நூல் மதிப்புரை
*ஆலவாய்- மதுரை மாநகரத்தின் கதை:*
ஆசிரியர்; நரசய்யா
பாண்டிய நாட்டில் சமண மதம், மக்கள் அளவில் மிகச் செல்வாக்கு மிகுந்ததாக இருந்தது என்பதைச் சுட்டிக் காட்டும் கல்வெட்டுக்கள் இன்று நமக்குப் புலனாகியுள்ளனன. ஐராவதம் மகாதேவன், கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் இத்துறையில் அயராது செயல் பட்டிருக்கிறார்கள். *அநேகமாகப் பெரும்பான்மையான தொன்மை வாய்ந்த நாடுகளில், வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம் ஒன்று இருக்கும். ஆனால், வரலாற்றில் அவ்வளவு முக்கியம் பெற்றிராத அந்தப் பழமையான நகருக்குப் பின்பு தோன்றிய ஒரு நகரம், பிற்காலங்களில் அதைவிடச் செல்வாக்கு மிகுந்ததாக ஆகிவிடும். போலந்தில் க்ராக்கூப் என்ற நகரம், நம் மதுரையைப் போல், போலந்தின் தொன்மைக் கலாசாரத்தை எடுத்துக் காட்டும் காலத்தின் கண்ணாடி. ஆனால் இன்று போலந்தின் வர்ஷாவா தான் நமக்குத் தெரியுமேயன்றி, க்ராக்கூபைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. அதுபோல்தான், அமெரிக்காவின் வாஷிங்டன்னும், நியூயார்க்கும். லண்டன் தப்பித்தது, காரணம், லண்டனுக்கு இணையான அளவில் ஒரு பெரிய நகரம் பிரிட்டனில் உருவாகவில்லை. சென்னையை விட மிக மிகப் பழமையான நகரம் மதுரை. அதன் தொன்மை, வரலாற்றுக் காலத்துக்கு முந்தியது. தமிழ்ப் பண்பாட்டின் வரலாறுதான், மதுரையின் வரலாறும். தமிழ் இலக்கிய நூல்களில் மிக மூத்ததாக கருதப்படும் பதிற்றுப்பத்து, மதுரையைக் குறிப்பிடுகின்றது.
அதன் இன்னொரு பெயர் ஆலவாய். இந்த ஆலவாய் நகரின் வரலாற்றை, இலக்கிய, சமூக, அரசியல் பின்புலத்தில் ஆராய்ந்து, ஓர் அற்புதமான நூலை நமக்குத் தந்திருக்கிறார் நரசய்யா. மதுரையும் தமிழும் ஒரு பொருள் குறிக்க வந்த இரு சொற்கள் போல், தமிழக வரலாற்றில் பேசப்படுகின்றன. காரணம் தமிழ் மொழியைப்.பேணுவதற்காகத் தோன்றிய சங்கங்கள் பாண்டிய அரசர் ஆதரவுடன் மதுரையிலும், அதை ஒட்டிய இப்பொழுது மறைந்துவிட்ட நகரங்களிலும் தோன்றியதாக நம்பப்படுகிறது. நரசய்யா இச் செய்திகளை இலக்கிய ஆதாரங்களுடன் மிக விரிவாக இந்நூலில் ஆராய்கிறார். இதைத் தவிர, கிறித்துவ சகாப்தத்துக்கு முன்னிருந்தே, ரோமாபுரி சாம்ராஜ்யத்துக்கும் பாண்டிய நாட்டுக்குமிருந்த தொடர்பை நிறுவும் நாணயங்கள் பல இன்று கிடைத்திருக்கின்றன. பாண்டிய நாட்டில் சமண மதம், மக்கள் அளவில் மிகச் செல்வாக்கு மிகுந்ததாக இருந்தது என்பதைச் சுட்டிக் காட்டும் கல்வெட்டுக்கள் இன்று நமக்குப் புலனாகியுள்ளனன. ஐராவதம் மகாதேவன், கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் இத்துறையில் அயராது செயல் பட்டிருக்கிறார்கள். நரசய்யா, மதுரையைப் பற்றிக் கிடைக்கூடிய அனைத்துத் தகவல்களையும் ஆராய்ந்த்து, கோவையாகப் பல தலைப்புகளின் கீழ் அவற்றைக் கருவூலமாக நமக்கு அளித்திருக்கிறார். 'உலக நாடுகளின் எல்லா வரலாறும், அதிகாரம் என்ற உச்சத்தை எட்டுவதற்கு நிகழும் ஏணிப்படிப் போராட்டங்கள்தாம்' என்றார் யான் காட்( ). ஷேக்ஸ்பியரின் வரலாற்று நாடகங்களை விமர்சனம் செய்யும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நரசய்யாவின் மதுரை வரலாற்றில், மத்திய நூற்றாண்டுகளிலும், பிறகும் நிகழ்கின்ற அரசியல் சம்பவங்களைப் பார்க்கும்போது, யான் காட்டின் கூற்றின் உண்மை நமக்கு உறுதியாகின்றது. தமிழக அரசர்களின் வாரிசுகள் ஆட்சி உரிமைக்காகப் போராடியதின் விளைவாக, நாடு எப்படி அயலார்களின் ஆட்சிக்கு உட்பட்டது என்பதை இவ்வரலாறு நமக்குக் கூறுகின்றது. நமது நாட்டின் தற்கால அரசியல்வாதிகளைப் பார்க்கும்போது, நாம் இன்னும் அக்கால அரசியல் சூழ்நிலையினின்றும் அதிகமாக மாறிவிடவில்லை என்று நரசய்யா கூறுவது பொருத்தமான கூற்றாகப் படுகிறது. சங்க நூற்களினின்றும் மதுரையைப் பற்றிய பல மேற்கோள்களை எடுத்துக் காட்டுகிறார் நரசய்யா. மதுரைக் காஞ்சியின் பாட்டுடைத் தலைவனாகிய ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்தான், சிலப்பதிகாரத்தில் கோவலனக் கொல்கின்ற பாண்டிய மன்னன் என்று அவர் கூறுவது பொருந்துமா என்று தெரியவில்லை. சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகின்ற சோழ மன்னன் கரிகாற் பெருவளத்தான். சேர மன்னன் செங்குட்டுவன். மூவரும் ஒரே காலத்தவராக இருந்திருக்க முடியாது. பிற்காலத்தில் வந்த ( கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு) சேரப் புலவராகிய இளங்கோ, முன்பு சிறப்பு மிக்கிருந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிப்பதற்காக இவர்களைக் குறிப்பிட்டிருக்கலாமென்று தோன்றுகிறது. தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய ஓர் அரிய ஆவணமாக இந்நூலை ஆக்கியிருக்கிறார் நரசய்யா. கல்வெட்டுகள், பண்டைய காசுகள், சிற்பங்கள், ஆகிய பலவற்றைத் துருவி ஆய்ந்தததின் வெளியீடு இந்நூல். 'மதுரை ஸ்தானிகர் வரலாறு' மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தைப் பற்றி அறிவதற்கு, திருவரங்கத்துக் 'கோயில் ஒழுகு' போன்ற ஓர் அரிய நூல். சமய வழிபாட்டிலும் அதிகாரப் போட்டி இருந்திருக்கின்றது.
வட நாட்டிலிருந்து பிராமணர்கள் கோயில் நிர்வாகத்துக்காகவும், சமயச் சடங்கள் செயல்பாட்டிற்காகவும் இடை நூற்றாண்டுகளில் அழைத்து வரப்பட்டனர் என்று குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் தமிழ் நாட்டில் பிராமணர்கள் இல்லை என்று அர்த்தமில்லை. சங்க காலத்து மன்னனாகிய பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி அவன் பெயரே குறிப்பிடுவது போல் பல யாகங்களை பிராமணர்கள் இல்லாமல் எப்படிச் செய்திருக்க முடியும்? பிராமணர்கள் வைத்திருந்த முக்கோலைக் குறிப்பிட்டுத் தொல்காப்பியச் சூத்திரம் ஒன்று இருக்கின்றது. அரிய படங்களுடன், மதுரையைப் பற்றிய பல நுணுக்கமான கலாசார, சமூக, அரசியல் செய்திகளைத் தந்திருக்கும் இந்நூலை அனைவரும் அவசியம் படிக்க வேண்டும். இப்புத்தகத்தை மிக மிக நேர்த்தியாக அச்சிட்டுப் பிரசுரித்துள்ளனர் பழனியப்பா பிரதர்ஸ்
இந்திரா பார்த்தசாரதி