மண்ணின் குரல்: அக்டோபர் 2016: ஸ்ரீ செங்கமாமுனியப்பன் திருக்கோயில்

0 மறுமொழிகள்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 




​நாட்டார் வழக்காற்றியல் என்பது தமிழர் மரபில் சிறப்பிடம் பெறுவது. கிராமத்து தெய்வ வழிபாட்டு முறைகளும் தெய்வங்களும் இதன் ஒரு கூறாக அமைகின்றன.

நம்பிக்கை, பக்தி என்பன மக்கள் வாழ்வில் பிரிக்கமுடியாத அங்கம் வகிக்கும்  அம்சமாக விளங்குகின்றன. தமிழகத்தை மட்டுமே எடுத்துக் கொண்டாலும், கிராமத்துக்குக் கிராமம், ஊருக்கு ஊர் என தெய்வங்கள் வெவ்வேறு வகையில் வழிபாட்டில் அமைக்கப்பட்டிருப்பதைக் காண்கின்றோம்.



கொங்குமண்டலத்தில், கிராமப்புர கோயில்கள் என்பன விரிவாகக்காணக்கூடியதாக இருக்கின்றன. முனிஸ்வரர், காளியம்மன் போன்ற தெய்வங்கள் பொதுவாக கிராம மக்கள் விரும்பும் தெய்வங்களாக உள்ளன. அப்படி அமைக்கப்படும்  கோயில்களில் ஏராளமான வெவ்வேறு பெயர் கொண்ட தெய்வ உருவங்களும் சேர்க்கப்பட்டு கோயிலின் சிறப்பைக் கூட்டுவதாக அமைந்து விடுகின்றன.

பொதுவாக முனீஸ்வரன், காளியம்மன் ஆகிய தெய்வங்களின் ஆலயங்களில் ஆடு பலி கொடுத்து வேண்டுதல் செய்வது என்பது வழக்கில் இருக்கின்றது. பல்வேறு சடங்குகள், ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணம் என வைத்து மனிதர் தம் வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அதன் பரிகாரங்களுக்கும் நன்றி செலுத்துதலுக்கும் ஆலயங்கள்  மையப்புள்ளியாக அமைந்திருப்பதை தமிழர் மரபிலிருந்து பிரித்து எடுக்க இயலாது. 

கொங்கு மண்டலத்தில் உள்ள பல கோயில்களில் தெய்வங்களோடு வரிசையாக பல்வேறு உருவ பொம்மைகளை வைத்து வழிபடும் ஒரு வழக்கமும் நடைமுறையில் இருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட  விசயத்தில் பிரச்சனை என்பது ஒரு மனிதரால் அல்லது ஒரு பொருளால் என அமையும் போது  அந்தப் பிரச்சனை தீர்ந்த பின்னர் அந்தப் பிரச்சனைக்கு மூலக்காரணமாகத் திகழும் பொருளை சுதைசிற்பமாக வடித்து கோயில்களில் வைப்பதை இங்கே கோயில்களில் காண்கின்றோம்.

அப்படி ஒரு கோயில் தான் ஈரோடு மாவட்டத்தில், குமாரபாளையம் எனும் ஊருக்கு அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ செங்கமாமுனியப்பன் திருக்கோயில்.

இந்தக் கோயிலில் மக்கள் செய்யும் வழிபாடுகள் பல்வேறு வகையானவை. வேண்டுதலுக்காக ஆணி செருப்பில் நடத்தில்,  தீமிதித்தல், உருவ பொம்மை செய்து வைத்து நேர்த்தில்  கடன் செய்தல், ஆடுகளைப் பலிகொடுத்து நன்றி செலுத்துதல், எலுமிச்சை பழ மாலை அணைவித்து வழிபாடு செய்வது என வெவ்வேறு வகையான வழிபாடுகள் உள்ள வளம் நிறைந்த வழிபட்டு முறைகள் நிறைந்த ஒரு மையமாக இக்கோயில் திகழ்கின்றது.

இப்பதிவில், கோயில் பொறுப்பாளர் இக்கோயில் பற்றி  விளக்கம்  கூற ஏனையோரும் உடன்  இணைந்து கொள்கின்றனர்- வாருங்கள் காண்போம்.

விழியப் பதிவைக் காண:     http://video-thf.blogspot.de/2016/10/blog-post_14.html
யூடியூபில் காண:      https://www.youtube.com/watch?v=J_7MsmixlSs&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

மறுமொழிகள்

0 comments to "மண்ணின் குரல்: அக்டோபர் 2016: ஸ்ரீ செங்கமாமுனியப்பன் திருக்கோயில் "

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES