THF Announcement: E-books update:29/1/2018 *வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள்

0 மறுமொழிகள்
வணக்கம்

வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள் என்ற நூல் 1984ம் ஆண்டு திரு.ராஜகோபால் என்பவரால் எழுதப்பட்டு இலங்கையில் கலை இலக்கிய பத்திரிக்கை நண்பர்களால் வெளியிடப்பட்டது.  



இந்த நூல் கொழும்பு தமிழ்ச்சங்க நூலகத்தில் உள்ள சேகரம். 

இதன் பிடிஎஃப் வடிவத்தை மின் தமிழ் உறுப்பினர் திரு.நரசிங்கபுரத்தான் அனுப்பியிருந்தார்.  இதனை நூலகம் அமைப்பு மின்னாக்கம் செயதிருக்கின்றனர். 

ஆய்வாளர்களுக்குப் பயன்படும் என்ற நோக்கத்தைக் கருதி தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இணைத்துள்ளோம்.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 467

நூலை  வாசிக்க இங்கே அழுத்தவும்!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​


மண்ணின் குரல்: ஜனவரி 2018: பிரான்சு தேசிய நூலக அரிய தமிழ் ஓலைச்சுவடி ஆவணங்கள்

0 மறுமொழிகள்
வணக்கம்



காகிதங்கள் தமிழகச் சூழலில் அறிமுகமாவதற்கு முன்னர் தமிழ் நூல்கள் ஓலைச்சுவடிகளில் எழுதி பாதுகாக்கப்பட்டன.  பழையது உடைந்து சேதமடையும் போது  ஓலைச்சுவடி நூல்களைப் புதுப் பிரதியாக  படியெடுத்து பாதுகாத்து வந்தனர் நம் மூதாதையர். பல ஓலைச்சுவடி நூல்கள்  அதன் அருமை தெரியாதோரால் ஆற்றில் விடப்பட்டும் நெருப்பில் போடப்பட்டும்   தீக்கிரையாக்கப்பட்டு அழிந்தன. இதனால் நமக்குக் கிடைக்காமல் போன தமிழ் நூல்கள் எத்தனையோ.  அண்மையகால தமிழறிஞர்கள் சிலரது முயற்சியால் எஞ்சிய தமிழ் நூல்கள் நமக்கு அச்சு வடிவத்தில் இன்று கிடைத்திருக்கின்றன.

ஐரோப்பியர்களின் வருகை தமிழகச் சூழலில் பல சமூக மாற்றங்களை ஏற்படுத்தியது. போர்த்துக்கீசிய, ஜெர்மானிய, ஆங்கிலேய, இத்தாலிய பாதிரிமார்கள் தமிழகம் வந்து  தமிழ் கற்றனர் என்பதை அறிந்திருப்போம். அந்த வரிசையில் பிரஞ்சு பாதிரிமார்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

தமிழகம் வந்து தமிழ் கற்றதோடு குறிப்பிடத்தக்க ஓலைச்சுவடி நூல்களை அவர்கள் பிரான்சிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இவற்றுள் பல உள்ளூர் மக்களிடம் காசு கொடுத்து வாங்கிய ஓலைச்சுவடிகள் அல்லது அவர்களே கைப்பட எழுதிய ஓலைச்சுவடிகள்  எனலாம். பிரான்சில் தமிழ் ஓலைச்சுவடி நூல்கள் இருக்கும் நூலகங்களில் பிரான்சு தேசிய நூலகத்தில்  (Bibliothèque Nationale de France) உள்ளவை குறிப்பிடத்தக்கவை.

2017ம் ஆண்டு ஜுன் மாதம் இரண்டு நாட்கள் பாரீஸ் நகரிலுள்ள இந்த பிரான்சு தேசிய நூலகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை குறிப்பிடத்தக்க ஓலைச்சுவடிகளை தேர்ந்தெடுத்து மின்னாக்கம் செய்தோம். இரண்டு நாட்கள் மின்னாக்கப் பணியில் ஏறக்குறைய 800 ஓலைகள்  மின்னாக்கம் செய்து பதியப்பட்டன. 

பிரான்சின் ஓர்லியன்ஸ் நகரிலிருந்து திரு.சாம் விஜயும் வந்து இப்பணியில் இணைந்து கொண்டார்.  பிரான்சு தேசிய நூலகத்தில் மின்னாக்கப்பணியை முடித்து, பின்னர் அவரது இல்லத்தில் எடுக்கப்பட்ட ஒரு பேட்டி  தமிழ் மரபு அறக்கட்டளை விழியப் பதிவு வெளியீடாக மலர்கின்றது.  இந்த நூலகத்தில் உள்ள தமிழ் ஓலைச்சுவடிகளின் சிறப்பினைச் சொல்லும் பதிவு இது. 

இப்பதிவைச் செய்வதில் உதவிய பிரான்சு ஓர்லியான்சில் வசிக்கும் திரு.சாம் விஜய் மற்றும் அவர் துணைவியார் திருமதி.மாலா விஜய் இருவருக்கும் நன்றி.

விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2018/01/blog-post_28.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=sXz6Tspqshc&feature=youtu.be


































அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


மண்ணின் குரல்: ஜனவரி 2018: குன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்

0 மறுமொழிகள்
வணக்கம்.

மதுரை மாநகரில் உள்ள குடைவரை கோயில்களில் ஒன்று அஸ்தகிரீஸ்வரர் குடைவரை கோயில். இது பாண்டியர்களால் ஏறக்குறைய கி.பி. 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படுகின்றது.

மதுரையிலிருந்து சிவகங்கைக்குச் செல்லும் பாதையில் வரிச்சியூர் அருகே குன்னத்தூர் எனும் சிற்றூர் உள்ளது. முற்காலப் பாண்டியர் காலத்தில்,  அதாவது கி.பி 8-10ம் நூற்றாண்டு வாக்கில்  இந்த  ஊர் குன்றத்தூர்க் குளக்கீழ் என்ற நாட்டின் பிரிவுக்குட்பட்ட பிரம்மதேய கிராமமாக விளங்கியது.  இன்று குன்னத்தூர் மலை என இப்பகுதி அழைக்கப்படுகின்றது..

இந்த குன்னத்தூர் மலையில் கிழக்கில் ஒரு குடைவரை சிவாலயமும் மேற்கே ஒரு குடைவரை சிவாலயமும் என இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன.  கிழக்கில் உள்ள குடிவரைக் கோயிலில் உள்ள சிவலிங்க வடிவிலான இறைவனுக்கு உதயகிரீசுவரர்  எனப் பெயர். குன்றின் கிழக்குப் பகுதியில் சூரியன் உதிப்பதால் சூரியனை நோக்கி கிழக்குப்பகுதி நோக்கிய வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் இக்கோயில் உதயகிரீசுவரர் குடைவரைக் கோயில் என்றழைக்கப்படுகின்றது. 

குன்னத்தூர் மலையின் மேற்குப் பகுதியில் சூரியன் மறையும் திக்கை நோக்கியவண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் சிவாலயத்திற்கு  அஸ்தகிரீசுவரர்  கோயில் எனப் பெயரிடப்பட்டிருக்கின்றது. கோயிலில் உள்ள சிவலிங்க வடிவ இறைவன்  அஸ்தகிரீசுவரர்  என அழைக்கப்படுகின்றார்.  இந்த இரண்டு குடைவரைக் கோயில்களும்  முற்காலப் பாண்டியர்களின் அட்சியின் போது பாண்டியர்களால் அமைக்கப்பட்டவை.

அஸ்தகிரீசுவரர்  கோயிலின் அமைப்பு ஆரம்பகால கோயில் அமைப்பின் முயற்சிகளை வெளிப்படுத்தும் தன்மையுடன் அமைந்திருக்கின்றன. இக்கோயிலினுள் ஒரு சிவலிங்க வடிவம் மட்டுமே உள்ளது. துவாரபாலகர்கள் சிற்பம் இக்கோயிலில் இடம்பெற வில்லை. பரிவார தெய்வங்களின் சிற்பங்களும் இக்கோயிலில் செதுக்கப்படவில்லை.  இக்கோவிலில் கல்வெட்டுக்கள் ஏதும் பொறிக்கப்படவில்லை. சிவலிங்க வடிவ இறைவனை  நோக்கிய வகையில்  வெளியே நந்தி சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இது கி.பி.13 -14 வாக்கிலான சிற்பமாகும். 

இக்கோயிலின் முகப்புப் பகுதியில் ஒரு கட்டுமானக் கோயிலின் மாதிரி வடிவம் பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ளது. இதனைக் காணும் போது ஒரு கோயில் அமைக்கும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு பின்னர் பாறையைக் குடைந்து இக்குடைவரைக் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று எண்ணத்தோன்றும் வகையில் இந்த அமைப்பு உள்ளது. 

அஸ்தகிரீசுவரர்  என்ற பெயர் கொண்டுள்ள இக்குடைவரை கோயிலின் தமிழ்ப்பெயர் பற்றிய தகவல்கள் ஆராயப்பட வேண்டியவை. 

இக்கோயில் தமிழக தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் ஒரு புராதனச் சின்னமாக உள்ளது.


விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2018/01/blog-post_25.html
யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=9tWZfwfvwQo&feature=youtu.be

இப்பதிவுக்கான  ஏற்பாடுகளில் உதவிய தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர் சாந்தலிங்கம் அவர்களுக்கும், உடன் வந்திருந்த த.ம.அ செயற்குழுவினர் பேராசிரியர்.முனைவர்.ரேணுகாதேவி, முனைவர் பத்மாவதி   ஆகியோருக்கும்  நன்றி.










அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]



மண்ணின் குரல்: ஜனவரி 2018: கருங்காலக்குடி தொல்பழங்காலக் குறியீடுகளும் சமணச் சின்னங்களும்

1 மறுமொழிகள்
வணக்கம்.

கருங்காலக்குடி..
மதுரை மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர் இது. இந்த ஊரின் வடக்கே உள்ள மலைப்பகுதியில் பஞ்சபாண்டவர் குன்று எனும் குன்று ஒன்றுள்ளது. குகைப்பகுதியின் வடப்புறம் சமணத்துறவி ஒருவரது உருவம் செதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ அச்சணந்தி செய்வித்த திருமேனி என்ற கி.பி.9-10ம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு இச்சிற்பத்தின் கீழ்  செதுக்கப்பட்டுள்ளது. 

இது சமண முனிவர்கள்  பள்ளி அமைத்து தங்கியிருந்த ஒரு பகுதி. இங்கு 30 கற்படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. இங்கு ஏழையூர் அறிதின் என்பவர் கட்டிய அறப்பள்ளி இருந்ததைக் குறிக்கும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு தமிழி கல்வெட்டு காணப்படுகின்றது. 

இதன் மலைப்பகுதியில் தொல்பழங்கால மக்கள் வாழ்ந்தமைக்குச் சான்றாக பாறை ஓவியங்களும் குறியீடுகளும்  உள்ளன. இவர்றின் காலம் இன்றைக்கு 4000 ஆண்டுகளாக இருக்கலாம் என றியப்படுகின்றது.   பாறைகள் சூழ்ந்த இப்பகுதி, ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சமணர்கள் பள்ளி அமைத்து வாழ்ந்தமைக்குச் சான்றாகவும் அமைகின்றது.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.com/2018/01/blog-post.html
யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=c98xApHTfQQ&feature=youtu.be

இப்பதிவுக்கான  ஏற்பாடுகளில் உதவிய தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர் சாந்தலிங்கம் அவர்களுக்கும், உடன் வந்திருந்த த.ம.அ செயற்குழுவினர் பேராசிரியர்.முனைவர்.ரேணுகாதேவி, முனைவர் பத்மாவதி   ஆகியோருக்கும்  நன்றி.

















அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES