மண்ணின் குரல்: ஜூலை 2017: திருஆனைக்கா - சிவப்புச்சேலை தாய்தெய்வ வழிபாடு

0 மறுமொழிகள்
வணக்கம்

திருச்சிக்கு அருகே அமைந்துள்ள ஒரு  மாபெரும் சிவன் கோவில் திருவானைக்கோவில் .   தேவார திருப்பதிகங்களைப் பாடிய அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரோடு அருணகிரிநாதர், தாயுமானவர்,   ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என்ற சிறப்புடன் விளங்கும் கோயில் இது. இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது என்றும் சைவ சமயத்தைப் பின்பற்றுவோரால் வணங்கப்படுகின்றது.

இன்று முக்கிய சிவாலயங்களில் ஒன்றாக அறியப்படும் இக்கோயில் தாய்தெய்வ வழிபாட்டுக் கோயிலாக இருந்த கோயில்களில் ஒன்று என்பதற்கான சில சான்றுகள் இக்கோயிலில் கிடைக்கின்றன. இக்கோயிலில் அமைந்திருக்கும் அம்பிகைப்பற்றிய பழமையான செய்திகள் இன்று நமக்குக் கிடைப்பது அரிதாகிவிட்ட போதிலும் இக்கோயிலில் இன்றும் தொடரும் ஒரு சடங்கு சிவப்புச்சேலை மதிய பூசை. இப்பூசை இக்கோயில்  தாய்தெய்வக் கோயில் என்பதை வலியுறுத்தும் வண்ணம் அமைந்திருக்கின்றது.

இதனை வலியுறுத்தும் கருத்துக்களை தனது தெய்வம் என்பதோர்.. என்ற நூலில் முன் வைக்கின்றார் பேரா.முனைவர்.தொ.பரமசிவன் அவர்கள்.

தமிழ்நாட்டுத் தாய்த்தெய்வம் பற்றிய குறிப்புகள் பெரும்பாலும் இலக்கியங்களில் இருந்துதான் நமக்குக் கிடைக்கின்றன. வடக்கு நோக்கி அமர்ந்திருத்தல், கையில் ஆயுதம் ஏந்தியிருத்தல், தலையில் பெரும்பாலும் அக்கினி (தீச்சுவாலை) மகுடம் கொண்டிருத்தல், கழுத்தில் காறையும் பொட்டும் அணிந்திருத்தல், நிமிர்ந்த முகம் ஆகியவை தாய்த் தெய்வத்தின் தனி அடையாளங்களாகும். வழிபாட்டு முறைகளில் பொங்கலும் முளைப்பாரியும் சாமியாட்டமும் இரத்தப் பலியும் தாய்த்தெய்வத்தை அடையாளம் காட்டும் தனிக்கூறுகளாகும்.
 
குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு தாய்த்தெய்வம் திருஆனைக்கா அகிலாண்டேசுவரி ஆகும். இக்கோயில் மதிற் சுவர்களில், இக்கோயிலில் தன் தலையைத் தானே அரிந்து (நவகண்டம்) கொடுக்கும் வழக்கம் இருப்பதைக் காட்டும் சிற்பச் சான்றுகள் உள்ளன. (இவ்வகைச் சான்றுகள் தொல்லெச்சங்களாகத் தமிழ்நாட்டில் பல கோயில்களில் காணக்கிடைக்கின்றன) இக்கோயிலில் நண்பகல் ஒரு வேளையில் ஆண் பூசாரி சேலையைத் தன் உடம்பில் சுற்றிக் கொண்டு தான் பெண்ணாக மாறியதாகப் பாவனை செய்து கொண்டு  பூசை செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதன் பொருள் இக்கோயில், ஒரு காலத்தில் நரபலி பெறும் உக்கிரமான தாய்த்தெய்வக் கோயிலாகத் தோன்றியிருக்க வேண்டும் என்பதுதான். இக்கோயிலை வைதீகமயப்படுத்தி பிற்காலத்தில் தந்தை தெய்வக் கோயிலாக ஆக்கியுள்ளார்கள். வைதீகமயப்படுத்தும் முறைகளில் ஒன்று ஸ்ரீஸக்கர பிரதிஷ்டை செய்தல் (தெய்வத்தின் அடங்கா சினத்தைக் குறைக்கும் மந்திரங்களைச் செப்புத்தகட்டில் எழுதி தலைவாசலில் பதித்தல்) ஆகும்.  
- தொ.பரமசிவன்

விழியப் பதிவைக் காண:   http://video-thf.blogspot.de/2017/07/blog-post_22.html
யூடியூபில் காண:      https://www.youtube.com/watch?v=Jl8HThaeYpk&feature=youtu.be

இப்பதிவினைச் செய்வதில் உதவிய பேரா.சூசை, பேரா.முனைவர்.விஜயராணி ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.








அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் - மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 10 ஜூலை 2017

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது மின்னிதழ் வெளியீடு அமைகின்றது. 

காலாண்டு இதழாக ​2015ம் ஆண்டு ஏப்ரல் முதல் ​வெளிவ​ரும் இந்த மின்னிதழில் தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட சிலதேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படு​கின்றன.

இந்தக் காலாண்டின் மின்னிதழ் இன்று  வெளியீடு காண்கின்றது.
இதழ் கூகள் புக்ஸ் பக்கத்தில் உள்ளது. 

இதழை  வாசிக்க https://books.google.de/books/about?id=6iQtDwAAQBAJ&redir_esc=y செல்க!​


இந்த வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது "தமிழர் மரபு வளத்தை மீட்டெடுப்போம் " என்பதாகும். 





உள்ளடக்கம்


​இக்காலாண்டில் த.ம.அ வெளியீடுகள் ​



பொறுப்பாசிரியர்: முனைவர். தேமொழி.


வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர் சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​


மண்ணின் குரல்: ஜூலை 2017: திருவாலீஸ்வரம் : சிற்பக் கலையும் சோழப்பேரரசும்

1 மறுமொழிகள்
வணக்கம்.



பொன்னியின் செல்வன் புதினத்தை வாசித்து அருள்மொழிவர்மரின் வீரச் செயல்களை வியந்து சோழர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டவர்கள் நம்மில் பலர். பொதுவாகவே ராஜராஜன் என்றால் உடனே நம் மனதில் நினைவுக்கு வருவது அவன் கட்டுவித்த ராஜராஜேச்சுவரம் தான். இதுவே தஞ்சை பெருவுடையார் கோயில் என்றும், பேச்சு வழக்கில் தஞ்சை பெருங்கோயில் என்றும் வழங்கப்படுகின்றது. இந்தக் கோயிலை மாமன்னன் ராஜராஜன் கட்டுவதற்கு முன்னர் அவன் கட்டிய கோயில் சோழ நாட்டில் இல்லை. மாறாகப் பாண்டிய நாட்டில் அம்பாசமுத்திரத்திற்கு அருகே பிரமதேசம் என்ற சிற்றூரில் கடனா நதியின் தென்கரையில் அமைந்திருக்கின்றது திருவாலீஸ்வரம். இக்கோயிலின் சிற்பங்கள் அற்புதமான வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. கருங்கல்லினால் எழுப்பப்பட்ட இக்கோயில் தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு முன் மாதிரியாக அமைக்கப்பட்ட கோயில் என்பதுடன் இக்கோயிலின் சுற்றுச் சுவர்கள் அனைத்திலும் ஏராளமான கல்வெட்டுக்கள் நிறைந்து காணப்படுகின்றன. கல்வெட்டுக்கள் ஒவ்வொன்றும் ராஜராஜன் காலத்து அரசியல் நிகழ்வுகளின் ஆவணங்களாக அமைந்து தன் ஆட்சியில் ராஜராஜன் செயல்படுத்திய நீர்மேலாண்மை, நில மேலாண்மை, வரிவசூலிப்பு, தானங்கள் போன்ற தகவல்களை உள்ளடக்கிய தகவல் பெட்டகமாக அமைந்திருக்கின்றது. 

ராஜராஜ சோழன் இளவரசராக நெடுங்காலம் பல போர்களில் பங்கெடுத்து அரசாட்சி பற்றிய பயிற்சி பெற்று அரியணையில் ஏறியவன். இரண்டாம் சுந்தர சோழனுக்கும் அவனது பட்டத்தரசியான வானவன் மாதேவிக்கும் பிறந்தவன். சோழர் வரலாற்றில் ராஜராஜன் அரியணையில் ஏறிய நாள் முதல் அடுத்த 100 ஆண்டுகள் என்பவை சோழ மன்னர் பரம்பரையினரின் பொற்காலம் என கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தமது சோழர்கள் எனும் நூலில் குறிப்பிடுகின்றார். ராஜராஜனின் முதலாம் மகன் ராஜேந்திரன் தன் ஆட்சிக் காலத்தில், சோழ ராஜ்ஜியத்தை இலங்கை மட்டுமன்றி சுவர்ணபூமியாகிய கடாரத்தையும் கைப்பற்றி சோழர்களின் ராஜ்ஜியத்தை விரிவாக்கினான். 

ராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பெயர் பெற்றவன் என்பது இவனுக்கு அமைந்த தனிச்சிறப்பு. இவனது போர் பற்றிய வெற்றிச் செய்திகளை தெளிவாகக் கூறும் செப்பேடு திருவாலங்காட்டுச் செப்பேடு. 

பாண்டிய மன்னர்களும். பல்லவ மன்னர்களும் தாம் பிறருக்கு அளித்த தானங்களைப் பற்றிய ஆவணக்குறிப்புக்களைச் செப்பேடுகளில் பொறித்தனர். அதில் தமது முன்னோர் வரலாற்றினையும் எழுத வைத்தனர். அந்த வகையில் சோழப்பாரம்பரியத்தில், தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்றுச் செய்திகளை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து அதனை விளக்கும் மெய்க்கீர்த்திகளைத் தமிழில் செய்திக்கு முன் தொடக்கத்தில் கல்வெட்டுக்களில் பொறிக்கும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியவன் ராஜராஜன். ராஜராஜனின் அதே முறையையே ஏனைய பிற சோழ மன்னர்களும் தமது கல்வெட்டுக்களில் பின்பற்றினர். இந்த மெய்க்கீர்த்திகள் வரலாற்றுச் செய்திகளையும் அக்காலத்தில் அம்மன்னனின் ஆட்சியில் நிகழ்ந்த போர் பற்றிய செய்தியையும் உட்படுத்திய வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இவையே இன்று இம்மன்னர்களின் காலத்தில் நிகழ்ந்த முக்கிய அரசியல் மற்றும் போர் தொடர்பான செய்திகளை ஆராய்ந்து அறிய உதவுவனவாக உள்ளன. 

ராஜராஜனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த படைபெடுப்பு போர் நிகழ்வுகள் பற்றி சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. ஈழத்தைக் கைப்பற்றிய ராஜராஜன் சிவனுக்கு அங்கு ஒரு கற்றளியை அமைத்தான். பொலன்னறுவை நகரில் இன்றும் இக்கோயில் இருக்கின்றது. ராஜராஜனின் அரசியல் நிர்வாகத்திறன் இன்றும் வரலாற்றறிஞர்களால் சிறப்பித்துக் கூறப்படுகின்றது. 

நிலவரியை ஏற்படுத்தி, அதற்காக நாடெங்கிலும் நிலங்களை அளந்து , நிலத்திற்கேற்ப வரி அமைத்து நிர்வாகத்தை நடத்தினான். நிர்வாகத்தை வலுவாக்கி, மத்திய அரசின் பிரதிநிதிகளை மேற்பார்வைக்காக அமைத்து கிராம சபைகளை அமைத்தான், தனது நிலப்படையையும், கடற்படையையும் வலுவாக்கினான். 

இந்தப்பதிவில் 
  • கோயிலில் உள்ள வட்டெழுத்துக்கள், தமிழ் எழுத்துக்கள்.. 
  • ராஜராஜ பாண்டியமண்டலம் என ராஜராஜன் தான் வெற்றி கொண்ட பகுதிக்குப் பெயர் சூட்டி பாண்டி நாட்டு மக்கள் நன்கறிந்த வட்டெழுத்திலேயே தனது கோயிலின் கல்வெட்டுக்களை அமைந்த விபரங்கள், அதன் காரணம் 
  • அந்தணர்களுக்கு நிலங்களைத் தானமாகக் கொடுத்து அவர்கள் அந்த நிலத்தினை வரிகளுடனோ அல்லது வரிகளே இல்லாமல் அதனை அனுபவிக்கலாம் என்ற வகையில் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் 
  • ஒரே காலகட்டத்தில் இரண்டு எழுத்துருக்கள் மக்கள் புழக்கத்தில் இருந்தமைக்கான காரணம் 
  • வட்டெழுத்து கல்வெட்டுக்களைத் தமிழ் எழுத்தில் படியெடுத்து சிதிலமடைந்த கோயிலின் தகவலை புதுப்பித்து தமிழ் கல்வெட்டுக்களைச் செதுக்கிய செய்தி 
  • வட்டெழுத்தின் தொடர்ச்சியாக மலையாள லிபியின் பரிணாம வளர்ச்சி 
  • சிற்பங்கள் உருவாக்கப்படும் அறிவியல் 
  • சோழவந்தான் என்ற ஊரின் பெயர்க்காரணம் 
.. 
இப்படிப்பட்ட தகவல்கள் வழங்கப்படுகின்றன. 

ஜப்பானில் நடைபெற்ற பனிச்சிற்ப கண்காட்சியில் உலக அளவில் 2ம் இடத்தைப் பிடித்த ஒரே இந்தியர். இலங்கையில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கிடையேயான கண்காட்சியில் தம் கலைத்திறனுக்காக முதல் இடத்தைப் பிடித்தார்.. 
எழுத்தாளர், கவிஞர், ஓவியர் சிற்பி, பேராசிரியர்..இந்தியா முழுதும் கோயில்கள், கலைக்கோயில்கள், வரலாற்றுச் சின்னங்கள் அனைத்தையும் ஆய்வு செய்த பெருமைக்குரியவராகிய ஓவியர் சந்துரு அவர்களும், தமிழக தொல்லியல் துறையின் கல்வெட்டியல் அறிஞர் டாக்டர். பத்மாவதி அவர்களும், பாண்டிய நாட்டில் ராஜராஜன் அமைத்த இக்கோயிலைப் பற்றிய பல செய்திகளை இப்பதிவில் வழங்குகின்றனர். 
 
 

விழியப் பதிவைக் காண:  ​  http://video-thf.blogspot.de/2017/07/blog-post_15.html
யூடியூபில் காண:     https://www.youtube.com/watch?v=ca7zEZHzYcs&feature=youtu.be

இப்பதிவினைச் செய்வதில் உதவிகளை வழங்கிய  நெல்லை மாவட்ட ஆட்சியர் டாக்டர். கருணாகரன், சகோதரர் விஜய், நெல்லை மாவட்ட அரசு தாசில்தார். திரு.கௌதம சன்னா ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.







































அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


​​THF Announcement: E-books update:14/7/2017 *ஆதி திராவிடர் வரலாறு

3 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:   ஆதி திராவிடர் வரலாறு
ஆசிரியர்: திரிசிரபுரம் ஆ.பெருமாள்  பிள்ளை
பதிப்பு:  சென்னை விக்டோரியா அச்சுக்கூடம்
வெளியிடப்பட்ட ஆண்டு: 1921



நூல் குறிப்பு:

இந்திய துணைகண்ட வரலாற்றின் ஆதி வரலாற்றை தொடங்கி வைத்தவர்களாகக் கருதப்படும் ஆதி திராவிடர்கள் பற்றின தரவுகள், படைப்புகள், ஆவணங்கள், மற்றும் அவர்களுடைய பணிகள் பற்றின குறிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்கிடக்கின்றன. அவற்றை முழுமையாக ஒருங்கிணைத்து ஒரு பொதுச்சித்திரத்தை இந்திய வரலாற்றிற்கு அளிக்க முடியும் என்கின்ற நிலை இருந்தும்  அது ஏனோ முன்னெடுக்கப்படாமல் இருக்கின்றது என்பது வருத்தத்திற்குறிய விசயம். இந்திய வரலாற்றின் ஒரு புறக்கணிக்கப்பட்ட பக்கமாகவே இந்தாட்டின் ஆதிக் குடிகளின் வரலாறு இருட்டடிப்புக்கு உள்ளாக்கும் போக்கு தொடர்ந்து நிலவுகின்றது.  குறிப்பாக தென்னிந்திய வரலாற்றில் ஆதி திராவிடர்கள் என்ற சொல்லின் பிரயோகம் நீண்ட காலம் நிலவி வந்தாலும் அச்சொல்லின் குறிப்பான காலத்தோற்றம் குறித்தோ அது தொடர்பான ஆய்வுகளையோ அவ்வளவாக கவனப்படுத்தாது தமிழக வரலாற்றின்  அடிப்படை பக்கங்களையே பார்க்க முடியாதோ என்கின்ற நிலை உருவாகி இருக்கின்றது.

தமிழக வரலாற்றின் பதிவாக பேசப்படும் நீதிக்கட்சி மற்றும் திராவிட இயக்க, கட்சிகளின் வரலாறு பேசப்பட்ட அளவிற்கு ஆதி திராவிட மக்களின் வரலாறு, அரசியல் மற்றும் சமுதாய வரலாறு பேசப்படவில்லை என்பது ஒரு வரலாற்று விபத்தே. பண்பாட்டு மானுடவியல்,  மற்றும் சமூக அறிவியல் துணைகொண்டு  வரலாற்றின் இருண்ட பக்கங்களை நோக்குகின்ற போது நடுவு நிலை மாறாமல் அதை ஆராய வேண்டியது ஆய்வறிஞர்களின் கடமை. அதற்கு அவர்களுக்கு அடிப்படையான தரவுகள் தேவைப்படுகின்றது. அந்த அடிப்படையான தரவுகளில் ஒன்றுதான் திரிசரபுரம் பெருமாள் பிள்ளை அவர்கள் எழுதிய ஆதிதிராவிடர் வரலாறு எனும் நூல். 

1922ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம் மீண்டும் மறுபதிப்பு கண்டதா, என்பது பற்றின குறிப்பு கிடைக்கவில்லை.  எனது சேகரத்தில் இருக்கும் அசல் நூலின் மின்னாக்கத்தைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு வழங்குவதில் மகிழ்கிறேன். இந்நூலில் ஆதிதிராவிட மக்களின் வரலாறு,  அச்சொல்லின் தோற்றம், அது அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டபின் எழுந்த நிகழ்வுகள்,  சட்ட விபரங்கள் அம்மக்களின் தலைவர்கள், அவர்கள் நடத்திய இதழ்கள், போராட்டங்கள், ஆகியன விரிவாகக் குறிப்பிடப்படுகின்றன. பண்டைய காலம் முதல் 1922 வரை நடைபெற்ற முக்கிய வரலாற்று நிகழ்வுகள் பற்றிய செய்திகள் இந்த நூலில்  தொகுக்கப்பட்டுள்ளன.
கௌதம சன்னா


ரெட்டை மலை சீனிவாசன் அவர்களின் சீடரான ஆ.பெருமாள் பிள்ளை  அவர்களின் இந்த 109 பக்கங்கள் கொண்ட  நூல் தமிழ் ஆய்வுலகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்கள் தமிழ் நில வரலாற்றை  புரிந்து  கொள்ள உதவும் என்ற வகையில் இதனைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் சேகரத்தில் இணைப்பதில் மகிழ்கின்றோம்.

"நூல் விமர்சனம் - தென்னிந்திய சமூகப்புரட்சியின் தந்தை அயோத்திதாசப் பண்டிதர்" என்ற எனது  கட்டுரையில் இந்நூல் பற்றியக் குறிப்பும் முன்னர் வந்துள்ளது. 


மின்னாக்கம், மின்னூலாக்கம்:  திரு.கௌதம சன்னா
இந்த நூலைத் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் சேகரத்திற்காக வழங்கிய திரு.கௌதம சன்னா அவர்களுக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

ஆதிதிராவிடர் வரலாறு  - நூலை  வாசிக்க

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​


மண்ணின் குரல்: ஜூலை 2017: சுடுமண் வடிவங்கள்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழர் கலைகளில் ஒன்றான சுடுமண் சிற்பம் பற்றிய விழியப் பதிவு ஒன்று  இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக மலர்கின்றது.



சுடுமண் கலைச்சிற்ப அமைப்பு இன்று வழக்கொழிந்த ஒன்றாகி அருகி விட்டது. மிக நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்ட வகையில் கைதேர்ந்த கலைஞர்கள் தான் இந்த வடிவங்களை உருவாக்கியிருக்க வேண்டும். இதே போன்ற சுடுமண் சிற்பங்கள் இன்று தமிழகத்தின் ஓரிரண்டு இடங்களில் மட்டும் தான் காணக்கிடைக்கலாம். 

இன்றைய பதிவில் இடம்பெறும் சுடுமண் சிலைகள் 2 குதிரைகளும் ஒரு யானையும் என்ற வகையில் ஒரு மேடை மேல் நின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பண்ருட்டிக்கு அருகே சேமக்கோட்டை என்ற சிற்றூரில் இந்த சிற்பங்கள் உள்ளன.  ஒரு ஐயனார் கோயிலைச் சார்ந்த நிலையில் இவை அமைக்கப்பட்டிருக்கின்றன.   ஐயனார் கோயில் சற்று புதுப்பிக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது. இந்த சிலைகள் இருக்கும் இடத்தைச் சுற்றி புதர்கள் மண்டிக் கிடக்கின்றன.

இவை நம் கண் முன்னே சிறிது சிறிதாக அழிந்து வருகின்றன. கலை நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த சுடுமண் குதிரைகள் வடிவத்தை நாம் பாதுகாக்க வேண்டாமா? 

இந்த அரிய கலைச்சிற்பத்தைப் பாதுகாக்க இப்பகுதியின் தொல்லியல் துறையும் மாநில அரசும் தக்க  நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ் மரபு அறக்கட்டளை கேட்டுக்கொள்கின்றது.


விழியப் பதிவைக் காண:  ​ http://video-thf.blogspot.de/2017/07/blog-post.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=Ob2zF7XoD2s&feature=youtu.be

இப்பதிவினைச் செய்ய உதவிய டாக்டர்.சிவராமகிருஷ்ணன், திரு.வடலூர்.சேகர். திரு.சரவணன், வடலூர் நாட்டாமை திரு.சேகர் ஆகியோருக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.










அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES