​​THF Announcement: E-books update:14/7/2017 *ஆதி திராவிடர் வரலாறு

3 மறுமொழிகள்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:   ஆதி திராவிடர் வரலாறு
ஆசிரியர்: திரிசிரபுரம் ஆ.பெருமாள்  பிள்ளை
பதிப்பு:  சென்னை விக்டோரியா அச்சுக்கூடம்
வெளியிடப்பட்ட ஆண்டு: 1921



நூல் குறிப்பு:

இந்திய துணைகண்ட வரலாற்றின் ஆதி வரலாற்றை தொடங்கி வைத்தவர்களாகக் கருதப்படும் ஆதி திராவிடர்கள் பற்றின தரவுகள், படைப்புகள், ஆவணங்கள், மற்றும் அவர்களுடைய பணிகள் பற்றின குறிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்கிடக்கின்றன. அவற்றை முழுமையாக ஒருங்கிணைத்து ஒரு பொதுச்சித்திரத்தை இந்திய வரலாற்றிற்கு அளிக்க முடியும் என்கின்ற நிலை இருந்தும்  அது ஏனோ முன்னெடுக்கப்படாமல் இருக்கின்றது என்பது வருத்தத்திற்குறிய விசயம். இந்திய வரலாற்றின் ஒரு புறக்கணிக்கப்பட்ட பக்கமாகவே இந்தாட்டின் ஆதிக் குடிகளின் வரலாறு இருட்டடிப்புக்கு உள்ளாக்கும் போக்கு தொடர்ந்து நிலவுகின்றது.  குறிப்பாக தென்னிந்திய வரலாற்றில் ஆதி திராவிடர்கள் என்ற சொல்லின் பிரயோகம் நீண்ட காலம் நிலவி வந்தாலும் அச்சொல்லின் குறிப்பான காலத்தோற்றம் குறித்தோ அது தொடர்பான ஆய்வுகளையோ அவ்வளவாக கவனப்படுத்தாது தமிழக வரலாற்றின்  அடிப்படை பக்கங்களையே பார்க்க முடியாதோ என்கின்ற நிலை உருவாகி இருக்கின்றது.

தமிழக வரலாற்றின் பதிவாக பேசப்படும் நீதிக்கட்சி மற்றும் திராவிட இயக்க, கட்சிகளின் வரலாறு பேசப்பட்ட அளவிற்கு ஆதி திராவிட மக்களின் வரலாறு, அரசியல் மற்றும் சமுதாய வரலாறு பேசப்படவில்லை என்பது ஒரு வரலாற்று விபத்தே. பண்பாட்டு மானுடவியல்,  மற்றும் சமூக அறிவியல் துணைகொண்டு  வரலாற்றின் இருண்ட பக்கங்களை நோக்குகின்ற போது நடுவு நிலை மாறாமல் அதை ஆராய வேண்டியது ஆய்வறிஞர்களின் கடமை. அதற்கு அவர்களுக்கு அடிப்படையான தரவுகள் தேவைப்படுகின்றது. அந்த அடிப்படையான தரவுகளில் ஒன்றுதான் திரிசரபுரம் பெருமாள் பிள்ளை அவர்கள் எழுதிய ஆதிதிராவிடர் வரலாறு எனும் நூல். 

1922ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம் மீண்டும் மறுபதிப்பு கண்டதா, என்பது பற்றின குறிப்பு கிடைக்கவில்லை.  எனது சேகரத்தில் இருக்கும் அசல் நூலின் மின்னாக்கத்தைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு வழங்குவதில் மகிழ்கிறேன். இந்நூலில் ஆதிதிராவிட மக்களின் வரலாறு,  அச்சொல்லின் தோற்றம், அது அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டபின் எழுந்த நிகழ்வுகள்,  சட்ட விபரங்கள் அம்மக்களின் தலைவர்கள், அவர்கள் நடத்திய இதழ்கள், போராட்டங்கள், ஆகியன விரிவாகக் குறிப்பிடப்படுகின்றன. பண்டைய காலம் முதல் 1922 வரை நடைபெற்ற முக்கிய வரலாற்று நிகழ்வுகள் பற்றிய செய்திகள் இந்த நூலில்  தொகுக்கப்பட்டுள்ளன.
கௌதம சன்னா


ரெட்டை மலை சீனிவாசன் அவர்களின் சீடரான ஆ.பெருமாள் பிள்ளை  அவர்களின் இந்த 109 பக்கங்கள் கொண்ட  நூல் தமிழ் ஆய்வுலகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்கள் தமிழ் நில வரலாற்றை  புரிந்து  கொள்ள உதவும் என்ற வகையில் இதனைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் சேகரத்தில் இணைப்பதில் மகிழ்கின்றோம்.

"நூல் விமர்சனம் - தென்னிந்திய சமூகப்புரட்சியின் தந்தை அயோத்திதாசப் பண்டிதர்" என்ற எனது  கட்டுரையில் இந்நூல் பற்றியக் குறிப்பும் முன்னர் வந்துள்ளது. 


மின்னாக்கம், மின்னூலாக்கம்:  திரு.கௌதம சன்னா
இந்த நூலைத் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் சேகரத்திற்காக வழங்கிய திரு.கௌதம சன்னா அவர்களுக்குத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

ஆதிதிராவிடர் வரலாறு  - நூலை  வாசிக்க

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​

மறுமொழிகள்

3 comments to "​​THF Announcement: E-books update:14/7/2017 *ஆதி திராவிடர் வரலாறு"

இன்னம்பூரான் said...
July 14, 2017 at 6:28 PM

அத்தகைய நூல்களை மின்னாக்கம் செய்வது தமிழ் மொழிக்கு/சமுதாயத்துக்கு அரிய பணி. சுபாஷிணி. நம்மிடம் பல நூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விமர்சனம், Critical Analysis with academic rigor மிகவும் அவசரமான தேவை. வருங்காலத்துக்கு உதவும்.திரு. கெளதம சன்னா அவர்களுக்கும், உங்களுக்கும் என் பாராட்டுகள்.
இன்னம்பூரான்

Dr.K.Subashini said...
July 14, 2017 at 11:33 PM

rajam
9:25 PM (11 hours ago)

to me, மின்தமிழ்
தகவலுக்கும் மின்னாக்கநூல் வெளியீட்டு முயற்சிக்கும் மிக்க நன்றி, சுபா!

மிக்க ஆவலுடன் ஒரு 30-பக்கங்கள் படித்தேன். விரைவில் நூல் முழுமையும் படிக்க ஆவல் தூண்டப்பட்டிருக்கிறது.

நூலாசிரியர் திரிசிரபுரம் ஆ.பெருமாள் பிள்ளை நல்ல ஆய்வாளராகத் தோன்றுகிறார். இருபதாம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் வெளியான நூல் இவ்வளவு செய்திகளுடன் அமைந்திருப்பது சிறப்பு.

‘திராவிடம்’ என்ற சொல்லின் வரலாற்றை இடம், மொழி, சாதி என்ற மூன்று கோணங்களிலிருந்து பார்த்துத் தொகுத்திருக்கும் அணுகுமுறை எனக்குப் பிடித்திருக்கிறது.

இப்போதைக்கு 30-பக்கங்கள் மட்டுமே படிக்க முடிந்தது. படித்த பக்கங்கள் கண்ணுக்கு வலி கொடுத்தாலும் (!) மனதுக்கு நிறைவளித்தன. மெல்ல மெல்லப் படிக்கிறேன்.

1. இமயமலையில் வானவர் என்னும் கூட்டத்தார் வாழ்ந்தது/வாழ்வது (?) பற்றி இப்போதுதான் எனக்குத் தெரிகிறது (பக்கம் 13 ).

2. இராவணன் கருநிறத்தவனா? (பக்கம் 15)

3. ச்ச்சே … பாலியல் வன்கொடுமை புராணக்காலத்திலேயே இருந்திருக்கிறது! (ஓ, ஒருவேளை அது அங்கேதான் தொடங்கியதோ? ;-) )

இட்சுவாகுவின் மகனாகிய தண்டன் தன் ஆசான் சுக்கிரன் மகளைப் பலவந்தமாய்ப் புணர்ந்தானாம்! இட்சுவாகு குலத்தோன்றலின் அற்புதச்செயல்! (பக்கம் 16-17).

[இடைப்பிறவரல்: இந்த இட்சுவாகு குலத்தோன்றல்களை வயிற்றில் சுமந்துகொண்டிருந்த அந்த மிதிலைப்பெண்ணைத்தானே ‘அவதாரபுருஷன் ஶ்ரீராமன்’ காட்டுக்கு அனுப்பினான்! சபாஷ்!!! ஆகா, இதெல்லாம் படிக்கப்படிக்க இன்னும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் பிறக்கிறதே! ]

4. ‘தமிழ்’ என்னும் சொல்லமைதியைப்பற்றி நூலாசிரியர் வழங்கிய கருத்துகளை இன்னும் நுண்ணித்து நோக்கிப் புரிந்துகொள்ள வேண்டும்.

5. ‘ஒத்துமுறைவைப்பு’ என்ற சொல்லாட்சி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. (பக்கம் 29)

6. “உட்பெறு புள்ளி உருவாகும்மே” என்ற தொல்காப்பிய நூற்பாவுக்கு நூலாசிரியர் தந்திருக்கும் விளக்கம் எனக்குப் புதிது, சுவையாகவும் இருக்கிறது. (பக்கம் 30)

மேற்கொண்டு படிக்கவேண்டும்.

நூலின் மின்னாக்கத்தை வழங்கிய திரு கௌதம சன்னா அவர்களுக்கும் மின்னாக்க நூலை வெளியிட்ட த.ம.அ சுபாவுக்கும் மிக்க நன்றி.

அன்புடன்,
ராஜம்

பாக்யராஜ் said...
July 15, 2017 at 8:02 PM

Thank you for this fantastic work

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES