களப்பிரர் காலக் குடைவரைக்கோயில்

0 மறுமொழிகள்

வரலாற்றின் கட்டுமானத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு நினைவுச்சின்னங்களுக்கும், இலக்கியங்களுக்கும் உண்டு. நினைவுச் சின்னங்களில் குறிப்பிடத்தகுந்தவையாக கருதப்படுவது அழியாச்சின்னங்களாக இன்றுவரை "இறவாப்புகழுடன்'' விளங்கி வரும் கோயில்களைக் குறிப்பிடலாம்.

மனிதனின் சமயப்பற்றினை வெளிக்காட்டும் ஆதார சான்றாக எழுப்பப்பட்டதே "கோயில்'' எனலாம். காலத்தால் முந்தைய பல குடவரைக் கோயில்களையும், எண்ணிலா வரலாற்றுக் கல்வெட்டுகளையும் தன்னகத்தே கொண்டது பாண்டியநாடு. பாண்டியநாட்டின் வரலாற்றிச் சின்னங்களுள் ஆண்டிச்சிப்பாறை குடைவரைக் கோயிலுக்கும் இடம் உண்டு. அறியப்படாத பழைமையான நினைவுச் சின்னங்களில் இதுவும் ஒன்று.

குகைக்கோயிலின் அமைவிடம்:

தென்பாண்டி நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியிலிருந்து இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ள கிராமமே "பதினாலாம்பேரி''. இதற்கு மிக அருகாமையில் அமைந்துள்ள குடைவரைக்கோயிலே "ஆண்டிச்சிப்பாறை குடைவரைக்கோயில்''. அப்பாறையை ஆங்கிலத்தில் ''Beddar women's rock'' என்று திருநெல்வேலி மாவட்ட தல பேரகராதி குறிப்பிடுகின்றது. இதன் அருகாமையில் காணப்படும் மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னம் "மறுகால்தலை சமணர் கற்படுக்கை'' .

கோயிலின் அமைப்பு:

குடைவரைக் கோயிலானது மலையின் வலப்புறச்சரிவில் குடையப்பட்டுள்ளது. கோயிலின் வாயில் கிழக்கு நோக்கி இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. வாயிலின் பக்கவாட்டுச் சுவர் இருபுறமும் ஒரே அளவினதாக இல்லாமல் ஒருபுறம், மற்றொரு புறத்தைவிட பருமனாகவும், சீரற்ற நிலையிலும் காட்சியளிக்கிறது. மேற்புறம் சீராக செதுக்குவதற்கு முயற்சிகள் நடந்திருப்பதை காணமுடிகிறது. கோயிலின் கருவரை சதுரமானதாகவே காட்சியளிக்கிறது. கோயிலின் உட்பகுதியானது ஐந்து அடி அகலத்தையும், ஏழு அடி உயரத்தையும் கொண்டதாகக் குடையப்பட்டுள்ளது. இக்குடையப்பட்ட அறையின் இடப்புறத்தில் வாயிலை ஒட்டிய பகுதியில் விநாயகர் உருவமும், அதன் இடப்புறம் பின் உள்ள பாறையில் பெண் தெய்வம் ஒன்று அமர்ந்திருப்பது போன்ற உருவமும் புடைப்புச் சிற்பமாக (Bas relief) காட்சியளிக்கிறது.

குடைவரையின் வெளிப்புறம் இருபுறமும், தூண்களை உருவாக்க மேற்கொண்ட குடைவுப் பணியானது முற்றுப் பெறாத நிலையில் இருப்பதைக் கண்டுணர முடிகிறது. தூணில் அதிக வேலைப்பாடுகள் இல்லை. குடைவரையின் நடுப்பகுதியில் பீடம் மட்டும் உள்ளது. பீடத்தின் மையப்பகுதியில் வட்ட வடிவிலான உருவம் ஒன்றை செதுக்க முயன்றுள்ளதையும் காணமுடிகிறது. பீடத்தின் இருபுறமும் ஆராதனை செய்யும் மங்கலநீர் கீழே விழுந்து தேங்குவதற்கு வட்டவடிவிலான குழி அமைக்கப்பட்டுள்ளது.

குடைவரையின் இடப்புறம், மேலும் ஒரு குடைவரையினை உருவாக்கிட முயன்றுள்ளதை காண முடிகிறது. ஆனால் அப்பணியும் தொடக்க வேலைப்பாட்டுடனேயே முற்றுப்பெறாத நிலையில் உள்ளது. மலைப்பகுதியின் நடுவில் இக்குடைவரை ஏற்படுத்த முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். குடைவரையின் மேற்புறம், சுற்றுப்புறம் போன்றவை கடினமான பாறைகளைக் கொண்டதாகவே காட்சியளிக்கிறது.

விநாயகர் உருவம்:

பரிவார தெய்வமாக விநாயகரின் புடைப்புச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் உருவமானது அதிகளவு நுண்ணிய வேலைப்பாடுகள் இல்லாதவாறு உருவாக்கப்பட்டுள்ளது. விநாயகர் இருகரங்களை உடையராகவே காட்சியளிக்கிறார். வலதுபுறத்தந்தம் சற்று ஒடிந்த நிலையிலும், இடப்புறத்தந்தம் முழுமையாக இருப்பது போலவும் உள்ளது. அகன்ற காதுகளை உடையவராகவும், தலையில் மகுடம் இல்லாமலும் விநாயகர் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமர்ந்த நிலையில், தும்பிக்கை இடப்புறம் வளைந்த நிலையில் காணப்படும் விநாயகர், வலக்கரத்தில் "சங்கினை" ஏந்தியவராக காட்சியளிக்கிறார். விநாயகரின் ஆடை மடிப்புகூட தெளிவாக இச்சிற்பத்தில் காணமுடிகிறது.

பெண் தெய்வத்தின் உருவம்:

விநாயகருக்கு வலப்புறம் பின்புறப்பாறையில் பெண் தெய்வத்தின் உருவம் புடைப்புச் சிற்பமாக உருவாக்கப்பட்டுள்ளது. பெண்ணின் தலையில் வட்டவடிவிலான "மகுடம்'' அணிவிக்கப்பட்டு, கண்கள் மூடியவாறும், மார்புக் கச்சை அணிந்தவாறும், காதுகள் நீள்காதுகளாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. காதில் எவ்வித அணிகலன்களும் இல்லை. ஆடை வகையினை தெளிவாக காண இயலவில்லையென்றாலும், தொடை வரையிலான ஆடையை அணிந்திருப்பது தெரிகிறது.



இருகால்களையும் தரையில் ஊன்றிய நிலையில் இச்சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. சிலையின் பீடத்தினை உற்று நோக்க, மலரினை தலைகீழாக கவிழ்த்திருப்பது போன்ற உருவம் புலப்படும். வலது மணிக்கட்டில் "வளையல்'' போன்ற ஒரு அணியை இப்பெண் அணிந்திருக்கிறாள். பெண்ணின் வலக்கரத்தில் மலரை ஏந்தியிருப்பது போன்றும் இடப்புறத்தில் "சேடிப்பெண்'' சாமரம் வீசுவது போன்றும், சேடிப்பெண்ணின் சிகையலங்காரமும், பெண் தெய்வத்தின் அலங்காரமும் ஒன்று போலவே காட்சியளிக்கின்றன. பெண் தெய்வத்தின் காலில் எவ்வித அணியும் இல்லை. இக்குடைவரையினை பொறுத்தமட்டில் இவ்விரண்டு புடைப்புச் சிற்பங்கள் மட்டுமே காணப்படுகின்றன.

குடைவரைக் கோயிலின் மேற்பகுதி வேலைப்பாடுகள் பெருமளவில், முதலாம் மகேந்திரவர்மனால் குடைவிக்கப்பெற்ற மகேந்திரவாடி குகைக்கோயிலின் முகப்பினை ஒத்துக் காணப்படுகின்றன. தூண்கள் வேலைப்பாடு இல்லாதது பல்லவரது தொடக்ககால குடைவரையின் சிறப்பம்சம் எனலாம். முதலாம் மகேந்திரவர்மனே, "மலைப்பாறைகளைக் குடைந்து, குகைக்கோயில்களை முதன்முதலாக அமைத்தான்" என்பதை மண்டகப்பட்டு கல்வெட்டு உணர்த்தும்.

பாண்டியர்களின் கூரை முகப்பின் மேற்புறத்தோற்றம், வேலைப்பாடு நிறைந்ததாக இல்லை. பெரிய மண்டபங்களும், உயர்ந்த விமானங்களும் இல்லை. பாண்டியரது பெரும்பாலான குடவரைகளில் மாடங்கள் குடையப்பெற்று, அவற்றில் தெய்வத் திருமேனிகளின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக உருவாக்கப்பட்டிருக்கும். இவ்வொற்றுமைகள் அனைத்தும் "ஆண்டிச்சிப்பாறை குடைவரை கோயிலுக்கும் பொருந்துகிறது". ஆனால் முற்காலப் பாண்டியர்கள், பல்லவர்கள் குகைக்கோயில்களை அமைக்கும் முன்னரே "குடைவரைக்கோயில்களை அமைத்தனர். பாண்டியர்களால் குடைவிக்கப்பட்ட பிள்ளையார்பட்டி குடைவரையே காலத்தால் முந்தயது. இங்கு காணப்படும் தமிழ்ப்பிராமி எழுத்துக் கல்வெட்டே இதற்கு சான்றாகும்''.

பிள்ளையார்ப்பட்டி குகைக்கோயிலானது களப்பிரர்கள் காலத்தில் உண்டாக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற கருத்தும் வரலாற்றாளர்களால் வலியுறுத்தப்படுகிறது. இவற்றை ஆராயும்போது ஆண்டிச்சிப்பாறை குடைவரைக்கோயில் முற்காலப் பாண்டிய மன்னர்களின் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று எண்ணுவதற்கு வாய்ப்புண்டு. ஏனெனில் பாண்டிய மன்னர்கள் ஊருக்கு வடகோடியில் சப்த மாதர் உருவங்களை சாஸ்தா கணபதியுடன் அமைத்திருந்தனர். சாஸ்தா இருந்த இடத்தில் சிவன் வீரபத்திரனாகவும், ஐராவதம் இருந்த இடத்தில் விநாயகரும் வடிவமைக்கப்பட்டதை அறியமுடிகிறது. மேலும் தொடக்க காலத்தில் கணபதிக்கு இரு கைகளே அமைக்கப்பெற்றன. விநாயகர் இல்லாமல் பாண்டியர் குடைவரை அமைக்கப்பட்டதில்லை. பிள்ளையார்பட்டி விநாயகர் பாண்டியர்களின் குடைவரை கோயிலமைப்பிற்கு சான்றாக விளங்குபவர். இவையணைத்தையும் கொண்டு ஆராய்கையில் ஆண்டிச்சிப்பாறை குகைக்கோயில் முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததே என்று முடிவு கொள்ளலாம்.

ஆய்வாளர் இல. கணபதிமுருகன்

நன்றி: தினமணி


மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

மறுமொழிகள்

0 comments to "களப்பிரர் காலக் குடைவரைக்கோயில்"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES