திருமலை திருமலை ஸ்ரீகேந்திர அரிஹந்தகிரி ஜைனமடத்தின் மடாதிபதி ஸ்வஸ்தி ஸ்ரீதவளகீர்த்தி பட்டாரக சுவாமிகள் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கிய பிரத்தியேகமான பேட்டி இது. தமிழகத்தில் தற்காலச் சூழலில் தமிழ்ச் சமணம் அருகி வருகின்றது. இன்று தமிழகத்தில் இருப்பவை இரண்டு மடங்களே. பழமை வாய்ந்த மேல்சித்தாமூர் சமண மடத்திற்கு அடுத்ததாக ஆனால் மிகப் புகழ்பெற்ற சமணத்தலமாக விளங்குவது திருமலை.
இங்கிருக்கும் ஸ்ரீகேந்திர அரிஹந்தகிரி ஜைனமடத்தில் குழந்தைகள் ஆசிரம் ஒன்றும் உள்ளது. இங்கு ஏறக்குறைய 200 குழந்தைகள் தங்கியுள்ளனர். மடத்தின் சார்பாக ஒரு பள்ளிக்கூடமும் இயங்கி வருகின்றது. இதில் ஏறக்குறைய 1000 மாணாக்கர்கள் பயில்கின்றனர். இப்பள்ளி ஸ்ரீ நேமினாதர் மேல்நிலைப் பள்ளி என வழங்கப்படுகின்றது.
முதியோர் காப்பகம் ஒன்றினையும் இந்த சமண மடம் நடத்தி வருகின்றது என்பதோடு வேற்று சமயத்தோராக இருந்தாலும் இங்கே அவர்களுக்கும் இடம் அளிக்கப்படுகின்றது என்பதும் ஒரு கூடுதல் சிறப்பு அம்சம். இவர்கள் திருநீறு, திருமண் ஆகிய பிற சமய புர அடையாளக்குறிகளை அணிவதையும் இம்மடம் தடை செய்யவில்லை.
இதனைத் தவிர இயலாதோருக்கு இலவச மருத்துவ உதவி, யாத்திரிகர் விடுதி, சாதுக்கள் தங்குமிடம், கோ சாலை ( பசுக்கள் காப்பகம்), நூலகம், நேமிநாதர் நூற்பதிப்பகம் ஆகியனவற்றோடு ஆரம்பப்பள்ளியும் மேல் நிலைப்பள்ளியும் இயங்கி வருகின்றது.
அத்தோடு அருகாமையில் இருக்கும் நிலத்தில் இயற்கை விவசாயமும் சீரிய முறையில் நடைபெற்று வருகின்றது.
மடாதிபதி யே இங்கு இம்மடத்தில் திருமணங்களை செய்து வைக்கின்றார். மடம் மக்கள் வந்து செல்லும் இடமாக எப்போதும் பொது மக்கள் நிறைந்திருக்கும் இடமாகவே இருக்கின்றது.
மடத்தின் வாசலில் எதிர்புறத்தில் பஞ்சகுல தேவைதைகள் ஆலயம் ஒன்றையும் இத்திருமடம் அமைத்திருக்கின்றது. பிரமாண்ட வடிவத்தில் ஐந்து தேவதைகளும் இங்கே வீற்றிருக்கின்றனர்.
இந்தப் பிரத்தியேகப் பேட்டியில்:
- சமணம் என்பது ஒரு சமயமல்ல, அது ஒரு மார்க்கம்
- அகிம்சா கொள்கை
- சமணம் எனும் தர்மம்
- ஏன் சமணம் இந்தியாவை தவிர்த்து வேறு நாடுகளுக்கு பரவவில்லை?
- மகாவீரர் தத்துவம் என்பது என்ன?
- தீர்த்தங்கரர்கள்
- சமண வழியில் இருக்கும் பிரிவுகள்.. அதன் வித்தியாசங்கள்
- புத்தர் சமணரா?
- பக்தி காலத்தில் சைவ வைணவ எழுச்சியின் போது சமணம் பாதிக்கப்பட்டாலும் அதனை எதிர்கொண்டு எவ்வாறு சமணம் தொடர்ந்து நிலைத்து இருக்கின்றது
- இக்கால நிலை
- சமணத்தில் சோதிடம் எவ்வாறு காணபப்டுகின்றது
- இந்த மடம் உருவாக்கபப்ட்ட வரலாறு..
என பல தகவல்களை அடிகளார் வழங்குகின்றார்.
பிறப்பும் இறப்பும் மட்டுமே வாழ்க்கை அல்ல. நமது கர்ம விணைகளை நீக்கி பரமாத்மா அம்சத்தை ஒவ்வொரு சீவனும் சென்று சேரலாம். சாதி பேதம் என்பதோ சிறியவர் பெரியவர் என்ற பேதமோ தேவையற்றவை.பரமாத்மா அம்சத்தை பெற இவை தடையல்ல என்ற கருத்தோடு இப்பேட்டி நிறைவடைகின்றது
50 நிமிடப் நேரப் பதிவு இது.