மண்ணின் குரல்: ஜூன் 2017:அரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் - லகுலீசர் சிற்பம்

0 மறுமொழிகள்

வணக்கம்.

அரிட்டாபட்டி மதுரையில் நரசிங்கம்பட்டிக்கு வடக்காக சுமார் 4 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் ஊர்.  மேற்கில் கழிஞ்சமலை என அழைக்கப்படும் மலைத்தொடர்களால் சூழப்பட்டிருக்கின்றது அரிட்டாபட்டி. விவசாயிகள் நிறைந்திருக்கும் இப்பகுதி நெற்பயிற்கள் நிறைந்து பசுமையாகக் காட்சியளிக்கின்றது. இப்பகுதியில் தான் அமைந்திருக்கின்றது அரிட்டாபட்டி குடைவரைக் கோயில்.  வாகனத்தைச் சாலையில் தூரத்தே நிறுத்தி விட்டு வயல் வரப்பில் நடந்து வரும்போது தூரத்தே செங்குத்தான  பாறைகளைப் பார்த்துக் கொண்டே வந்தால் அதன் பின்னால் பாறைகளைக் குடைந்த வகையில் இக்குடைவரைக் கோயில் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.



இக்குடைவரையைப் பற்றிய கல்வெட்டுக்கள் இங்கு காணப்பட்டவில்லையெனினும், இக்குடைவரைக்கோயிலின் அமைப்பைக் கொண்டு இது  கி.பி.7 அல்லது 8ம் நூற்றாண்டு பாண்டிய மன்னர்கள் குடைவித்த கோயில்தான் என்பதை தொல்லியல், கல்வெட்டியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.  தெளிவான கல்வெட்டுக்கள் இல்லாத போதிலும், இக்கோயிலின் முன்புறத்தில்  முற்கால தமிழ் எழுத்துக்களின் சில வரிகள் எழுதப்பட்டுள்ளமையைக் காண முடிகின்றது. கல்வெட்டாகச் செதுக்குவதற்காக எழுதப்பட்டு பின்னர் முழுமைப்படுத்தப்படாமல் போன நிலையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

இந்தக் கோயிலின் சிறப்பு இங்கிருக்கும் லகுலீசர் சிற்பம். தலையில் கரண்ட மகுடத்துடனும், மார்பில்  பட்டையான யக்ஞோப வீதத்துடனும் லகுலீசர் சிற்ப வடிவில் காட்சி தருகின்றார்.

லகுலீசர் கி.பி.2ம் நூற்றாண்டு வாக்கில் குஜராத் மாநிலத்தின் காரோஹணம் என்ற ஊரில் பிறந்தவர். பவுத்தமும், சமணமும் விரிவாகப் பரவியிருந்த காலகட்டத்தில் லிங்க வழிபாட்டைப் புதுப்பித்தவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு.  லகுலீசர் உருவாக்கிய சைவ சமத்தின் பிரிவு பாசுபத சைவம் என அழைக்கப்படுவது.  சிவபெருமானே லகுலீசராக அவதாரம் செய்தார் என்று ஏகலிங்கி என்ற ஊரில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. லகுலீசரின் பாசுபத சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு  லிங்க வழிபாடு தொடங்கப்பட்ட இடங்கள் காரோஹணம் என்றே வழங்கப்பட்டன. தமிழகத்தில் பக்தி இயக்கக் காலத்தில் காரோஹண சைவம் நிலை பெற்றிருந்தது.  நாகைக் காரோஹணம், குடந்தைக் காரோஹணம், கச்சிக் காரோஹணம் ஆகிய மூன்றுமே அவை.  இறைவனே இறங்கி மானுட வடிவில் வந்து அவதரிப்பதையே காரோஹணம், அதாவது காயமாகிய உடல் கீழே இறங்கி வருதல் என்ற பொருளாகின்றது. 

தமிழகத்தில் சிவலிங்க வழிபாடு பக்தி இயக்கக் காலத்தில் கோயில்களில் விரிவடைந்தமைக்கு பாசுபத கொள்கை அடிப்படையாக அமைந்தது. சைவத்தை அரசியல் மதமாக ஏற்ற பாண்டியர்களும் பின்னர் சோழர்களும் சிவ வழிபாட்டினை விரிவாக்கும் வகையில் தமிழகத்தின் பல பகுதிகளில் சிவாலயங்களை நிர்மானித்தார்கள். பெரிய கற்கோயில்கள் தொடங்கப்பட்ட காலமாகிய கி.பி  8ம் நூற்றாண்டின் இறுதிக்காலத்திற்கு முன்னர் குடைவரைக்கோயில்களில் சைவசமயத்தின் குறியீடாகிய சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்த இடங்களாக அமைந்தன. தமிழக வரலாற்றில் சைவ சமய வரலாற்றிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குடைவரைக் கோயில்களில் ஒன்றாக இந்த அரிட்டாபட்டி குடைவரைக் கோயில் திகழ்கின்றது.

குறிப்பு: 
  1. சைவத்தின் தோற்றம், டாக்டர்.ஆ.பத்மாவதி
  2. மாமதுரை,  பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்

விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2017/06/blog-post.html
யூடியூபில் காண:      https://www.youtube.com/watch?v=wbACsWp5Uxs&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

இப்பதிவினைச் செய்வதில் உதவிய டாக்டர். சாந்தலிங்கம்., டாகடர்.ஆ.பத்மாவதி, டாகடர்.ரேணுகா தேவி ஆகியோருக்கு எமது நன்றி.


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]











மறுமொழிகள்

0 comments to "மண்ணின் குரல்: ஜூன் 2017:அரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் - லகுலீசர் சிற்பம்"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES