழிகள்
0 comments to "ஈன்றாரை இழந்த புறப்பாடல்கள்!"
Post a Comment