மண்ணின் குரல்: ஜனவரி 2014: பஞ்சவன் மாதேவி

0 மறுமொழிகள்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

1978ம் ஆண்டில் தொல்லியல் அறிஞர் டாக்டர்.நாகசாமி அவர்களின் மாணவர் குழு ஒரு கோயிலைக் கண்டிபிடித்தனர். அப்போது மண் புதர்களால் மறைக்கப்பட்டு செடிகளும் கொடிகளும் மரங்களும் முளைத்து ஒரு கோயிலை முழுமையாக மறைத்திருந்தது.

அன்று இந்தத் தொல்லியல் ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர் டாக்டர்.பத்மாவதி அவர்களும் ஒருவர்.

கடந்த ஆண்டு(2013) மார்ச் மாதம் தமிழகத்தில் சோழர் கால கோயில்களைக் காணும் ஒரு முயற்சியாக  டாக்டர். பத்மாவதி, இந்திய தொல்லியல் துறை ஆய்வு மாணவர் பரந்தாமன், நான் ஆகியோர் சென்றிருந்த போது குறிப்பிடத்தக்க சில இடங்களைக் காண வேண்டும் என ஒரு பட்டியல் போட்டுச் சென்றோம். அதில் ஒன்றே பட்டீஸ்வரத்திற்கும் திருவிடைமருதூருக்கும் அருகே அமைந்துள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் பஞ்சவன் மாதேவி கோயில்.


Inline image 1

இந்தக் கோயில் 1978ம் ஆண்டில் தமிழக தொல்லியல் துறையினால் அறியப்பட்டு முழு கோயிலும் மீட்டெடுக்கப்பட்டது என்பது சிறப்பானதொரு விஷயம். பழுவேட்டறையர் குலப்பெண்ணான பஞ்சவன் மாதேவி மாவேந்தன் ராஜராஜ சோழனின் துணைவியர்களில் ஒருவர். ராஜேந்திர சோழனின் சிற்றன்னை. தன் சிற்றன்னை நினைவாக ராஜேந்திர சோழன் கட்டிய கோயில் இது.

பஞ்சவன் மாதேவியின் பூதவுடலை வைத்து அதன்மேல் சிவலிங்கம் வைத்து கட்டப்பட்ட ஒரு பள்ளிப்படை கோயில் இது என்பது இதன் கூடுதல் சிறப்பு.

இக்கோயில் கண்டெடுக்கப்பட்டபோது இக்கோயிலைச் சுத்தம் செய்து முழுமையாக மீட்டெடுக்கப்பட வேண்டியது பெரிய காரியமாக இருந்திருக்கின்றது. இந்தப் பெரும் பணியை குழுக்களாகப் பிரித்துக் கொண்டு இவர்கள் கோயிலை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு குழு கோபுரப் பகுதியைச் சுத்தம் செய்து மரம் செடி கொடிகளையெல்லாம் வெட்டியெடுத்திருக்கின்றார்கள். இன்னொரு குழு கோயில் சுற்றுப் புரத்தில் மண்டிக் கிடந்த காடுகளை வெட்டி அப்புறப்படுத்தியிருக்கின்றாரகள். டாக்டர்.பத்மாவும் சிலரும் கோயிலுக்குள் கிடந்த மண்ணையெல்லாம் அப்புறப்படுத்தி சிலைகளைச் சுத்தப்படுத்தி பிரகாரப்பகுதியைச் சுத்தப்படுத்தியிருக்கின்றார்கள். அருகாமையில் இருந்த கிணற்றிலிருந்து நீரைக் கொண்டு வந்து கோயில் முழுமையையும் தூய்மைப் படுத்தி கோயிலை வழிபாட்டுக்கு உகந்த வகையில் புத்துயிர் கொடுத்திருக்கின்றார்கள்.

பின்னர் இக்கோயிலை பராமரிக்கும் பொறுப்பு அவ்வூர் மக்களுக்கே என அமைத்து கொடுத்து வந்திருக்கின்றனர். தற்சமயம் கோயிலின் முன்புறத்தில் ஒரு தனிப்பகுதியும் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு புது வர்ணங்களுடன் கோபுரம் காட்சியளிக்கின்றது. 

கோயிலுக்குள் செல்லும் போது வௌவால்கள் நம்மைக் கடந்து பறந்து செல்கின்றன. கோயிலின் சுற்றுப்புறச் சுவர் அனைத்திலும் மிகத் தெளிவான  கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அனைத்தும் தமிழக தொல்லியல் துறையினால் படியெடுக்கப்பட்டு விட்டன. 

இப்பதிவின் முதல் சில நிமிடங்கள் கோயிலைக் காணலாம். பின்னர் கோயிலின் உட்புறத்தில் இருக்கும் பழுவேட்டறையர் கட்டுமான முறையில் வடிவமைக்கப்பட்ட நந்தியைக் காணலாம். அதோடு
  • பள்ளிப்படை என்பது என்ன? 
  • இறந்தவரின் உடலை எவ்வாறு தயார் செய்வர்? 
  • இந்த சடங்கு முறை எந்த  நூலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது?
..போன்ற விவரங்களை டாக்டர்.பத்மா தொடர்ந்து வழங்குவதையும் காணலாம்.

அற்புதமான வடிவில் அமைந்த சிலைகள் இக்கோயிலின் வெளிப்புறத்தில் காட்சியளிக்கின்றன. கோயிலின் உள்ளே முன் பகுதியில் பஞ்சவன் மாதேவியின் சிலை உள்ளது. கோயிலின் கற்பக்கிருகத்தின் வாசலில் இரண்டு துவார பாலகர்கள் சிலைகள் உள்ளன. இவையும் பழுவேட்டறையர் கட்டுமான வடிவத்தைப் பிரதிபலிக்கும் தன்மையைக் கொண்டவை. 

கோயிலின் கற்பக்கிருகத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நேரே கீழாக பஞ்சவன் மாதேவியின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கின்றது.


விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/01/2014_26.html

யூடியூபில் இப்பதிவைக் காண: http://www.youtube.com/watch?v=T6bTOyTCGoM



அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

மறுமொழிகள்

0 comments to "மண்ணின் குரல்: ஜனவரி 2014: பஞ்சவன் மாதேவி"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES