தமிழியல் ஆய்வுகள்: தேவை நேர்மையும் உழைப்பும்

1 மறுமொழிகள்

தமிழகம், பாண்டிச்சேரி, கேரளம் ஆந்திரம், கர்னாடகம், புதுதில்லி முதலான மாநிலங்களில் அமைந்துள்ள பல்கலைக் கழகங்களில் பல தமிழியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பல்கலைக் கழகங்களில்
ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்),
முனைவர் (பி.எச்.டி)
பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இன்றைக்கு வெளிவருகின்ற ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வுகள், ஆய்வு மற்றும் திறனாய்வு நூல்கள் தகுதி உடையனவாக இருக்கின்றனவா என்பதில்தான் நமக்குக் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

இன்றைக்குக் கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவர்களுக்குச்
சுவடிகளைப் படித்தல்,
படியெடுத்தல்,
பதிப்பித்தல்,
மெய்ப்புத் திருத்தம் செய்தல்
தொடர்பாக ஒரு தாளைப் பாடமாக வைத்தல் வேண்டும். பழந்தமிழ் இலக்கியங்கள் முழுவதும் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுள்ளன. வருகின்ற கல்வியாண்டில் சில பல்கலைக் கழகங்களில் தமிழ் முதுகலையில் செம்மொழித் தமிழ் பாடமாக நடத்தவிருக்கும் நிலையில் இவற்றைத் தொடர்புடைய அறிஞர்கள் கவனத்தில் கொள்வது சிறந்ததாக இருக்கும்.

மறைமலை அடிகளார்
முல்லைப்பாட்டு ஆராய்ச்சி
பட்டினப்பாலை ஆராய்ச்சி
என்று ஆய்வு செய்து ஆய்வுக்கு புத்தொளி பாய்ச்சினார். இவரது "மாணிக்கவாசகரின் வரலாறும் காலமும்" என்ற ஆய்வு நூல் கால ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவியது. அடிகளார் தொடங்கிய கால ஆராய்ச்சி அவருடைய மாணவரான பேராசிரியர் ச.வையாபுரிப்பிள்ளையால் தமிழ் இலக்கிய வரலாற்றில் பல்வேறு கால ஆராய்ச்சியை மேற்கொள்ளச் செய்தது.

இதனைத் தொடர்ந்து;
தமிழ் தாத்தா உ.வே.சா.,
எம்.எஸ்.பூர்ணலிங்கம்பிள்ளை,
நாவலர் ச.சோமசுந்தர பாரதியார்,
ரா.இராகவையங்கார்,
மு.இராகவையங்கார்,
கா.சுப்ரமணிய பிள்ளை,
தஞ்சை கே.சீனிவாச பிள்ளை,
பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்,
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்,
ஔவை சு.துரைசாமிப்பிள்ளை,
விபுலானந்த அடிகளார்
முதலான அறிஞர்கள் தமிழ் ஆய்வில் ஈடுபட்டுப் புத்தொளி ஊட்டினர்.

இவர்களை அடியொற்றிப் பல்கலைக்கழக அளவில் ஆய்வேடுகளை அளித்து ஆய்வு நெறிமுறைகளைத் தொடங்கி வைத்த பெருமைக்குரியவரான
ரா.பி.சேதுப்பிள்ளை,
பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்,
மு.வரதராசன்,
அ.சிதம்பரநாதன் செட்டியார்,
வ.சு.ப.மாணிக்கம்,
மா.இராசமாணிக்கனார்,
மொ.அ.துரையரங்கனார்
போன்றவர்கள் விளங்கினர். தொடக்கக் காலத்தில் பரந்துபட்ட தலைப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர்த் தனித்தனி நூலாய்வாக விரிவடைந்தது.

இந்நிலையில் ஆய்வு நெறியாளர்கள் பெருகி, ஆய்வாளர்களின் எண்ணிக்கை பன்மடங்காயிற்று. தொடக்க நிலையில் ஒருங்கிணைப்பு இல்லாத நிலையில் ஒரே தலைப்பில் வேறுவேறு பல்கலைக் கழகங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. காலப்போக்கில்
நுண்ணாய்வு,
திறனாய்வு,
ஒப்பாய்வு,
நாட்டுப்புறவியலாய்வு,
உளவியல்,
கவிதை,
நாடகம்,
சிறுகதை,
நாவல்,
பெண்ணியம்
என்றிவ்வாறு பன்முகநோக்கில் ஆய்வுகள் பல்கிப் பெருகின.

இன்றைய நிலையில் இந்தியாவில் அறிவியல் துறைகளில் நிகழும் ஆய்வுகள் உலகத் தரத்துக்கு உயர்ந்துவிட்டன. அந்த அளவிற்கு,

தமிழியல் ஆய்வுகளின் தரம் உயர்ந்து நிற்க வேண்டாமா?

எத்தனை அறிஞர்களின் தமிழ் ஆய்வுகள் பிறரால் மேற்கோள்களாகக் காட்டப்படுகின்றன?

இதனால் அனைத்து ஆய்வுகளும் தகுதி அற்றன என்று எவரும் கருதிவிடக்கூடாது. தகுதியுடைய தமிழியல் ஆய்வுகள் நூற்றுக்கு இருபது விழுக்காடு என்பது மிகமிகக் குறைவாகும். ஆராய்ச்சிக்குச் செலவு செய்யப்படும் பணத்திற்கு இது போதாது.
பல பல்கலைக் கழகங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் முனைவர் பட்ட ஆய்வுக்குப் பதிவு செய்கின்றனர். ஆனால் ஒரு சிலர்தான் முறையாக ஆய்வு செய்து ஆய்வேட்டை அளிக்கின்றனர். இவற்றுள் தகுதியான ஆய்வேட்டை உருவாக்குவது நெறியாளரின் கையில்தான் இருக்கிறது.

ஆய்வுக்கு வரும் எந்த மாணவரும் எதைப்பற்றி ஆய்வு செய்யப்போகிறோம் என்ற தெளிவில்லாமலேயே வருகின்றனர். சில நேரங்களில் நெறியாளரே ஆய்வுத் தலைப்பைக் கொடுத்து, படிக்க வேண்டிய நூல்களைக் குறித்துக் கொடுத்து, படிக்க வைத்து, செய்திகளைத் திரட்டச் செய்து மாணவரை வேலை வாங்க வேண்டியிருக்கிறது. இன்றைக்குக் கணினி மூலம் இணையத்தின் வழி ஆய்வாளருக்குத் தேவையான அனைத்துத் தரவுகளையும் பெறமுடியும்.

இன்றைக்கு எத்தனை விழுக்காடு ஆய்வாளர்கள் இணையத்தைப் பயன்படுத்தித் தங்களுக்குத் தேவையானத் தரவுகளைத் திரட்டுகிறார்கள்?
அதேபோல இன்றைக்கு ஆய்வேடுகளில் பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. இலக்கண ஆய்வை மேற்கொள்கின்ற ஆய்வேடுகளில் கூடப் பிழைகள் தாராளமாக இருக்கின்றன. தமிழில் "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்பதற்கேற்ப ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் உண்டு. அதேபோல, ஒவ்வொரு புள்ளிக்கும் அதாவது மெய்யெழுத்துக்கும் பொருள் உண்டு.


திருமண அழைப்பிதழில் "எம்பெருமான் திருவருளால்" என்று இருக்கின்ற இடத்தில் "எமபெருமான் திருவருளால்' என்று தவறுதலாக அச்சானால் சரியா?

மெய்யெழுத்துக்குப் புள்ளி இல்லாத காரணத்தினால் பொருளே மாறிவிடும். எனவேதான் ஆய்வேட்டில் பிழைகள் இல்லாமல் வருதல் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதேபோல இன்றைக்கு ஆய்வேடுகளில் "திருட்டு போக்கு" மலிந்துவிட்டது. வெளிநாடுகளில் ஒரு சிறிய ஆய்வுத்திருட்டுகூட அவருடைய ஆசிரியர், ஆய்வு வாழ்வுக்கு முடிவு கட்டிவிடும். உரையாடும்போது கூறும் செய்திகளைக்கூட அவர்கள் தங்கள் ஆய்வுகளில் "இன்னார் கூறியது" என்று ஒத்துக்கொள்வர். ஆனால் இங்கோ பெரும் போராசிரியர்கள் பிறர் எழுதிய நூலையே தம் பெயரில் வெளியிட்டு விடுகின்றனர்.

ஆய்வுலகில் இன்றைக்கு மிகமிக வேண்டியது நேர்மை. புலமை குறைந்திருந்தால் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் ஆய்வில் நேர்மை கெட்டால் ஆசிரிய சமூகமே அவர்களை ஒதுக்கித்தள்ளி தண்டிக்க வேண்டும். எந்தத் திருட்டுக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால் இவ்வாறு இலக்கியத் திருட்டு செய்பவர்களுக்கு மன்னிப்பே அளிக்கக்கூடாது. அப்போதுதான் ஆய்வுலகம் செம்மையுறும். ஆய்வேடுகளின் சீரழிவுக்கு 80 விழுக்காடு நெறியாளரும், ஆய்வேடுகளை மதிப்பிடுபவர்களுமே காரணமாவர். ஆய்வை வழிநடத்தும் பெரும்பான்மையான ஆசிரியர்களுக்கு ஆய்வு மாணவர்களைப் பார்ப்பதற்கே நேரம் இருப்பதில்லை. இதுதான் இன்றைய நிலை.

மேலும் இக்காலத் தமிழியல் ஆய்வில் பிறதுறையறிவு மிகவும் தேவை. முனைவர் பட்ட ஆய்வுகள் புதிய கோட்பாடுகளை வகுக்கும் போக்கிலோ அல்லது அதற்குத் துணைபுரியும் போக்கிலோ அமைதல் வேண்டும். இக்கால அறிவியல் கருவிகளைப் பயன்படுத்திப் புதிய புதிய கருத்துக்களை ஆராய்ந்து எண்ணிப்பார்த்து ஆய்வேடுகளில் அவற்றைப் பயன்படித்த வேண்டும்.


தமிழியல் ஆய்வுகள் ஒருங்கிணைந்த ஆய்வாகப் பல்துறையறிவுடன் அமையவேண்டும். அத்துடன் ஆய்வாளர்களின்
ஆய்வுப்பொருள் பற்றிய அறிவு,
ஆய்வுப்பற்று,
தன்முயற்சி,
விடாமுயற்சி,
பொறுமை,
உரிமை ஒப்படைப்பு,
நுண்ணோக்கு,
அயராத உழைப்பு,
நடுவுநிலைமை,
எண்ணித்துணிதல்
ஆகிய பத்துக் கூறுகள் அமைதல் வேண்டும்.

ஆய்வாளராகத் தன்னைப் பதிவு செய்தவுடனேயே அவற்றைக் கருத்தில் கொண்டு ஆய்வை மேற்கொண்டால் அது ஆய்வாளருக்கும், ஆய்வு நெறியாளருக்கும் பெருமை தருவதோடு தமிழியல் ஆய்வும் செம்மையாக அமைந்து தமிழ்ச் சமுதாயத்துக்குத் தகுந்த பலனளிக்கும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.

முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி

நன்றி: தமிழ்மணி (தினமணி)

மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

மறுமொழிகள்

1 comments to "தமிழியல் ஆய்வுகள்: தேவை நேர்மையும் உழைப்பும்"

கோவை விஜய் said...
June 18, 2008 at 4:45 PM

ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"

http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

அன்புடன்,
விஜய்
கோவை

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES