தமிழ் வழியில் உயர் கல்வி

0 மறுமொழிகள்

அண்மையில் நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழக செனட் பேரவை முதுகலையில் (எம்.ஏ.) அரசியல் மற்றும் பொது நிர்வாகப் படிப்பை மாணவர்களுக்கு தமிழ் வழியில் பயிற்றுவிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

150 ஆண்டுகளைக் கடந்த சென்னைப் பல்கலைக்கழகம் முதன்முதலாக முதுகலையில் தமிழ் வழிக்கல்வி முறையை அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறையில் துவக்கியிருப்பதும், இளங்கலை பட்டப்படிப்பை கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் முதல் இரண்டாண்டுகள் தமிழைக் கட்டாயம் ஒரு பாடமாகக் கற்க வேண்டும் என்ற அரசின் அறிவிப்பும் அனைத்துத் தரப்பு தமிழ் ஆர்வலர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.

தாய்மொழியில் உயர்கல்வி என்ற சிந்தனை இப்போதுதான் அரும்புவதுபோல் இந்த அறிவிப்புகள் மூலம் தோற்றமளித்தாலும் இதற்கான வித்து எப்போதோ ஊன்றப்பட்டது. இன்றுவரை இம்முயற்சி ஏன் முற்றுப் பெறவில்லை என்பதே இன்று நம் முன்னர் உள்ள கேள்வி?

தமிழ்நாட்டின் கல்வி அமைச்சராக இருந்த பசுமைப்புரட்சிக்கு வித்திட்டவர் என்று அனைவரின் பாராட்டைப் பெற்ற சி. சுப்பிரமணியம், உயர்கல்வியில் தமிழ்வழிக் கல்விக்கான ஆரம்பக் கட்டப் பணிகளைத் துவக்கியவர் என்றால் அது மிகையாகாது. பள்ளிக்கல்வி வரை தமிழ்வழி பயிற்று முறையில் பயின்றவர்கள் கல்லூரிக் கல்வியை எட்டிப் பிடித்ததும் ஆங்கில வழியில் பயில வேண்டிய கட்டாயம் அன்றைய நாளில் இருந்து வந்தது. அந்நிலையைப் போக்க, பட்டப்படிப்பிலும் தமிழ் வழியில் மாணவர்கள் பயில வேண்டும் என்ற நோக்கில் சி.எஸ். அன்றைய தினம் கல்லூரிகளில் பணியாற்றிய பேராசிரியர்களை அழைத்து இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பாடங்களைத் தமிழில் மொழி பெயர்த்து பாடப் புத்தகங்களாக வெளியிட வேண்டும் என்ற யோசனையை வெளியிட்டார். அதையடுத்து இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பயிலும் மாணவர்களுக்கென தமிழ் வழிப் பாடப்புத்தகங்கள் பல அன்றைய தமிழ் வளர்ச்சி இயக்கத்தின் வாயிலாக வெளியிடப் பெற்றன.


அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் வாயிலாக இன்றைய முதல்வர் 1970-இல் முதல்வராகப் பொறுப்பில் இருந்தபோது இந்தப் பணி மேலும் முடுக்கிவிடப்பட்டு, புத்துயிர் பெற்றது. அதன் பயனாய்
வரலாறு,
பொருளாதாரம்,
வணிகவியல்,
சட்டவியல்,
இயற்பியல்,
புவியியல்,
இயைபியல்
போன்ற துறைகளில் தமிழ்வழிக் கல்வியை, கல்லூரி நிலையிலும் தொடரும் வகையில் பல புத்தகங்கள் வெளியிடப் பெற்றன. இதனால் கல்லூரிகளில் இளங்கலையில் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாயிற்று. மேலும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் அனைவருக்கும் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி, தமிழ்வழிப் பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்குவது என்ற திட்டத்தையும் அரசு அறிவித்தது. அரசுக் கல்லூரிகளில் மட்டுமே தமிழ் வழியில் பயிலும் வசதி இன்றுவரை இருந்து வருகிறது. இங்கு பயில்பவர்கள் பெரும்பாலும் கிராமத்திலிருந்து வருகின்ற அடித்தட்டு சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களே. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ் வழியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் முதுகலை படிப்பைத் தமிழ்வழியில் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போனது என்று சொல்வதைக் காட்டிலும் அதற்குரிய வசதிகள் இல்லை என்று சொல்வதே சாலப் பொருத்தமாகும்.

குறிப்பாக பொறியியல், மருத்துவம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் பட்டப்படிப்பைத் தமிழ்வழியில் பயில இன்றுவரை அதற்குரிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டமேற்படிப்பை தமிழ்வழியில் தொடர எண்ணும் மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் தமிழில் இல்லை என்று சொல்லுமளவில் தான் இன்று வரை நாம் உள்ளோம்.

தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அறிவியல் கழகம், தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் போன்ற அமைப்புகள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்தாலும் முதுகலை படிப்பு மாணவர்களுக்கென அறிவியல் மற்றும் பொறியியல் துறை பாடங்களில் தமிழாக்கங்கள் இன்றுவரை போதிய அளவில் அந்நிறுவனங்களால் கொண்டு வரப்படவில்லை. தமிழகத்தில் உள்ள எந்தப் பல்கலைக்கழகத்திலும் முதுகலை படிப்பைத் தமிழ்வழியில் பயில்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. இந்த நிலை முற்றிலும் களையப்படுவதோடு அதற்குரிய வாய்ப்புகளையும் தமிழகப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கித் தர வேண்டும்.

முதுகலை படிப்பையே இன்று வரை தமிழ்வழியில் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது ஒரு புறம். முதுகலை படிப்புக்குப்பின் ஆய்வுப்பட்டங்களைப் பெற எண்ணுபவர்களுக்கு, அந்த ஆய்வுகளைத் தமிழ் வழியில் மேற்கொள்வதற்கான வழிகாட்டிகளும் இல்லை, வசதிகளும் இல்லை என்பதும் அதன் மறுபுறம். தமிழ் வழியில் பயில்வதற்கான முழுமையான வசதிகள் ஏற்படுத்தி இருப்பின் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணுபவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அதற்குரிய வாய்ப்புகளோ, வசதிகளோ இல்லாமல் தமிழ் வழியில் பயில வேண்டும் என்று சொன்னால் அதுவே உண்மைக்குப் புறம்பானதன்றோ! எது எப்படியோ, நம் அறிவியல் மற்றும் கலையியல் பேராசிரியர்களும், அறிஞர்களும் தமிழ் வழி நின்று ஆய்வு மேற்கொள்ளும் முயற்சியில் முழுமையான ஈடுபாட்டைக் காட்டவில்லை என்பதிலும் உண்மை இல்லாமல் இல்லை. அதே நேரத்தில் சில பேராசிரியர்கள் தங்களது அறிவியல் ஆய்வுகளையும், படைப்புகளையும் தமிழில் கொண்டு வந்த போதும் அது தமிழ்வழித் தேடலுக்குப் போதுமானதாக இல்லை. அப்படிப்பட்டவர்கள் மேற்கொண்ட முயற்சி சமுதாயத்தில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்ற கூற்றையும் நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். தமிழ் மொழியில் நன்கு புலமை பெற்ற அனுபவமிக்க கல்வியாளர்களை இதுபோன்ற முயற்சிகளில் நாம் எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொண்டோம் என்ற கேள்வியையும், நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.


தமிழ் மொழி தன் தொன்மையாலும், இலக்கணச் செறிவாலும், இலக்கிய வளத்தாலும் செம்மொழி என்ற தனிப் பெருமையை இன்று பெற்றுள்ளது என்பது தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் பெருமை. அப்பெருமையோடு நாம் நின்றுவிடாமல் மற்ற துறைகளான
அறிவியல்,
பொறியியல்,
மருத்துவ இயல்,
உயிரியல்,
பயிரியல்,
உடற்கூறியல்,
வானியல்,
கடலியல்,
நிலவியல்,
கலை அறிவியல்,
சமூகவியல்,
பொருளியல்,
நிர்வாகவியல்,
சட்டவியல்,
அரசியல்
போன்ற அனைத்துத் துறைகளிலும் உயர்கல்வியைத் தமிழ் வழியில் பயில வேண்டும் என எண்ணுவோருக்குத் தேவையான வகையில் தன்னிறைவு பெற்றுவிட்டோம் என்று எண்ணுமளவுக்குத் தமிழ்மொழியில் நூல்களைப் படைத்தாக வேண்டும். அனைத்துத் துறைகளிலும் தமிழ்மொழி மூலமாக முதுகலை படிப்பும், ஆராய்ச்சியும் மேற்கொள்ள முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். அனைத்துத் துறைகளிலும் உயர்கல்வியில் புதிய உத்திகளையும், புதிய திறனாய்வு முறைகளையும் தமிழில் உருவாக்குவதற்கான அடிப்படைக் காரணிகளை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் தமிழாய்ந்தவர்களுக்கும், கல்வியாளர்களுக்கும், அறிவு ஜீவிகளுக்கும், அரசுக்கும் இருக்கிறது.

செம்மொழி என்ற மதிப்பை - உரிய உயர்வைத் தமிழ் மொழிக்குப் பெற்றுத் தந்த தமிழ்நாடு அரசு மட்டுமே இதற்கான முயற்சிகளை எடுக்க முடியும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் முயற்சிகளால் எட்டப்படும் இலக்கின் மூலம் சிலர் அதன் பயனை முழுமையாக நுகர்ந்த பின்பு தான் அதன் பெருமை சமுதாயத்துக்குத் தெரியவரும். அதுவே பின்னர் உயர்கல்வியையும், ஆராய்ச்சியையும், தமிழ் வழியில் மேற்கொள்ள உதவும். அதன்வழி நின்று சாதனைகள் படைக்க வேண்டும் என்ற உணர்வை அதிக அளவில் மக்களிடையே ஏற்படுத்துவதற்கு வழி வகுக்கும். இப்படிப்பட்ட முயற்சிகளே சிறப்பான ஆய்வுகள் தமிழில் வெளிவருவதற்குப் பெருந்துணை புரியும். இத்தகைய தமிழ் வளர்ச்சியைக் கனவு கண்டு முயன்று நம்முன் வைத்துவிட்டுச் சென்ற புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தம் கருத்தாக,

"உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்

ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்
சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்!
------------------------

எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந்தோமில்லை.
தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்'' - இந்நாள் எந்நாள்?

வி.சீ. கமலக்கண்ணன்
(கட்டுரையாளர்: தலைவர், சென்னைப் பல்கலைக்கழக அலுவலர் பேரவை)

நன்றி:தினமணி தலையங்கம்

மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

மறுமொழிகள்

0 comments to "தமிழ் வழியில் உயர் கல்வி"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES