கவரி வீசிய காவலன்!

0 மறுமொழிகள்

வேந்தே!

நினது போர்க்களத்தில் முழங்குகின்ற நின்னுடைய வீரமுரசு, எனக்கு அச்சம் தருவதாகவும் குருதியைப் பலிகொள்ளும் வேட்கையுடையதாகவும் இருக்கிறது. அது, கருமையுடைய மரத்தினால் செய்யப்பட்ட பக்கங்களையும் குற்றம் தீர வாரினால் இறுகப் பிணிக்கப் பட்டும் உள்ளது. நீண்டு தழைத்த மயில் தோகை மாலையினால் அணிசெய்யப்பட்ட அது, புள்ளிகளையுடைய நீலமணி மாலையை அணிந்துள்ளது போன்றிருக்கிறது.

அரண்மனையிலிருந்த கட்டில், எண்ணெய் நுரையைப் போன்று மென்மையான பரப்பினையுடைய பூக்கள் பரப்பப் பட்டிருந்தது. அது, நீராட்டுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்த வீரமுரசு அமரக்கூடிய முரசுக் கட்டில் என்பதை அறியாமல் அதன் மீது ஏறிக் கிடந்து உறங்கினேன்.

அதனைக் கண்ட நீயோ சினங்கொண்டு நினது வாளினால் என்னை இரு கூறாக்கிக் கொல்லாது விடுத்தாய்.

அதுமட்டுமல்லாது, என்னருகே வந்து நின்னுடைய வலிமையான முழவு போன்ற தோளினை உயர்த்திக் குளிர்ச்சியுடன் அருளுடன் எனக்குக் கவரி வீசவும் செய்தாய்! இச்செயல், நீண்டு அகன்று பரந்த உலகில் உயர்நிலை உலகமாகிய அங்கு தங்குதல் என்பது உயர்ந்த புகழுடையவர்க்கு அல்லாது பிறர்க்கு இயலாது என்பதை நன்கு கேட்டிருந்த தன்மையாலோ?

வெற்றியுடைய தலைவனே! நீ செய்தது எதனாலோ? எனின், நீ நல்ல தமிழின் இனிமை முழுவதும் உணர்ந்தவன் ஆகையால் இத்தகைய பண்பு நினக்கே உரியது! ஆகையால், இச்செயலும் நின்னால் சாலும்.

பாடியவர்: மோசிகீரனார்.

பாடப்பட்டோன்: சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.

திணை:பாடாண். துறை: இயன் மொழி.

குறிப்பு: அறியாது முரசுகட்டிலில் ஏறியவரைத் தண்டம் செய்யாது துயில் எழுந்துணையும் கவரிகொண்டு வீசினன் சேரமான்; அது குறித்துப் புலவர் பாடிய செய்யுள் இது.


மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்,
பொலங்குழை உழிஞையொடு, பொலியச் சூட்டிக்,
குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும், நற் றமிழ்முழுது அறிதல்;
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித், தண்ணென
வீசி யோயே; வியலிடம் கமழ,
இவன்இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்:
வலம்படு குருசில்! நீ ஈங்குஇது செயலே?


மின்தமிழ் இடுகை: புலவர் இரவா

மறுமொழிகள்

0 comments to "கவரி வீசிய காவலன்!"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES