​மண்ணின் குரல்: மார்ச் 2014: சோழ நாட்டு கோயில்கள் - திருநீலக்குடி

0 மறுமொழிகள்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

​திருநீலக்குடி​ திருக்கோயில் திருவாவடுதுறையிலிருந்து ஏறக்குறைய 4 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் சோழநாட்டுக் கோயில்களில் ஒன்று. மிகப் பழமை வாய்ந்த ஆலயங்களின் பட்டியலில் இடம்பெறும் இந்தக் கோயில் இன்று அதன் பொலிவு குறைந்த நிலையில் இருந்தாலும் அதன் எழில் குறையாமல் அமைந்திருக்கின்றது.

கோயிலில் எந்த கல்வெட்டுகளையும் காண இயலவில்லை. புணரமைப்பு நடந்து அவை மறைக்கப்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகின்றது.

இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் லிங்க வடிவத்து இறைவன் மனோக்ஞ நாதர், நீலகண்டன் என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றார். அம்மை அநூபமஸ்தனி என்று குறிப்பிடப்படுகின்றார்.

இந்த ஆலயத்தில் தஷிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வயானையுடன் நின்ற நிலையில் இருக்கும் முருகப் பெருமான சிலைகள் அமைந்திருக்கின்றன. தேவர்கள் திருப்பாற்கடலில் அமுதம் கடைந்த போது தோன்றிய நஞ்சை உண்ட நீலகண்டனே இங்கு இறைவனாக எழுந்தருளி விளங்குவதால் இந்தத் தலம் திருநீலக்குடி என அழைக்கப்படலாயிற்று.

அப்பர் பெருமான் இந்தக் கோயிலில் உள்ள இறைவனுக்காகப் பாடிய ஒரு தேவாரப் பாடலும் உண்டு. 
வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர்
செத்த போது செறியார் பிரிவதே
நித்த நீலக்குடி னைந்நினை
சித்த மாகிற் சிவகதி சேர்திரே
                                             -அப்பர்


தேவாரத் திருப்பதிகம் பெற்ற காவிரி தென் கரையில் இத்தலம் 32 வது. திருநாவுக்கரசர் திருப்பதிகம் பெற்றது. திருநாவுக்கரசு சுவாமிகளைச் சமணர்கள் கல்லோடு பிணைத்துக் கடலில் இட்டபோது அவர் இத்தல இறைவன் திருப்பெயரை ஓதிக்கொண்டே ஓதிக் கரையேறினார் என அவர் அருளிய தேவாரம் குறிப்பிடுவதைக் காணலாம்.(http://www.supremeclassifieds.com/places/?sgs=82&sT=2)

பண்:  தனித்திருக்குறுந்தொகை

கல்லினோடு எ[ன்]னைப் பூட்டி அமண் கையர்
ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால்
நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே.

பொது மக்களால் இந்தக் கோயிலைப் பற்றி குறிப்பிடப்படுகின்ற புராண விஷயங்களாக இருண்டு விஷயங்கள் சொல்லப்படுகின்றன.
1. இந்தக் கோயிலையே பிரகலாதன் முதன் முதலாக வழிபட்டார் என்ற குறிப்பு
2. இந்தக் கோயிலில் உள்ள மூலவர் (சிவலிங்கம்) அபிஷேகத்தின் ​போது மேலே சார்த்தப்படும் எண்ணையை உறிஞ்சிவிடுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த இரண்டு தகவல்களையும் கோயில் குருக்கள் பேட்டியில் குறிப்பிடுவதைக் காணலாம்.

Inline image 1

சோழர் காலத்தில் முக்கியத்தலங்களில் இது ஒன்றாக இருந்து அக்காலத்தில் சீரமைக்கப்பட்டு கற்ற்ளியாக மாற்றப்பட்ட இந்தக் கோயில் அதற்கும் சில நூற்றாண்டுகளுக்கும் முந்தைய பழமை வாய்ந்த ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும் என்பதை அப்பர் பெருமான் இக்கோயிலுக்கு வந்து இறைவனை வேண்டி பாடிய தகவல்களின் அடிப்படையில் அறிந்து கொள்ளலாம். 

இப்பதிவு கடந்த ஆண்டு (2013) மார்ச் மாதத்தில் தமிழகத்தில் நான் இருந்த பொழுதில் பதிவாக்கப்பட்டது. 5 நிமிடப் பதிவு இது.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/03/2014_21.html



அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

மறுமொழிகள்

0 comments to "​மண்ணின் குரல்: மார்ச் 2014: சோழ நாட்டு கோயில்கள் - திருநீலக்குடி"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES