கம்பர் - பெயர் விளக்கம்

0 மறுமொழிகள்

கம்பர் - மக்கள் பெயர் "கம்மம்புல்" என்னும் உணவுப்பயிரின் பெயரும், கம்பம் பள்ளத்தாக்கு என்னும் இடத்தின் பெயரும் - அழகு, இனிமை, மணம் என்னும் பொருள் தரும் சொல்லால் காரணப் பெயராயிற்று. இது போலவே கம்பர் என்னும் மக்கட் பெயரும் காரணப்பெயர்.

கம்பர் என்ற பெயர் மக்களுக்கு 11,12 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் பரவலாக வழங்கி வந்தமைக்குக் கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன. மகேந்திர பல்லவன் என்னும் பேரரசன் காலத்தில் தொண்டைமண்டலத்தைச் சார்ந்து "மல்லம்" என்னும் சிற்றூர் இருந்தது. (இவ்வூர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கூடூர் தாலுக்காவில் உள்ளது) மல்லம் பகுதியைக் கம்பவர்மன் என்னும் குறுநில மன்னன் ஆட்சி செய்தான். மல்லத்திலுள்ள சுப்ரமணியர் கோயிலில் இந்தக் கம்பவர்மன் ஆட்சியைக் குறிக்கும் கல்வெட்டுகள் உள்ளன.

மாதவன் கம்பன்,
கம்பதேவன்,
சிவப்பிராமணன் கம்பன் உய்ய வந்தான்


என்னும் தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி எட்டு எண்கள் 34,38,40-ல் பல பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. தொகுதி பதினொன்று கல்வெட்டு எண் 95-ல் "இடையன் கம்பன் தந்தையும்'' என்றும் காணப்படுகிறது. பண்டைய நாளில் கம்பன் என்ற பெயர் தமிழகத்தில்
குறுநில மன்னருக்கும்,

சிவப்பிராமணருக்கும்,
ஆடுமாடுகளைப் பேணும் இடையருக்கும் மற்றும்
பொதுமக்கள் பலருக்கும் உரியனவாக இருந்தமை அறியலாம்.


தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்களை ஆதரித்த வள்ளலான இருதய ஆலய மருதப்பர் என்னும் குறுநில மன்னர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டம் சொக்கம்பட்டி எனும் ஊரின் அருகில் உண்டாக்கிய "கம்பன் ஏரி" என்ற குளமும்,அக்குளக்கரையில் அமைந்த புதுப்பட்டியும் இன்றும் காணத்தக்கவையாகும்.கவிச்சக்கரவர்த்தி கம்பர் சிவன் கோயில் கொடிமரத்தின் அடியில்(துவஜஸ்தம்பம் - கம்பம்) அனாதையாக பேணுவார் இல்லாமல் கிடந்த குழந்தையாக இருந்து வளர்ந்தவர், அதனால் கம்பர் எனும் பெயர் பெற்றார். இளம் வயதில் கம்பங்கொல்லையைக் காவல் செய்தவர், அதனால் கம்பர் என்று அழைக்கப்பட்டார் என்னும் தவறான கருத்துக்களைச் சொல்லும் கதைகளை ஏற்க வேண்டாம்.

தேவ பாஷையில் இராமாயணத்தைச் செய்த மூவரில் முன்னவரான வான்மீகி நாவினால் உரைத்த காவியச்செய்திகளை இனிமை மிகுந்த தமிழ்ப்பாவினால் மணம் மிகுந்த தமிழ்ப் பண்புகளை உணர்த்தி, நடையின் நின்று உயர் நாயகன் ஆன அழகன் இராமனின் மாக்கதையைச் சொன்ன கவிச்சக்கரவர்த்தியைக் கம்பர் என்னும் காரணப் பெயர் இட்டுத் தமிழ் மக்கள் அழைத்தனர். மகேந்திர பல்லவப் பேரரசன் காலத்திலேயே கம்பர் என்னும் பெயர் பெருவழக்காக இருந்தமையைக் கல்வெட்டுகளால் அறிகிறோம்.அதனால், கவிச்சக்கரவர்த்தியின் பெற்றோர்கள் தம் மகனுக்குக் கம்பன் என்னும் பெயரை இடுகுறியாக வைத்துப்போற்றினர் எனவும் கொள்ளலாம்.

தொல்காப்பியர் கூறிய "கமம்" என்னும் வேர்ச்சொல்லின் வழித் தோன்றியவைகளே கமழ்,காமர், கம்பர் எனக்கொள்ள வேண்டும்.

நல்லாசிரியர் சு.தி. சங்கரநாராயணன்

நன்றி: தினமணி

மறுமொழிகள்

0 comments to "கம்பர் - பெயர் விளக்கம்"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES