மண்ணின் குரல்: ஜூன் 2015: திருமலை பஞ்சகுல தேவதைகள் ஜினாலயம்

0 மறுமொழிகள்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

சக்கரேஸ்வரி

திருமலை ஜைனமடத்தில் 2006ம் ஆண்டு பஞ்சகுல தேவதைகளுக்காக ஒரு ஆலயம் கட்டப்பட்டது. இது ஸ்ரீகேந்திர அரிஹந்தகிரி ஜைனமட மடாதிபதி ஸ்வஸ்தி ஸ்ரீதவளகீர்த்தி பட்டாரக சுவாமிகளின் முயற்சியில் உருவாக்கப்பட்ட ஒரு ஜினாலயம்.

சமண மதத்தில் சாசன தேவதைகளுக்கு ஆலயங்களும், சிற்பங்களும் அதற்கான வழிபாட்டு முறைகளும் நெடுங்காலமாகவே இருந்து வருகின்றது.  அதன் தொடர்ச்சியாகவே தற்போது இங்கு கட்டப்பட்டுள்ள ஆலயமானது ஐந்து தேவதைகளுக்காக அமைந்துள்ளது. 

இயக்கி என்பது ஒரு ஆண்கடவுளின் துணைவி அல்ல. இவர்கள் சாசன தேவதைகள். அதாவது சமண மத கருத்துக்களின் படி இயக்கி, இயக்கன் என்பவர்கள் தீர்த்தங்கரர்களுக்கு பணிவிடை செய்யும் தேவதைகளாக உருவகப்படுத்தப்படுபவர்கள்!

இந்த ஆலயத்தின் பஞ்சகுல தேவதைகளின் அமைப்பு ஐங்கோண வடிவில் உள்ளது.

1.சக்கரேஸ்வரி - இவர் முதல் தீர்த்தங்கரர் ரிஷபநாதரின் இயக்கி. இவரது வாகனம் கருடன். இவர் சத்தியத்தைக் கடைபிடிக்க துணையாக நிற்பவராக உருவகப்படுத்தப்படும் இயக்கி. 

2.ஜ்வாலாமாலினி -  இவர் 8வது தீர்த்தங்கரர் சந்திரப்பிரபரின் இயக்கி. இவரது வாகனம் எருமை. மானுடர்களைத் துன்பம் நேராமல் காக்கும் இயக்கி இவர்.

3. கூஷ்மாண்டி - 28வது தீர்த்தங்கரர் நேமிநாதரின் இயக்கி இவர். இவரது வாகனம் சிம்மம். இவருக்கு அம்பிகா இயக்கி என்ற பெயரும் உண்டு. தருமத்தைக் காக்கும் தாயாகவும் இவர் உருவகப்படுத்தப்படுகின்றார்.

4.பத்மாவதி - இவர் 22வது தீர்த்தங்கரர் பார்சுவநாதரின் இயக்கி. இவருக்கு வாகனமாக அமைந்திருப்பது குக்குடசர்பம். இவர் நோன்பு இருக்க மன உறுதி தரும் தேவதையாகக் கருதப்படுகின்றார்.

5. வராகி - வினைகளின் வேர்களை அருக்கும் தேவதை இவர்.  இவரது வாகனம் சிம்மம். 

இந்த ஜினாலயத்தில் உள்ள இந்த 5 சிற்பங்கள் ஒவ்வொன்றும் ஏழு அடி உயரம் கொண்டவை.

இந்த ஐந்து சிற்பங்களோடு இக்கோயிலில் தனியாக ஒரு பகுதியில் சரஸ்வதிக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

நன்றி: குறிப்புக்கள்  - ஆர்.விஜயன், திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு
இப்பதிவினை 2014ம் ஆண்டு ஜுன் மாதம் நான் பதிவாக்கினேன். இப்பதிவினைச் செய்ய உதவிய நண்பர்கள் ப்ரகாஷ் சுகுமாரன், ஹேமா, இரா.பானுகுமார் ஆகியோருக்கு என் நன்றி.

10 நிமிடப் நேரப் பதிவு இது.

விழியப் பதிவைக் காண:http://video-thf.blogspot.de/2015/06/blog-post_21.html
யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=Z6AamUukUbA&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

மறுமொழிகள்

0 comments to "மண்ணின் குரல்: ஜூன் 2015: திருமலை பஞ்சகுல தேவதைகள் ஜினாலயம்"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES