பேரா.ச.அகத்தியலிங்கம் மறைவு

0 மறுமொழிகள்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் உலக அளவில் மொழியியல்
துறையில் புகழ்பெற்றவருமான முனைவர் ச.அகத்தியலிங்கம் அவர்கள்(அகவை 79)
புதுச்சேரி அருகே கிளியனூர் காமராசர் குடியிருப்பு அருகில் நடைபெற்ற
மகிழ்வுந்து விபத்தில் 04.08.2008 திங்கள் கிழமை காலை 11 மணியளவில்
நேர்ச்சி இடத்திலேயே இறந்தார். அவர் துணைவியார்
பொன்னம்மாள்அவர்களும்(அகவை 78)ஓட்டுநர் சீவபாலன்(அகவை 28) அவர்களும்
சிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பிறகு இறந்தனர்.
அகத்தியலிங்கனாரின் பெயர்த்தி இலதா பிரியா(அகவை 22) மருத்துவமனையில்
சேர்க்கப்பெற்றுள்ளார்.

மறைந்த துணைவேந்தர் அவர்களுக்கு இரண்டு பெண்மக்கள்.1.சண்முகசுந்தரி.இவர்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல்வழிக் கல்விப் பிரிவில் திருச்சி
அலுவலகத்தில் பணிபுரிகிறார்.2.அருணாசலவடிவு. இவர்
சென்னைப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியராப் பணிபுரிகின்றார்.துணைவேந்தரின்
மறைவைக் கேள்வியுற்ற அவரின் குடும்பத்தினரும்,நண்பர்களும் மாணவர்களும்
உடல் வைக்கப்பெற்றுள்ள சிப்மர் மருத்துவமனைக்குத் திரண்டுவந்துள்ளனர்.

இன்று (05.08.2008) நண்பகல் மருத்துவமனை உடற்கூறு ஆய்வுக்குப்பிறகு
பிற்பகல் 3 மணியளவில் துணைவேந்தர் வாழ்ந்து வந்த சிதம்பரம் மாரியப்பா
நகரில் உள்ள அவர்தம் இல்லத்தில் மக்களின் பார்வைக்குத் துணைவேந்தரின்
உடல் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்னைப்பல்கலைக்கழக
முன்னாள் துணைவேந்தர் முனைவர்
பொற்கோ பேராசிரியர் செ.வை.சண்முகம் உள்ளிட்ட அறிஞர்கள்
ச.அகத்தியலிங்கனாரின் உடலுக்கு வணக்கம் செலுத்த உள்ளனர்.

முனைவர் ச.அகத்தியலிங்கனாரின் வாழ்க்கைக் குறிப்பு



ச.அகத்தியலிங்கனார் நாகர்கோயில் அருகில் உள்ள கேசவன்புதூரில் 1929 ஆகத்து
மாதம் 19 ஆம் நாள் பிறந்தவர்.பெற்றோர் சண்முகம் பிள்ளை அருணாசல
வடிவு.நாகர் கோயில் இந்து கல்லூரியில் இளம் அறிவியல் கணக்குப்பாடம்
பயின்ற இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம்
பயின்றவர்.இங்குப் பயிலும்பொழுது குமரி அனந்தன் அவர்கள் இவருக்கு
நெருங்கிய நண்பரானார்.

கேரளா பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியன்
அவர்களின் மேற்பார்வையில் மொழியியல் துறையில் முனைவர் பட்டம்
பெற்றார்.பிறகு அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில்
மற்றுமொரு முனைவர் பட்டம் பெற்றார்.
இவ்வாறு அமெரிக்காவில் இவர் முனைவர் பட்டம் பெற்றபொழுது உலகின்
மிகச்சிறந்த மொழியியல் அறிஞர்களிடம் பாடம் கேட்கும் வாய்ப்பைப் பெற்றார்.

மொழியியல் துறையில் தமிழ் மொழியின் சிறப்பு அறியப்படாமல் இருந்தது.இம்
மேல்நாட்டுச் சிந்தனை மரபை உடைத்துத் தமிழுக்கு உலக அளவில் புகழ்
கிடைக்கவும் உலக மொழியியல் அறிஞர்கள் தமிழின் பக்கம் கவனத்தைத்
திருப்பவும் அகத்தியலிங்கனாரின் பணி குறிப்பிடும்படியாக
இருந்தது.அயல்நாட்டு மாணவர்கள் தமிழ் கற்கவும் தமிழ்மொழியின் அமைப்பை
ஆராயவுமான சூழலை உருவாக்கியவர்

அகத்தியலிங்கனார்.பொற்கோ கி.அரங்கன் கருணாகரன் செ.வை.சண்முகம் க.இராமசாமி
உள்ளிட்ட அறிஞர்கள் மொழியியல் துறையில் சிறந்த ஆய்வுகளை நிகழ்த்த நம்
அகத்தியலிங்கனார் காரணமாக அமைந்தார்கள்.இவரிடம் மொழியியல் கற்றவர்கள் உலக
அளவில் உள்ளனர். இவர் தமிழ் ஆங்கிலம் மலையாளம் மொழிகளில் நல்ல
புலமைபெற்றவர்.

அகத்தியலிங்னார் தாம் பயின்ற இந்து கல்லூரியில் தமிழ்விரிவுரையாளர்
பணியைத் தொடங்கித் தில்லிப் பல்கலைக்கழகத்தில் சில காலம்
இணைப்பேராசிரியராகப் பணியாற்றினார்.1968 முதல்1989 வரை அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் இயக்குநராகவும் பேராசிரியராகவும்
பணிபுரிந்தார்.தமிழ்த்துறையில் புல முதன்மையராகவும்
பணிபுரிந்தவர்.சிக்காகோ பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் வருகைதரு
பேராசிரிராகவும் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மூன்றாண்டுகள்
பணிபுரிந்தவர்.உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வருகைதரு
பேராசிரியாகவும் மைசூர் செம்மொழி நிறுவனத்தில் முதுநிலை ஆய்வறிஞராகவும்
பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.உலக அளவில் பல்வேறு பல்கலைக்கழகங்கள்
தமிழ் அமைப்புகள் மொழியியல் அமைப்புகளில் பொறுப்பு வகித்த பெருமைக்கு
உரியவர்.அனைத்து இந்திய மொழியியல் கழகத்தை உருவாக்கியவர்களில்
குறிப்பிடத்தக்கவர்.இதன் வழியாக தரமான தமிழ் மொழியியல் ஆய்வுகள்
வெளிப்பட்டன.பல ஆய்வாளர்கள் உருவானார்கள்.அண்ணாமலைப்பல்கலைக்கழக
வரலாற்றிலும் மொழியியல் வரலாற்றிலும் அகத்தியலிங்கனாரின் பணிகள் என்றும்
நினைவுகூரும் வண்ணம் பல உள்ளன.

அகத்தியலிங்கனார் தமிழில் 24 நூல்களையும் ஆங்கிலத்தில் 9 நூல்களையும்
எழுதியுள்ளார். 200 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வரைந்த மெருமைக்கு
உரியவர்.இவை யாவும் மொழியியல், சங்க இலக்கியம், தொல்காப்பியம் பற்றியன
என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.உலக மொழிகள் பற்றி இவர் எழுதிய நூல்கள்
உலக மொழிகள்
பலவற்றின் வரலாற்றையும் சிறப்பையும் அதன் அமைப்புகளையும் நமக்கு
எடுத்துரைக்கின்றன.

அதுபோல் சங்க இலக்கியம் குறித்துச் சங்கத்தமிழ் என்னும் பெயரில் 5
தொகுதிகளை எழுதியுள்ளார்.உலகமொழிகள் என்ற வரிசையில் 7 தொகுதிகள்
வெளிவந்துள்ளன.தொல்காப்பியம் பற்றி 3 தொகுதிகள் வெளிவந்துள்ளன.இவர்தம்
தமிழ்,
ஆங்கிலக் கட்டுரைகள் பலவும் உலகத்தரம் வாய்ந்த இதழ்களில் வெளிவந்துள்ளன.

அகத்தியலிங்கனார் இதுவரை 55 முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு நெறியாளராக
இருந்து நெறிப்படுத்திய பெருமைக்கு உரியவர்.இவரின் மொழியியல் பணிகள்
ஆய்வுகள் நூல்கள் இவருக்கு உயரிய விருதுகள் பட்டங்கள் பதவிகள் கிடைக்க
காரணமாயின.அவ்வகையில் இவர் தமிழக அரசின் திரு.வி.க.விருது உள்ளிட்ட பல
விருதுகளைப் பெற்றுள்ளார்.உலக நாடுகள் பலவற்றிற்கு இவர் பயணம் செய்து
தமிழின் பெருமை பற்றி பேசிய பெருமைக்கு உரியவர்.பல பல்கலைக்கழகங்களில்
கல்விக்குழு அறிவுரைஞர் குழு எனப் பலவற்றறில் இணைந்து பணிபுரிந்த
பெருமைக்கு உரியவர்.

பணி ஓய்வு பெற்ற பிறகும் தம் இலத்தில் அமர்ந்தபடியே பல்வேறு ஆய்வுகளைச்
செய்துவந்தார்.உலக நாடுகள் இவரை அழைத்துப்பெருமை கொண்டன. அவ்வகையில்
அண்மையில் சிங்கப்பூர் சென்று ஆய்வரங்கில் கலந்துகொண்டு உரையாற்றி
மீண்டுள்ளார்.எதிர்பாராமல் நடந்த சாலை விபத்தில் இயற்கை எய்திய
ச.அகத்தியலிங் கனாரின் பிரிவு அறிந்து தமிழ் அறிஞர் உலகமும் மொழியியல்
துறையினரும் கலங்கிநிற்கின்றனர்.

மின்தமிழ் இடுகை: முனைவர் மு.இளங்கோவன்

மறுமொழிகள்

0 comments to "பேரா.ச.அகத்தியலிங்கம் மறைவு"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES