மண்ணின் குரல்: செப்டம்பர் 2017: கொங்கர்புளியங்குளம் தமிழி கல்வெட்டுக்களும் சமணர் சின்னங்களும் மாயன் வாழிபாடும்

0 மறுமொழிகள்
வணக்கம்.

மதுரையின் திருமங்கலம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் கொங்கர்புளியங்குளம். தேனிக்குச் செல்லும் சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை அடுத்து அமைந்துள்ளது இந்தச் சிற்றூர். மதுரையிலிருந்து ஏறக்குறைய 15 கி.மீ தூரத்தில் உள்ளது இவ்வூர். 



நாகமலைத் தொடரின் பாறைப்பகுதிகளை இங்கு காணலாம்.  பாறை உடைப்புப் பணிகள் இங்கு நடக்கத்தொடங்கியமையால் முன்பகுதியில் உள்ள பாறைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. பின்னர் பொதுமக்களின் கோரிக்கையினால் அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இங்கு குவாரிப் பணிகள் நிறுத்தட்டன.  

பசுமை மாறாத வகையில் இப்பகுதி அமைந்திருக்கின்றது. இங்கு வாழும் மக்கள் சிறிய வகையில் பயிர் விவசாயம் செய்து வாழும் விவசாயிகள். நாகமலை பாறை பகுதிக்குச் செல்வதற்குக் கீழே நாட்டுப்புர வழிபாடு நடைபெறும் மாயன் கோயில் ஒன்று இங்குள்ளது. உருவங்கள் அற்ற வகையில் செங்குத்தான ஒரு  கல்லினை மட்டுமே வைத்து வழிபடும் மரபு இங்குள்ளது. மிகப் பழமையான வழிபாட்டுக் கூறுகள் மாற்றமடையாத நிலையில் இன்றும் தொடர்வதாக இந்த வழிபடு தலம் அமைந்திருக்கின்றது.

இக்கோயிலை அடுத்தாற்போல் மேல்பகுதியில் உள்ள நாகமலைத்தொடர் பாறைகளின் மேற்பகுதியில் 60க்கும் மேற்பட்ட சமண கற்படுக்கைகள் உள்ளன. அங்கு செல்வதற்குக் கீழ்ப்பகுதியிலிருந்து ஏற்படுத்தப்பட்டுள்ள படிகளில் ஏறிச்செல்லவேண்டும். 

இங்கு அப்பாறையினைச் செதுக்கி வரிசை வரிசையாக படுக்கைகளை அமைத்திருக்கின்றனர்.  இது இயற்கையான குகைத்தளமாகும்.  இக்குகையின் முகப்புப் பகுதியில் காடி என அழைக்கப்படும்  நீர்வடி விளிம்பு அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேர் சுவற்றுப் பகுதியில் பெரிய அளவில் செதுக்கப்பட்ட தமிழி (பிராமி) எழுத்துக்கள் கொண்ட வாசகங்கள் உள்ளன. 

முதல் கல்வெட்டின் பாடம்

குறகொடு பிதவன் உபச அன் உபறுவ(ன்)

இதன் பொருள், உபசன் ஆகிய உபறுவன் என்பவரால் இக்குகை கொடுக்கப்பட்டது. உபசன் என்பது சமய ஆசாரியன் என்னும் பொருள்படும். உபறுவன் என்பது ஆட்பெயர். குற என்னும் சொல் கூறை என்னும் பொருளில்  இக்குகையைக் குறிப்பது. கொடுபிதவன் என்பதைக் க் கொடுப்பித்தவன் என்று கொள்ளல் வேண்டும்.

2ம் கல்வெட்டு முதல் கல்வெட்டிலிருந்து இரண்டடி தூரத்தில் அதே பாறைப்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. அதன் பாடம்

குறு கொடல்கு ஈத்தவன் செற் அதன் ஒன்

குறு என்பது கூரை என்றும், கொடல் என்பது கொடுத்தல் என்றும், குஈத்தவன் என்பதை குயித்தவன் எனக் கொண்டு குகையைச் செதுக்கியவன் எனப் பொருள் கொள்ளல் வேண்டும். இறுதியில் உள்ள இரண்டு குறியீடுகள்  பொன் என்பதைக் குறிப்பன.

மூன்றாவது கல்வெட்டுப் பாடம்

பாகன் ஊர் பேராதன் பிடன் இத்தவேபொன்

பாகனூரைச் சேர்ந்த பேராதன் பி(ட்)டன் கொடுத்த பொன் என்பது இதன் பொருள். வே பொன் என்பதை வெண்பொன் எனக் கொள்ளலாம். பாகனூர் என்பது இம்மலையின் பின்புறம் உள்ள நிலப்பகுதியாகும். பிடன் என்பது பிட்டன் என்னும் ஆள் பெயராகக் கொள்ளல் வேண்டும்.பாகனூரே இன்றைய சோழவந்தான் எனவும் கொள்ளலாம்.

இக்கல்வெட்டுக்கள் மூன்றும் கி.மு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

இக்கல்வெட்டின் மேற்குப் பகுதியில் பாறையின் மேல் சிறிய தீர்த்தங்கரர் திருமேனி செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் ஸ்ரீ அச்சணந்தி செயல் எனும் வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது. இது கி.பி. 9-10ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

கொங்கர்புளியங்குளம் இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலகட்டத்தில் சமண முனிவர்கள் தங்கி வாழ்ந்து கல்விச்சாலைகளை அமைத்து சமண நெறி தழைக்கச்செய்த ஒரு முக்கிய இடமாகும். பக்திகாலத்தில் சமண சமய வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் கி.பி.9ம் நூற்றாண்டு வாக்கில் அச்சணந்தி முனிவர் ஏற்படுத்திய சீரிய நடவடிக்கைகளினால் இப்பகுதியில் மீண்டும் சமணம் தழைத்தோங்கியது. அதன் சான்றாக இருப்பது தான் நாம் இன்று காணும் தீர்த்தங்கரர் சிற்பமும் அதன் கீழ் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டுகளுமாகும்.

குறிப்பு- மாமதுரை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்


விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2017/10/blog-post_21.html
யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=LV0FnYPrn4k&feature=youtu.be

இப்பதிவினைச் செய்ய உதவிய   முனைவர்.பசும்பொன் (மதுரைத் தமிழ்ச்சங்கம்), தொல்லியல் அறிஞர் முனைவர்.சாந்தலிங்கம்  ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.



































அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


THF Announcement: E-books update:14/10/2017 *ரிஷபா ஆதிபகவன்

0 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று சமண நெறி சார்ந்த தமிழ் நூல் ஒன்று மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:   ரிஷபா ஆதிபகவன் - தத்துவ சாஸ்திரமும் மனிதப் பண்பும் போதித்த ஆதி போதகர்
ஆசிரியர்:    ஸ்வாமி ஆர்.பி. பிரக்வாட்
ஆங்கில மூல நூலிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது. தமிழாக்கம் சன்மதி
பதிப்பு: ஸ்ரீ ரத்னா ஹீரி பாய் இலக்கிய பிரசுரங்கள், 45, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, சென்னை
ஆண்டு: 1970




நூலைப் பற்றி

சமண தீர்த்தங்கரர்களில் ஒருவரான ரிஷபதேவர் பற்றிய நூல் இது.   ரிஷப தேவர் யார், வாழ்ந்த காலம், அவர் மெய்ஞ்ஞானம் பெற்ற மாண்பு, போன்ற தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மின்னூலை வழங்கியவர்: திரு.பானுகுமார்
அவருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 468

நூலை  வாசிக்க இங்கே அழுத்தவும்!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​
 


மண்ணின் குரல்: அக்டோபர் 2017: நெசவுத்தொழிலும் கைத்தறியும்

0 மறுமொழிகள்
வணக்கம்.

நெசவுத்தொழில் தமிழர் பண்பாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் கலை. இன்றோ பல்வேறு காரணங்களினால் நெசவுத்தொழில் புகழ் மங்கி வருகின்றது. இளம் தலைமுறையினர் வெவ்வேறு துறைகளில் தங்கள் ஆர்வத்தைச் செலுத்தத் தொடங்கிவிட்டமையால் கைத்தறி போடுதல் என்னும் கலை இன்று படிப்படியாகக் குறைந்து மறைந்து போவது நிகழ்கின்றது. 

சாயர்புரத்தில் உள்ள ஓரிரு நெசவுத் தொழிற்சாலைகள் மட்டும் சில தறி இயந்திரங்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. ஆண்களும் பெண்களுமாகப் பாகுபாடின்றி இத்தொழிலைச் செய்கின்றனர். கையால் போடும் தறி மட்டுமன்றி இன்று இயந்திரத்துடன் இயங்கும் நெசவு இயந்திரங்களும் வந்து விட்டன. இவை ஒரு கைத்தறி சேலையோ, கைலியோ, துண்டோ தயாரிக்கப்படும் நேரத்தை விரைவாக்குகின்றன. 

சாயர்புரத்தின் ஒவ்வொரு வீடுகளிலும் முன்னர் ஒரு நெசவுத்தறி இருந்திருக்கின்றது. ஆனால் இன்றோ ஒரு சில வீடுகளில் அவை செயல்படுத்தப்படாத சூழல் இருப்பதால் குழியை மூடி நெசவு இயந்திரத்தை எடுத்து விட்டனர். ஒரு சில இல்லங்களில்  இன்றும் நெசவுத் தறிகள் இருக்கின்றன. 

கைத்தறி ஆடைகள் நவநாகரிக உலகிற்குப் பொருந்தாது என நினைப்பதும் தவறு. உடலுக்கு ஏற்ற ஆடையாக கைத்தறி ஆடைகள் திகழ்கின்றன. பார்ப்பதற்குக் கவர்ச்சியான வர்ணங்களில் கைத்தறி சேலைகளும் ஏனைய துணி வகைகளும் இன்று நமக்குக் கிடைக்கின்றன. 

கைத்தறி ஆடைகளை வாங்கி அணிவோம். 

நெசவுத் தொழில் கிராமங்களில் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இதனைத் தக்க வைப்பதற்கும் இக்கலை மீண்டு புத்துணர்ச்சி பெற்று வளர்வதற்கும் வழி வகைகளைச் செய்வோம்.


விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2017/10/blog-post.html
யூடியூபில் காண:  https://www.youtube.com/watch?v=rV_hmYr4J1A&feature=youtu.be

இப்பதிவினைச் செய்ய உதவிய சாயர்புரம் திரு.மைக்கல், ஐயா வாரியார், அவர் துணைவியார் மற்றும் சாயர்புரத்தைச் சேர்ந்த அன்பர்கள் அனைவருக்கும்   தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.















அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


மண்ணின் குரல்: செப்டம்பர் 2017: மருங்கூர் - சங்ககால நகரம்

1 மறுமொழிகள்
வணக்கம்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊர் மருங்கூர். இங்கு 1 ஏக்கர் நிலப்பகுதியில் மக்கள் வாழ்விடமும் அதற்கு மறுபக்கத்தில்  இறந்தோரைப் புதைத்து ஈமக்கிரியைகள் செய்த  பகுதியும் உள்ளன.



2007ல் முதலில் இப்பகுதியில் தொல்லியல் தடயங்கள் இருப்பது தமிழக தொல்லியல் துறையின் ஆய்வாலர்களால் அடையாளப்படுத்தப்பட்டது.
 
இங்கு கண்டறியப்பட்டுள்ள மக்கள் வாழ்விடத்தின் காலம் கி.மு3ம் நூற்றாண்டு என அறியப்படுகின்றது. தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பானை ஓடுகள் இங்கு கிடைக்கப்பெற்றன. சங்க காலத்து செங்கல் அமைப்புக்கள் இங்கு தென்படுகின்றன. முறையான அகழ்வாராய்ச்சி இன்னமும் இப்பகுதியில் செய்யப்படாத நிலையில் இது தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் பகுதியாகவே இருக்கின்றது.

மருங்கூர் பண்டைய காலத்தில் வளர்ச்சியடைந்த ஒரு நகரமாகத் திகழ்ந்துள்ளது. ஏறக்குறைய 2500 ஆண்டுகள் பழமையான செங்கற்களால் உருவாக்கப்பட்ட கட்டிட அமைப்புக்களின் எச்சங்களை இன்னமும் இங்கே காணமுடிகின்றது. 

அழகன்குளம் ஆய்வு போல இப்பகுதியிலும் முறையான தொல்லியல் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு இங்கு வாழ்ந்த மக்களின் நாகரிகம் தொடர்பான செய்திகள் வெளிக்கொணரப்பட வேண்டும்.

இந்த விழியப் பதிவில் பேரா.சிவராம கிருஷ்ணன் இப்பகுதியின் முக்கியத்துவத்தை விளக்குகின்றார். 


விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2017/09/blog-post_30.html​ 
யூடியூபில் காண:  https://www.youtube.com/watch?v=neJBK5FDpug&feature=youtu.be

இப்பதிவினைச் செய்ய உதவிய டாக்டர்.சிவராமகிருஷ்ணன், திரு.வடலூர்.சேகர். திரு.சரவணன், வடலூர் நாட்டாமை திரு.சேகர் ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.










அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES