மண்ணின் குரல்: மே 2017: திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்

0 மறுமொழிகள்

வணக்கம்.

நீண்ட காலப் பழமையும் வரலாறும் கொண்ட ஒரு கோயில் மதுரையில் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில். சங்ககால தொண்மைச் சிறப்புக்கள் அமைந்த ஒரு கோயில் இது. 



சங்ககாலத்தில் பழையன் என்று சுட்டப்படும்  குறுநில மன்னன் ஒருவன் திருமோகூரை ஆண்டு வந்துள்ள செய்தியை மதுரைக்காஞ்சி வரிகள் இப்படிப் பாடுகின்றன.

பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக்கோசர் தோன்றியன்ன

இந்த வரிகளில் குறிப்பிடப்படும் நான்மொழிக்கோசர், குறுந்தொகையில் குறிப்பிடப்படும் நாலூர்க்கோசரே எனக்கருதப்படுகின்றது.  வம்ப மோரியர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த போது பழையன் கோசரின் துணையால், வம்ப மோரியரை வென்றதாக அகநானூறு(261) குறிப்பிடுகின்றது. இச்செய்திகளின் அடிப்படையில் காணும் போது பழையரால் ஆட்சி செய்யப்பட்ட கோகூர், மௌரியர் காலத்துக்கு முந்திய பழமை வாய்ந்த ஓர் ஊர் எனத் தெரிகின்றது.

சங்ககாலம் தொடங்கி மாயோன் வழிவாட்டில் புகழ்பெற்றிருந்த இக்கோயில் ஏறக்குறைய எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் கற்கோயிலாக எழுப்பப்பட்டு வழிபாட்டில் இருந்து வந்துள்ளது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம்  செய்யப்பட்டுள்ளார் இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் காளமேகப்பெருமாள் சாமி. மணவாளமாமுனிகளும் காளமேகப்பெருமாளைப் பணிந்து பாடியுள்ளார்.

இக்கோயிலின் முன் வாசலில் மருது மண்டபம் என அழைக்கப்படும் கம்பத்தடி மண்டபத்தைக் காணலாம். இங்கு சின்னமருது, பெரியமருது சிற்பங்கள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. இப்பகுதியை மருது சகோதரகள் கட்டி விரிவு செய்துள்ளனர். 

இதற்கு அடுத்து வரும் மகாமண்டபம் விஜயநகர கலைப்பாணி கட்டுமானம் கொண்டது. 

இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தாயாருக்கு மோகனவல்லி, திருமோகூர் வல்லி நாச்சியார், மேகவல்லி நாச்சியார் என்ற பெயர்கள் வழக்கில் உள்ளன.

இக்கோயிலிலுள்ள சுதர்சனர் சிற்பம் 4 அடி உயரத்தில் அமைந்தது. இங்குள்ள பாண்டியன் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டில், காங்கேயன் என்பவரால் இக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள திருவாழி ஆழ்வாருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடை குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் திருவாழி ஆழ்வாராகச் சக்கரத்தாழ்வாரை அதாவது சுதர்சனரை குறிப்பிடலாம். 

காளமேகப் புலவரும் காளமேகப் பெருமாள் மீது ஒரு தனிப்பாடல் பாடியிருப்பதாக அறியமுடிகின்றது.

இக்கோயிலின் திருச்சுற்றுச்சுவர் கி.பி.1699-1700 வாக்கில் மதுரை மங்கம்மாள் அரசியின் தளவாயாக விளங்கிய நரசப்பையரின் அனுமதியின் பேரில் வெங்கப்பையர் என்பவரால் கட்டப்பட்டுள்ளமையை இக்கோயிலின் கல்வெட்டிலிருந்து அறிய முடிகின்றது.

ஏராளமான நீண்ட வாசகங்களில் தமிழ் எழுத்து கல்வெட்டுக்கள் இக்கோயிலில் நிறைந்திருக்கின்றன. ஒரு வரலாற்றுச் சின்னமாக  இந்தத் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் திகழ்கின்றது.


துணை நூல்:
மாமதுரை,பொ.இராசேந்திரன், சொ.சாந்தலிங்கம், -  பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் வெளியீடு.


விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2017/05/blog-post.html
யூடியூபில் காண:  https://www.youtube.com/watch?v=uzVPMmnPN_o&feature=youtu.be














பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

மறுமொழிகள்

0 comments to "மண்ணின் குரல்: மே 2017: திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES