வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
சைவ ஆதீனங்களில் பழமை வாய்ந்தது திருவாவடுதுறை ஆதீனம். திருக்கயிலாயப் பரம்பரை வழி வந்த குருமுதல்வர்கள் இங்கு ஆதீனத்தலைவர்களாக இருந்து இம்மடத்திற்கு உரிமையான கோயில்களையும் கட்டளை மடங்களையும் இன்று வரை பாதுகாத்து சைவ நெறி வளர்த்து வருகின்றனர்.
திருமந்திரம் அருளிய திருமூலர் இங்கு இருந்து பாடல்கள் இயற்றினார் என்பதும் யோகசமாதி அடைந்தார் என்பதனையும் கோயில் ஆதீன வரலாற்றிலிருந்து அறிந்து கொள்கின்றோம்.
இந்தத் திருமடத்தின் நூலகம் மிகச் சிறப்பு வாய்ந்தது. சரசுவதி மகால் எனப் பெயர் கொண்ட இந்த நூலகத்தில் பழமையான சுவடி நூல்கள் பலவும் கிடைத்தற்கறிய சிறந்த பல தமிழ் நூல்களும் பாதுகாக்கப்படுகின்றன.
இன்றைய வெளியீடாக மலரும் இந்த விழியப் பதிவில் நூலகத்தில் உள்ள சுவடி நூல்களைப் பற்றிய ஒரு அறிமுகம் வழங்கப்படுகின்றது. ஆதீனப் புலவர் இந்த அறிமுகத்தை வழங்குகின்றார். அதில் குறிப்பாக மடாதிபதி என்னும் சொற்றொடர் விளக்கம் என்ற தலைப்பிலான ஒரு சுவடி நூல் பற்றிய அறிமுக விளக்கம் இடம் பெறுகின்றது. அதில் ஆதீனங்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் பற்றிய விபரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. சைவ ஆதீனங்கள் அனைத்தும் இந்த நூலில் வழங்கப்பட்டுள்ள முறைகளைப் பின்பற்றியே ஆதீன அலுவல்களை முறைபடுத்துகின்றனர் என்ற செய்தியை இந்த ஒலிப்பதிவின் வழி அறிந்து கொளள முடியும். இந்த நூலை பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆதீனப் புலர் ஒருவர் ஆதீன கர்த்தரின் கட்டளைப்படி தயாரித்த விஷயத்தையும் இப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.
திருவாவடுதுறை மடத்தின் மற்றுமொரு சிறப்பு இங்கு அனையாத அடுப்பு எப்போதும் இருக்கும் என்பது. தொடர்ந்து அன்னதானம் இங்கு வழங்கப்பட்டு வருகின்றது என்ற செய்தியையும் இந்த பதிவின் வழி நாம் அறியலாம்.
அது மட்டுமல்ல..மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் கையெழுத்தில் அமைந்த ஏட்டுச் சுவடிகளும், பல புராண நூல்களும் நிறைந்த ஒரு நூலகம் இது என்பது இதன் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் விஷயம். அதனையும் ஆதீனப் புலவர் பேட்டியில் குறிப்பிடுகின்றார்.
10 நிமிட விழியம் இது . பார்த்து கருத்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
வலைப்பூவில் காண: http://video-thf. blogspot.de/2014/01/2014_9435. html
யூடியூபில் காண: http://www.youtube.com/ watch?v=OSrT_rMAxC8
பதிவு செய்யப்பட்ட நாள்: 28.2.2013
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]