வணக்கம்.
சுதைச் சிற்பக் கலையின் பிரம்மாண்டத்தைப் பார்க்க வேண்டுமா?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கரந்தை ஜினாலயத்திற்குத் தான் வரவேண்டும். சமண சமயத்தைப் பின்பற்றுவோர் இன்றும் வாழும் ஒரு ஊர் கரந்தை.
இங்குள்ள சமணக்கோயிலில் தனித் தனிக் கோயிலாக
- குந்துநாதர் ஆலயம்
- மகாவீரர் ஆலயம்
- பிரம்ம தேவர் ஆலயம்
- மேற்றிசைப் பெருமாள் சன்னிதி
- ரிஷ்பநாதர் ஆலயம்
- தருமதேவி ஆலயம்
ஆகிய சன்னிதிகளோடு தீர்த்தங்கரர்களின் பாதங்கள், அகளங்க தேவரின் நினைவாக ஒரு அமைப்பு ஆகியனவும் அமைக்கப்பட்டுள்ளன.
அகளங்கதேவர், அழிபடைதாங்கி ஹிமசீதள மன்னன் அரசவையில் பௌத்தர்களை வாதில்வென்று அவர்களை இலங்கையிலுள்ள கண்டிக்குச் செல்ல வழிசெய்தனர் எனக் கூறப்படுகின்றது.
இக்கோவிலில் உள்ள குந்துநாதர் ஆலயம் தான் காலத்தால் முந்தியது. பல்லவ மன்னன் 3ம் நந்திவர்வம் (கி.பி.846 - 869) காலத்தைச் சேர்ந்தது. சோழமன்னன் வீர ராஜேந்திரன் காலத்தில் இவ்வாலயம் புதுப்பிக்கப்பட்டு வீர ராஜேந்திரப் பெரும்பள்ளி எனப் பெயர் பெற்றது.
இந்தச் சன்னிதி மட்டுமன்றி ஏனைய சன்னிதிகளில் கல்வெட்டுக்கள் நிறைந்திருக்கின்றன. அவை இக்கோவிலின் படிப்படியான வளர்ச்சி, வழங்கப்பட்ட தானங்கள் ஆகியவற்றை விவரிப்பதாக உள்ளன.
இவ்வாலயத்தின் குந்து நாதர், மகாவீரர் சன்னிதிகளும் தருமதேவி சன்னிதியும் மிகப் பிரமாண்டமான வடிவில் அமைக்கப்பட்டவை. சுதைச்ச்சிற்பங்களின் அழகையும் கலை வடிவின் திறனையும் ஒருங்கே இக்கோவிலில் காண முடிகின்றது.
விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/ 2017/06/blog-post_25.html
யூடியூபில் காண: https://www.youtube.com/ watch?v=axC1tJpuF5Q&feature= youtu.be
இப்பதிவினைச் செய்ய உதவிய திருமலை சமணமடத்தின் நிர்வாகத்தினருக்கும், வரலாற்றுக் குறிப்புக்களை வழங்கிய திரு.ஆர்.விஜயன் (திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு நூல்) அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]