டாக்டர் வள்ளி சொக்கலிங்கம்
தமிழர்களிடையே எத்தனை எத்தனையோ மரபுகள் பின்பற்றப்படுகின்றன. தமிழகத்தில் பல்வேறு சமூகத்தினர் பல்வேறுவிதமான சமூக பழக்க வழக்கங்களைப் பின்பற்றி வருகின்றனர்.
நாட்டுக்கோட்டைச் செட்டியார் என்று அழைக்கப்படும் நகரத்தார்களில் ஆண்பிள்ளை யில்லாதவர்கள் வேறுஒரு குடும்பத்திலிருந்து ஒரு ஆண்பிள்ளையைத் ‘தத்து‘ எடுத்துக் கொள்கின்றனர். அதாவது ‘சுவீகாரம்‘ எடுத்துக் கொள்கின்றனர். இவ்வாறு தத்து எடுத்துக் கொள்ளும்போது எழுதிக் கொள்ளும் பத்திரத்திற்கு “மஞ்சள் நீர் வாசகமுறி“ என்று பெயர்.
பிள்ளையார்பட்டிக் கோயில், காரைக்குடி முருகப்பச் செட்டியார் மகன் லெட்சுமணன் செட்டியாருக்குப் பிள்ளை வந்தவர் வேகுபட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் செட்டியார்.
முரு.லெட்சுமணன் செட்டியாருக்குக் கிருஷ்ணன் செட்டியார் பிள்ளை வந்ததை (தத்து எடுத்ததை) ஒரு ஓலைச்சுவடியில் எழுதிப் பதிவு செய்துள்ளனர். இந்த ஓலைச் சுவடி ‘ஆவணம்‘ இதழில் பதிவாகியுள்ளது.
பிள்ளை வந்த முரு.லெ.கிருஷ்ணன் செட்டியார் அவர்கள், சிவகங்கை சமஸ்தானத்திலிருந்து சூரையூர் கோயிலை 99 வருடங்களுக்கு ஒப்பந்தமாகப் பெற்று திருப்பணிகள் செய்தார். சூரையூர் சூரைமாநகர் என்றானது. சூரைமாநகர் கோயிலில் தனது தந்தையின் நினைவாக அவரது சிலாவுருவத்தையும் தாயார் லெட்சுமி ஆச்சி அவர்களது சிலா உருவத்தையும் வைத்துள்ளார். கோயில் திருப்பணிகள் எல்லாவற்றையும் செவ்வனே முடித்து கும்பஅபிஷேகம் நடத்தியுள்ளார்.
இக்கோயிலுக்கு அருகில் உள்ள கண்மாய்க்குக் கிருஷ்ணன் செட்டியார் கண்மாய் என்ற பெயர் இன்றும் உள்ளது.
இவர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களை அழைத்து வந்து சூரைமாநகர்ப் புராணத்தைப் பாடுமாறு வேண்டிக் கொண்டார். இவரது வேண்டுகோளை ஏற்று மகாவித்வான் அவர்கள் சூரைமாநகர்புராணம் பாடினார். ஒரு பாடலுக்கு ஒருபணம் வீதம் பிள்ளையவர்களுக்கு வழங்கிக் கௌரவித்தார் கிருஷ்ணன் செட்டியார்.
அவர் சிறந்த அறப்பணிகளை நிறையச் செய்துள்ளார் என்று இவரது கொடைத்தன்மையைப் பாராட்டி பிரிட்டீஸ் விக்டோரியா மகாராணியார் 1877 ஆம் ஆண்டு ஒரு பாராட்டுப் பத்திரம் வழங்கியுள்ளார்.
இவரது கொடைத்தன்மையைப் பாராட்டி நாட்டுப் புறப் பாடல் ஒன்றும் உள்ளது.
காரைக்குடியில் லெட்சுமணன் செட்டியார் பெயரில் ஒரு வீதி உள்ளது.
கிருஷ்ணன் செட்டியாரின் வம்சாவழியினர்
1)முருப்பச் செட்டியார் மகன் லெட்சுமணன் செட்டியார்.
2) முரு. லெட்சுமணன் செட்டியார் மகன் கிருஷ்ணன் செட்டியார்.
3) முரு.லெ.கிருஷ்ணன் செட்டியார் மகன் சொக்கலிங்கம் செட்டியார்.
4) முரு.லெ.கி.சொக்கலிங்கம் செட்டியார் மகன் கிருஷ்ணன் செட்டியார்.
5) முரு.லெ.கி.சொ. கிருஷ்ணன் செட்டியார்மகன் சொக்கலிங்கம் செட்டியார்.
முரு.லெ.கி.சொ.கி.சொக்கலிங்கம் செட்டியாரின் மனைவி முனைவர்.நா.வள்ளி அவர்கள். இவர்களது பெருமுயற்சியால்
2001ஆம் ஆண்டில் சூரைமாநகர் கோயிலுக்கு மீண்டும் கும்பஅபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
6) இவர்களுக்கு இரண்டு மகன்கள் தம்பு, கண்ணன். ஒரு மகள்.
நன்றி: முனைவர் காளைராசன்
கட்டுரை
மஞ்சள் நீர் வாசகமுறி
(நா.வள்ளி, காரைக்குடி)
இல்லறத்தைச் சிறக்கச் செய்யும் மக்கட்பேறு இல்லாதவர்கள் இன்னொருவர் பெற்ற பிள்ளையை எடுத்து வளர்ப்பது என்பது சமுதாயத்தில் தொன்று தொட்டுக் காணப்படுகின்ற வழக்கம்தான். தேவகி பெற்ற கண்ணனை, யசோதை தன் மகனாகச் சிறப்புடன் வளர்ப்பதைக் கண்ட ஆய்ச்சியர்கள் “தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ?“ என்று வியப்பதாகப் பெரியாழ்வார் பாடியுள்ளார்.
பிள்ளையை எடுத்து வளர்த்தலைத் ‘தத்து எடுத்தல்‘ என்பர். அப்பிள்ளைக்குத் தத்துப் பிள்ளை அல்லது தத்துப் புத்திரன் என்று பெயர். இவ்வழக்கம் நாட்டுக்கோட்டை நகரத்தார்களிடையே அதிகமாகக் காணப்படுகின்றது. அவர்கள் இதைச் ‘சுவீகாரம் செய்தல்‘ அல்லது ‘பிள்ளை கூட்டுதல்‘ என்று குறிப்பிடுகின்றனர். பிள்ளை கூட்டும் சடங்கைத் தங்கள் குலமுறைப்படியும் சட்டப்படியும் செய்கின்றனர்.
பெரும்பாலும் திருமணப் பருவத்திலுள்ள ஆண்பிள்ளையைத்தான் தங்கள் வாரிசாகக் கூட்டுகின்றனர். பெண்பிள்ளையைச் சுவீகாரம் செய்யும் வழக்கம் இல்லை. ஒருவருக்குப் பெண் குழந்தைகள் இருந்தாலும் தங்கள் குடும்பப் பெயர் விளங்க வேண்டும் என்பதற்காக ஆண் பிள்ளையைச் சுவீகாரம் செய்து கொள்ளுகின்றனர். பிள்ளை கூட்டிக் கொள்ளும்போது தங்கள் குடும்பப் பெயரை அவனுக்கு இட்டுச் சட்டப்படி பதிவு செய்கின்றனர்.
நகரத்தார்களிடையே ஒன்பது கோயில் பிரிவுகள் காணப்படுகின்றன. ஒரு கோயில் பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிரிவைச் சேர்ந்த குடும்பத்திலிருந்துதான் பிள்ளையைக் கூட்டிக் கொள்கின்றனர். சுவீகாரம் செய்து கொள்ளும் போது பிள்ளையைப் பெற்றவர்கள் தாங்கள் பெற்ற பிள்ளைக்கு ‘மஞ்சள் நீர்‘ கொடுத்துக் குடிக்கச் செய்து, பிள்ளையைக் கூடிக் கொள்ளும் பெற்றோரிடம் ஒப்படைப்பது முக்கியச் சடங்காக நடைபெறுகிறது.
காரைக்குடி முரு.லெ.கி.சொ. குடும்பத்தாரிடம் ஓர் ஓலைச் சுவடி உள்ளது. அந்த ஓலைச் சுவடி ஒரு நகரத்தார் குடும்பத்தார் சுவீகாரம் செய்து கொண்ட செய்தியைக் குறிப்பிடுகிறது. கி.பி.1854- இல் நடந்த நிகழ்ச்சி. நகரத்தார் வசிக்கும் ஊர்களுள் ஒன்றான வேகுப்பட்டியில் பிள்ளையார்பட்டிக் கோயிலைச் சேர்ந்த ஒரு குடும்பத்திலிருந்து கிருட்டிணன் என்பவரை காரைக்குடி பிள்ளையார்பட்டிக் கோயிலைச் சேர்ந்த ஒரு குடும்பத்தார் தங்கள் வாரிசாகக் கூட்டிக் கொண்டுள்னர். அதைக் குறித்து இரு குடும்பத்தாரும் ஓர் உடன்படிக்கை முறி எழுதிக் கொண்டுள்ளனர். பிள்ளை கூட்டிக் கொள்பவருக்குப் பிற்காலத்தில் குழந்தைகள் பிறந்தால் குடும்பச் சொத்துக்களை எவ்வாறு பிரித்துக் கொள்வது, வளர வந்த பிள்ளைக்குத் தாய்மாமன் சடங்குகள் யார் செய்து போன்ற செய்திகள் தீர ஆலோசித்துத் தெளிவாக எழுதப்பட்டுள்ளன. ஓலைச் சுவடி இதை ‘மஞ்சள் நீர் வாசக முறி‘ என்று குறிப்பிடுகிறது. இறுதியில் இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கையெழுத்திட்டுத் தங்கள் ஒப்புதலைத் தெரிவித்துள்ளனர்.
“ஆனந்த வருஷடம் கார்த்திகை மீ. 23உ கல்வாச நாட்டில் இளையாற்றங்குடியான குலசேகரபுரத்தில் இரணியூர் மருதங்குடியான ராஜநாராயணபுரத்தில் பிள்ளையார்பட்டி திருவேட்பூருடையான் முருகன் செட்டி லெட்சுமணனுக்கு இவ்வூர் யின்னபடி மேற்படிபுரம் உடையான் நல்லகருப்பன் செட்டி கருப்பாத்தான் மகன் கிஷ்ட்னனை மஞ்சள் நீர் பெத்த புத்திரனாக பிள்ளைவிட்ட படியினாலே லெட்சுமணன சீட்டு கொட்டி தேவதானம் கோயில் குளம் சகலமும் கல்லும் புல்லும் பூமியும் சந்திராதித்தர் உள்ள வரைக்கும் பரம்பரையாக கிருட்டினன் ஆண்டு அனுபவித்துக் கொள்ளவும். இனிமேல் லெட்சுமணனுக்குப் பிள்ளை பிறந்தால் கிருஷ்டினனுக்கு ஒரு பங்கும் பிறக்கிற பிள்ளைகளுக்கு ஒரு பங்குமாக ஆண்டு அனுபவித்துக் கொள்ளவும் பிள்ளைகளுக்கு கல்யாணம் புதுமை சீதனம் பொதுவில் செய்கிறது. லெட்சுமி சீதனம் பூசனம் சகலமும் பொதுவில் வாங்கிக் கொள்ளுகிறது. கிருஷ்ணனுக்கு மாமச்சடங்கு சாத்தன் செட்டி பெரிய கருப்பன் உள்ளிட்டார் செய்கிறது. முருகன் செட்டி ராமநாதன் உள்ளீட்டாரும் நல்லகருப்பன் செட்டி கருப்பாத்தான் மகன் உள்ளிட்டாரும் சாத்தப்ப செட்டி பெரிய கருப்பன் உள்ளிட்டாரும் சின்னான் செட்டி சேக்கப்பன் உள்ளிட்டாரும் சம்மதித்து சொல்ல இந்த வாசகமுறியெழுதினேன்.
இவ்வூரில் யின்னபடி யின்னபுரம் உடையான் வெங்கிடாசலம் செட்டி சிதம்பரம் கையெழுத்து
- முருகன் செட்டி லெட்சுமணன்
- முருகன் செட்டி ராமநாதன் உள்ளிட்டார்
- மேற்படி ராமநாதன்
- நல்ல கருப்பன் செட்டி கருப்பாத்தான்
- மேற்படி அண்ணாமலை உள்ளிட்டார்
- சின்னான் செட்டி சேக்கப்பன் உள்ளிட்டார்
- சாத்தன் செட்டி பெரியகருப்பன் உள்ளிட்டார்.
தட்டச்சு உதவி
கி.காளைராசன்