சோழர்கள் | 5 நிமிட வாசிப்பு!

2 மறுமொழிகள்

சோழர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை, சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச்செய்தி வரலாற்று ஆதாரமற்றது. இது எவ்வாறாயினும் சோழ அரச மரபின் மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது.

காவிரியின் பெருமையைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் புகழ்ந்து பாடுகின்றன. சூரிய புத்திரர்களுக்காகவும் காந்தமன் என்ற மன்னனின் வேண்டுதலுக்காகவும் அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிறந்ததே இக்காவேரி நதி என்று கூறப்படுகின்றது. நீதியைப் பேணீ வளர்த்த சோழ மன்னர்களின் குலக்கொடியாக விளங்கிய காவிரி, நீண்ட வறட்சிக் காலங்களிலும் அவர்களைக் கைவிடவில்லை. ஆண்டுதோறும் மழை பெய்து, காவிரியாறு பெருக்கெடுத்து ஓடும்போது மன்னன் முதல் சாதாரண உழவன் வரை சோழநாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி திருவிழாக் கொண்டினார்கள்.

கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.

கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளரினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான். 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராஜராஜ சோழனும், அவனது மகனான முதலாம் இராஜேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.

கி.பி பத்தாம், பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், சோழர் வலிமை மிகவும் உயர் நிலையில் இருந்தது. அக்காலத்தில் அந்நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராஜராஜன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலைத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இராஜேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் தாக்கித் தோற்கடித்ததாகவும் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.

சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் இலச்சினையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. அவர்கள் சூடும் மலர் ஆத்தி.

பொருளடக்கம்
1 தோற்றமும் வரலாறும்
2 முற்காலச் சோழர்கள்
2.1 முற்காலச் சோழர்களின் வீழ்ச்சி
2.1.1 களப்பிரர்கள்
2.1.2 வீழ்ச்சி
2.1.3 தமிழ்நாட்டில் சோழர்கள்
3 பிற்காலச் சோழர்கள்
3.1 இராஜராஜ சோழன்
3.2 இராஜேந்திர சோழன்
3.3 பின்வந்த சோழ மன்னர்
3.4 முதலாம் குலோத்துங்கன்
3.5 சோழப் பேரரசின் வீழ்ச்சி
4 சோழ நாடு
5 ஆட்சி
5.1 அரசுரிமை
5.2 உள்ளாட்சிப் பிரிவுகள்
6 சமூகநிலை
6.1 பெண்டிர்
6.2 உடன்கட்டை ஏறுதல்
6.3 ஆடல் மகளிர்
6.4 சோழரும் சாதியமும்
6.5 அடிமைகள்
7 வெளிநாட்டு வணிகம்
8 சோழர்காலப் பண்பாட்டு அம்சங்கள்
8.1 கலைகள்
8.2 கல்வி
8.3 மொழி
8.4 இலக்கியம்
8.5 சமயம்
9 இவற்றையும் பார்க்கவும்
10 மேற்கோள்கள்
11 வெளி இணைப்புகள்

மேலும் வாசிக்க...

மறுமொழிகள்

2 comments to "சோழர்கள் | 5 நிமிட வாசிப்பு!"

Anonymous said...
June 26, 2008 at 4:01 AM

கண்ணன் ஐயா,

சேர சோழ பாண்டியர்களை தமிழ் இனமாக கருதுபவர்கள்,பல்லவர்களை ஏன் தமிழ் இனமாக கருதுவதில்லை?அதிலும் குறிப்பாக் சொல்லவேண்டும் என்றால் இன்றைய காலகட்டத்திலும் சோழர்களே தமிழ் நாட்டில் அகம்பாவம் கொண்ட,ஆதிக்க சக்திகளாக விளங்குகிறார்கள்,ஏனைய இனங்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கிறார்கள் என்பது கண்கூடு.இது எதானால்?பண்டைய காலத்தில் அவர்கள் கோலோச்சியதாலா?

நா.கண்ணன் said...
June 26, 2008 at 5:47 AM

மிக நல்ல கேள்வி. இதற்கு சரித்திரக் காரணங்களைக் காட்டுமளவு எனக்கு துறையறிவு காணாது. ஆனால், சோழர்கள் பெரும் வல்லரசாக வாழ்ந்ததால் மக்கள் பிரம்மிக்கத்தக்க படைப்புகளை அளித்துவிட்டுப் போனதால் அவர்களைப் பற்றியே எல்லோரும் பேசும்படியாகிறது. அவர்கள் 'மெய்கீர்த்தி' விரும்பிகள் :-) பல்லவர்களை ஏன் ஓரங்கட்டுகிறார்கள் என்று எனக்கும் தெரியவில்லை. பல்லவர்களுக்கு இருந்த அளவு சோழர்களுக்கும் சாளுக்கிய உறவு இருந்தது. பல்லவர்கள் காலம் கொஞ்சம் முற்பட்டது என்பதால் இருக்கலாம்!

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES