கடந்த சில ஆண்டுகளில் இப்பகுதியில் மிக விரிவான முறையில் சட்டத்திற்கு விரோதமான முறையில் கிரானைட் குவாரி உடைப்பு நடந்து இப்பகுதியில் மலைப்பகுதிகள் விக விரிவாக பாதிக்கப்பட்டன என்ற செய்தியை நாம் அறிவோம். இதற்கும் மேலாக இங்கு நரபலி கொடுக்கப்பட்டு மேலும் பல சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்ற செய்திகளையும் செய்தி ஊடகங்கள் வெளியிட்டன. சமூக நலனில் அக்கறைகொண்ட சிலர் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளினால் இப்பகுதியில் குவாரி உடைப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்ற போதிலும் பெருமளவில் இங்கு இயற்கை வளங்கள் சேதப்படுத்தப்பட்டன என்பதை மறுக்க இயலாது.
உடைக்கப்பட்ட மலைப்பகுதிகளில் எத்தகைய வரலாற்றுச் சின்னங்கள் இருந்தன என்பதை கண்டறிய இனி வாய்ப்பேதுமில்லை என்ற போதிலும் மலையின் மற்றொரு பகுதியில் இருக்கும் கி.மு.3ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி கல்வெட்டுக்களையும் கி.பி 9, 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண சிற்பங்களையும் எவ்வகைச் சேதமும் ஏற்படாமல் காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு மட்டுமன்றி பொதுமக்கள் நாம் அனைவருக்குமே உண்டு.
கீழவளவு இயற்கை எழில் கொண்ட ஒரு பகுதி. பெறும் பெறும் பாறைகள் சூழ்ந்திருக்கும் இப்பகுதியில் பண்டைய காலத்தில் அதாவது கி.மு.3ம் நூற்றாண்டு வாக்கில் சமண முனிவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். இங்கே சமணப் பள்ளிகளை அமைத்து மக்கள் மத்தியிலே கல்வியை வளர்த்தனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தோர் மட்டுமே கல்விக்குத் தகுதியானவர்கள் என்னும் கருத்திற்கு மாற்றாக அனைத்து தரப்பு மக்களும் கல்வி கற்கலாம் என்ற வகையில் கல்வியை எல்லோருக்கும் வழங்கிய சிறப்பு சமண சமய சான்றோர்களுக்கு உண்டு. ஆண் பெண் ஆசிரியர்கள் என இருபாலருமே ஆசிரியர்களக இருந்து இங்கே பொது மக்கள் கல்வி கற்க வழிவகுத்தார்கள். இங்கே பள்ளிகளை அமைத்தனர். இந்தப்பள்ளிகளே இன்று பள்ளிக்கூடங்கள் என்ற வகையில் கல்வி கற்கும் மையங்களுக்கு பெயராக அமைந்தது.
சமண சமய படிப்படியாக வீழ்ச்சியுற்ற பின்னர் இப்பகுதியில் சமணத்தின் புகழ் குன்றிப் போனது. பின்னர் அச்சணந்தி முனிவரின் வருகையால் இப்பகுதியில் 9, 10ம் நூற்றாண்டில் மீண்டும் சமணம் செழிக்க ஆரம்பித்தது.
பாறைக்கு மேற் பகுதியில் நடந்து சென்று தமிழி எழுத்து இருக்கும் பகுதியில் நோக்கும் போது அங்கே பழமையான கல்வெட்டுக்களைக் காணலாம். அதே பகுதியில் மேலே இரண்டு சமண முனிவர்களின் சிற்பங்களும் செய்துக்கப்பட்டுள்ளன. இந்த தமிழி கல்வெட்டு கி.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. திரு.வெங்கோபராவ் என்பவரால் 1903ம் ஆண்டில் இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அக்கால கட்டத்தில் இது எவ்வகை எழுத்து வடிவம் என்பது அறியப்படாமலேயே இருந்தது. இக்கல்வெட்டில் சில எழுத்துக்கள் தலைகீழாகவும் சில நேராக இடமிருந்து வலமாகவும் பொறிக்கப்பட்டுள்ளன. பாறையின் மேலே உள்ள சமண தீர்த்தங்கரர்கள் வடிவங்களுக்குக் கீழேயும் ஒரு கல்வெட்டு காணப்படுகின்றது. இது வட்டெழுத்தால் பிற்காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டாகும். இந்த வட்டெழுத்தில் உள்ள செய்தியானது இந்த இரண்டு சிற்பங்களில் ஒன்றை சங்கரன் ஸ்ரீவல்லபன் என்பவன் செய்வித்து நாள்தோறும் முந்நாழி அரிசியால் திருவமுது படைத்து வர வழிவகை செய்ததோடு திருநந்தாவிளக்கு எரிப்பதற்கு 50 ஆடுகளும் தந்தார் என்பதைக் குறிக்கின்றது.
இதற்கு வலப்பகுதியில் புதர்கள் மண்டிக்கிடக்கும் பகுதியில் உள்ள பாறை சுவற்றில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர்களின் உருவச்சிற்பங்களைக் காணலாம். ஆறு சிற்பங்கள் வரிசையாக செதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மேல்பகுதியில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இதே பாறைக்குக் கீழே கற்படுக்கைகள் உள்ளன. இவை மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. ஆயினும் இந்தக் கற்படுக்கைகளின் மேல் இங்கு வந்து செல்வோர் பெயர்களையும் தொலைபேசி எண்களையும் கிறுக்கியும் வைத்தும் சிற்பங்களை உடைத்தும் சேதப்படுத்தி வைத்துள்ளனர்.
பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளரும்
தொல்லியல் துறையில் 30 ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர்.சாந்தலிங்கம் அவர்கள் இப்பகுதியில் தொடர்ச்சியாக ஆய்வுகளைச் செய்தவர். இவரது மாமதுரை, மதுரையில் சமணம் ஆகிய நூல்களில் கீழவளவு சமணற் சிற்பம் பற்றிய வரலாற்றுத்தகவல்கள் நன்கு வழங்கப்பட்டுள்ளன. டாக்டர்.சாந்தலிங்கம் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்தப் பதிவின் போது உடன் வந்திருந்து அரிய பல தகவல்களை நமக்காகத் தெரிவித்தார்
கீழவளவு தமிழகத்தில் தமிழ் மொழியின் பழமையையும் பண்டைய தமிழர் வரலாற்றுச் செய்திகளையும் வெளிப்படுத்தும் வரலாற்று சான்றுகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குவாரி நடவடிக்கைகள் மீண்டும் தொடர்ந்தால் இப்பகுதியில் உள்ள பண்டைய தமிழ் எழுத்துக்கள் பொருந்திய பாறைகள் நிச்சயம் சேதப்படும். இது தமிழர் வரலாற்றுக்கு நிகழும் பெறும் சேதம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை . குவாரி உடைப்பு ஒரு புறம். இங்கே வந்து செல்லும் மக்கள் ஏற்படுத்தும் சேதம் ஒரு பக்கம் . இப்படி பல வகையில் தமிழ் நாட்டில் உள்ள வரலாற்றுச் சின்னங்கள் சேதப்படுத்தப்படுவது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது. இந்த வரலாற்றுச் சின்னங்கள் எவ்வகையிலும் சேதமுறாமல் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரது முக்கியக் கடமையாகும்.