மண்ணின் குரல்: ஏப்ரல் 2017:தென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரைக் கோயில்

0 மறுமொழிகள்

வணக்கம்.




மதுரையின் திருப்பரங்குன்றம் மலையில் தெற்கே தென்பரங்குன்றம் பகுதியில் கி.பி.8-9ம் நூற்றாண்டளவில் ஒரு சமணக் குடைவரைக் கோயில் உருவாக்கப்பட்டது. இக்குடைவரைக் கருவரையில் புடைப்புச் சிற்பமாக ஒரு தீர்த்தங்கரரின் உருவமும் செய்விக்கப்பட்டிருந்தது. கி.பி.1223இல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இக்குடைவரைக் கோயில் ஒரு சிவன் கோயிலாக மாற்றம் கண்டது.

சுந்தர பாண்டிய ஈஸ்வரம் என்று பெயர் மாற்றம் பெற்று அதன் பராமரிப்புக்காகப் புளிங்குன்றூர் என்னும் கிராமத்தை மன்னன் தானமளித்த செய்தி இக்கோயிலிலுள்ள குடைவரையின் கிழக்குச் சுவற்றில் வெட்டப்பட்டுள்ளது.

இக்கோயிலைச் சிவன் கோயிலாக மாற்றுவதில் பிரசன்ன தேவர் என்னும் சைவத்துறவி முக்கியப் பங்காற்றியுள்ளார் என்ற செய்தியும் கல்வெட்டின் வழி அறிய முடிகின்றது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் புளிங்குன்றூரை இன்று உள்ள வேடர் புளியங்குளம் என்ற ஊராகக் கொள்ளலாம்.

தற்போது உமையாண்டவர் கோயில் என்று இக்கோயில் பெயர் பெற்றுள்ளது. அதற்கு ஏற்ப ஏற்கனவே இருந்த சமணத் தீர்த்தங்கரர் உருவத்தை மாற்றம்  செய்து அர்த்தநாரியின் உருவத்தையும்  அதன் பின் நந்தியின் உருவத்தையும் செய்துக்கியுள்ளனர். அர்த்தநாரியின் தலைக்கு மேலாக அசோக மரத்தின் சுருள் சுருளான கிளைகள் இன்றும் காணப்படுகின்றன.

கோயிலின் வெளிப்புறத்தில் சைவக் குரவர் நால்வரின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.   பாறையைக் குடைந்து புடைப்புச் சிற்பங்களாக இறைவடிவங்கள், வடிக்கப்பட்டிருக்கும் அழகிய கலைக்கோயில் இது. இக்கோயிலின் வரலார்றைச் சொல்லும் தமிழ் எழுத்துக்களில் செதுக்கப்பட்ட விரிவான கல்வெட்டுச் செய்தியும் இக்கோயிலில் இருப்பது சிறப்பு.  மதுரையின் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒரு கலை வடிவம் இக்குடைவரைக் கோயில் எனலாம்.


துணை நூல்:
மாமதுரை,பொ.இராசேந்திரன், சொ.சாந்தலிங்கம், -  பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் வெளியீடு.


விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2017/04/blog-post.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=lbRUKG1tagA&feature=youtu.be












பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

மறுமொழிகள்

0 comments to "மண்ணின் குரல்: ஏப்ரல் 2017:தென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரைக் கோயில்"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES