பதங்களும் ஜாவளியும் - பக்தியும் சிருங்காரமும் (1)

0 மறுமொழிகள்

வெங்கட் சாமிநாதன்

காதல், விரஹ தாபம், தோழியைத் தூது அனுப்புதல், பின் இந்தக்காதலே இறைவனிடம் கொள்ளும் பக்தியாக பரிணாமம் பெறுதல், இவை அத்தனையும், கவிதையாக, சங்கீதமாக, நடனமாக, பல ரூபங்களில் பரிணாமம் பெறுதல், அத்தனையும் ஒரு நீண்ட வரலாறாக, இடைவிடாத பிரவாஹமாக சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் தமிழ் வரலாற்றில், வாழ்க்கையில் அதன் கலைகளில் பரிணமித்திருப்பது போல வேறு எங்கும் இதற்கு இணை உண்டா என்பது எனக்குத் தெரியவில்லை. தமிழில் பரதநாட்டியப் பாடல்கள் என்ற ஒரு தொகுப்பைப் பார்த்த போது, நமக்குத் தெரிந்த ஒரு இரண்டாயிர வருஷ நீட்சி என் முன் விரிந்தது.

ஊடலும் கூடலும் குகையில் வாழ்ந்த காலத்திலேயே தொடங்கியது தான். ஆனால்,

"நில், ஆங்கு நில்,
நீ நாறு இருங் கூதலார் இல் செல்வாய், இவ் வழி
ஆறு மயங்கினை போறி, நீ வந்தாங்கே மாறு."

என்று அது கவிதையாக மலர்ந்து நம் முன் விரிகிறது. பரத்தை வீடு சென்று வந்த தலைவனை 'வந்த வழியைப்பார்த்துப் போய்யா', என்று விரட்டுகிறாள் காதலி. ஏதோ சட்டென கிடைத்த ஒன்றைச் சொன்னேன். தமிழ்க் கவிதையில் இதற்கும் பின்னோக்கி நாம் செல்லக்கூடும். இதற்கு மாறாக, திருமங்கை ஆழ்வார் தன்னையே திருமாலின் அழகில் மயங்கி நிற்கும் மங்கையாகக் கற்பித்துக் கொள்கிறார்.

தஞசம் இவர்க்கு என் வளையும் நில்லா நெஞ்சமும் தம்மதே சித்த்¢த்தேற்கு
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி வாய் திறந்தது ஒன்று பணித்தது உண்டு.

இப்படி நாம் அகப்பாடல்களிலும் ஆண்டாள் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் பாசுரங்களிலும், மாணிக்கவாசகர் திருக்கோவையாரிலும் நெடுக காணலாம். அது இசையிலும் ஆடலிலும் தொடர்ந்து வந்துள்ளது. கானல் வரியிலிருந்து இந்த காதலும், பிரிவாற்றாமையும், தவறாகப் புரிந்து பிணங்குதலும் ஆடலிலும் சங்கீதத்திலும் சேர்ந்தே வெளிப்பாடு பெற்று வந்துள்ளன. இது நமக்கே உரிய சிறப்பு.

இப்போது நான் யோசிக்கும் போது, காதலும், அது பக்தியாக மேல் நிலைப்படுத்தப்பட்டு உன்னதமாக்கப் பட்டும் சங்கீதமாகவும், நடனமாகவும் பரிணாமம் பெற்றுள்ள ஒரு உதாரணம், ஜெயதேவர். ஜெயதேவர் இல்லாது ஒடிஸ்ஸி ஏது? ஒடிஸ்ஸி இல்லாது கொனாரக் சிற்பங்களும் ஏது?

தெற்கிலும், தமிழ் நாட்டிலும் இந்த கூட்டுக் கலவையான மரபு தொடர்ந்து வந்துள்ளது தான். ஆனால் இப்போது நமக்குக் கிடைக்கும் பதங்கள் அதிகம் பின்னோக்கிப் போனால் 16-ம் நூற்றாண்டு முத்துத் தாண்டவரோடு நின்று விடுகிறோம். ராமானுஜரும் வைஷ்ணவ ஆச்சாரியார்கள் சிலரும் சரியாக நூறாண்டு வாழ்ந்ததாக சொல்கிறார்கள். அது போல முத்துத் தாண்டவர் வாழ்ந்ததும் சரியாக ஒரு நூறாண்டு (1525-1625) காலம். தஞ்சையில் நாயக்கர்கள் ஆண்ட காலம். கிட்டத்தட்ட 200 வருஷங்களுக்கு மேலாக விஜயநகர் ஆட்சியிலும் நாயக்கர்களின் ஆட்சியிலும் தமிழ் நாடு இருந்த போதிலும், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகளுக்கு அவர்கள் தந்த ஆதரவு ஒரு புறம் இருந்த போதிலும், 17-ம் நூற்றாண்டு கடைசி வரையிலும் இசையிலோ நாட்டியத்திலோ அல்லது நாடகத்திலுமோ தமிழ் தான் தொடர்ந்து வெளிப்பாட்டு மொழியாக இருந்து வந்துள்ளது. தெலுங்கு இன்னும் மேலாண்மை பெற்று விடவில்லை. இசைக்கு ஏற்ற மொழி தெலுங்கு தான் என்று யாரும் சொல்லத் தொடங்கவில்லை. இசைக்கும் நாட்டியத்துக்கும் கீர்த்தனங்களும் பதங்களும் தந்தவர்கள் என, முத்துத் தாண்டவர், பாப விநாச முதலியார் போன்ற தெரிந்த பெயர்களோடு வென்றி மலைக்கவிராயர் என்று அவ்வளவாகத் தெரிய வராத பெயர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் இதற்குள் ஆந்திராவிலிருந்து தஞ்சைக்கு சொக்கநாத நாயக்கர் காலத்தில் தான் §க்ஷத்திரக்ஞர் வருகிறார். வேங்கட மஹியின் சதுர்தண்டி பிரகாசிகை அப்போது தான் எழுதப்பட்டு வருகிறது. ஆக, சுமார் 200 வருஷங்களுக்கு மேல் நீண்ட விஜய நகர, நாயக்கர்கள் ஆட்சியிலும் கூட இசையிலும் நடனத்திலும் தமிழே வெளிப்பாட்டு மொழியாக இருந்து வந்திருக்கிறது. அதற்குக் காரணம் இவ்விரண்டு கலைகளும் தமிழ் மண்ணில் ஊன்றியிருந்த ஆழ்ந்த வேர்கள் என்று தான் நினைக்கிறேன்.

தொடர்ந்து, மாரிமுத்தா பிள்ளை (1712-1782), அருணாசலக் கவிராயர் (1711-1779), ஊத்துக்காடு வெங்கட சுப்பய்யர் (1715-1794) போன்றோரின் கீர்த்தனைகளும் பதங்களும் வெளிவருகின்றன. இப்படிப் பெயர்களைச் சொல்லிக்கொண்டு போனால் சட்டென இவர்களுடைய ஆளுமையின் கீர்த்தி புலப்படாது. "சேவிக்க வேண்டுமய்யா, சிதம்பரம் சேவிக்க வேண்டுமய்யா" (முத்துத்தாண்டவர்) "தெண்டனிட்டேன் என்று சொல்லடி", "காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே, என்னைக் கைதூக்கி ஆள் தெய்வமே" (மாரி முத்தா பிள்ளை), "ஏன் பள்ளி கொண்டீரய்யா, ஸ்ரீரங்க நாதரே நீர் ஏன் பள்ளி கொண்டீரய்யா" (அருணாசலக் கவிராயர்), "தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி", "ஆடாது அசையாது வா கண்ணா" (ஊத்துக்காடு வெங்கட சுப்பய்யர்) போன்றவை நமக்கு இன்றும் பழகிய பதங்கள் கீர்த்தனைகள்.

இடைக்காலத்தில் சங்கீத மும்மூர்த்திகளின் ஆளுமையின் காரணமாகவும், இசைக்கும் நடனத்திற்கும் தமிழ்நாட்டின் படைப்பு மையமாக இருந்த தஞ்சை மராட்டிய மன்னர்கள் காலத்தில் தெலுங்கு பெற்று ஆதரவின் காரணமாகவும் தமிழ் பின்னுக்கு நகர்ந்தது. தமிழ்ர்களே ஆன முத்துசாமி தீக்ஷ¢தரும், சியாமா சாஸ்த்ரிகளும், பட்டனம் சுப்பிரமணிய ஐயரும் கூட சமஸ்கிருதம் தெலுங்கின் பக்கமே சாய்ந்தனர். அதோடு மட்டுமல்லாமல், மராட்டிய மன்னர்களே இசைக்கும் நடனத்துக்கும் போஷகர்களாகி விட்ட காரணத்தால், பதங்களுடன் ஜாவளி என்ற புதிய இசை வடிவமும் வந்து சேர்ந்தது. அது ஒன்றும் புதிய இசை வடிவம் அல்ல. இசையும் நடனமும் சொல்ல வந்த புதிய செய்தி என்று சொல்லவேண்டும். பதங்களில் பக்தியின் இடத்தில் சிருங்காரம் வந்து உட்கார்ந்து கொண்டது. தலைவி தலைவனுக்காக ஏங்கியதைச் சொல்லும் அகப்பாடல்கள், நேரடியாகவும், தலைவி எனத் தன்னைக் கற்பித்துக்கொண்டும் இறைவனைச் சரணடையும் மார்க்கமாகக் கொண்ட பதங்கள், பக்தியின் இடத்தைச் சிருங்காரமே மேலோங்கச் சொல்லும் ஜாவளிகள், மராட்டிய மன்னர்கள் காலத்தில் இறைவனுக்குப் பதிலாக, தன் கால நிர்ப்பந்தத்தில் மன்னனையே காமுறும் நிலையைச் சொல்லி மன்னனைத் திருப்திப்படுத்தின.

இதற்கு அதிக கால விரயம் தேவையாக இருக்கவில்லை. நடனம் ஆடுபவர்கள் மாதவி காலத்திலிருந்து தாசிகளே. நடனத்தை போஷித்தவர்களோ மன்னர்கள். அல்லது ஆங்காங்கே இருந்த பெருந்தனக்காரர்கள், ஜமீன்கள். சிருங்காரமே பதங்கள் சொல்லும் செய்தியாக மாற அதிகம் கஷ்டப்படவேண்டியிருக்கவில்லை. கோவலன் கானல் வரியில் கடலைப் பாடினாலும், மாதவி என்ன பாடினாள்? சரி, ஜெயதேவர் கண்ணனுக்காக ஏங்கும் ராதையைக் கற்பித்துக்கொள்ள அவருக்கு அருகிலேயே பத்மாவதி நடனமாடிக்கொண்டிக்க அவருக்கு வேறென்ன வேண்டும்?. சிருங்காரம் அல்லாமல் வேறு என்ன வரும்? இந்த சிருங்காரத்தைப் பதங்களில் வார்த்து தஞ்சைக்குக் கொண்டு வந்த க்ஷத்திரக்ஞரை என்னேரமும் சூழ்ந்திருந்தவர்கள் தாசிகள். தாசிகள் மத்தியிலேயே திளைத்தவர் அவர். ஆக, அவ்ருக்கு, சிருங்காரம் அல்லாமல் வேறென்ன வரும்?. இருந்தாலும் அவை சிருங்காரத்திலிருந்து பக்திக்கு நம்மை இட்டுச் சென்றன. சடகோபரையும், திருமங்கையாழ்வாரையும், அரையர் சேவை செய்யும் ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் அரையர்களையும் பக்திக்குத் தான் இட்டுச் செல்கின்றன.

என்னதான் சொன்னாரடி, அன்னமே அவர்
எப்போது வருவாரடி

என்று பல்லவி அமைத்துக்கொண்டால் கேட்கும் ஜமீந்தாருக்கோ மன்னருக்கோ சுகமாகத்தான் இருக்கும். பின்னால் அனுபல்லவியில் தான் அவள் விசாரிப்பது புதுவை வளர் பங்கயத் திருமார்பன், வெங்கடேஸ்வர ஸ்வாமியை என்பது தெரிய வரும். அதனால் என்ன? பின் வரும் சரணங்களும் திரும்பத் திரும்ப வரும் பல்லவியும் சொல்வது தன்னைத் தானென்று கற்பித்துக் கொள்ளலாம்.

ஆனால் இந்த கொஞ்சமளவு சால்ஜாப்பு கூட இல்லாது,

காசிருந்தால் இங்கே வாரும் - சும்மா
கடன் என்றால் வந்த வழி பாரும்

என்று கவி குஞ்சர பாரதி நேராகவே விஷயத்துக்கு வந்து விடுகிறார். கிட்டத் தட்ட இந்த மாதிரிதான் வேறு ஒரு ஜாவளி நான் கேட்டிருக்கிறேன். அது யார் எழுதியது என்பது தெரியவில்லை. அனேகம் பதங்கள் நமக்கு எப்போது எழுதியது, யார் எழுதியது என்பது தெரிவதில்லை. ஆனால் வெகு பிரபலமான பதங்கள் அவை. ஒன்று நான் கேட்டது,

காசில்லாதவன் கடவுளே ஆனாலும் கதவைச் சாத்தடி....

என்று நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விடுகிறார் அவர்.

அழகுள்ள துரை இவர் யாரடி?

என்று ஒரு பதம் ஆரம்பித்தால் அது என்னத்தைச் சொல்லும்?

நேற்று ராத்திரிப் போன பெண் வீடு இதுவல்ல
நிலவரமாக உற்று பாரும்


என்பது சுப்புராமய்யர் என்பவர் இயற்றிய ஒரு பதம். ஜாவளி என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா?

மறுமொழிகள்

0 comments to "பதங்களும் ஜாவளியும் - பக்தியும் சிருங்காரமும் (1)"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES